பாஜக அரசு பொதுசிவில் சட்டத்தை அதன் பூதப்பெட்டியில் இருந்து மீண்டும் வெளியில் எடுத்து இருக்கிறது. அதாவது, உரிமையியல் சட்டங்களில் ஒவ்வொரு மதத்தவருக்கும் இருக்கும் தனித்துவத்தை ரத்துசெய்து விட்டு அனைவருக்குமான பொது சீராக ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது. அப்படி வருமானால், குடிமக்கள் தங்களிடையான சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ள பொதுசிவில் சட்டங்களையே நாட வேண்டும். ஆனால், ‘குடிமக்களது’ என்ற இயல்புடைய இறையாண்மைக்கு (Sovereignty) எதிராக அப்படியான மாற்றங்களை வலிந்து திணிக்க இயலாது. அப்படியான முயற்சி குடிமக்களின் மீது நடத்தும் சதிகாரப் போராகும். அதற்கான வாய்ப்பை அரசமைப்புச் சட்டம் எவருக்கும் வழங்கவில்லை. அரசமைப்பு விதிக்கு உட்பட்டு அதிகாரத்துக்கு வந்த ஒரு அரசியல் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி அரசு அரசியல் சட்ட இறையாண்மைக்கு பாதுகாப்பு அளிக்கும் உத்தரவாதத்தையும் கொடுத்துவிட்டு அதற்கு நேரெதிராக யுத்தம் செய்வது அநீதியாகும்.

நாடாளுமன்றம் சட்டமன்றங்களில் மக்களின் நகலாக இருக்கும் உறுப்பினர்கள் (Representatives) இறையாண்மையை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி வழங்கிய பின்னர் தான் பதவி ஏற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய இறையாண்மை என்பது மதச்சார்பற்ற (Secularism), சமதர்மம் கொண்ட (Socialism), மக்களுக்கே அதிகாரமுடைய (Democracy), குடியரசு (Republic) என்பதாகும். இந்திய அரசியல் சட்டப் புத்தகத்தின் முகப்புரையில் இவை பதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் அடிப்படையிலும், இவைகளை பாதுகாக்கவுமே இங்கே ஒரு அரசு இருக்கிறது என்பது இந்திய அரசாட்சியின் பொருளாகும். இவைகளின் அடிப்படையிலேயே ஒரு சட்டத்தை இயற்றவும் திருத்தவும் முடியும்.

இங்கே தேர்தல் மூலம் ஆட்சி செய்யும் ஒரு அரசு மக்களின் அதிகாரத்தையே நகல்படுத்துகிறது. ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும் தனது தனிக் கொள்கையை சட்டமாக்கி அதிகாரப்படுத்த முடியாது. உதாரணத்துக்கு, கம்யூனிசம் குடியரசு என்ற இயல்புக்கு எதிரானது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் தனது பொதுவுடைமை அரசியல் தன்மைகளை சட்டமாக்கி மக்களை ஆள முடியாது. பெயரில் கம்யூனிசம் இருந்தாலும், அதன் அரசு சமதர்ம – ஜனநாயக – குடியரசாகத்தான் இயங்க முடியும். அதுதான் இந்திய இறையாண்மைக்குரிய இயல்பு மற்றும் பாதுகாப்பு.

தேர்தல் ஆணையம்

அரசமைப்பின் பல்வேறு உறுப்புகளில் ஒன்று தேர்தல் ஆணையம். இறையாண்மையின் இயல்பையும் பண்புகளையும் ஒப்புக்கொள்வதாக உறுதி மொழி கொடுக்கும் ஒரு கட்சிக்கே குடிமக்களுக்கான அரசியலில் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கிறது. இங்கேயே இறையாண்மை தன்னை தற்காத்துக் கொள்கிறது. இறையாண்மையை காப்பதாக உறுதியளிக்கும் ஒரு கட்சி அல்லது ஒரு கட்சியாக திரண்டுள்ள குழு ஒன்று அந்த இறையாண்மையை படுகொலை செய்யும் திட்டங்களை செயல்படுத்தும்போது அந்தக் கட்சி நம்பகத்தன்மை இழக்கிறது. உள்ளபடி, இறையாண்மையை கொலை செய்யும் திட்டமுடைய ஒரு கட்சிக்கு அரசியலில் ஈடுபடும் அனுமதியை தேர்தல் ஆணையமே ரத்து செய்துவிட முடியும். அனுமதி ரத்து செய்யப்பட்ட கட்சி தேர்தல் மூலம் மக்கள் மன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றாமல் தடுக்க முடியும்.

மக்களின் நகலர்கள் (Representatives) தான் குடியரசுத் தலைவரை தேர்வு செய்கிறார்கள். அத்தகைய குடியரசுத் தலைவரே மக்கள் மன்றங்களின் அங்கத்தவர்களுக்கு (Representatives) உறுதிமொழி ஏற்பை நடத்துகிறார். இறையாண்மையின் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையத்திடம் உறுதிமொழி அளித்துள்ள அரசுதான் அதே தேர்தல் ஆணையத்திற்குரிய உறுப்பினர்களை தகுதி மற்றும் மூப்பின் அடிப்படையில் தேர்வு செய்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று பணியமர்த்துகிறது.

இறையாண்மையின் மற்றொரு காவல் அமைப்பான நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனமும் குடியரசுத் தலைவர் ஒப்புதலோடு நடக்கிறது. நீதிபதிகளாக பொறுப்பேற்கும்போது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறார்கள். இவ்வாறு சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள், குடியரசின் தலைவர், நீதிபதிகள், தேர்தல் ஆணைய பொறுப்பாளர்கள் ஆகிய நால்வரும் இறையாண்மையை பாதுகாக்க ஒன்றை ஒன்று கோர்த்து உள்ளார்கள்.

அரசமைப்பின் இயல்பு என்பது என்ன?

பிரிட்டிஷ் அரசி எலிசபெத் ஆட்சி முடிவுக்குப் பின்னர் புதிய இந்தியாவில் எழுதி, 1950ல் ஏற்கப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டமானது குடிமக்களது அரசு என முடிக்கப்பட்டது. மக்களாட்சி என்பது இறுதி முடிவு மக்களுடையது என்பதாகும். தனிநபருக்கு, ஒரு குழுவுக்கு, ஒரு இனத்துக்கு, ஒரு மதத்துக்கு சிறப்புரிமை அதிகாரம் மறுக்கப்பட்ட அரசாட்சி என்பதாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிறம் வானவில் போன்றது. அனைத்து குடிமக்களையும் அதிகாரப்படுத்தும் ஒரு அரசியல் முறை. குடிமக்களின் நகலாக குடியரசின் தலைவர் இருக்கிறார். குடியரசுத் தலைவரே அரசமைப்புச் சட்டத்தின் தலைவராகவும் இருக்கிறார். குடியரசுத் தலைவரும் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரமற்று குடிமக்களால் விரும்பி ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் கீழ் முழுமையாக கட்டுப்பட்டுச் செயல்படக் கூடியவராகத் தான் இருக்கிறார். நாட்டின் குடியரசுத் தலைவரை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ள `மக்கள் நகலர்களே’ (Representatives) தேர்வு செய்கிறார்கள். நடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டமன்றங்களில் இயற்றப்படும் சட்டங்கள் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே நடைமுறைக்குச் செல்லும்.

