உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் முடிவின்றி தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. போரானது மனித இனத்தின் துயரம் எனக்கருதி, அதனை முடிவுக்குக்கொண்டுவர அமைதியை விரும்புகிற ஏனைய நாடுகள் முயற்சித்தாலும், அதிகாரத்தை நிலைநிறுத்தவும், ஆயுதம் மற்றும் எண்ணெய் விற்பனைமூலம் லாபத்தைப்பெற்று வருகிற அமெரிக்க – நேட்டோ நாடுகள் விடுவதாகயில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களானது, போரில் ஈடுபட்டுள்ள நாடுகளை மட்டுமல்லாது, அதிகாரத்தை நிலைநிறுத்த முயலுகிற மற்றும் அமைதியை விரும்புகிற நாடுகள் யாவற்றையும் பாதிப்புள்ளாக்கி வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கத்தின் காரணமாக பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளது. வளர்ந்துவரும் ஆப்பிரிக்கத் தேசங்களில், உணவுப்பற்றாக்குறை மட்டுமல்லாது பட்டினியால் மரணமுறுவதும் தொடர் நிகழ்வாகி வருவதனையும் அறிய முடிகிறது. தவிர, நீண்டகாலமாகப் பாதிப்படைந்துவரும் சுற்றுச்சூழல் கேடுகள்; போரின் விளைவுகள்; புவிவெட்பமடைதல்; இயற்கைப்பேரிடர்களின் விளைவுகளும் சேர்ந்துகொள்ளும்போது, அது, பாரபட்சமின்றி அனைத்து நாடுகளையும் மீளாத்துயருக்குள் இழுத்துச்செல்வதாக இருப்பதை அச்சத்துடன் கவனிக்க வேண்டியுள்ளது. மேற்குறிப்பிட்ட பாதிப்புக்களுக்கு வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் விடாப்பிடியாகக் கடைபிடித்துவரும் சந்தைமயக்கொள்கையையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் இதற்கான காரணங்களாகக் கூறலாம்.
இயற்கை வளங்களைச்சுரண்டுவதிலும், மக்களை துயரத்திற்குள்ளாக்குவதிலும், போரின் வழியாக லாபம் ஈட்டுவதிலும் கார்ப்பரேட்டுகளுக்கு நிகர் கார்ப்பரேட்டுகள்தான். போர்களினாலும், வன்முறைகளாலும், வாழ்வாதாரத் தேவைகளுக்காகவும் உலகளவில் இதுவரை 11 கோடிப்பேர் இடம் பெயர்ந்திருப்பதாக ஐ.நா. புள்ளிவிபரம் கூறுகிறது. லாபத்தை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இக்கொள்கையில், எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், கார்ப்பரேட்டுகள் தற்போதைக்கு தனது சந்தைமயத்தினைக் கைவிடப்போவதில்லை என்றே தோன்றுகிறது.
அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் சந்தைமயக்கொள்கைகளான தனியார்மயம், கட்டுப்பாடுகள் தளர்வுக்கு முக்கியத்துவமளிக்கின்றன. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தனியார்மயத்திற்கு குறைவாகவும், பொதுத்துறைக்கு அதிகமாகவும் முக்கியத்துவமளிக்கின்றன. இதுவும்கூட, அமெரிக்கா-நேட்டோ X ரஷ்யா-சீனா முகாம்களுக்கிடையேயான பனிப்போர் சூழலுக்கான காரணங்களாக இருக்கலாம்.
இந்தியாவும் 1990களில் பொதுத்துறைகளை அதிகம் கொண்டிருந்த நாடாக இருந்துவந்தது. 1991ல் சந்தைமயத்தினை ஏற்றுக்கொண்டதற்குப்பிறகு, பொதுத்துறைகள் யாவும் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. வலதுசாரிகளின் ஆட்சி காலமான 1999–2004; அதன்பிறகான 2014முதல் தற்போதைய காலகட்டம்வரை அவசரஅவசரமாக தனியார்மயம், கட்டுப்பாடுகள் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
1991க்கு முன்பு ஜனநாயகம் – மக்கள்நலனை அடிப்படையாகக்கொண்ட பொருளாதாரக்கொள்கை இருந்துவந்தது. 1991ல் சந்தைமயமும் சேர்ந்தபோது, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பன்மடங்கு அதிகரிக்கக் காரணமாகின. 1999 களில் வலதுசாரி அடையாள கருத்தியலைக் கொண்டவர்கள் ஆட்சியில் அமரும்போது, சந்தைமயத்துடன் நிதிமூலதனமும், வலதுசாரி அடையாளக்கருத்தியலும் அத்துடன் சேர்ந்துகொண்டது. இப்போதைக்கு, இவை மூன்றும் சேர்ந்து மக்களை வதைக்கும் எதேச்சதிகார ஆட்சிக்கு வழிவகுத்துள்ளதைக் காணமுடிகிறது. இதனால், 80 சதவீத ஏழைமக்கள் லாபத்தின் வழியான பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கும், வலதுசாரிஅடையாளத்தின் வழியான சாதியப்படிநிலை ஏற்றத்தாழ்வுக்கும் உட்படவேண்டியதாகிவிட்டது.
