தன்னைப் பற்றி மொகல்லாவுக்குள்ளும், ஜமாஅத்தினர் மத்தியிலும் ஏதோ ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் போல என ரபீக்பாய்க்கு சில நாட்களாகவே உள்ளுக்குள் ஒரு உறுத்தல் ஏற்பட்டிருந்தது. இத்தனை ஆண்டுகளில் அவரைப் பற்றி மொகல்லாவுக்குள் யாரும் எதுவுமே பேசியதில்லை. அவருக்குத் தெரியும். பேசவுமாட்டார்கள். அவரிடம் இருக்கும் பணமும் அந்தஸ்தும் பேச விடாது. தாங்கள் பேசியது அவரது காதுக்கு சென்றால் தங்களுக்கு ஏதும் பிரச்சனை ஆகிவிடும் என்ற பயம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்தது.
இன்று அதிகாலையில் ஜும்மாவுக்கு எழுந்த போதே பட்டென்று இந்த எண்ணம் அவருக்குள் ஓடியது. ‘ச்சே! இதென்ன காலங்காத்தால எந்திரிக்கும்போதே இப்பிடியொரு எண்ணம்..’ எரிச்சல் வந்தது. சில வாரங்களுக்கு முன் பள்ளிவாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சிலர் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தார்கள். இவர் வருவதைக் கண்டவுடன் யாரோ `தலைவர் வர்ராரு…’ என்றது ரபீக்பாய் காதில் விழுந்தது. சட்டென்று பேச்சு நின்றது. எல்லோரும் பவ்யமாக எழுந்து சலாம் சொன்னார்கள். அதில் சுக்கூர் ராவுத்தரும் இருந்ததை கவனித்த ரபீக்பாய் அங்கு நிற்காமல் பள்ளிவாசலுக்குள் சென்றுவிட்டார். அப்போதிருந்தே அவருக்குள் தன்னைப் பற்றித்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு சந்தேகமும் கலக்கமும் கொஞ்சம் கோபமும் ஏற்பட்டுவிட்டது.
அன்று முதல் அவருக்குள் ஒரு குறுகுறுப்பு ஓடிக்கொண்டே இருந்தது. ‘என்னங்க என்னப்பத்தி ஏதோ பேசிட்டிருந்தீங்க போல?’ என்றோ மற்ற நிர்வாகிகளிடம் ‘என்னங்க என்னப்பத்தி கசமுசானு ஏதோ பேசிக்கிறாங்க போல..?’ என்றோ இதைப் பற்றி யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரே வலியப்போய் மாட்டிக்கொண்டதாகிவிடும். இது பெரிய அசிங்கமாவிடும். எனவே எதுவும் தெரியாதது போலவே இருந்து கொண்டார். ஆனாலும் உள்ளுக்குள் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது. தப்பு செய்தவனுக்குத்தானே இப்படியான எண்ணங்களும் உறுத்தலும் ஏற்படும். இது மனித இயல்பு. எந்த ஒரு மனிதனும் அவனுடைய மனசாட்சிக்கு பயந்துதானே ஆகணும்.
கேரளா பெண் விஷயம் வெளிப்பட்டு விட்டதோ என அப்போதே அவருக்குள் கருக்கென்று பட்டது. ஜமாஅத் விஷயம் என்றால் இப்படி ரகசியம் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். பேசினாலும் காதுக்கு வந்துவிடும். தனிப்பட்ட சங்கதிதான் அவ்வளவு சீக்கிரம் வெளியே கசியாது. கசிந்தாலும் என்ன ஏது என்று சம்பந்தப்பட்டவர்கள் காதுக்கு வராது. ஊரறிய நிக்காஹ் செய்து கொள்ளலாமா என அப்போதே யோசித்தார். தன்னுடைய இமேஜுக்கு பாதிப்பு வருமோ என தயக்கம் ஏற்பட்டது. அதைவிட குடும்பத்தில் வரும் பிர்ச்சனைகளும் கண் முன் எழுந்தது.