சட்டங்களை குடியரசுத் தலைவர் நிராகரிக்க உரிமை உண்டு. குடியரசுத் தலைவர் நீதிமன்றத்தின் பரிசீலனையை பெற்ற பிறகே ஒப்புதல் அளிக்க முடியும் என்று மக்கள் நகலர்கள் உருவாக்கிய சட்டத்தைக்கூட நிறுத்தி வைக்கவும், திருப்பி அனுப்பவும் முடியும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒரு மசோதாவுக்கு அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடனடியாக ஒப்புதல் வழங்காமல் உச்சநீதிமன்றத்தின் கருத்துரை பெற அனுப்பி வைத்தார். காரணம், மக்களின் பெயரால் கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டமும் ஏற்கப்பட்டுள்ள இறையாண்மைக்கு எதிராகப் போய்விடக்கூடாது.

ஒரு அரசு அவசரக் கோளத்தில் நாடாளுமன்ற அவைகளின் விவாதமின்றி ஒரு சட்டத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தற்காலிமாக கொண்டுவரவும் அரசமைப்புச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. குடிமக்களின் தலைவரே ஒப்புதல் கொடுத்தாலும் ஆறே மாத காலத்துக்குள் அந்த சட்டம் காலாவதி ஆகிவிடும். பின்னர், அந்த சட்டமானது மக்கள் அங்கத்து அவைகளில் (Parliament & Assemblies) விவாதிக்கப்பட்டு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றப்பிறகே நடைமுறைக்கு வர முடியும். குடியரசுத் தலைவர் மத்திய அரசின் பரிந்துரைகளில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தவும் முடிவும். அப்துல் கலாம் தனது காலத்தில் கருணை மனு நிராகரிப்புகளில் காலம் தாழ்த்தினார். அந்த கால தாமதத்தைக் கொண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு ஒன்றின் படியே ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தில் தண்டனைக் கைதிகளின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு வாழ்நாள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ராஜீவ் கொலைக் குற்றத் தண்டனைக் கைதிகள் இன்று விடுதலையாகி இருப்பதற்கு அன்று அப்துல் கலாம் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தியதே காரணம். காங்கிரஸ் கட்சி அப்துல் கலாமை மறுமுறை ஆதரிக்காமல் தவிர்த்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்துல் கலாம் தனது 5 ஆண்டுகள் பதவி காலத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தனஞ்செய் என்ற பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு மட்டும் தான் மரண தண்டனைக்கு ஒப்புதல் அளித்திருந்தார். தனஞ்செய் ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு கொலையும் செய்திருந்தார்.

அரசமைப்புச் சட்டம் முடக்கப்பட்டால்..

குடியரசுத் தலைவர் ஒருவர் அரசமைப்புச் சட்டத்தையே தனது உத்தரவால் முடக்கி வைக்க முடியும். உதாரணமாக, இந்திரா காந்தி அரசு உள்நாட்டு பாதுகாப்புக் கருதி கொண்டு வந்த மிசா (Maintenance and Security Act) சட்டம். அதற்கும் ஆறு மாத காலங்களுக்குத்தான் அதிகாரம். அடுத்த ஆறுமாத காலத்துக்கு மற்றொரு உத்தரவை குடியரசுத் தலைவரிடமிருந்து பெறவேண்டும்.

அரசமைப்புச் சட்டம் முடக்கப்பட்டால் மக்கள் யாரும் குரல் எழுப்ப முடியாது.  அரசமைப்புச் சட்டத்தின் படி நீதிமன்றம் நீதி வழங்க முடியாது. அரசின் கொடுமைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது. அன்றைய அரசுத் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில், “நாங்கள் ஒருவரை சுட்டுக் கொன்றாலும் எங்களை நீங்கள் கேள்வி கேட்க முடியாது” என்றார். அரசு அப்படி ஒரு அவசர நிலையை  அறிவிக்க வகையான சட்டமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பது அன்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலருக்கே தெரியாத ஒன்று. அவசர நிலை நடைமுறைக்கு வந்தபோது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் சிறையில் தள்ளப்பட்டனர். சில மாநிலங்களின் அரசுகள் கலைக்கப்பட்டன. மத்திய அரசு ஒன்றுக்குத்தான் முழு அதிகாரம். உணமையில், பிரதமர் ஒரு சர்வாதியாக நடந்து கொள்வதற்கான அத்தனை வாய்ப்புகளையும் கொண்டது இந்த ‘மிசா’ சட்டம். ஆனால், ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற வரம்புடைய சட்டம். அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்ட கால் நூற்றாண்டுக்குள் ‘மிசா’ சட்டம் பயன்படுத்தப்பட்டது.

பண மதிப்பிழப்பு மற்றும் ஆதார் சட்டம்

ஒரு அரசு சில பல வழிகளைக் கையாண்டு மக்கள் மன்றங்களின் விவாதங்களை விலக்கிவிட்டு சட்டமாக்கி கொள்கிறது. உதாரணமாக, பண மதிப்பிழப்புச் சட்டம் மற்றும் ஆதார் சட்டம். அரசு கொடுக்கும் பலனை மக்கள் நேரடியாகப் பெறுவதற்காக என்று சொல்லி ஆதார் கொண்டு வரப்பட்டது. ஆதார் சட்டத்துக்கு அவைகளின் விவாதங்களை தவிர்க்கவே ‘பண மசோதா’ அல்லது ‘நிதி மசோதா’ என்ற பெயரில் மோடி அரசு சட்டமாக்கி கொண்டது. ஒரு அரசுக்கு அவசரமாக நிதி ஒதுக்கல் தேவைப்படும். அந்த நேரம், அவைகளைக் கூட்டி முடிவெடுப்பது  தேவையான அவசரத்துக்கு இயலாது. காலங்கள் கூடுதலாகத் தேவைப்படும். ஒருவேளை மசோதா தோற்றுப் போகலாம். திருத்தங்கள் தேவைப்படலாம். கால விரையம் ஆகும். குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு காத்திருக்க நேரலாம். அதுவரையில், நிதி ஒதுக்கீட்டைத் தாமதிக்க முடியாது. எனவே தான், பண மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளைக் கூட்டி சட்டமாக்கத் தேவையில்லை.