வலதுசாரி அடையாள ஆட்சியாளர்கள் ஒரு பக்கம், கார்ப்பரேட்டுகளுக்கு நலன்பயக்கும் வகையில், உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, தொழிலாளர் சட்டவிதிகளில் மாற்றம், வரிச்சீர்திருத்தம், சிறப்புப்பொருளாதார மண்டலம், வரிச்சலுகைகளை அறிவிக்கின்றனர். இன்னொருபக்கம், தனது நலன்சார்ந்து, வலதுசாரி அடையாளக்கருத்தியலை, ஜனநாயகத்தூண்கள்; ஊடகங்கள் உதவியுடன் ஜனநாயகத்திற்கு மாற்றானதாக இட்டு நிரப்பவும் செய்கின்றனர். இதனால் ஏழைமக்கள் முதல் சிறுபான்மையினர் வரை, இத்தேசத்துக்குடிமகனுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பலவற்றையும் இழந்து சொல்லமுடியாத துயரத்திற்குள்ளாகி நிற்கின்றனர்.
வலதுசாரி அடையாள அரசியலின் கடந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியினைத்திரும்பிப்பார்க்கும்போது, ஒருபக்கம், ஜனநாயகத்தூண்கள் மற்றும் அதன் துணைநிறுவனங்களும் சிதைந்து நிற்கின்றன. இன்னொருபக்கம், அரசியலில், தேசியவாதம் – ஆன்மீகமும் – சிறுபான்மையினர்மீது வெறுப்பும் கலந்து பரவலாக்கி வருவதன் விளைவாக சமூகத்தில் பதட்டமும் அதிகரித்துள்ளது. இது தவிர, போதிய பொருளாதார வளர்ச்சியின்மையின் காரணமாக வேலைவாய்ப்பின்மையும், இதன் தொடர்ச்சியாக ஏற்றத்தாழ்வும் அதிகரித்திருக்கிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் ஒன்றியப் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தினை உறுதிசெய்யக்கூடிய, காலியாக உள்ள இரண்டு லட்சம் பணிகள்; ஒன்றிய அரசுத்துறைகளில் கிட்டத்தட்ட 10 லட்சம் பணிகள் பூர்த்திசெய்யாமல் இருப்பதிலிருந்து இந்த ஆட்சியானது இளைஞர்கள்மீது கொண்டுள்ள அக்கறையையும். ஆட்சியாளர்களின் உண்மையான முகமும் பளிச்சிடலாம்.
ஒன்றிய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி, பாரபட்சமின்றி, பல வழிகளில் கடன் வாங்குவதென்பது ஆண்டுக்காண்டு அதிகரித்துவரவே செய்வதை புள்ளிவிபரங்கள் உணர்த்துகின்றன. ஒன்றிய அரசின் கடனானது 2023 ல் 155 லட்சம் கோடியாகவும், தமிழக அரசின் கடனானது கிட்டத்தட்ட 5 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. தமிழகமும், இந்திய ஒன்றியத்தின் பொருளாதாரக்கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டதுதான் என்றபோதிலும், மக்கள் நலன் – சமூகநீதியின் பார்வைகொண்டு, சந்தைமுறைப் பொருளாதாரத்தினை அமல்படுத்தி வருவதைக் காணமுடியும்.
அரசானது, ஒவ்வொருமுறையும் ஐ.எம்.எஃப், உலகவங்கி உள்ளிட்டவைகளிடம் கடன் பெறும்போது அந்நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுத்தான் செயல்பட்டு வருகின்றன, அப்படிச்செயல்பட்டு, மக்கள்நலனுக்கான செலவீனங்களுக்காகவும் மற்றும் மானியங்களைக்குறைக்கவும், சேவை செய்யக்கூடிய அரசுத்துறைகள் லாபமீட்டவும் செய்கின்றன. ஒன்றிய அரசின் பெட்ரோல், சாலைப்போக்குவரத்து, மோட்டார் வாகனம், சுங்கவரி போன்ற அரசுத்துறைகள் லாபமீட்டுவதே இதற்குச்சாட்சி.
