உலகம் தோன்றிய காலத்தில் இருந்து எத்தனையோ கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் தான் மனிதனுக்கு இரும்பு எனும் உலோகத்தின் பயன்பாடு தெரியந்திருக்கிறது. அதேபோல மனித நாகரிகம் தோன்றியவுடன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கண்டுபிடிப்பு சக்கரம் என்பதாக பரவலாக அனைவராலும் நம்பப்படுகிறது.
சக்கரத்தை வைத்து வெறும் வாகனங்களை இடப்பெயர்த்த மட்டுமே தெரிந்திருந்த மனிதன், பிறகு அதனுடன் இயந்திரப்பொறிகளை இணைத்து பல்வேறு புதிய பெரிய கண்டுபிடிப்புகளை உருவாக்க கற்றுக்கொள்கிறான்.
மேலும் இரும்பு உலோகத்தை வைத்து பாத்திரங்களும் ஆயுதங்களும் மட்டுமே செய்யத்தெரிந்த மனிதன் இரும்புடன் வேறு உலோகங்களை கலந்து அலாய் உலோகங்களை உருவாக்குகிறான். அப்படி இரும்பில் இருந்து தயாரானது தான் ஸ்டீல், அதிலிருந்து தயாரானது தான் அலுமினியம். அது, 1825இல் கண்டுபிடிக்கப்பட்டது. இரும்பு என்பதே பூமிக்கு சம்பந்தமில்லாத ஒரு உலோகம் என்பதை மனிதன் ரொம்ப தாமதமாகத்தான் கண்டுகொள்கிறான். இரும்பு குறித்த விபரங்களை திருக் குர்ஆன் எனும் இறைவேதம் தவிர வேறெதுவும் குறிப்பிட்டுக்கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விண்வெளிப்பயணம் செய்ய மனிதன் கண்டுபிடித்த ராக்கெட்டின் 90% பாகங்கள் அலுமினியத்தால் ஆனவை, விண்வெளியில் நிலவும் மிதமிஞ்சிய வெப்பத்தை தாக்குப்பிடிக்க அலுமினியத்தால் தான் முடியும் என்பதை உணர்ந்து அலுமினியத்தை விண்வெளி வாகனத்திற்கான உலோகமாக கண்டறிய மனிதனுக்கு ஒரு நூறு ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் தற்போது, டான்டலம் கார்பைடு (TaC) மற்றும் ஹாஃப்னியம் கார்பைடு (HfC) எனும் இருவகை தனிமங்களை ஒன்றுகூட்டி refractory ceramics எனப்படும் ஒருவகை கடினத்தன்மை கொண்ட பயனற்ற மண்ணை உருவாக்கி அதனைக் கொண்டு விண் ஊர்த்திகள் தயாரிக்க முடியும் என்பதை டெக்ஸாஸ் பல்கலையில் கண்டறிந்துள்ளனர் ஓமர் செடிலோஸ் மற்றும் பராஸா எனும் இரு விஞ்ஞான பேராசிரியர் கூட்டணி.
4000°c வெப்பத்தை தாங்கி நிற்க கூடிய அந்த பொருளில் குறைந்த செலவில் விண்வெளி ராக்கெட்டுகளை தயாரிக்க முடியும் என்பதை மனிதன் கண்டறிய எத்தனை ஆண்டுகள்? விண்வெளியில் பூமியின் வளிமண்டலத்தை கடக்கவும் மீண்டும் உள்ளே வரவும் அந்த ஊடகத்திற்கு ஏற்படும் அழுத்தம் மற்றும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க இறுதியாக பூமியில் கிடைக்கும் மண்ணே போதுமானது என்கிற உண்மையைக் கண்டறிய மனிதனுக்கு எத்தனையெத்தனை அறிவியல் புரிதல்களும் எத்தனை காலநேரமும் தேவைப்பட்டுள்ளது.
