உத்தர்பபிரதேசம் வாரணாசியில் காசி விஷ்வநாதர் கோவில் சுவரை தொட்டு அமைந்திருக்கிறது கியான்வாபி மஸ்ஜித். பலநூறாண்டுகளுக்கும் மேலாக கோவிலும் மஸ்ஜித்தும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த ஒட்டானது இந்திய நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்போதும் ஒட்டிக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் என்பதற்கு நூற்றாண்டுகால ஆதாரம் என்பது தான் இந்தியாவின் சமூக உறவின் வரலாறு.
பாபர் மசூதிக்கு அடுத்தபடியாக சங்பரிவர்கள் வாரணாசி கியான்வாபியை கையில் எடுத்திருக்கிறார்கள். 2022ல் உத்தர்ப்பிரதேச சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடந்த போது யோகி ஆதித்யநாத் கியான்வாபி மஸ்ஜித்துக்குள் சிவனின் திரிசூலம் இருப்பதாக பிரச்சனையை கிளப்பினார். நரசிம்மராவ் ஆட்சிகாலத்தில் 1993ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சமயம் பாபர் மஸ்ஜித் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் பாபர் மஸ்ஜித்துக்கு விலக்கு அளித்து, நாட்டில் உள்ள அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் தற்போது எந்த இடத்தில், என்ன நிலையில் இருக்கிறதோ அவ்வாறே பாதுகாக்கப்படும் என்கிறது அந்தச் சட்டம். எனவே, பாபர் மஸ்ஜித் நீங்கலாக மற்ற வழிபாட்டுத் தலங்களை இந்தச் சட்டம் பாதுகாக்கும் என்று முஸ்லிம்கள் நம்பியிருந்தனர். அந்த நம்பிக்கையை இப்போது, யோகியும், அலகாபாத் உயர்நீதிமன்றம் தகர்த்திருப்பது தான் முஸ்லிம்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றம், கியான்வாபி மஸ்ஜிதில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற வழக்கில் தீர்ப்பு சொல்லும் தேதியை அறிவிக்கவிருந்த நிலையில், உத்தர்ப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு செய்தி நிறுவனத்துக்கு ஜூலை 31 அன்று கொடுத்த பேட்டியில், “கியான்வாபியில் உள்ளதை நாம் மஸ்ஜித் என்று சொன்னால் அது பிரச்சனையை உருவாக்கும். ஒரு வரலாற்றுத் தவறு நடந்து விட்டது என்று அதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை முஸ்லிம்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்’. அதாவது ஒத்துக்கொண்டால் நமக்குள் பிரச்சனை இல்லை என்றார். மஸ்ஜிதுக்குள் திரிசூலத்துக்கு என்ன வேளை இருக்கிறது? நாம் அதை அங்கே கொண்டுபோய் வைக்கவில்லை. அங்கே கடவுளின் சிலை ஒன்று இருக்கிறது” என்று கூறினார்.
ஆதித்யநாத் பேட்டிக்கு இரண்டுநாட்கள் கழித்து ஆகஸ்ட் 3 ஆம் நாள், அலகாபாத் உயர்நீதிமன்றம் அகழாய்வு நடத்த இந்திய தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கியது. “நீதியின் நலனுக்கு அறிவியல் பூர்வமான ஆய்வு தேவைப்படுகிறது” என்றார்கள் நீதிபதிகள். கியான்வாபி மஸ்ஜிதில் அகழாய்வு நடத்த அனுமதிக்க கூடாது என்று அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி (Anjuman Intezamia Masjid Committee) தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த கமிட்டி தான் கியான்வாபி மஸ்ஜிதின் விவகாரங்களை பராமரித்து வருகிறது. வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அகழாய்வுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கியதை எதிர்த்து தான் இந்த AIMC கமிட்டி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழங்கு நடத்தியது.
இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தை ஆகஸ்ட் 2021ல் அனுகி கியான்வாபி மஸ்ஜித் உள்ளே இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகவும் அந்த கடவுள் சிலைகளை வழிபடும் உரிமையை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் முறையிட்டனர். உடனடியாக, வாரணாசி நீதிமன்றம் சிலைகள் இருப்பதாக கூறப்படும் மஸ்ஜித் பகுதியை வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டது. முஸ்லிம் தரப்பு உச்சநீதிமன்றத்தை அனுகி முறையிட்ட போது, வீடியோ பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து வழக்கை மீண்டும் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கே தள்ளி விட்டது.