இப்படியாக, கார்ப்பரேட்டுகளுக்கு நலன் பயக்கிற, மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச்செய்கிற சந்தைப்பொருளாதாரக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துச்செல்லவும், அவர்களை இணங்கவைத்து அதிகாரம் செலுத்தவும், ஒன்றிய – மாநில ஆட்சியாளர்களுக்கு மின்சாரம், கல்வி – மருத்துவசெலவுக்கட்டணம், பயிர்காப்பீடு, விபத்துக்காப்பீடு, உள்ளிட்டவற்றில் இலவசத்திட்டங்கள் என்பது, அவசியமாக இருக்கிறது. இலவசத்திட்டங்கள் அமலாக்கமானது ஒருபக்கம் அரசாங்கத்தின் செலவீனங்கள் அதிகரிக்கக் காரணாமாக இருக்கிறதென்றாலும், அதுவே, இன்னொருவகையில், அத்திட்டங்களின் வழியாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு வழியேற்படுத்தித்தருவதாகவும் இருப்பதைக் பார்க்கமுடியும்.
இதற்கு முன்பான காலத்தில் ஒன்றிய–மாநில அரசானது மக்களின் சேவைக்கு முக்கியத்துவம் அளித்துவந்தது. தற்போதைய ஒன்றிய-மாநில அரசானது, சந்தைக்கும்–சேவைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இதில் ஒன்றிய அரசானது சந்தைக்கு அதிகளவு, சேவைக்கு குறைந்தளவு முக்கியத்துவமும், தமிழகஅரசானது சம அளவில் சமூகநீதிப்பார்வையுடன் செயலாற்றிவருவதாகவும் இருக்கின்றன.
ஒன்றிய அரசானது, பொருளாதாரத்தில் சந்தைமயத்திற்கும், அரசியலில் வலதுசாரி பாஸிசக் கருத்தியலையும் எடுத்துச்செல்வதினால், நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பினையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் உறுதிசெய்ய முடியவில்லை என்பது மட்டுமல்லாது, மக்களிடையே பிளவு எண்ணங்களை வளர்த்தெடுத்து, அம்மக்களை பாதுகாப்பற்ற மனநிலைக்கு தள்ளிவிடவும் செய்கிறது.
உலகளாவியப் பிற நாடுகளுடன் பசி, மதச்சுதந்திரம், பத்திரிகைச்சுதந்திரம், கல்வி, மருத்துவம், தொழில்நுட்பக்கண்டுபிடிப்பு சார்ந்து, இந்தியாவின் தரநிலையினை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, மிகமிகப் பின் தங்கியிருப்பதனைப் புள்ளிவிபரங்கள் உறுதிசெய்கின்றன. இதிலிருந்து, சந்தைமயமும்- வலதுசாரி அடையாள அரசியலும் கூட்டுசேர்ந்து நாட்டிற்கு எத்தகைய நாசத்தினை விளைவித்துக்கொண்டிருக்கிறது எனப்புரியும்.
வலதுசாரி அடையாள அரசியலானது எப்போதுமே, இரட்டைநிலைபாட்டுடன் செயல்பட்டு வருவதாக இருப்பதை புரிந்துகொள்வது அவசியம்.
# நாட்டுமக்கள் பொருளாதார நெருக்கடி பற்றி குரல் எழுப்பும்போது, இதனைத்திசைதிருப்ப மதங்களுக்கிடையே வெறுப்பரசியல் பேசி வன்முறை நிகழ்த்துவதும்; வெறுப்பரசியல் கொடூரங்களுக்கு எதிராகக்கண்டனங்கள் எழும்போது பொருளாதார வளர்ச்சி பற்றிப்பேசி மக்களை இயல்புநிலைக்கு கொண்டுவர முயல்வதும் இங்கே வாடிக்கையாகிவிட்டது.
# பொருளாதாரத்தில் மக்கள்நலனுக்கான திட்டங்களில் சிக்கனத்தைக்கடைபிடிக்கிறது; அரசியலில் அனைவரும் இந்துக்கள் ஒற்றுமையைப்பேசி, சிறுபான்மையினர்களை ஒதுக்கிவைப்பதாக இருக்கிறது .
# ஒரு பக்கம், வலதுசாரிகள், உள்நாட்டில் சிறுபான்மையினர்களுக்கெதிராகப்போர் தொடுக்கின்ற போக்கினைப்பார்க்கலாம். இன்னொருபக்கம், அச்சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளிலிருந்து சுமூகமான வர்த்தக உறவினை கடைபிடித்து வருவதையும் பார்க்கமுடியும்.