மோடி அரசு ஆதார் சட்டத்தை நிறைவேற்ற இந்தப் ‘பண மசோதா’ வழியைக் கையாண்டது. இல்லையெனில், மாநிலங்களவையில் அன்று பெரும்பான்மை இல்லாமலிருந்த மோடி அரசுக்கு ஆதார் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும். பண மதிப்பிழப்பு சட்டம் முன்னும் பின்னும் கூட விவாதிக்கப்படவேயில்லை.

நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் அதிகாரம்

ஒரு சட்டமானது இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். ஏதேனும் ஒரு அவையில் தோற்றுப் போனாலும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் போகாது. மக்கள் மீது செலுத்தப்படும் சட்டங்களுக்கு மக்களின் நகலர்களே ஒப்புதல் கொடுக்கிறார்கள். அது மக்களே ஒப்புதல் கொடுத்தது போன்று கருதப்படுகிறது. மக்களின் பெயரால் மக்கள் நகலர்கள் ஒப்புதல் கொடுத்தாலும் அது மக்களாட்சி கொள்கைக்கு முரணாக இருந்தால் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க கூடாது. அவரது ஒப்புதல் குடிமக்கள் கொடுத்த ஒப்புதலாக கருதப்படுகிறது. ஒருவேளை இறையாண்மைக்குப் பொருத்தமற்ற சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஆளும் கட்சியின் பக்கம் நின்று ஒப்புதல் கொடுத்து விட்டாலும், நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அத்தகைய சட்டத்தை ரத்து செய்யவும் நீதிமன்றத்துக்கு அனுமதி கொடுக்கிறது அரசியலமைப்புச் சட்டம். அதனால்தான், குடி மக்கள் கோட்பாட்டின் பாதுகாப்புக்கு (sovereignty) உறுதி ஏற்கும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் உறுதிமொழியை நாட்டின் குடியரசு தலைவர் இறையாண்மையின் பக்கம் நின்று வாங்கி கொள்கிறார். அதனால்தான் உச்சநீதிமன்றம் அமைக்கும் அரசியல் சாசன குழு தலைமை நீதிபதி தலைமையில் அமைக்கப்படுகிறது. ஆனால், வாய்ப்புக் கேடாக, ஒரு கட்சியின் சர்வாதிகாரத்துக்கு மக்கள் அங்கத்து அவைகளும், குடியரசுத் தலைமையும், நீதியின் தலைமையும இணங்கிப் போகும்போதுதான் இறையாண்மைக்குச் சவக்குழி தோண்டப்படுகிறது.

அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும், கட்டுப்படுத்தும் அமைப்பாக அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்துக்குப் பொருள் விளக்கம் தரும் வாய்ப்பு உச்சநீதிமன்றத்துக்கு மட்டும் உள்ளது. அரசியல் கட்சி ஒன்று அரசமைப்புக்குத் திருத்தம் தரும் சட்டத்தை உச்சநீதிமன்றம் பொருள் விளக்கத்தின் படி ரத்து செய்ய முடியும். உச்சநீதிமன்றத்தின் முழு கொள்ளளவு உடைய அமர்வு ஒன்று அளிக்கும் பொருள் விளக்கம் மற்றும் உத்தரவானது மக்களது உணர்வுகளுக்கும், பாரம்பரியத்துக்கும் எதிரானது என்றோ அல்லது இந்த திருத்தத்துக்கான கால முதிர்வு இப்போது உண்டாகவில்லை என்றோ கருதும்போது நாடாளுமன்றம் இரு அவைகளின் கூட்டுக் குழுவை ஒருங்கிணைத்து ரத்து செய்து விடவும் கூடும். ஆனால், மக்களின் உணர்வுகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அரசியல் சட்ட உறுப்பு 25க்கு முரணாக இருக்க கூடாது. அரசமைப்புச் சட்டத்தால் ஆதியில் ஏற்கப்பட்ட ஒரு விஷயத்தை விவாதிக்க முடியும் என்றாலும் அது, மக்களை கலவரப்படுத்தக் கூடாது. தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தை கையகப்படுத்திய ஒரு கட்சி மதம் சம்பந்தப்பட்ட, நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் திடீரென சுயமாக தலையிட  முடியாது. அதற்கான பாதுகாப்பும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கையின் உறுப்பு 25ன் கீழும் வழிகாட்டுக் கொள்கையின் விதி 44லும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நாடாளுமன்ற அவைகளின் பெரும்பான்மை

மக்களுக்கான சட்டம் எழுதுவதற்கும், திருத்துவதற்கும் மக்களின் ஒப்புதல் அவசியமாகும். மக்களின் ஒப்புதலை மக்கள் பக்கம் நின்று வழங்கத்தான் மக்கள் அவைகளுக்கு உறுப்பினர்கள் தேர்தல் முறையில் செல்கிறார்கள். எனவே, ஒரு அரசு  நாடாளுமன்ற துணையோடு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் பெரும்பான்மை ஒப்புதல் பெற்றுக் கொண்டு தான் சட்டம் இயற்ற முடியும். அந்த சட்டம் மக்களே இயற்றியதாக கருதப்படும். அதேநேரம், பல்லினத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் சமூகத்தில் தேர்தல் வழியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து ஆள்வதற்கான பெரும்பான்மையை பெற்றுக் கொண்டாலும், சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக பெரும்பான்மை மக்களிடமிருந்து பெற்றுக் கொண்டாலும் அந்த கட்சி தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை திணிக்க முயற்சிப்பது அரசமைப்புக்கு எதிரானதாகும்.

பொதுசிவில் சட்ட விவாதம்

இறையாண்மையானது அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்குவதாக இருக்கிறது. புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக ஒப்புக்கொண்ட அன்றைய இந்திய சமூகம் அனைத்து தரப்பு மக்களின் பிரதிநிதிகளையும் அரசமைப்பு வரைவுக் குழுவில் இடம் பெறச் செய்தது. அரசமைப்புக் குழுவில் பொது சிவில் சட்டம் ஏற்பதற்கான விதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது அவையில் இடம் பெற்றிருந்த முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப், இந்த விதி முஸ்லிம்களின் இறைநம்பிக்கையை தகர்த்து விடும், எனவே இந்த விதியை ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.