விண்வெளியில் வாகனம் நீந்திப்போக வேண்டுமானால் அதற்கு அதிக உந்து சக்தியுள்ள எரிபொருள் மாத்திரம் போதாது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் கோளங்களைப்போல சுழன்று செல்லும் வகையிலான ஒரு சக்கர வடிவ நிலையத்தை வடிவமைக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் தீர்மானத்தினர். அதாவது ஒரு கோளத்தின் சுற்றுவட்டப்பாதைக்கு போவதற்கு தான் எரிபொருள் நிறப்பிய ராக்கெட் தேவை மற்றபடி விண்வெளியில் ஒவ்வொரு கோளுக்கும் இடையே மிதந்து அருகே போக எரிபொருளை வீணாக்காமல் சக்கரம் போல சுழலும் செயற்கை கோளத்தை தயார்படுத்திக்கொண்டால் போதும் என்பதை தான் Interstellar போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் பேசுகின்றன.
சக்கரம் போன்ற அமைப்பு சுழல்வதற்கான சக்தியை விண்வெளியில் கிடைக்கும் ரேடியோ மற்றும் எலக்ட்ரோ மேக்னடிக் அலைகள் மூலம் எனர்ஜியை தயாரித்துக்கொள்ளமுடியும்.
இப்போது அதே பழைய இரும்பும், சக்கரமும் தான் அறிவியலின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிக்கொண்டுள்ளது. இதையே தான் மதப்புத்தகங்களும் நமக்கு உணர்த்துகின்றன. விடிய விடிய விளக்கம் சொல்லப்படாமல், ஒரு இறையின் கட்டளைகளாக நமக்கு அறிவிக்கப்பட்டவை தான் வேதங்கள். அதிலுள்ள ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் Experiments மூலமாக கண்டுபிடிக்கப்படுவதே Science & Technology.
Religion/Relevations சொன்னவற்றின் செயல்வடிவங்கள் தான் இப்போதைய புதிய கண்டுபிடிப்புகள். தத்துவங்கள் எனப்படும் ஏட்டெழுத்துக்கள் பரிசோதனைகள் செய்யப்படும் பொழுது அதன் செயல்வடிவங்கள் அறிவியில் கண்டுபிடிப்புள் ஆகின்றன. எனவேதான் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பும் அதன் முழுமையை அடையாது சுமார் 20 சதவீதம் அளவுக்கு நிறைவு பெறாதவையாகவே இருப்பதையும், வேதநூல்கள் எதையும் 100% உறுதியாக சொல்லக்கூடியதாக இருப்பதையும் காண்கிறோம். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன், விண்வெளியிலிருந்து இறக்கப்பட்டு பூமியில் வாழ்ந்து, மரணித்து, மறுமை நாளன்று மீண்டும் விண்ணுலகம் செல்வான் என்ற வேதப்புத்தகத்தின் ஒற்றைவரி தத்துவத்திற்கு இடையில் அவன் செயல்முறைப்படுத்தும் experiments தான் ஒட்டுமொத்த உலக அறிவியலாக வரைமுறைப்படுத்தப்படுகிறது.
மனிதன் தனது மூதாதையரை அறிய வேண்டும் என்ற கோட்பாட்டின் செயல்வடிவம்தான் டிஎன்ஏ கண்டுபிடிப்பு. இன்று அந்த டிஎன்ஏ அறிவியலின் மூலம் 300 தலைமுறைக்கு முந்தைய நமது வம்சாவளியினரை கண்டுபிடித்துவிட முடியும் என்பதை வேதப்புத்தகங்கள் நேரடியாக தீர்க்கதரிசிகளின் வம்சாவளியினை குறிப்பிட்டு கூறிவிட்டது. இந்த டிஎன்ஏவைக்கொண்டு எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் மாண்டு போனவர்களை மீண்டும் உயிராக்கி கொண்டுவர முடியும் எனும்போது, மறுமை நாளில் அனைத்து உயிர்களும் மீண்டும் எழுப்பப்படும் என்பதை மட்டும் மறுப்பிற்குள்ளாகிறது எனில், அது இன்னும் செயல்முறைக்கு வரவில்லை என்ற அர்த்தம் தானே தவிர அப்படி நடக்க வாய்ப்பில்லை என்ற அர்த்தமில்லை.