மே, 2024ல் 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் இந்த கியான்வாபி மஸ்ஜித் பிரச்சனையை களத்தில் இறக்கிவிட தீவிரம் காட்டுவது தெளிவாகத் தெரிகிறது. 17வது மக்களவைத் தேர்தல் 2019ல் நெருங்கி வந்திருந்த நிலையில் தான் பாபர் மஸ்ஜித் வழக்கில் அவசரமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொன்னது. யோகியின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பலவற்றின் சாமியார்கள் யோகிக்கு ஆதரவாக பேசத் தொடங்கி விட்டனர். இந்து மடங்களை ஆளுகை செய்யும் அகில பாரதிய அகாரா பரிஷத் (Akhil Bharatiya Akhara Parishad) அமைப்பின் தலைவர் மஹந்த் ரவீந்திர பூரி, `கியான்வாபியை எங்களிடம் கொடுங்கள் உங்களுக்கு வேறு ஒரு மஸ்ஜித் நாங்கள் கட்டித் தருகிறோம்’ என்று முஸ்லிம்களுக்குச் சொல்கிறார். `முஸ்லிம் தலைவர்கள் பெரிய மனது வைக்க வேண்டும், அதனால், பின் வரக்கூடிய சந்ததிகள் அவர்களைப் பற்றிப் பெருமையாக உணர்வார்கள்’ என்கிறார் மஹந்த். `முஸ்லிம் சமயத் தலைவர்கள் கியான்வாபியை இந்து பக்தர்களிடம் கொடுத்து விட்டால் பிறகு இருதரப்பும் இணக்கமாகி வாழலாம்’ என்று நைச்சியமாகப் பேசுகிறார்.
எதிர்ப்பக்கம், ஆல் இண்டியா மஜ்லிஸ் இ இத்திஹாத்துல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசதுதீன் உவைசி, `அகழாய்வு தீர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் எப்படியும் அலகாபாத் நீதிமன்றம் செல்வார்கள் என்பது யோகிக்கு நன்றாகத் தெரியும். அடுத்த சில நாட்களில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் எந்த நேரத்திலும் வரக்கூடும். அப்போதும் கூட யோகி சரச்சைக்குரிய அறிக்கை விடுவார், இது வரம்பு மீறிய செயல்’ என்று கடிந்துள்ளார். ஆல் இண்டிய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிறுவன உறுப்பினர் மவ்லானா முகம்மது சுலைமான், `இதுபோன்ற முக்கியம் கொண்ட வழிபாட்டுத் தலம் சார்ந்த சர்ச்சைகள் குறிப்பாக அதுவும் கீழமை நீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில், யோகி இதுபோன்று தான்தோன்றித் தனமாக பேசுவது நல்லதல்ல’ என்ற தொனியில் கருத்து கூறி இருக்கிறார். `யோகியின் நடுநிலையில்லாத பேச்சு என்பது 2024 தேர்தல் சமயத்தில் மக்கள் சமூகத்தை கூறுபோடும் முயற்சி தான்’ என்கிறார் மவ்லானா.
அயோத்தியின் பாபர் மஸ்ஜித் மட்டுமல்லாமல் வாரணாசியின் கியான்வாபி மஸ்ஜிதும் மதுராவில் ஷாஹி ஈத்கா மஸ்ஜிதும் இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சங்பரிவார்களின் கோரிக்கை. பாபர் மஸ்ஜித்தை 1992ல் இடித்து முடித்த கையோடு தெள்ளத்தெளிவாகவே (unambiguously) காசியும் மதுராவும் இன்னும் பாக்கி உள்ளது (‘kasi Madhura baaki hai’) என்று முழங்கினார்கள். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் பாபர் மஸ்ஜித் வழக்கை சங்பரிவர்களுக்கு சாதகமாக 2019ல் முடித்து வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில் சங்பரிவர்களின் கியான்வாபியை கைப்பற்றுவோம என்ற இரைச்சல் (clamor) மீண்டும் கேட்கத் தொடங்கி இருக்கிறது.
17 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர் ஔரங்கசீப் மஸ்ஜித் கட்டும்போது பழமையான கோவிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டார் என்பதே மனுதாரர்கள் தரப்பு வாதம். ஆனால், முஸ்லிம்கள் தரப்பு, “ஔரங்கசீப் காலத்துக்கு முன்பிருந்தே கியான்வாபி மஸ்ஜித் பலநூறு வருடங்களாக இருந்து வருகிறது” என்று நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார்கள்.
இந்த புதிய சரச்சையை யோகியின் முதல் சட்டமன்றத்தில் துணை முதலமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மௌரியா முதல் மாயாவதி வரையில் கண்டித்து வருகின்றனர். மௌரிய 2022 உத்தர்ப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தான் யோகி மீது குற்றச் சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து கொண்டார். 2022 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளராகத் தோற்றார். அவர், அகழாய்வு கியான்வாபியோடு நின்றுவிடக் கூடது, பத்ரிநாத் கோவிலை கட்டுவதற்காக இடிக்கப்பட்ட பௌத்த கோவிலையும் அகழாய்வு செய்ய வேண்டும் என்கிறார். மாயாவதி, தேர்தலுக்கு முன்பாகவே மத உணர்ச்சிகளை தூண்டி உள்ளனர், இது அரசியல் சதி என்றுள்ளார்.
2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கான பிரச்சார இலக்கை பாஜக முடிவு செய்து விட்டது. யோகி வரலாற்று உண்மையின் அடிப்படையில் பேசுவதாக இப்போதே அவரது கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கி விட்டார்கள். ஆர்.எஸ்.எஸ், பாஜக இப்போதைக்கு இதில் இருந்து விலகப்போவதாகத் தெரியவில்லை. ஆனால், இம்முறை இது சருக்கும் என்றே தோன்றுகிறது.
