இந்திய இறையாண்மை தன்னை மதச்சார்பற்ற சமூக ஜனநாயகம் என்கிறது. இந்த கட்டமைப்பின் மீது தான் இந்திய சமூகமும் அரசியலும் ஜீவித்து இருக்கிறது. இந்தியாவில் முடியாட்சி காலம் முடிந்து பின்னர் காலனி ஆட்சி காலமும் முடிந்து ஜனநாயக ஆட்சி உருவானது. அப்போதே இந்த நாட்டின் சமூக அரசியல் கொள்கையானது சனாதனமாக இருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. முஸ்லிம்கள் இங்கு பெரும்பான்மையாக இருக்கும் பட்சத்தில் அது சாத்தியப்படாது என்கிற காரணத்தால் தான் அன்றைய முஸ்லிம்கள் தனி நாடாக பிரிந்து போகும் அரசியல் நெருக்கடியை சந்தித்தார்கள். ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்களை மட்டும் கொண்டு தனிநாடாக சென்றது. இது தான் பிரிவினைக்கான காரணமும் கூட.
பிரிவினைக்கு பிறகு இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக சுருங்கி விட்டனர். இருந்தும் இந்திய சனாதனவாதிகள் சனாதனத்தை அரசியல் சட்டமாக திணிக்க முடியவில்லை. அன்றைய காங்கிரஸ் கட்சியில் சனாதனவாதிகள் பலர் இருந்தாலும் ஜவஹர்லால் நேரு மற்றும் அம்பேத்கர் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் காங்கிரசுக்குள் வலிமையான சக்திகளாக இருந்த காரணத்தால் அன்று சனாதன கொள்கை படியான சட்டங்களை தடாலடியாக கொண்டுவர இயலாமல் போனது. அதனால் தான் நீண்ட கால திட்டத்துக்கு அடித்தள மிட்டனர். இப்போது அந்த காலத்தை அடைந்து விட்டதாக கருதுகிறார்கள்.
அந்த காலத்தில் தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியங்களை ஆராயும் படி வாஜ்பாய் அரசாங்கம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வெங்கட செல்லையா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது. வெங்கட செல்லையா குழுவானது இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் சாத்தியமில்லை என்று வாஜ்பாய் அரசுக்கு அறிக்கை அளித்தது.
அரசியல் அதிகாரத்தை நேர் வழியிலோ அல்லது குறுக்கு வழியிலோ கைப்பற்றிக்கொண்ட ஒரு இனம், ஒரு சமூகம், ஒரு குழு அல்லது ஒரு கட்சியானது அரசியல் அதிகாரம் இல்லாத மக்களையும் அரசியல் புறக்கணிப்பு செய்யப்பட்ட மக்களையும் சட்டம் மற்றும் அதிகார அமைப்புகளை ஏவி ஒடுக்குவதற்கு பெயர் பாசிச அரசியல் என்றால் கட்சி இறையாண்மையாக சனாதனத்தை வைத்துள்ள பாஜக அல்லது இந்துத்துவம் இப்போது அதிகாரத்தில் இருந்து கொண்டு செய்யும் அரசியலுக்கு என்ன பெயர் சொல்வது. பாசிசம் எப்போதெல்லாம் அதிகாரத்துக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அது தனது கோர முகத்தை காட்டி பயமுறுத்தும் என்பது பாசிச அரசியல் பற்றிய நேர்மையான விமர்சனம்.
இதில், 1937 ல் பிரிட்டிஷ் காலத்தில் முஸ்லிம்களுக்கு எழுதி ஏற்கப்பட்ட முஸ்லிம் தனிநபர் சட்டங்களை அரசியல் சட்ட அவை குழு அப்படியே ஏற்றுக் கொண்டது. அது இன்றுவரையில் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டங்களை தான் ரத்து செய்து விட்டு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சனாதனவாதிகள் திட்டமிடுகிறார்கள். தொடர்ந்து அதனை பேசிக்கொண்டு வருகிறார்கள். 1975 ல் இந்திராகாந்தி அம்மையார் மிசா சட்டம் அமலுக்கு வந்த போது அரசியல் சட்டம் முடக்கப்பட்டது. அதாவது, அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் முடக்கி வைக்கப்பட்டன. ஆனால் அந்த காலத்திலும் கூட முஸ்லிம் தனிநபர் ரத்தாகவில்லை. இது, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதின் சிறப்பு அம்சம்.