அவருடைய மனைவி ஜீனத்துக்கு இந்த விஷயம் அரசால் புரசலாக தெரிய வந்தது. அப்போது அவர் கண்டு கொள்ளவில்லை. கணவரின் நடத்தையின் மூலமும் சில சந்தேகங்கள் தெரியவந்தும் கண்டு கொள்ளாமலேயே இருந்தார். வசதி படைத்த பெரிய வீட்டுப்பெண்கள் பெரும்பாலும் கணவர் விஷயத்தில் பட்டும் படாமலும்தான் இருக்கிறார்கள். தவறு செய்தது அல்லது செய்வது தெரிய வந்தாலும் கண்டும் காணாதது போலவே இருந்து விடுகிறார்கள். பிரச்சனை பெரியதாகும்போது குய்யோமுறையோனு கிடந்து அடித்துக்கொள்வார்கள் சிலர் அதுவும் கூட செய்வதில்லை. குடும்ப மானம் வெளியே போய்விடக்கூடாதாம்!
ரபீக்பாய் தன் மனைவிக்கு எதுவும் தெரியாது என்றேதான் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் விஷயம் வெளிப்பட்டுவிடக் கூடாது என்று வியாபார விஷயமாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் சொல்லிவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கேரளா ஒத்தப்பாலம் சென்று சின்ன வீட்டில் தங்கி வருவார்.
அவளைத் தேடி தங்க வரும்போதெல்லாம் நிக்காஹ் செய்து கொள்ள மன்றாடிக்கொண்டேதான் இருக்கிறாள் பல்கீஸ். ‘நம்பிக்கையில்லாமலா நான் உனக்கு இவ்வளவு வசதியாக வீடு பார்த்து தங்க வச்சிருக்கேன்.. கொஞ்சம் பொறுமையாக இரு…இப்ப விஷயம் ஜமாத்துல தெரிஞ்சா கொஞ்சம் பிரச்சனை வரும் அதான் யோசிக்கிறேன்….’ என்று சொல்லி சமாளித்துக்கொண்டே இருக்கிறார் ரபீக்பாய் . இப்போது ஜமாஅத் ஆட்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டதோ என்ற அச்சம் அவருக்குள் கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது!
பல்கீஸை நிக்காஹ் செய்தால் குடும்பத்திலும் ஜாமாத்திலும் மட்டுமல்ல, மொகல்லாவுக்குள்ளும் தன் கௌரவத்தில் ஒரு கரும்புள்ளி விழுந்துவிடும் என்ற அச்சம் அவருக்குள் ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. சின்னவீடு அல்லது இல்லீகள் தொடர்புகள் வைத்துக்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் அந்த தொடர்புக்குப் பின்புதான் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது என ஒரு பயம் வந்து இப்படி இக்கட்டில் மாட்டிக்கொண்டோமே…என தப்பிக்கும் வழியைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.
ஜமாஅத் பிரச்சனைகளில் அதுவும் பெண்கள் தொடர்பாக கணவன் மனைவி பிரச்சனைகள், தலாக் பிரச்சனைகள் வரும்போதெல்லாம் தான் அமர்ந்து தீர்ப்பு சொல்லும்போது ஒரு நெருடல் எழும். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கு ஆளாக நேரிடும். வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும், ‘இவன் பெரிய யோக்கியன்… தீர்ப்பு சொல்றான் பாரு..’ என்று பேசுவார்கள். மொகல்லா சிரிப்பாய் சிரிக்குமே…..! இந்த எண்ணமே ரபீக்பாயை சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
என்ன பண்ணுவது என்று வழி ஏதும் தெரியாமல் பெரும் அவதிற்குட்பட்டவராக ரபீக்பாய் திணறிக்கொண்டிருக்கும் போதுதான் இருக்கும் பிரச்சனைகள் போதாது என்பது போல மொஹல்லாவில் புதுசாக ஒரு பிரச்சனை வெடித்திருந்தது.
அரசல் புரசலாக சிலர் அங்கும் இங்குமாக பேசிக்கொண்டிருந்தது இப்போது ஊர்ஜிதமாக வெளிப்பட்டிருக்க, இதை சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எதிர்கொள்வர்களோ என்றும் பிரச்சனை ஜமாஅத்துக்கு வருமா என்றெல்லாம் சிலர் கவலையுடனும் குதர்க்கமாகவும் அலசிக்கொண்டிருக்க பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கவலையுமில்லாமல் தேமே என்றிருந்ததுதான் ஆச்சிரியமாக இருந்தது.
காலனியின் கடைசிப்பகுதியில் குடியிருக்கும் மைதீனின் இரண்டாவது மகன் யூசுப் அவனுடன் காலேஜில் ஒன்றாக படித்த ஒரு இந்துப் பெண்ணை விரும்புவதாகவும், அவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன் என்று பிடிவாதம் பிடித்து பிரச்சனை பண்ணுவதாகவும் அக்கம் பக்கத்தினர் மூலமாக மெல்ல கசிந்து இப்போது மொகல்லா முழுக்க வெளிப்பட்டு பேசு பொருளாகியிருந்தது.