எம்.ஆர். மசானி

அரசியல்சட்ட வரைவுக் குழுவுக்கு பாம்பே மாகாணத்தில் இருந்து வந்த எம்.ஆர். மசானி என்ற  உறுப்பினர் தான் அரசியல் சாசன சட்ட அவையில் 1947, மார்ச் 28 ஆம்நாள் நடந்த அடிப்படை உரிமைகள் உதவிக்குழு கூட்டத்தில் பொதுவானதொரு உரிமைச் சட்டத்துக்கான விதியை சேர்க்க வேண்டும் என்று ஆலோசனை வைத்தார். முதலில் இந்த ஆலோசனை விவாதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மசாணி இந்து மகா சபையிலும், காங்கிரசிலும் உறுப்பினராக இருந்தார். இந்த மசானியும், ராஜாஜி எனப்படும் ராஜ கோபாலாச்சாரியும் சேர்ந்து தான் பின்னாளில் காங்கிரசுக்கு எதிராக சோசலிச கட்சியை தொடங்கி நேருவின் அதிருப்தியை சந்தித்தனர். மசானியின் பொது சிவில் சட்ட கருத்தை பாம்பே மாகாணத்தின் கே.எம்.முன்ஷி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சர். கிருஷ்ணமூரத்தி அய்யர் ஆகிய இருவர் மட்டும் வெளிப்படையாக ஆதரித்தனர். இருவருமே பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இஸ்லாமிய சிவில் சட்டத்துக்கு மாற்றமான சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மசாணிக்கு நன்கு தெரியும். முஸ்லிம்களை கலவரப்படுத்தும் நோக்கத்தில்தான் பொது சிவில் சட்டத்துக்கான விவாதம் தொடங்கப்பட்டது. முஸ்லிம் உறுப்பினர்களைத் தவிர காங்கிரசின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மௌனமாக இருந்து கொண்டனர். முஸ்லிம் உறுப்பினர்களின் எதிர்ப்பில் பொது சிவில் சட்ட விவாதம் முற்றுப் பெற்றது. இந்து மகா சபை இந்து சனாதன சட்டத்தையே இந்திய சட்டமாக்க விருப்பமுடையது. அந்த அமைப்பில் இருந்து வந்த மசானி சனாதனத்துக்கு முரணான சமதர்ம சட்டத்தை விரும்பக் கூடியவர் அல்ல. ஆனால் மசானி அன்றைய நாள் முழுவதும் பொது உரிமையியல் சட்டத்துக்காக வாதாடிக் கொண்டிருந்தார்.

அரசியல் சாசன வரைவுக் குழு மசானியை திருப்திப்படுத்த ஒரு சமரசம் செய்தது. பொது உரிமையியல் சட்டத்தை  வழிகாட்டுக் கொள்கையில் சேர்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. வழிகாட்டுக் கொள்கையில் இடம் பெறும் விதியை உடனடியாக அமல்படுத்தும் படி யாரும் அரசை பலவந்தப்படுத்த முடியாது.

விதி எண் 44

இறுதியாக, அரசியல் சாசனத்தின் பகுதி – IVன் வழிகாட்டுக் கொள்கையில் (Directive Principles) பொது உரிமையியல் சட்டத்துக்கான விதி 35 இணைக்கப்பட்டது. பின்னாட்களில் வேறுபல அம்சங்கள், கொள்கைகள் இணைக்கப்பட்டன. அதனால், தற்போது பொது சிவில் சட்டத்துக்கான விதி 44ல் இடம்பெற்றுள்ளது. வரைவுக் குழுவில் இருந்த சிறுபான்மையினருக்கான துணைக் குழு, அடிப்படை உரிமைகளுக்கான துணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அதில் பொது உரிமையியல் சட்டம் குறித்துப் பேசும் விதியில் பயன்படுத்தப்பட்டிருந்த சொற்களுக்கு அதிருப்தி தெரிவித்தனர். அனைத்து மக்களுக்குமான பொது உரிமையியல் சட்டம் மக்கள் விரும்பும் போதும், அனைத்து மக்களும் முன்வந்து தானே ஏற்கும் போதும் மட்டுமே அமல்படுத்தப்படும் என்று விதியை திருத்தி தெளிவாக விளக்கும் படி எழுத வேண்டும் என்று சிறுபான்மை துணைக் குழு 1947, ஏப்ரல் 19 ஆம்நாள் இட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டது.

காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்

காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தமிழகத்தில் இருந்து மெட்ராஸ் மாகாணத்தில் சார்பில் வரைவுக் குழுவுக்குச் சென்றிருந்தார். காயிதே மில்லத் அவர்கள் 1946ல் அமைக்கப்பட்ட வரைவுக் குழுவில் இடம்பெறவில்லை. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அமைக்கப்பட்ட வரைவுக் குழுவில் தான் இடம் பெற்றார். 1946 வரைவுக் குழு உறுப்பினர்களில் முஸ்லிம்கள் 3ல் 1 பங்கு இடம்பெற்றனர். பிரிவினையால் வரைவுக் குழு முஸ்லிம் உறுப்பினர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் சென்று விட்டனர். அதனால், வரைவுக் குழுவில் முஸ்லிம்களுக்கான குரல் கம்மியது. இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி தான் மசானி போன்றவர்கள் இந்தியாவில் தங்கிய முஸ்லிம்களை இஸ்லாம் நீக்கம் செய்யும் நோக்கத்தில் பொது சிவில் சட்டம் என்ற கருத்தை முஸ்லிம்களின் விருப்பத்துக்கு மாறாக கொண்டு வந்தார்கள்.

சர்தார் வல்லபாய் பட்டேல்

அரசியல் சட்ட வரைவுக் குழுவில் சிறுபான்மைப் பிரிவு குழுவுக்கு சர்தார் வல்லபாய் படேல் தான் தலைவராக இருந்தார். முஸ்லிம்களின் உரிமைகளுக்கான கோரிக்கைகளை தடுத்த வண்ணமிருந்தார். முஸ்லிம்களை பாதிக்கும் அம்சங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவிக்கும் எதிர்ப்புகளுக்கும் மறுப்பு தெரிவித்து வந்தார். ஒரு கட்டத்தில், உங்களுக்காக ஒரு நாடு பிரித்துக் கொடுக்கப்பட்டது. இனி, உரிமைகள் கேட்பதற்கு உங்களுக்கு இங்கே இடமில்லை என்றார். இதனால், முஸ்லிம்கள் பொது சிவில் சட்ட விதி, வழிகாட்டுக் கொள்கையில் வருவதை தடுக்க முடியவில்லை.

பொது சிவில் சட்டம் விதி 35, வரைவுக் குழு விவாதத்துக்கு 1948, நவம்பர் 23ஆம்நாள் வந்தது. அன்று வரைவுக் குழுவில் பேசிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள், பொது சிவில் சட்ட விதி 35க்கு ஒரு காப்பு வாசகம் (Proviso) இணைக்கப்பட வேண்டும் என்றார். இந்த விதி மக்கள் மீது வலிந்து திணிக்கப்படாமல் இருக்கவும், தனிச் சட்டங்களை கைவிட ஒரு பலவந்தம் வரும்போது எதிர்க்கவும் இந்த காப்பு வாசகம் உதவும் என்றார் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப். “மக்களில் ஒரு குழுவோ, பிரிவோ தங்கள் தனிச்சட்டங்களை பின்பற்றுவது அடிப்படை உரிமையாக இருக்கிறது. தனிச் சட்டங்களில் ஏதும் திருத்தம் கொண்டு வரும்போது, அது, மக்கள் பாரம்பரியமாகவும், பல்லாண்டு காலமாகவும் பின்பற்றி வரும் சட்டங்களில் தலையிடுவதாகும்” என்றார்.