2018 ஆகஸ்ட் 15 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தில்லி செங்கோட்டையில் 72 வது சுதந்திர தின நாளில் தேசிய கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்திய போது, “ எனது முஸ்லிம் சகோதரிகளை துன்புறுத்தும் முத்தலாக் சட்டத்தினை எப்படியும் ஒழித்து விடுவேன்” என்று சூழுரை செய்தார். முத்தலாக் முறையை தடை செய்யும் விசயத்தில் மோடி ஒரு குழந்தையை போன்று அடம் பிடிப்பவராக இருந்தார். முத்தலாக் பற்றிய மிகை படுத்தப்பட்ட கற்பிதங்களை மோடி மெய் என நினைத்தார். முஸ்லிம் பெண்கள் மீது குவிந்திருக்கும் உண்மையான பிரச்சனை முத்தலாக் தான் என்று அவர் நிஜமாகவே நம்பினார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கும் முத்தலாக் முறைக்கும் உள்ள தொடர்பு அறதப் பழசானது. மோடிக்கு அதன் சூட்சுமம் தெரியாமல் இருக்கலாம். இவர்களுக்கு முத்தலாக் சிக்கலில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நோக்கம் இல்லை. முஸ்லிம் சமூகத்தில் குழப்பத்தையும் குழைவையும் உண்டாக்குவது மட்டும் தான் நோக்கம். முத்தலாக்கை கடுமையான தண்டனை சட்டத்துக்குள் கொண்டு வரும்போது அதன் பக்க விளைவு பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும், உறவு சிக்கலை பெரிதாக்கும். இந்த உறவு சிக்கலை பெரிதாக்குவதன் மூலம் சமூகத்தின் பண்பு நலன்களை சீர்குலைக்க முடியும்.
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டுமே தனி சட்ட வாழ்வு இருக்கிறது. அதனை தனி மனிதனோ ஒரு குழுவோ எழுதியதாக அவர்கள் நம்பவில்லை. வாழ்வியல் சட்டங்கள் இறை கட்டளைகள் என்று நம்புகிறார்கள். மற்ற சமூகங்கள் 1950ல் எழுதி ஏற்கப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்தின் சரத்துகள் படியே வாழமுடியும். வேத கால சட்டங்கள் காலாவதியாகி விட்டன. துல்லியமாக சொன்னால் தடை செய்யப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை நடைமுறைப்படுத்தினால் அதற்கு தண்டனை சட்டமும் புதிதாக எழுதப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, காலமாக இருந்து வந்த தீண்டாமை ஒரு குற்றச் செயலாகி விட்டது. அடுத்து குழந்தை திருமண முறை. மறைந்த சங்கராச்சாரியார் சந்திர சேகர், தான் எழுதியுள்ள தெய்வத்தின் குரல் என்ற நூலில், குழந்தை திருமணத்துக்கு ஆதரவான கருத்தை சொல்கிறார். இந்து மதத்தில் திருமணம் என்பது கன்னிகா தானம். ஒரு பெண் திருமணத்துக்கு முன்பு கன்னித் தூய்மை கொண்டவளாக இருப்பதற்கு தான் பருவம் எய்தும் முன்பே மணம் முடிக்கப்படுகிறாள் என்கிறார் சந்திர சேகர். இப்போது யாரும் பருவம் எய்தா பெண்ணை மணம் முடித்தால் தண்டனைக்குரிய குற்றம்.இன்னும் நிறைய சொல்லலாம்.