மொகல்லாவுக்கு வெளியே கறிக்கடை வைத்திருக்கும் மைதீனின் மூத்த மகன் ஷாஜகானுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் உள்ளது. இரண்டாவது மகன் சுல்தான் ஒப்புக்கு ஒரு டிகிரி முடித்துவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் இப்போதுதான் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறான். காலேஜ் படிக்கும்போது உடன் படித்த ஹேமாவதி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு விஷயம் வீட்டுக்குத் தெரியவந்த போது ‘அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை’ என்று அத்தாவிடம் சுல்தான் மறுத்து வந்தான். சில சமயம் வாக்குவாதம் முற்றும்.
இந்தக் காலத்து இளைஞர்கள் பெற்றோர் சொல் பேச்சைக் கேட்காத தலைமுறைகளாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த நல்லது கெட்டதையும் காதில் வாங்குவதே இல்லை. எந்நேரமும் செல்போனும் கையுமாகவே அலைகிறார்கள். அவர்களுக்கு எது தோன்றுகிறதோ உடனே அதைச் செய்தாக வேண்டும். வேறு எந்த சிந்தனையும் கிடையாது. அவர்கள் கேட்கும்போதெல்லாம் பெற்றோர் பணம் கொடுத்தாகணும். இல்லையேல் பிரச்சனைதான். இதற்கு பயந்தே பையன்கள் கேட்கும்போதெல்லாம் எப்படியாவது பணம் புரட்டிக் கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்.
ஹேமாவதியுடன் சுல்தான் அடிக்கடி வெளியே சுற்றுவது எப்படியும் தெரிந்தவர்கள் யாரோ ஒருவர் கண்ணுக்கு சிக்கிவிடும். உடனே மைதீன் காதுக்கு தகவல் வந்துவிடும். இதனால் அவ்வப்போது வீட்டில் பிரச்சனை எழுந்து கொண்டே இருந்தது. மைதீனும் மகனை எவ்வளவோ கண்டித்துப் பார்த்தார். அவன் கேட்டால்தானே! `இவன காலேஜ்க்கு அனுப்பினதே தப்பா போச்சே..!’ என்று மனைவியிடம் புலம்புவதைத் தவிர மைதீனால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. ‘எப்படா காலேஜ் படிப்பு முடியும்’ என்று ஆகிவிட்டது அவருக்கு. காலேஜ் போறது நின்றுவிட்டால் இந்தப் பிரச்சனை அதோடு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார் மைதீன்.
ஒருவழியாக காலேஜ் படிப்பு முடித்து வேலைக்கு போக ஆரம்பித்தவுடன் மீண்டும் அந்த காதல் பிரச்சனை வெடித்தது. சுல்தானுக்கு கல்யாணம் செய்வது குறித்து எந்தவித பேச்சும் எடுக்காத நிலையில் அவன் உம்மாவிடம் `நா கல்யாணம் பண்றதா இருந்தா ஹேமாவதியைத்தா பண்ணுவேன்ம்மா !’ என்று திடுமென ஒருநாள் காதில் போட்டு வைக்க, `என்னடா! மொனே சொல்றே?’ என்று உம்மா அதிர்ந்து போனாள்.
காலேஜ் படிப்பு முடிந்து விட்டால், அதன் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள் – சந்தித்துக்கொள்ளவும் முடியாது என எண்ணியதற்கு மாறாக அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சுல்தான் சொன்னதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
`நம்ம பொண்ணாயிரிந்தாக்கூட சரின்னுட்டு போயி பேசிப் பாத்து நிக்காஹ் பண்ணி வைக்கலாம். இப்பிடி ஒரு அந்நிய பொண்ணப்போயி..’ பேச முடியாமல் உம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.
மகன் இல்லாத நேரத்தில் மனைவியிடம் கிடந்து குதிகுதியென குதித்தார் மைதீன். `ஒங்க பையன ஒதுக்க முடியல! எங்கிட்ட வந்து ஏங்க சாடுறீங்க..?’ கணவனைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டாள் பாத்திமுத்து. வாப்பா பேச்சையே கேட்காதவன் அண்ணன் பேச்சை கேட்பானா என்று ஆரம்பத்திலிருந்தே அண்ணன் ஷாஜகான் இந்தப் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தான்.