# இன்னும் சொல்லப்போனால், குடிமக்களை அரசியலுக்கு – இந்துக்கள் என்பது; சமூகத்தில் – படிநிலை ஏற்றத்தாழ்வினை கடைபிடிப்பது; பொருளாதாரத்தில் – நுகர்வின் வழியாக கார்ப்பரேட்டுகளுக்கு அடகுவைப்பதாக இருப்பதைக்காணலாம்.
# தேர்தல் சமயத்தில், சிறுபான்மையினரை வேட்பாளாராக அறிவிக்காமலிருப்பது மட்டுமல்லாது, அவர்களை முன்வைத்து துருவப்படுத்தும் பிரச்சாரமும் மேற்கொள்வர் அதேவேளையில், நல்லிணக்கம் பேணுவதாக பாவனையும் செய்துகொள்வர்.
வலதுசாரி அடையாள அரசியலானது மேலைநாடுகளில் பரவலாகி வருவதனை செய்திகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறாகப் பரவுவதற்கு நிற வேற்றுமையையும், இடம் பெயர்வோர்களையும் எதிரியாகக்கட்டமைத்து பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதையும் காணமுடியும். அதுவே, வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் இஸ்லாம், கிறித்துவம் உள்ளிட்ட மதத்தினரை எதிரியாகக் கட்டமைத்துப் பரவலாக்குவதாகவும் இருக்கின்றது. இஸ்லாத்தின் குரானும், கிறித்துவத்தின் பைபிளும் அனைவரையும் சமமாகப்பாவிப்பது மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவாகவே போதிக்கிறது. இந்திய வலதுசாரிகள் பின்பற்றி வரும், இந்துமதத்தின் வேத–புராண நூல்கள் யாவுமே அனைவரையும் சமமற்றவராக நடத்துவதும், நால்வர்ணம், சாதியை முன்வைத்து, பார்ப்பனர்களின் நலனை மட்டுமே காப்பதாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவில், லாபத்தில் அக்கறை கொண்ட சந்தையானது கார்ப்பரேட்டுகளுக்கும், பாஸிசத்தன்மை கொண்ட வலதுசாரி அடையாள அரசியலானது பார்ப்பனர்களின் நலன் காப்பதாகவே இருந்துவருகிறது என்பதுதான் உண்மை. இன்னும் சரியாகச்சொன்னால், பார்ப்பனர்களின் நலன்காப்பபதற்காக மட்டுமே, இங்கே, இஸ்லாம், கிறித்துவம், ஜனநாயகம் யாவும், இந்துமதத்திற்கு எதிரானதாக முன்வைக்கப்படுகிறது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஜனநாயகத்தினை ஒதுக்கிவைத்துவிட்டு, சமூக அநீதிமிக்க, சந்தை–வலதுசாரி என்கிற, இரு வேறுபட்ட கருத்தியல்களை ஆட்சியாளர்கள், நீண்டகாலம் ஒருசேரக் கொண்டுசெல்ல முடியுமா எனத்தெரியவில்லை. வலதுசாரி அடையாள அரசியலினை சூழ்ச்சித்திறனுடன் கையாண்டு எப்போதும் கொதிநிலையிலேயே வைத்திருக்கின்றபோது, கூடுதலாக, சந்தைப்பொருளாதாரத்தின் பாதிப்புக்களும் வாட்டியெடுக்கும்போது, அடையாள அரசியலின் நிலை என்னவாகும்? வெறும் புனைவுகளையும், பிம்பங்களையும், வெறுப்பரசியலையும் வைத்துப் பின்னப்படும் சொல்லாடல்கள் எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? கிட்டத்தட்ட 100 கோடி மக்கள் ஏழையாக வாழுகிற இச்சூழலில், வாழ்வாதாரமா? அடையாளமா? எனும் முரண் எழுகிறது.
அடையாள அரசியலானது, பார்ப்பனர்களுக்கு நலன் பயக்கக்கூடியது. அதுவே, இதர மக்களை பொருத்தமட்டில், அடிமைப்படுத்திடவே செய்யும். இச்சமயத்தில், பாஸிசத்திற்கு இட்டுச்செல்லுகிற – வலிந்து திணிக்கப்படுகிற அடையாளங்களைப் புறக்கணித்து, மக்களின் நலன் மற்றும் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு வழியேற்படுத்துகிற, சந்தை – சமூகநீதி- ஜனநாயகம் சார்ந்த கருத்தியல்களை அரவணைத்து வளர்த்தெடுப்பதுதான் பன்முகத்தன்மைகொண்ட இத்தேசத்திற்கு பொருத்தமானதாக இருக்கமுடியும்.
கட்டுரையாளர்: நிகழ் அய்க்கண்