நசீீருதீய் அகமது, மஹபூப் அலி பெய்க்

மேற்கு வங்கத்தில் இருந்து வரைவு குழுவுக்கு வந்திருந்த நசீருதீன் அகமது, “ஒவ்வொரு மதத்தின் மக்களுக்கும் மத நம்பிக்கையிலும், வாழ்க்கை முறையிலும் இருந்து பிரிக்க முடியாத சிறப்பான வாழ்வியல் சட்டங்கள் இருக்கின்றன” என்றார். மஹபூப் அலி பெய்க் ஷாஹிப் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து சென்றிருந்த மற்றொரு உறுப்பினர். முஸ்லிம்களின் திருமணம், மணமுறிவு, சொத்துரிமை, வாரிசுரிமை ஆகியன மதத்தின் அடிப்படையில் ஆனது” என்றார்.

இந்திய நாடாளுமன்றத்தின் 2வது சபாநாயகராக இருந்தவர் அனந்த சயனம். இவர் வரைவுக் குழு உறுப்பினராகவும் இருந்தார். “முஸ்லிம்களின் திருமணம் உடன்படிக்கையாகத் தான் இருக்கிறது” என்றார். அனந்த சயனத்துக்கு பதிலளித்த மஹபூப் அலி பெய்க் சாஹிப், “முஸ்லிம்களின் திருமணம் திருக்குர்ஆன் சட்டத்தின் படியானது. திருக்குர்ஆனுக்கு மாற்றமான திருமணம், இஸ்லாமிய சட்டத்தில் செல்லாது” என்றார்.

பி.போக்கர்

மெட்ராஸ் மாகாணத்தின் மற்றொரு உறுப்பினரான பி. போக்கர் சாஹிப், “இந்து சமூகத்தின் பல பிரிவுகளுக்குள் வாரிசுரிமை உள்ளிட்டு பல்வேறு அம்சங்களில் வேறுபாடு இருக்கிறது. இந்து சமூகத்தினர் தயாபகா மற்றும் மிட்டாக்‌ஷரா சட்டங்களை பின்பற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மத்தியில் உள்ள முரண்களை நீக்கி பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போகிறீர்களா?” என்று கேட்டார்.

கே.எம்.முன்ஷி

பாம்பே மாகாணத்தில் இருந்து வரைவுக் குழுவில் இடம்பெற்ற கே.எம். முன்ஷி, பொது சிவில் சட்டம் அனைத்து மதத்தின் மக்களையும் பாதிக்கும், முஸ்லிம் உறுப்புனர்கள் கருதுவது போன்று இந்துக்களிலும் பலர் இந்த பொது சிவில் சட்டத்தை விரும்பவில்லை. வடக்கு மலபாரில் உள்ள மருமக்கள் தாய சட்டம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கும் தாய் வழிச் சட்டம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்றார். முன்ஷி கருத்தை இந்து உறுப்பினர்கள் பலர் ஆதரித்தனர்.

உறுதியளித்த நேரு

ஜவஹர்லால் நேரு, “பொது சிவில் சட்டம் மேலிருந்து திணிக்கப்படாது” என்று உறுதியளித்தார். “அனைவருக்கும் பொதுவான சட்டத்தை உருவாக்க மக்களிடத்தில் பொதுவான சிவில் சட்டம் குறித்துக் கருத்தொற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அந்தந்த சமூகங்கள் தானாகவே முன்வந்து ஏற்கும் போதுதான் எந்தவொரு மாற்றமும் சாத்தியமாகும்” என்றார்.

பி.ஆர்.அம்பேத்கர்

வரைவுக் குழுவுக்குத் தலைவராக இருந்த பி.ஆர். அம்பேத்கர், “பொது சிவில் சட்டத்துக்கான விதி 35 முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்படாது” என்று வாக்குறுதி தந்தார். வரைவுக் குழுவில் வழிகாட்டு கொள்கையின் விதி 35 தொடர்பாக பேசும் போது, “தனிநபர் சட்ட்டங்கள் எதையும் ரத்து செய்யும் கடமை அரசுக்கு இல்லை. அரசுக்கு அதிகாரம் வந்த உடனே விதி 35ஐ சட்டமாக்கும் என்றோ, தனது அதிகாரத்தை பலவந்தமாக திணிக்கும் என்றோ யாரும் அச்சப்படத் தேவையில்லை. முஸ்லிம் சமூகத்தை கலவரப்படுத்தும் அளவுக்கு சினமூட்டும் செயலை எந்தவொரு அரசும் செய்யாது. அவ்வாறு செய்தால் அது முட்டாள் அரசாகத்தான் (a mad government) இருக்கும்” என்றார். அதன் பிறகு தான் விதி 35ஐ அரசியல் சட்டத்தின் வழிகாட்டுக் கொள்கையில் இணைத்துக்கொள்ள வரைவுக் குழு முஸ்லிம் உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அவ்வப்போது பொது சிவில் சட்டம் பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமராக இருந்த 1967 மற்றும் 1969ல் பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து எழுந்த சமயம், “சிறுபான்மையர் உரிமை தொடர்பான முடிவுகள் எதுவும் அவர்களை கலந்தாலோசனை செய்யாமல் எடுக்கப்படாது, எந்தவொரு மாற்றமும் சிறுபான்மை மக்களிடமிருந்தே வரவேண்டும்” என்றார். இந்திராவின் மகன் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த சமயம் 1987ல் ஒருமுறை பொது சிவில் சட்டம் விவாதிக்கப்பட்டது. “நான் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவானவன் என்றாலும் அரசியல் கட்சிகள், சமயத் தலைவர்கள், மதிப்புமிக்க மனிதர்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்து உண்டான பிறகுதான் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சிறப்பான முடிவுகள் மூலமே பொதுவான சட்டங்களை கொண்டு வரவேண்டும். பின்வாசல் வழியாகக் கொண்டு வரும் செயலை நாம் செய்யக்கூடாது” என்றார்.

கோல்வால்கர்

பொது சிவில் சட்டத்துக்கு முஸ்லிம்களைப் போல ஆர்.எஸ்.எஸ், அமைப்பை உருவிக்கிய தலைவர்களில் ஒருவரான கோல்வால்க்கரும் எதிர்த்தார். ஆர்.எஸ்.எஸ்-ன் சர்சங்சாலக் பொறுப்பில் இருந்தவர். ஆர்எஸ்.எஸ்-ன் ஏடான ஆர்கனைசருக்கு கோல்வல்க்கர் ஆகஸ்ட் 26, 1972ல் ஒரு பேட்டி கொடுத்தார். அதில், இந்தியா எல்லா காலத்திலும் எண்ணற்ற முரண்களை கொண்டிருக்கிறது. ஒன்றுபட்டு வாழ நமக்கு மத்தியில் ஒத்திசைவு தான் தேவை. ஒருமையாகுதல் (Uniformity) தேவையில்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதாலேயே அது விருப்பத்துக்கு உரியதாகாது. நமது அரசமைப்புச் சட்டம் சில வெளிநாட்டு அரசமைப்புச் சட்டங்களின் கலவை தான். இந்தியாவின் அனுபவங்களின் முதிர்ச்சியில் இருந்து கருப் பிடிக்கவும் இல்லை, வரையப்படவுமில்லை” என்றார்.