முஸ்லிம்கள் மட்டும் தான் 1400 வருடங்கள் உயிர்ப்புடன் நடைமுறையில் இருந்து வரும் ஒரே சட்டத்தை ஏற்று நடக்கின்றனர். இந்த ஷரியத் சட்டங்கள் காலாவதி ஆவதில்லை. யாருக்காகவும் எந்த காரணத்துக்காகவும் ஷரியத் சட்டங்களை திருத்தம் செய்யும் அவசியமே இருக்காது. கால சூழலுக்கு ஏற்ப ஒருவர் ஷரியத் சட்டத்தின் எந்த ஒரு வரம்பையும் மீறிக்கொண்டு போகும் அவசியமும் இல்லை. இந்தியா விடுதலை அடைந்து புதிய இந்தியா உருவான போதுதான், முஸ்லிம் கிறித்தவர் அல்லாத மக்களுக்கு புதிய வாழ்வியல் சட்டங்கள் எழுதப்பட்டன. கடுமையான எதிர்ப்புகளை மீறி ஒவ்வொரு சட்டமாக திருத்தி அமைப்பு சட்டத்துடன் இணைக்கப்பட்டது. கால மாற்றத்தில் திருத்தங்களை எதிர்க்க இயலவில்லை. உண்மையில் இந்துத்துவுக்கு தனக்கு அதிகாரம் கிடைக்கும் போது நேரு, அம்பேத்கர் போன்ற வேத சட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ரத்து செய்த சட்டங்களை மீண்டும் சட்டமாக்கி மக்கள் ஏற்கச் செய்ய வேண்டும். அதை விடுத்து அடுத்தவர் சட்டத்தில் திருத்தம் செய்ய வருவது வேடிக்கையான ஆதங்கம். எனக்கு இரண்டு கண் போனால் எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்கிற வெறுப்பு கோட்பாடு தான் காரணம்.
இதில், 1937 ல் பிரிட்டிஷ் காலத்தில் முஸ்லிம்களுக்கு எழுதி ஏற்கப்பட்ட முஸ்லிம் தனிநபர் சட்டங்களை அரசியல் சட்ட அவை குழு அப்படியே ஏற்றுக் கொண்டது. அது இன்றுவரையில் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டங்களைத் தான் ரத்து செய்து விட்டு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சனாதனவாதிகள் திட்டமிடுகிறார்கள். தொடர்ந்து அதனை பேசிக்கொண்டு வருகிறார்கள். 1975 ல் இந்திராகாந்தி அம்மையார் மிசா சட்டம் அமலுக்கு வந்த போது அரசியல் சட்டம் முடக்கப்பட்டது. அதாவது, அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் முடக்கி வைக்கப்பட்டன. ஆனால் அந்த காலத்திலும் கூட முஸ்லிம் தனிநபர் ரத்தாகவில்லை. இது, நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதின் சிறப்பு அம்சம்.
இந்தியா பல்லாயிரம் சாதிய சமூகங்களை கொண்ட நாடு. ஒவ்வொரு சமூகத்துக்கும் தனிச் சட்டங்கள் இங்கு இருக்கின்றன. இந்திய அரசியலைமைப்புச் சட்டம் மொத்தம் 400 தனிச் சட்டங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் முஸ்லிம்களுக்கு 4 தனிச் சட்டங்கள். கிறித்தவர்களுக்கு 4 தனிச் சட்டங்கள். முஸ்லிம் கிறித்தவர் நீங்களாக அனைத்து இந்திய சாதிகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட இந்து மக்கள் சமூகத்துக்கு 392 தனிச் சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள் மட்டும் தனியாக சிவில் சட்டங்களை வைத்துக்கொண்டு பொதுவான சிவில் சட்டத்தை ஏற்க மறுக்கின்றனர் என்றொரு அவதூறைப் பரப்பி பெரும்பான்மை மக்களை சனாதனவாதிகள் குழப்புகின்றனர்.
சனாதன சட்டங்களே இந்திய சட்டங்களாக இருக்க வேண்டும் என்பவர்கள் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் பற்றி பேசுவதில் தான் சந்தேகம் எழுவதாக அரசியல் மற்றும் சட்ட அறிஞர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
2003ல் வாஜ்பாய் தலைமையில் இருந்த பாரதிய ஜனதா ஆட்சியிலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் வெங்கடாச்சலய்யா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் சூழல் இப்போது இல்லையென்று நீதியரசர் வெங்கடாச்சலய்யா கமிட்டி மத்திய அரசுக்கு அப்போது ஒரு அறிக்கை அளித்தது.
