கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்தார். முதலில் ஜப்பானுக்கும் பின்னர் பப்புவா நியூ கினியாவுக்கும் சென்று பின்னர் அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றார். இந்த மாதம் அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். மோடியின் பயணங்களையும் அவருக்கு பல்வேறு நாடுகளில் அளிக்கப்படும் மரியாதைகளையும் இந்தியத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு நேரலை செய்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் இரண்டு முறை பேசிய ஒரே இந்திய பிரதமர். பப்புவா நியூ கினியாவின் உயரிய விருதும், எகிப்தின் உயரிய விருதும் பெற்றிருக்கிற ஒரே இந்திய பிரதமர். ‘The Boss’ என்று ஆஸ்திரேலியா பிரதமர் பாராட்டிய ஒரே இந்திய பிரதமர் என்ற பெருமைகளோடு, இந்தியாவில் நடக்கவிருக்கும் 2024 பொதுத்தேர்தலுக்கு உலக அளவில் பிரச்சாரம் செய்யும் ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
தற்போதைய இந்தியப் பிரதமர் என்பதற்காக மட்டுமே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் மோடியை ஆதரிக்கின்றன என்ற குறைந்தபட்ச பொதுஅறிவு கூட இல்லாது அவர் பிம்பப்படுத்தப்படுகிறார். அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் சீனாவினுடனான சமீபத்திய உரசல்களால் நட்பு பிளவுபட்டு போயிருக்க, அதற்கு சரியான ஈடாய் இந்தியாவைப் பார்க்கின்றனவே தவிர, மோடியை புகழுவதற்கான வேறு எந்த ஒரு காரணமும் அவ்விரு நாடுகளுக்கும் இல்லை. அந்நாடுகளில் அதிகரித்து வரும் இந்திய வம்சாவளி மக்கள் தொகையின் ஓட்டு எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அந்நாடுகளின் அரசியல் கட்சிகள் கவனித்து கொண்டு வருவதும் மற்றொரு காரணம்.
இந்தியப் பொருளாதாரத்திற்காகவும் மக்கள் வளத்திற்காகவும் இந்திய பிரதமருக்கு கொடுக்கப்படும் இந்த மரியாதைகளை பாஜக மிகச் சரியாக பயன்படுத்தி 2024 தேர்தல் பிரச்சாரமாக மாற்றி வருகிறது. வெளிநாடுகளில் அனைத்து இந்திய மாநில மக்கள் வசிக்கும் போதிலும் பிரதமர் மோடியின் உரைகள் அனைத்தும் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
தென்னிந்தியாவில் இருந்து துடைத்தெறியப்பட்ட பாஜக, 2024 தேர்தலை வடமாநிலங்களைக் குறிவைத்து துவங்கி இருக்கிறது. நீதித்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, ராணுவம் என்று அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாஜகவை எதிர்க்கும் வலிமை காங்கிரஸிற்கு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்பதற்கான நேரம் இந்திய மக்களுக்கு இல்லை.
இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த முறை தேர்தல் நடக்குமா என்பது தெரியாது என்று அங்கலாய்த்து வருகிறார்கள் சமூக நல ஆர்வலர்கள்.
மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதிப் பங்கீடு அமைந்தால், பாராளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் பலத்தை இழக்கும் அபாயம் வலிந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இனி தேர்தல் நடந்தாலும், தென்னிந்திய மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாய் இருக்காது என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் பாஜக அல்லாத வேறு ஒரு அரசு அமைவது மட்டுமே இந்திய மக்களை மட்டுமின்றி இந்திய ஜனநாயகத்தையும் காக்க முடியும்.
பாஜகவைக் கட்டுப்படுத்துவதற்கான கடிவாளம் ஒரு கையால் மட்டும் இயலாது என்பதை கடந்த மாதம் ஜூன் 23 அன்று பாட்னாவில் பல கைகள் சேர்ந்துள்ளன. அதை மேலும் வலுப்படுத்த அடுத்தடுத்து ஒன்றுகூட இருக்கிறார்கள். இந்தக் கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போவதில், அதற்கான விதை தமிழ்நாட்டில் போடப்பட்டதை இந்த தருணத்தில் நினைவுகூறியே ஆக வேண்டும்.
அவங்க அப்பா போல இல்ல, துண்டு சீட்டு இல்லாம பேச முடியாது, ஜாதகத்துல கட்டம் சரியில்லை, முதலமைச்சர் ஆக வாய்ப்பே இல்லை என்ற பல்வேறு விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வெற்றிகரமான மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் முக. ஸ்டாலின். கடந்த இரண்டாண்டுகளில் பல தடைகள், அச்சுறுத்தல்கள், அவதூறுகள் என அனைத்தையும் திறம்பட முறியடித்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறார்.