`எல்லாம் நீ குடுக்கிற எளக்காரம்தா.. பையன வளத்தியிரிக்கிற லச்சனத்தப் பாரு!’
`பையன கண்டிச்சி வளத்த துப்பில்ல.. நா வளத்தனாமா..பேச்சுல மட்டும் குறச்சல் இல்ல..’
கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது.
`இப்ப நீங்க ஏம்மா சண்ட போடுறீங்க..? ஆரம்பத்துலயே அவன் இந்த மாதிரி தப்பான வழில போறான்னு தெரிஞ்சதுமே தடுத்திருக்கணும். தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு! இப்ப கெடந்து நீதா காரணம்னு நீதா காரணம்னு ரெண்டு பேரும் சண்ட போடுறீங்க?’ உம்மாவையும் வாப்பாவையும் பார்த்து கோபத்துடன் கத்தினான் ஷாஜகான்.
`நீ ஒரு அண்ணக்காரந்தானே ஒனக்கும் இந்த விசயம் தெரியும்தானே.? என்னிக்காச்சும் உந்தம்பிய கண்டிச்சி பேசிரிக்கியாக்கும்..? பெருசா பேசுறே?’ பாத்திமுத்து தன் கோபத்தை மூத்தவன் மீது பாய்ச்சினாள். `ஆமாம்மா.. வாப்பா பேச்சையே கேக்காதவன் எம் பேச்சத்தா கேப்பான்..? நா ஏதாச்சும் பேசியிருந்தா.. போடா உன் வேலையப் பாத்துட்டுனு எடுத்தெறிஞ்சு பேசியிரிப்பான்..’
அதன் பிறகு எப்படியெல்லாமோ இந்த காதல் விவகாரத்தை தடுக்கப்பார்த்தார்கள். சுல்தான் அந்த பெண்ணுடன் ஓடிப்போய்விடும் ஒரு ஆபத்து இருப்பதை அறிந்து குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டி வேறு வழி ஏதும் தெரியாத நிலையில் பேசாமல் அவன் போக்கிலேயே விட்டுவிட்டார்கள்.
ஆனால் விசயம் மொகல்லாவுக்குள் வெளிப்பட்டு, இப்பிடியொரு காரியத்துக்கு குடும்பமே சம்மதிச்சு கமுக்குனு இருப்பதாக கண்டதையும் பேச ஆரம்பித்துவிட்டது.
`ஏற்கனவே லவ் ஜிகாத் அது இதுனு காரணம் சொல்லிக்கிட்டு மதப்பிரச்சனைக அங்கயும் இங்கயுமா பெரிய பிரச்சனையா வெடிச்சுட்டிருக்குது. இத வச்சுக்கிட்டு கலவரம் பண்ணலாம்னு காத்திட்டிரிக்காணுங்க. இப்பப்பாத்து அந்த கெரகத்த நம்ம மொகலாக்குள்ளயும் கொண்டு வந்திருக்கானே ஒருத்தன்! இதுக்கு அவனோட வாப்பாவும் உம்மாவும் எப்பிடி சம்மதிச்சாங்களோ! அந்த றப்புக்கே வெளிச்சம்!’
`காலம் கெடக்கிற கெடப்புல அந்த பொண்ணோட வூட்டுலருந்து கும்பலா இங்க வந்து எதுனாச்சும் பிரச்சன பண்ணுனா என்ன பண்றது? அது ஜமாத்துலயல்ல வந்து விடியும்! ஏன் இவுனுங்களுக்கு இஸ்லாத்துல பொண்ணே கெடைக்காமையா இப்பிடி வேற பொண்ணுங்கள தேடிட்டுப் போறாணுங்க..? ச்சை! என்ன காலமோ? துனியா அழியிறதுக்காக்குமே இந்த அக்குரமம் எல்லாம் நடக்குது கிட்டியா!’
பிரச்சனையை தலைவர் காதுக்கு கொண்டு வந்தார்கள். `பிரச்சனை ஜமாத்துக்கு வரும்போது பாத்துக்கலாம். இப்ப நாம இதுல தலையிட முடியாது. இது அவுங்க குடும்பப் பிரச்சன..’ ரபீக்பாய் பட்டும் படாமல் பேசி கழண்டு கொண்டார்.
கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்