நாம் பிறக்கும் முன்னர் தாயின் கருவறையில் நிறைந்திருக்கும் நீருக்குள் தான் வளர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆனால் அதே வளர்ந்து முழு மனிதனாகிவிட்ட பிறகு சில குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீருக்குள் மூழ்கியிருக்கும் தன்மையை இழந்துவிடுகிறோம். தாயின் கருவறையில் மூச்சுவிடாமல் நம்மால் வாழமுடிகிறது எனில் மூச்சு விடாமல் ஒரு கருவியின் உதவி கொண்டு விண்வெளியில் நீருக்குள் Hybernation செய்து பிழைத்துக்கொள்ள முடியும் என்பதை நவீன அறிவியல் கண்டறிகிறது. நீரிலிருந்து தான் உயிரைப் படைத்தோம் என இறைவேதமான திருக் குர்ஆன் கூறுவதில் இருக்கும் உண்மை இதுவாகத்தானே இருக்க முடியும். எனினும் திருக் குர்ஆன் அறிவிக்கும் அறிவியல் முன்னறிவிப்புகள் எதையும் எதிர்கால நோக்கத்தோட ஒப்பிட்டு அதனை ஆராய்ச்சி செய்யாமல் நாம் அதற்கு ஒரு புனிதத்தன்மையை கொடுத்து ஒதுக்கி வைத்துக்கொண்டிருக்கும் காரணத்தாலே இஸ்லாமிய சமூகம் அறிவியலை விட்டு தூரமாகி வருகிறது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எகிப்தில் பிரம்மாண்ட பிரமிடுகளை கட்டிய ஃபாரோ மன்னர்கள் சுமார் 70 டன் எடை கொண்ட கற்பாறைகளை எவ்வித நவீன கருவிகளுமின்றி எப்படி 480 அடிகளுக்கு தூக்கிச்சென்று உயர்ந்த கோபுரத்தை உருவாக்கினார்கள் என்கிற கேள்விக்கு பதில் தெரியாமல் உலக ஆய்வாளர்கள் விழிபிதுங்கியிருந்த நேரத்தில் திருக் குர்ஆன் தான் தனது தூய ஒளியின் வாயிலாக பதிலளித்துள்ளது. ஆம்! இத்தனை நாளும், ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேலுள்ள கற்கள், பாறைகள் அல்ல என்பதையும் அவை களிமண்ணால் சுடப்பட்ட கற்பாளங்கள் என்பதையும் கண்டறிந்துள்ள எகிப்தாலஜிஸ்ட்டுகளுக்கு திருக் குர்ஆன் வசனங்கள் வழிகாட்டியாய் அமைந்துள்ளன. யூதர்களின் தோரா மற்றும் கிறுஸ்தவர்களின் பைபிள் தொகுப்பில் கூட திருக் குர்ஆனில் உள்ளவை போல தெளிவான வசனங்கள் இல்லை. ஃபாரோனுக்கு கட்டடங்கள் கட்டுவதில் உறுதுணையாய் இருந்த ‘ஹாமான்’ பற்றி திருக் குர்ஆன் ஆறு இடங்களில் தெளிவாக குறிப்பிடுகிறது. ஓரிறைக்கொள்கை பற்றி அறிவிக்க நபி மூஸா அவர்கள் ஃபாரோனை அடைந்த போது, ஹாமானை அழைத்த ஃபாரோன் “சுடுநெருப்பால் சமைத்த கற்கள் கொண்டு உயரமான கோபுரத்தை கட்டு அதில் நின்று நான் மூஸாவின் கடவுளை காண்கிறேன்” என குறிப்பிட்டதாக வரும் வசனமும் மற்ற வசனங்களையும் வைத்து ஹாமான் என்பது ஒருவருனுடைய பெயர் அல்ல என்பதும் அதுவொரு ராஜ பதவி என்பதும், பிரமிடின் கற்கள் முழுதும் பாறைகற்கள் அல்ல. மாறாக அவை சுடுமண்ணால் செய்யப்பட்டவை என்பதையும் இப்போது கண்டறிந்து எகிப்து ஆராய்ச்சியாளர்கள் இதுநாள் வரை ரோசாட்டா கல்வெட்டு மூலமும் எகிப்து ஹைரோக்ளிஃப்ஸ் மூலமாக கிடைத்த தகவலின்படி டெசிஃபர் செய்ய முடியாத இந்த ரகசியத்தை திருக் குர்ஆன் தங்களுக்கு காட்டித்தருவதாக கூறி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். மூன்றாயிரம் வருடம் முன் நிகழ்ந்த ஒரு சம்பவத்திற்கு ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் கிடைத்த திருக் குர்ஆனின் உதவியுடன் 2022 இல் தான் விடை கிடைத்திருக்கிறது எனில் ஆய்வு செய்யப்படவேண்டியது இன்னும் உள்ளது என்று தானே பொருள்.