1989ல் மத்தியில் அமைந்த ஜனதா தள் ஆட்சிக்கு கலைஞர் மு. கருணாநிதி எந்த அளவிற்கு பங்கு வகித்தாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல், ஒரு படி முன்னே நிற்கிறார் மு.க. ஸ்டாலின். எதிர்க் கட்சி தலைவராக இருந்தபோது, 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பே, ‘ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமராக வேண்டும். பாசிச அரசை வீழ்த்தும் திறமை அவருக்கு இருக்கிறது அதற்காக அவருடன் கைகோர்த்து இன்னும் பலப்படுத்துவோம்’ என்று பொது மேடையில் அறிவித்தார். காங்கிரஸ் கூட வெளிப்படையாய் அறிவிக்காத ஒன்றை ஸ்டாலின் அறிவித்தார் என்று ஊடகங்கள் பேசியதை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
ஸ்டாலின் வெளிப்படையாய் காங்கிரசை ஆதரித்த போதும், மற்ற மாநில கட்சி தலைவர்கள் பலர் மூன்றாம் கூட்டணி அமைப்பதில் முன்னெடுப்பகளைச் செய்து வந்தார்கள். மம்தா பானர்ஜீ, சாத்திரசேகர ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் அதில் முக்கியமானவர்கள். இன்று மூன்றாம் கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியாது. தவிர, பாஜகவே மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு உதவும் என்பதை உணர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை முன்னெடுப்பவர்களுக்கு முன்னோடியாக ஸ்டாலின் விளங்கினார்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு கூட, எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்று கூடுவது சாத்தியமில்லை என்ற கருத்து நிலவியது. இன்று பாட்னாவில் வெற்றிகரமான முதல் கூட்டத்தை முடித்திருக்கிறார்கள். அந்த கூட்டம் நடைபெற்ற முதல் நாள் வரை கூட அரவிந்த் கெஜ்ரிவால் வரமாட்டார் என்ற ஊடகங்கள் கணித்தன. அனைத்தையும் பொய்யாக்கி 15 கட்சிகள் ஒன்றிணைத்திருக்கின்றன. அடுத்த மாதம் மீண்டும் ஓர் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்தை நடத்தவிருக்கிறார்கள். அதில் இன்னும் அதிக கட்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.
காங்கிரஸ் தலைமையின் கீழ் கூட்டணி என்பதை மட்டும் ஸ்டாலின் முன்மொழியவில்லை. பல செயல்களிலும் மற்ற மாநில கட்சிகளுக்கு முன்னோடியாக விளங்கினார். கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவது, திமுக அமைச்சரவையில் இருந்த முன்னாள் நிதி அமைச்சர் வைத்த நிதிப் பங்கீடு பற்றிய வாதங்களுக்கு வடநாட்டு ஊடகங்கள் கூட கூர்ந்து கவனித்து வந்தது, பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்து கொண்டு வருவது என்பது மட்டுமில்லாமல், அமலாக்கத்துறையின் மூலம் அச்சுறுத்துவதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கும் ஸ்டாலின் முன்னோடியாகவே விளங்குகிறார்.
சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல் ஏவப்பட்ட அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு எப்படி கையாண்டு வருகிறது என்பது மற்ற மாநில கட்சிகளுக்கு மற்றும் ஒரு முன்னோடி. தொடர்ந்து கடுமையாக பாஜகவை விமர்சித்து வந்த மம்தா பானர்ஜி, அவரது கட்சியை சேர்ந்த பார்த்தா சட்டர்ஜி மற்றும் அனுபிரத மோண்டல் ஆகியோரை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்ததை அடுத்து மம்தா கொஞ்சம் அடங்கிப்போய் இருந்தார். இன்னும் சொல்வதென்றால் ‘இந்த ஏவலுக்கு பிரதமர் மோடி காரணமாக இருக்க மாட்டார். பாஜகவின் வேறு தலைவர்கள் தான் காரணமாக இருப்பார்கள்’ என்று அந்தர் பல்டி அடித்தார். சந்திரா சேகர் ராவுடன் சேர்ந்து காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கவும் முனைந்தார். இன்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்.
ஊழல் செய்த செந்தில் பாலாஜியை கைது செய்வதில் என்ன தவறிருக்கிறது என்று கேட்பவர்கள், ஒன்றை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். 2016ல் அதிமுக ஆட்சியில் அன்றைய தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவை வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரது வீட்டிலும் தலைமைச் செயலகத்திலும் சோதனை நடந்த பொழுது அதற்கு எதிராய் குரல் கொடுத்தது, அதிமுக அல்ல திமுக!
ஊழலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்கும் துறை பாரபட்சமாய் இருப்பதாகத்தான் திமுக கண்டிக்கிறது.