இந்தியாவில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் ஆயிரத்து 400 ஆண்டுகலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் ஆட்சியிலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியிலும் இஸ்லாமிய சிவில் சட்டங்களையே பின்பற்றி வந்துள்ளனர். ஆங்கில அரசு முஸ்லிம் அறிஞர்களை கொண்டு ஷரியத் சட்டங்களை 1937 ஆம் ஆண்டு தொகுத்தது. முஸ்லிம் தனிநபர் சட்டம் என்ற பெயரில் அரசியல் சட்டமாக ஆங்கில அரசு அதனை ஏற்றது. இந்திய விடுதலைக்கு பின்னர் புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதும்போது தான் பொது சிவில் சட்டம் என்ற ஒரு கருத்து புகுத்தப்பட்டது. அரசியல் அமைப்பு சட்ட அவையில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த கருத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய சட்டங்களுக்கு புறம்பான சட்டங்களை ஏற்க முடியாது என்று நிராகரித்தனர்.
இந்தியா, சுதந்திரத்துக்குப் பிறகு ஒரு ஜனநாயக குடியரசானது. அரசியலமைப்பு சட்டமியற்றும் அவையில் இருந்த காயிதேமில்லத் இஸ்மாயில் ஷாஹிப், போக்கர் ஷாஹிப் உள்ளிட்ட உறுப்பினர்கள் பொது சிவில் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அப்போது அது கைவிடப்பட்டது. 1937 ஆம் ஆண்டு ஆங்கில அரசு இயற்றி ஏற்றுக்கொண்ட முஸ்லிம் தனிநபர் சட்ட தொகுப்பை முஸ்லிம்களுக்கான தனிச் சட்டமாக அரசியலமைப்பு சட்ட அவையும் இந்திய குடியரசும் ஏற்றுக்கொண்டது. பின்னர் பொது சிவில் சட்டம் என்ற அம்சம் அரசியலமைப்பு சட்டத்தின் நேரடி கொள்கையில் இருந்து விலக்கி வழி காட்டு கொள்கையில் வைக்கப்பட்டது. அன்று முதல் இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியல் விவகாரங்களில் இஸ்லாமிய சிவில் சட்டங்களை பின்பற்றி வருகின்றனர்.
பிரதமர் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் மிசா சட்டம் கொண்டு வந்தபோது, இந்திய அரசியலமைப்பு சட்டம் 6 மாதங்கள் செயல் முடக்கம் ஆனது. ஆனால், அந்த நாட்களிலும் அனைத்து மக்களுக்கும் அவரவர் தனிச் சட்டங்களே நடைமுறையில் இருந்தது. முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்டங்களே நடைமுறையில் இருந்தன. இதனால் இந்திய இறையாண்மைக்கும் இந்திய ஜனநாயக பண்புக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்பதே தனிச் சட்டங்களின் தனிச் சிறப்பு.
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் ஏற்று கொள்ளும் ஒரு நாளில் தான் பொதுவான சிவில்சட்டம் கொண்டு வர முடியும் என்ற கருத்தை அரசியலமைப்பு அவையும் அன்றைய இந்திய தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகளை கடந்தும் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வரும் சூழல் உருவாக வில்லை. இதனை சட்ட ஆணையமும் உறுதி செய்து விட்டது. இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் பொதுவான தொரு சிவில் சட்டத்தை ஏற்க முன்வராத வரையில் பொது சிவில் சட்டம் ஒன்றை கொண்டுவர இயலாது. அதனால் முஸ்லிம்களை தேசத்தின் பொது எதிரியாக தனிமைப் படுத்தும் முயற்சியை சனாதனவாதிகள் எப்போதும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள்.
கட்டுரையாளர்: ஜி.அத்தேஷ்