நீதிமன்றங்கள் கிளப்பும் சர்ச்சை

பொது சிவில் சட்டம் குறித்த சர்ச்சையை நீதிமன்றங்களே அவ்வப்போது கிளப்பி விட்டிருக்கின்றன. சம்பந்தமே இல்லாத வழக்குகளில் கூட ஏன் இன்னும் பொதுச் சிவில் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்று நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள். நீதிபதிகள் சில நேரங்களில் தங்களை அரசியல் சாசனத்துக்கும் மேலாக எண்ணிக் கொள்வார்கள். அவர்கள் வெளிப்படுத்தும் கருத்தில் அது தென்படும். தேசிய ஒற்றுமையை பெரிய அளவில் கட்டியெழுப்ப பொதுவான சிவில் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதை நோக்கி அரசு நகர வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறி இருந்தது. நீதித்துறை தனக்கு விருப்பமான இலக்கை அடைவதற்காக அரசியல் சட்டத்தின் குறிப்பிட்ட அம்சத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அரசை வற்புறுத்தினால் அது சட்டத்தின் ஒவ்வொரு அதிகாரமும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கும் அரசியல் சாசனத்தின் வரம்பை மீறுவதாகும்.

மக்களின் இறுதி நம்பிக்கையாக நீதிமன்றம் இருக்கிறது. சிறுபான்மை மக்களை கலவரப்படுத்தும் படி பொது சிவில் சட்டத்தை ஒரு அரசு கொண்டு வராது. அப்படி வந்தால் அது முட்டாள்களின் அரசாக இருக்கும் என்று சட்ட வரவு குழுவில் அம்பேத்கர் பேசி முடித்த கருத்துக்கு எதிராக அவ்வாறான முட்டாள் அரசு எப்போது வரும் என்ற எதிர்ப்பார்ப்பில் நீதித்துறை இருந்து வருவதாகத் தெரிகிறது.

நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் அமைப்புக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை ஏற்க முடியாது. கொலீஜியம் எங்களது தனிப்பட்ட அதிகார அமைப்பு என்று சொல்லும் உச்சநீதிமன்றம் தான், பொது மக்களின் தனிச் சட்டங்களை ஒழிக்க வேண்டும் என்கிறது.

நீதிபதிகள் பொது சிவில் சட்டம் பற்றி அவ்வப்போது கூறும் கருத்துகளை ஊடகங்கள் எடுத்து வைத்துக் கொண்டு விவாதிக்கும். அதில், முஸ்லிம்கள் மட்டும் தனியாக மதச்சட்டங்களை சிறப்புரிமை பெற்றுப் பின்பற்றுவது போன்ற நச்சு கருத்துகளை பேசுவார்கள். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தனியான சட்டங்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமானது இல்லை. குடிமக்களில் பல்வேறு பிரிவினருக்கு தனிச் சட்டங்கள் இருக்கின்றன. முஸ்லிம்களுக்கு வெறும் நான்கே சட்டங்கள் தான் இருக்கின்றன. கிறித்தவர்களுக்கும் நான்கு தனிச் சட்டங்களே இருக்கின்றன. மொத்தமுள்ள 300 தனிச் சட்டங்களில் மீதமுள்ளவை இந்துக்களின் பல பிரிவினருக்கே இருக்கிறது.

ஆனால், சீரான சமூகத்தை உருவாக்குவதில் முஸ்லிம்களே தடையாக இருக்கின்றனர் என்ற ஊகத்தை மக்கள் மத்தியில் விதைத்து பகையை பெரிதாக்குவது பொது சிவில் சட்டம் பற்றி பேசுபவர்களின் நோக்கமாக இருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தில் சிறப்புரிமை

அஸ்ஸாம் மாகாணத்தில் இருந்து பிரிந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு அரசமைப்புச் சட்டத்தின் மூலம் சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.  நாகலாந்து மாநிலத்துக்கு சட்டப்பிரிவு 371A சிறப்புச் சட்டமாக இருக்கிறது. நாகர் இன மக்கள் மொத்தமே 20 லடசம் பேர்தான். இந்திய மக்கள் தொகையில் 0.16%. ஆனால், அந்த நாகர் இன மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அவர்களின் விருப்பம் இல்லாமல் நாடாளுமன்றம் எந்தவொரு சட்டத்தையும் இயற்ற முடியாது. அவர்களின் கலாச்சாரம், சமயச் சட்டங்கள் படி தான் அவர்களது வாழ்க்கையின் அடிப்படைச் சட்டங்கள், உரிமையியல், குற்றவியல் சட்டங்கள் அமைந்திருக்கும் என்பதற்கு விதி 371A உத்தரவாதம் அளிக்கிறது. இதே மாதிரியான சட்டப் பாதுகாப்பை வெறும் 6 லட்சம் (0.0007%) மக்களாக இருக்கும் மிசோரம் மாநில மக்களுக்கு விதி 371G வழங்குகிறது. 20 லட்சத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் வாழக்கூடிய நாகர் மற்றும் மிசோரம் மக்களின் தனிச் சட்ட உரிமைகளுக்கும், கலாச்சாரங்களுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் வழங்குவது தான் அதன் தனிச் சிறப்பு. நாகர்கள் மற்றும் மிசோமியர்கள் கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். பொது சிவில் சட்டம் வரும்போது நாகர்களையும், மிசோமியர்களையும் நீக்கிவிட இயலாது. பொதுவான சிவில் உரிமைச் சட்டம் வரும்போது இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட வேண்டும் என்கிறது சட்டம். அப்படி எனில், நாகர்களும், மிசோமியர்களும் கிறித்தவ மதத்த தனிச் சட்டங்களின் படி வாழ சட்ட விதி 371A & 371G அனுமதிக்கும் போது நாட்டின் இதர பகுதி கிறித்தவ மக்களை மட்டும் பொதுவான உரிமையியல் சட்டங்களை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது முரணாகத் தானே இருக்கும்?.

சீர் உரிமை பேசும் விதி 44ஐ நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் அமல்படுத்த வேண்டும் என்கிறது அரசமைப்புச் சட்டம். நாட்டின் முழுமைக்கும் அமல்படுத்தும் வாய்ப்பு வரும் வரை அரசானது காத்திருக்க வேண்டும். அவசரப்பட முடியாது. அதனால் தான் இந்த சட்டப் பிரிவு உடனடியாக அமல்படுத்தக் கூடிய அடிப்படைக் கொள்கையில் இணைக்கப்படாமல் காலம் கனியும்போது அமல்படுத்த வசதியாக வழிகாட்டுக் கொள்கையில் இடம்பெறச் செய்துள்ளனர் வரைவுக் குழுவினர்.