கியான்வாபி மஸ்ஜித் வழக்குகள் காலவரிசை அட்டவணை:-
1991:-
கியான்வாபி மஸ்ஜித்தில் உள்ள இந்து கடவுள் சிலைகளை வணங்க அனுமதி கேட்கும் முதல் மனுவை சுயம்பு ஜோதிர்லிங்க பகவான் விஷ்வேஷ்வர் வாரணாசி மாவட்ட கோர்ட்டில் 1991ல் தாக்கல் செய்தார்.
ஆகஸ்ட், 2021:-
இந்து பெண்கள் 5 பேர் கியான்வாபி மஸ்ஜித்தில் உள்ள அனுமன், நந்தி மற்றும் ஶ்ரீங்கர் கௌரி கடவுள் சிலைகளை வழிபட வாரணாசி மாவட்ட கோர்ட்டில் அனுமதி கேட்டனர். அங்குள்ள சிலைகள் சேதப்படுவதைத் தடுக்கவும் உத்தரவு கேட்டனர்.
ஏப்ரல், 2022:-
வாரணாசி கோர்ட், பெண்கள் 5 பேர் மனுவை வைத்து, கடவுள் சிலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் அஜெய் மிஸ்ராவை வழக்குரை ஆணையராக (Advocate Commissioner) நியமனம் செய்தது. அவருக்கு கடவுள் சிலைகளை ஆய்வு செய்யும் போது ஒளிப்படப் பதிவுகள் செய்யும்படி உத்தரவுமிட்டது. முஸ்லிம்கள் தரப்பில் அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி வாரணாசி மாவட்ட கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், உயர்நீதிமன்றம் வாரணாசி கோர்ட்டின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்புரைத்தது.
மே 6, 2022:-
மே 6 ஆம் நாள் கியான்வாபி மஸ்ஜித் உள்ளே ஒளிப்படப் பதிவுகள் தொடங்கியது. வழக்குரை ஆணையர் அஜெய் மிஸ்ரா ஒளிப்படப் பதிவின் ரகசியம் காக்காமல் படப் பதிவுகளை வெளியில் கசியவிட்டதாக அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி ஒரு புகார் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மே 17, 2022:-
அகழ்வாய்வு படத் பதிவுகளை குறிப்பாக சிவ லிங்கம் என கருதப்படும் படப்பதிவை வெளியில் கசியவிட்டதற்காக அஜெய் மிஸ்ராவை வழக்குரை ஆணையர் பொறுப்பில் இருந்து கோர்ட் நீக்கியது. அகழ்வுப் படப் பதிவுகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைக்கும் படி தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது.
மே 19, 2022:-
உச்சநீதிமன்றம் தொல்லியல்துறை ஆகழ்வு செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்தது. அதுவரையில் அகழ்வில் கிடைத்தவற்றை வாரணாசி கோர்ட் முன்னர் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அக்டோபர் 14, 2022:- டீ டாக்ஸ்
அகழ்வில் ஷிவ லிங்கம் கிடைத்ததாக தொல்லியல் துறை அறிக்கை கூறியதையடுத்து அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி ஷிவ லிங்கம் என்று கூறுவதன் மீது கார்பன் டேட்டிங் (Corbin dating) எனப்படும் அறிவியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி நீதிமன்றத்தை கோரியது. இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுத்தது. நீதிமன்றத்தில் மஸ்ஜித் கமிட்டி, ‘ஷிவ் லிங்கம்’ என்பது முகம் அலம்பும் நீர்தொட்டியில் உள்ள நீரூற்று தான் என்றது.
மே 12, 2023:-
அலகாபத் உயர்நீதிமன்றம் ‘அறிவியல் ஆய்வு’ (scientific survey) நடத்தவும் ஷிவ் லிங்கம் என கூறப்படுவதன் வயதை சோதனை மூலம் உறுதி செய்யவும் உத்தரவிட்டது.
மே 19, 2023:-
உச்சநீதிமன்றம், ஷிவ் லிங்கம் என்பதை சோதனை செய்ய தடை விதித்தது.
ஜூலை 21, 2023:-
வாரணாசியில் கோவில் இருந்த இடத்தின் மீது தற்போதுள்ள கியான்வாபி மஸ்ஜித் கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கியான்வாபி மஸ்ஜித் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வாரணாசி மாவட்ட கோர்ட் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. தேவைப்பட்டால் அகழ்வு செய்து கொள்ளவும் அனுமதி கொடுத்தது.
ஜூலை 24, 2023:-
கியான்வாபி மஸ்ஜித்தில் ஆய்வு செய்வதை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் கோரிக்கையை விசாரணை செய்யும் படி உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 3, 2023:-
கியான்வாபி மஸ்ஜிதில் தொல்லியல்துறை ஆய்வு செய்வதற்கு இருந்த தடையை நீக்கியது. நீதி செலுத்துவதற்காக அறிவியல் பூர்வ ஆய்வு தேவைப்படுகிறது என்றது அலகாபாத் உயர்நீதி மன்றம்.
கட்டுரையாளர்: ஜி.அத்தேஷ்