நீதிமன்றங்கள், மஸ்ஜிதுகளுக்கு எதிராக சங்பரிவார்கள் தாக்கல் செய்யும் தாக்கீதுகளை வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991ன் கீழ் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக தாக்கீதுகளை தொடர்ச்சியாக விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு இந்துத்துவ அரசியலுக்கு பேருதவிகள் செய்கின்றன.
பாபர் மஸ்ஜித் வழக்கிலும் இதே மாதிரியாகத் தான் அந்த சம்பவம் நடந்தது. இந்துக்களின் வழிபாட்டுக்கு பாபர் மஸ்ஜித் வளாகத்தை திறக்க வேண்டும் என்று சங்பரிவார் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிமன்றம் (உ.பி) 1986ல் விசாரணைக்கு ஏற்றது. பாபர்மஸ்ஜித் வழக்கில் 2010ல் தீர்ப்பு சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி எஸ்யூ.கான் பாபர் மஸ்ஜித் வழக்கில் தீர்ப்புரை எழுதும்போது, “மாவட்ட நீதிமன்றம் 1986ல் ஏற்றுக்கொண்ட ஒரு மனுவை தொடர்ந்து தான் சங்கிலி தொடராகப் பல சம்பவங்கள் அரங்கேறி 5 ஆண்டுகள் கழித்து பாபர் மஸ்ஜித்தின் கதை முடிக்கப்பட்டது” என்று கோடிட்டுக் காட்டினார்.
பாபர் மஸ்ஜிதின் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற மாவட்ட நீதிமன்ற உத்தரவு 1986 மனுவின் மீது தான் வந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்தே பாபர் மஸ்ஜித் கதவுகள் திறக்கப்பட்டன. “கதவுகள் திறக்கப்பட்டதனால் தான் இந்த பிரச்சனை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரவியது. அதற்கு முன்பு வரையிலும் பாபர் மஸ்ஜித் எங்கே இருக்கிறது, என்ன நடக்கிறது என்ற விபரம் அயோத்தி மற்றும் பைசாபாத் நகரங்களுக்கு வெளியே ஒருவருக்கும் தெரியாது” என்கிறார் நீதிபதி கான்.
பாபர் மஸ்ஜித் வழக்கு முடிந்த கையோடு புகழ்பெற்ற இதர முக்கிய மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் திட்டத்தில் சங்பரிவார்கள் இறங்கி உள்ளார்கள். கியான்வாபி மஸ்ஜித் மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஸ்ஜித் இரண்டிலும் இந்து கோவில் இருப்பதற்கான தடயங்களை கண்டதாகவும் எனவே அந்த மஸ்ஜிதுகளை இடித்து விட்டு அங்கே கோவில் கட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தில் அலகாபாத் நீதிமன்றங்களில் புதிய வழக்குகளை சங்பரிவார்கள் தாக்கல் செய்துள்ளார்கள். இந்த இரு மஸ்ஜிதுகளையும் கைப்பற்றும் கருத்துப் போராட்டத்தினை கடந்த 30 வருடங்களாக நடத்தி வருகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக வழக்குகளை தாக்கல் செய்யும் நம்பிக்கை எங்கிருந்து, எதனால் வருகிறது?
சங்பரிவாரின் மஸ்ஜித் தகர்ப்பு திட்டத்தில் இந்திய நீதிமன்றங்கள் பெரிதும் உதவிகள் செய்கின்றன. Places of Worship Act (வழிபாட்டுத் தலங்கள் சட்டம்) வழிபாட்டுத் தலங்களை மற்றவர்களிடம் இருந்து சட்ட ரிதியில் பாதுகாக்க 1991ல் நரசிம்மராவ் ஆட்சியில் நாடாளுமன்ற ஒப்புதலுடன் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தை மேற்கோள்காட்டி மஸ்ஜிதுகளுக்கு எதிரான மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து விடலாம். மாறாக, நீதிமன்றங்கள் சங்பரிவாரின் மனுக்கள் உள்நோக்கம் கொண்டவை எனத் தெரிந்துமே விசாரணைக்கு ஏற்பதன் மூலம் உதவுகின்றன. அயோத்தியில் பாபரி மஸ்ஜித், வாரணாசியில் கியான்வாபி மஸ்ஜித், மதுராவில் ஷாஹி ஈத்கா மஸ்ஜித், தில்லியில் குதுப்மினார், மத்தியப் பிரதேசத்தில் கமாலுத்தீன் மஸ்ஜித் என்று பட்டியல் நீள்கின்றன. நீதிமன்றங்கள், குறிப்பாக கீழ்நீதிமன்றங்கள் இந்த பிரச்சனைகளைப் பெரிது படுத்துகின்றன.
பாபர் மஸ்ஜித் வழக்கில்தான் இது முதல்முறை வெளிப்பட்டது. பாபர் பள்ளிவாசலின் உள்ளே ராமர், லட்சுமணர், சீதை சிலைகள் வைக்கப்பட்ட 1949க்குப் பிறகு கூட இரண்டு பூசாரிகள்தான் பூசைக்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பொது மக்கள் கூட இரும்பு கதவுக்குப் பின்னால் இருந்துதான் பூசையை கவனிக்க முடியும். இந்த நிலையில்தான், பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி கே.என். பாண்டே முன்னிலையில் வழக்குக்கு சம்பந்தமே இல்லாத ஒரு வழக்கறிஞர் ஜனவரி 31, 1986ல் தாக்கல் செய்தார். இந்த மனு அடுத்த நாளே நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீதிபதி கே. என். பாண்டே இந்துக்கள் வழிபட பாபர் மஸ்ஜித் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். உத்தரவு வெளியான ஒரு சில நிமிடங்களுக்குள் கதவுகள் திறக்கப்பட்டன. பாபர் மஸ்ஜித் வழக்கை உண்மையில் நடத்தி வந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களுக்கு இந்த சம்பவம் தெரியவில்லை. தெரிய வந்த ஒருவர் அந்த வழக்கில் சேர்ந்து கொள்ள (to be impleaded) மனு தாக்கல் செய்தார். மாவட்ட நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. அந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் இருவரும் ஆஜராகி பாபர் மஸ்ஜித் கதவுகளை திறப்பதால் எந்த பிரச்சனையும் வராது என்று வாக்கு மூலம் கொடுத்தார்கள். சங்கிலித் தொடராக நடந்துள்ள இந்த சம்பவங்களின் தொடர்ச்சியை நீதிபதி எஸ்.யூ. கான் 2010 தீர்ப்பில், மிக அதிர்ச்சியாக குறிப்பிடுகிறார்.
மூல வழக்குக்கு (main case) சம்பந்தமே இல்லாத நபர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதே தவறு என்கிறார். துணை வழக்கில் தன்னையும் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என்று மூல வழக்கின் உறுப்பினர் ஒருவரது முறையீட்டு மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததும் தவறான நடவடிக்கை, இதன் மூலம் துணை வழக்குக்கு எதிர்ப்பில்லை என்று காட்டுவதற்காகவே அவரது முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்கிறார். முறையீட்டு மனு காரணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டது என்றார்.
கட்டுரையாளர்: ஜி. அத்தேஷ்