மக்கள் அனைவரும் சமம்

இந்த விதி 44ஐப் பொறுத்து விதியை உடனடியாக அமல்படுத்துவதற்குப் பதிலாக அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று தான் சொல்கிறது. நாட்டின் அனைத்து மக்களும் ஒரு பொது சிவில் சட்டத்துக்கான தேவையை உணர வேண்டும். அரசே! உடனடியாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து என்று நாடெங்கும் கோரிக்கைகள் எழுந்திருக்க வேண்டும். அதற்கான கல்வி மற்றும் பயிற்சிகளை அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகலாக அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்ட முயற்சி எதுவும் நடைபெவில்லை. மக்கள் அனைவரையும் சமமாக நடத்தும் கொள்கையை மக்களிடமும் இல்லை. ஆள்வோரிடமும் இல்லை. நீயும்- நானும் எப்போதும் சமமாக இல்லை என்பது தான் இந்தியாவின் தத்துவமாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. நாட்டை ஆள்வோரும், நீதியை நிர்வகிப்போரும், அரசுகளை தீர்மானிப்போரும் தாங்கள் சமூகத்தின் மேலடுக்குகளில் இருப்பதாகவே எண்ணுகிறார்கள். மனித சமூகத்தில் கீழே- மேலே என்ற வகைப்பாடு இருக்கும் வரையில் மக்கள் அனைவரையும் பொதுப்படுத்தும் ஒரு இலக்கு என்பது எப்போதுமே இருக்கப் போவதில்லை.

இந்து சட்ட மசோதா

பின்னாளில், அரசமைப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்து, சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர், முஸ்லிம், கிறித்தவர் நீங்கலாக அனைத்து மக்களுக்குமான இந்துச் சட்ட மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார். அம்பேத்கர் இந்து சட்டம் ஒன்றைக் கொண்டு வந்ததற்கு காரணம் அன்றைய காங்கிரஸ் கட்சி தேர்தல் அரசியலுக்காக முஸ்லிம், கிறித்தவர் தவிர அனைவரையும் ‘இந்து’ என்று ஏற்றுக்கொண்டது. புதிய இந்தியாவின் புதிய இந்து சமூகத்தில் உயர்சாதி, இடைச்சாதி, கடைச்சாதி என வகைப்படுத்தப்பட்ட அனைவரையும் ஒரு பொதுவான சிவில் சட்டத்தில் இணைக்கும் முயற்சி தான் இந்து சட்டம்.

அம்பேத்கரின் இந்து சட்டம் காங்கிரஸ் கட்சியின் உயர்சாதிகளை கலவரப்படுத்தியது. நாடாளுமன்றமே அதிர்ந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் முதற்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக, அம்பேத்கரின் இந்து சட்டம் பெண்களுக்கான திருமண வயதை தீர்மானிப்பது, பருவமடையாத சிறுமியரின் திருமணத்தை தடுப்பது, பெற்றோர் மற்றும் கணவரின் சொத்துப் பிரிவினையில் பெண்களுக்கு சமப்பங்கு கொடுப்பது, கணவன் இறந்தால் மனைவி தீயில் இறங்கி இறப்பது, பெண் குழந்தையை கொலை செய்வது, கணவன் இறந்த பிறகு மனைவி மறுமணம் செய்ய சமூகம் மறுப்பது என்ற மூடப் பழக்கங்களுக்கும் சனாதன சட்டங்களுக்கும் முடிவு கட்டக் கூடியது. அதனால்தான் சங்கர மடங்களின் ஆச்சாரியர்கள் இந்து சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

காஞ்சி பெரியவர் எனப்படும் சந்திரசேகர் என்ற சங்கராச்சியார் இந்து மதப் பழக்க வழக்கங்களை நீர்த்துப் போகச் செய்யும் சட்டங்கள் எழுதப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அரசமைப்பு வரைவு குழுவுக்கு கருத்துரை கடிதங்கள் எழுதி இருக்கிறார். இந்தியர் அனைவரையும் இந்துவாக ஏற்க சம்மதிக்கும் சங்கராச்சாரியார் இந்துக்கள் அனைவரையும் பொதுவான வரையறைக்குள் கொண்டு வரும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் எழுதி இருக்கும் ‘தெய்வத்தின் குரல்’ என்ற புத்தகத்தில், “ஆங்கிலேயன் நல்ல வேளையாக நமக்கு ‘இந்து’ என்று பெயர் வைத்தான், நாம் தப்பித்தோம்” என்று குறிப்பிடுகிறார். அதே சங்கராச்சாரியார் இந்துக்களை பொதுப்படுத்தும் ஓர் சீர் உரிமை சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அரசமைப்பு வரைவுக் குழுவில் பொது சிவில் சட்ட விவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் தான் அம்பேத்கர் இந்து சட்ட மசோதாவை நாடாளுமன்ற விவாதத்துக்கு கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.

இந்து பொது சிவில் சட்டம்

புதிய இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இந்துக்களாக ஒருங்கிணைத்துக் கொண்ட மக்களுக்கு ஒரு சீரான சட்டத்தை முதலில் கொண்டு வருவோம் என்ற நோக்கத்தில் தான் இந்து மதத்தின் பேரில் இந்து சட்ட மசோதாவை எழுதி அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை ஆதரித்த காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கான பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அம்பேத்கர் காங்கிரஸ் கட்சியை நம்பி தனது பொன்னான நேரங்களை செலவிட்டு இந்து சட்டத்தை தயார் செய்தார். ஆங்கிலேயர்கள் இந்து சமூகமாக ஒருங்கிணைத்தவர்களுக்கு இந்து மதமாக ஒரு திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் பிராமணர், சத்திரியர், சூத்திரர் என்ற கீழ்நோக்கு படிநிலைகளை காலப்போக்கில் ஒழித்துவிடமுடியும் என்று அம்பேத்கர் நம்பினார். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை வகுப்புவாத அரசியலை நிலைப்படுத்தும் நோக்கில் மட்டும் தான் முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரும் இந்துக்களாக வரையப்பட்டனர். மற்றபடி, சமூக வாழ்வில் அனைவரையும் சமத்துவமுடையவர்களாக ஏற்றுக்கொள்ளும் நோக்கில் இந்து என்ற கட்டமைப்பை இந்திய உயர்சாதியினரும், காங்கிரஸ் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த பாபு ராஜேந்திரப் பிரசாத் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட மசோதாவை ஒப்புக்கொள்ள மறுத்தார். வற்புறுத்தினால் பதவி விலகுவதாக மிரட்டினார். தொடக்கத்தில் இந்து சட்ட மசோதாவுக்கு ஆதரவு கொடுத்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும் எதிர்ப்புகளைக் கண்டு பின்வாங்கிக் கொண்டார்.