மேற்கூறப்பட்ட இயந்திர அறிவியலும், விஞ்ஞான அறிவியலும், உடற்கூறு அறிவியலும் ஒரு உதாரணம் தான். திருக் குர்ஆனை முன்வைத்து மேற்கத்திய அறிவியல் அறிஞர்களால் செய்யப்பட்ட ஆய்வுகள் தான், அந்த திருவேதம் அல்லாஹ்வின் வார்த்தைகள் என நம்மை முழுமையாக நம்பிக்கை கொள்ளச்செய்கிறது. ஆனால் திருக் குர்ஆன் என்பது நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வார்த்தைகள் அல்ல. அது தூய இறைவனின் வேத வாக்குகள். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை இந்த உலகத்தை வடிவமைத்த பெருமை முஸ்லிம் ஆராய்ச்சியாளர்களையும் விஞ்ஞானிகளையுமே சாரும். அவர்களின் சூத்திரங்கள் மீதுதான் தற்போது ஜிகினாக்கள் தூவி தமதாக்கிக் கொள்கிறார்கள் இன்றைய விஞ்ஞானிகள். 19ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு முஸ்லிம் சமுதாயத்தவரில் எத்தனை விஞ்ஞானிகளையும் ஆராய்ச்சியாளர்களையும் நாம் உருவாக்கி இருக்கிறோம்? முஸ்லிமாக இருக்க ஒரு முஸ்லிம் பெயரும், தொப்பியும் தாடியும், புர்காவும் ஹிஜாபும் மாத்திரம் இருந்தால் போதுமானவையா? திருக் குர்ஆனுடைய முழுமையான மறை அறிவை நாம் பெற்றிருக்கின்றோமா? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை.
பள்ளிவாசல்கள் தோறும் நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும். திருக் குர்ஆனை மையமாக வைத்து அறிஞர்கள் நடத்திய ஆராய்ச்சிகளையும், சாதனைகளையும் புத்தகங்களாக இயற்றி, அந் நூலகங்களை நிறப்ப வேண்டும். இஸ்லாமிய ஃபிக்ஹு கலைக்கு இணையாக திருக் குர்ஆன் போதித்த அறிவியல் உண்மைகளை விளக்கும் புத்தகங்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைக்கும்படி செய்தால் அவர்களது மார்க்கத்தின் மீதான பார்வையும், அறிவியல் அறிவும் விசாலமாகும்.
இஸ்லாமிய மதரஸாக்களில், குறைந்த பட்சம் சிறியளவிலான விண்வெளி அப்ஸர்வேட்டரி அமைத்துத் தரப்பட வேண்டும். விஞ்ஞானம், இயந்திரவியல், இயற்பியல், தாவரவியல், மருத்துவம், பூகோளம், வரலாறு, கணிதம் மற்றும் கணினியியல் சம்பந்தப்பட்ட காணொளிகளை மாணவர்களுக்கு வாரம் இருமுறை திரையிட்டு அவ்வாறான ஆராய்ச்சிப்படிப்புகள் மீது அவர்களுக்கு ஒரு ஈர்ப்பினை ஏற்படுத்த வேண்டும். இவற்றுக்கான நிதி ஆதாரங்களை மதரஸாக்களின் முன்னாள் இன்னாள் வசதிபடைத்த மாணவர்களும், மஹல்லாவின் தனவந்தர்களும் மனமுவந்து அளித்திட வேண்டும்.
மனிதன் மண்ணில் பிறந்து, வளர்ந்து, விதி வரும்பொழுது சாவது மட்டுமல்ல இறைவன் நமக்கருளிய இந்த வாழ்க்கை, அதையும் தாண்டி மறுமைக்கான பாதையைக் கண்டுபிடித்து, மக்களை நல்லறத்தின்பால் ஈர்த்து, அவர்களை இறைவனுக்கு கட்டுப்பட்டவராக வாழ வைப்பதே நம் வாழ்க்கைக்கான நோக்கம் என்பதை நாம் மாணவர்களுக்கு உணர்த்திவிட வேண்டும். அதுவே இஸ்லாமிய வழிக்கல்வியின் வெற்றியாகும்.
கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ். ரோஸி