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் திமுகவில் செந்தில் பாலாஜி, முக்கிய அமைச்சராகவும் கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாகவும் இருந்ததுதான் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம். அவரைக் கைது செய்ததில் இருந்து தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் செந்தில் பாலாஜிக்கு கொடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். ஊழல் செய்தவருக்கு துணை போகிறார் என்ற விமர்சனங்களுக்கு அஞ்சாமல், அமைச்சர் பதவியைக் கூட பறிக்காமல் தொடர்ந்து தன் ஆதரவை கொடுத்து வருகிறார். ஆளுநரின் தன்னிச்சையான முடிவையும் பின்வாங்கச் செய்திருக்கிறார். ED, IT, CBI மூலம் தன் கட்சிக்காரர்களை மிரட்டும் பாஜகவையும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகளையும் எப்படி சமாளிக்க வேண்டும் என்று இந்தியாவிற்கே பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவின் அனைத்து முக்கிய விழாக்களிலும் பிற மாநில தலைவர்களை அழைத்தது, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பிற்கான முதற்படியாக அமைந்தது. 2018ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது கொண்டாடப்பட்ட கலைஞரின் நினைவு நாளில், பாரூக் அப்துல்லா, நிதிஷ் குமார் மற்றும் குலாப் நபி ஆசாத் கலந்து கொண்டார்கள். முதல்வர் ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு பினராயி விஜயன், தேஜஸ்வி யாதவ், உமர் அப்துல்லா கலந்து கொள்ள, ராகுல் காந்தி நூலை வெளியிட்டார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில், மல்லிகார்ஜுன கார்கே, தேஜஸ்வி யாதவ், பாரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்கள்.
‘அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு’பின் கீழ் அனைத்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார் முதல்வர் ஸ்டாலின். அது இணைய வழி மாநாடு. 16கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்காக இல்லை என்ற கருத்து நிலவினாலும், ஸ்டாலினின் உரை அதற்கு நேர் எதிராய் இருந்தது. அவர் முக்கியமாக 4 விஷயங்களை முன்னிறுத்தினார். சமூக நீதியின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் 2024 தேர்தலில் ஒன்றிணைய வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற வேண்டும், திராவிட மாடலை இந்தியா முழுவதும் பரவலாக்க வேண்டும், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமற்றது என்று வலியுறுத்தினார். இதிலிருந்தே அந்த மாநாட்டை ஸ்டாலின் எதற்காகக் கூட்டினர் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு நிதிஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு உடல்நிலை காரணமாக நிதிஷ் குமார் வராததை அடுத்து விமர்சனங்கள் எழுந்தன. கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று அப்பொழுதும் பேசப்பட்டது. காங்கிரஸ் தனக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்காததால் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பார் என்று பேசப்பட்டது. ராகுல் காந்தி கலந்து கொள்வதால் மம்தா பனர்ஜீ வருவது சந்தேகம் என்றார்கள். இவை அனைத்தையும் பொய்யாக்கி முக்கிய தலைவர்கள் கூடிப் பேசி இருக்கிறார்கள். அடுத்து கட்ட நகர்விற்கு தொடர்ந்து கூட்டங்களை நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் மேலும் பல எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அதிர்க்கரித்துள்ளது.
இந்நிலையில், பாட்னாவில் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் அவர்கள் முன் வைத்த யோசனைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. கூட்டணி அமைக்க முடியவில்லை எனில், தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால், பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்றும் தமது முதிர்ந்த யோசனைகளைச் சொல்லி இருக்கிறார்.
மாநிலத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் ஒரு கூட்டணிக்குள் வருவது சாத்தியமா? காங்கிரஸுடன் கடந்த காலத்தில் மனக்கசப்பில் இருக்கும் மாநில கட்சிகள் இந்த கூட்டணிக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்குமா? காங்கிரஸ் வெற்றி பெற்றதும், பழைய படி மாநில கட்சிகளைப் புறக்கணிக்குமா? வெற்றி பெற்றபின் இந்த கூட்டணி முழு ஆட்சிக் காலத்தையும் கடக்குமா அல்லது எத்தனை மாதங்களுக்கு தாக்கு பிடிக்க முடியும்? என்று பல அடுக்கடுக்கான கேள்விகள் இருக்கின்றன. சென்ற வருடம் இந்தத் தலைவர்கள் எல்லோரும் ஒன்று கூடிப் பேசுவார்கள் என்று சொல்லி இருந்தால், அரசியல் அறிந்த யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். இன்று நிகழ்ந்திருக்கிறது. அதுபோல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று முழு ஆட்சிக் காலத்தையும் கடந்தால் மட்டுமே மீண்டும் இந்தியாவில் ஜனநாயகம் தலைக்கும் என்பது மட்டும் உண்மை.
2024 தேர்தலில் முதல்வர் ஸ்டாலினின் யுக்திகள் வெற்றி பெறுமா என்பதைத் தாண்டி, அவை வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய மக்களையும் அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
கட்டுரையாளர்: சுமதி விஜயகுமார்