ஜனநாயக முரண்

ஒட்டு மொத்த வாக்காளர்களில் 50%க்கும் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ள ஒரு அரசு தனக்கு வாக்களிக்க விரும்பாத 60% வாக்காளர்களையும் உள்ளடக்கி 100% வாக்காளர்களுக்கும் அவர்கள் விருப்பத்திற்கு மாற்றமான சட்டத்தை எழுதி அதிகாரப்படுத்துவது மக்களாட்சி அல்ல. அது, அரசமைப்பு சார்ந்த தேர்தல் ஆணையம் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கொடுத்த பிரமான வாக்கு மூலத்தக்கு முரணான செயலாகும்.

தேர்தல் பரப்புரையில் 80% மக்களுக்கும் 20% மக்களுக்கும் இடையிலான போட்டி என வெளிப்படையாகக் கூறுகிற ஒரு அரசியல் கட்சி, பெரும்பான்மை சமூகத்தின் சில பிரிவினரின் ஆதரவில் ஆட்சிக்கு வந்து விட்டு, கொள்கைப்படி தன்னை ஆதரிக்காத சிறுபான்மை மக்கள் மீது மாற்றத்தை திணிக்க அதிகாரத்தை செலுத்துவது நாடாளுமன்ற மக்களாட்சிக்கு உகந்தது அல்ல. மாறாக அது ஜனநாயகத்தின் இயல்புக்கும், தன்மைக்கும் எதிரானதாகும்.

ஜனநாயகம் என்றால், சிறுபான்மை மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதே. ஆனால், ஜனநாயகத்தின் பெயரிலேயே சிறுபான்மை மக்களின் சுதந்திரம் மற்றும் தனிச் சிறப்புகளுக்கு கேடு செய்வது ‘கேவலமான சர்வாதிகாரம்’ ஆகும். கடந்த கால அவமானங்களுக்கு பழி வாங்குதல் ஆகும்.

மக்களால் பாஜகவை வீழ்த்த முடியும்

மக்களால் தேர்தல்வழி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் சட்ட அவைகள் மூலம் சட்டம் இயற்ற முடியும், திருத்த முடியும். இந்தியாவில் கொண்டு வரப்படும் எந்தவொரு சட்டத்திருத்தமும்  நடைமுறைக்கு வர குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இறுதியானதாகும். இந்த நாட்டின் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி மன்றங்கள் அனைத்தும் இறையாண்மைப் படி மக்களே உருவாக்குகிறார்கள். மக்களால் எந்த ஒரு அரசையும் தேர்தல்வழி கவிழ்த்து விடவும் முடியும். உதாரணமாக, 2024 பொதுத் தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதா அரசைக் கவிழ்க்க முடியும்.

அப்படியானால், கீழே தள்ளிவிட மக்களுக்கு வாய்ப்புடைய ஒரு கட்சி மக்கள் விரும்பாத சட்டங்களைக் கொண்டுவர முடியாது. பெரும்பான்மை மக்கள் விரும்பும் சட்டங்களை சிறுபான்மை மக்கள் மீது வலிந்து திணிப்பது நாம் ஏற்றுக்கொண்ட இறையாண்மைக்கு நிகரானதல்ல. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு மக்களை கலவரப்படுத்த மக்களிடம் இருந்தே பெற்றுக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. அது நம்பிக்கைத் துரோகம் ஆகும். நடைமுறையில் இருந்து வரும் “இறையாண்மைக்கு நம்பிக்கையாக செயல்படுவேன்; இறையாண்மையைப் பாதுகாப்பேன்” என்று உறுதிமொழி செய்து அரியணைக்கு வரும் அரசு நம்பிக்கை துரோகம் செய்வதும், பாதுகாப்பை அச்சுறுத்துவதும், அரசமைப்பு சட்டத்தை அசைக்கப் பார்ப்பதும் இந்திய இறையாண்மை மீது போர் தொடுப்பதற்கு இணையான குற்றம். இதுதான் உண்மையான தேசத்துரோகம்.

மக்கள் விருப்பத்துக்கு மாற்றாக சட்ட திட்டங்களை செயல்படுத்திய ஒருஅரசை அதே காரணங்களுக்காக மக்கள் புறக்கணித்த பிறகு தூக்கி எறியப்பட்ட அரசு ஏற்படுத்திய சட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியுமா? அது ஜனநாயக குடியரசின் இயல்புக்கும் பண்புக்கும முரணாகாதா? 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகாரமற்றுப் போகும் அல்லது மீண்டும் அரசு அதிகாரத்தைப் பெற மக்களிடமே தொடர்ந்து வய்ப்புக் கேட்கும் ஒரு கட்சி தனது முன்னோர்கள் வகுத்த அல்லது விரும்பியிருந்த கொள்கைகள் மக்கள் அரசு கொள்கைக்கு எவ்வளவு முரணாக இருந்தாலும் முன்னவர்களது விருப்பங்களை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசுக்கும் எதிராக வஞ்சகம் செய்ய இயலுமா? இவை அனைத்தையும் கொஞ்சமும் வெட்கப்படாமல் செய்வோம் என்று பாஜக சொல்கிறது.

பொது சிவில் சட்ட சர்ச்சை

அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில் பொதுசிவில் சட்ட சர்ச்சையை தூண்டி இருக்கிறார் பிரதமர். தற்போது, மாநில அரசுகளே சீர் உரிமைச் சட்டங்களை இயற்ற முடியம் என்று மத்திய அரசு அறிவிப்புச் செய்திருக்கிறது.

மார்க்ஸிஸட் கம்யூனிஸட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், மாநில அரசுகள் சீர் உரிமை சட்டங்கள் தொடர்பாக சொந்தமாக சட்டங்கள் இயற்றிக் கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்ப, அதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் நாள், மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், வாரிசுரிமை போன்ற அம்சங்களில் மாநில அரசுகளுக்கு சுயமாக சட்டம் இயற்றும் அதிகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, மாநில அரசுகள் சீர் உரிமைச் சட்டங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்யலாம் என்று  தெரிவித்தார்.

திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துப் பிரித்தல் ஆகிய அம்சங்களில் மதங்களுக்கிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் 6 முக்கிய மதங்களை சார்ந்து மக்கள் வாழ்கிறார்கள். 6 மதங்களிலும் உரிமையியல் சட்டங்கள் முரண்படுகின்றன. அனைத்து மதத்தினரையும் வேறு ஒரு பொது சட்டங்களின் கீழ் வாருங்கள் என்று அழைப்பது அவர்களது சொந்த மதங்களை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வதற்கு சமம். அதனால்தான் அரசமைப்பு சட்ட வல்லுனர்கள் பொதுவான சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.

கட்டுரையாளர்: ஜி.அத்தேஷ்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *