பிலால் இப்னு அப்தில்லாஹ் இப்னு உமர் அறிவிக்கிறார்: ஒரு நாள் எனது தந்தை அப்துல்லாஹ் இப்னு உமர் நபியவர்கள் கூறியதாக பெண்கள் மஸ்ஜித்களுக்கு சமூகமளிப்பதை தடுக்க வேண்டாம் என்ற ஹதீஸைக் கூறினார். அதற்கு நான் எனது குடும்பத்தவர்களை நான் அனுப்பமாட்டேன். விரும்பியவர் தனது குடும்பத்தவர்களை அனுப்பட்டும் என்று கூறினேன். அதற்கவர் அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாகும். அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாகும். அவர்களைத் தடுக்க வேண்டாம் என்ற நபியவர்களது ஏவலை நான் உனக்கு அறிவித்தும் நீ இவ்வாறு கூறுகிறாயே என்று கூறி அழுதுவிட்டார். பின் கோபப்பட்டவராக எழுந்து சென்றுவிட்டார். இன்னொரு அறிவிப்பில் அல்லாஹ்வின் எதிரியே என்று கூறியதாகவும் பிரிதொரு அறிவிப்பில் தனது கையை நீட்டி அறைந்ததாகவும் வருகிறது.” (தபரானி, அல் முஃஜம் அல் கபீர்).
இந்த அறிவிப்பில் இப்னு உமர்(ரழி) பெண்கள் மஸ்ஜிதுக்கு வருகை தருவதை தடுக்கும் நடவடிக்கை நபிகளாருக்கு மாற்றமானது எனக் கூற, அதற்கு அவரின் மகன், நபிகளார் காலத்து அந்நடவடிக்கை அவரின் காலத்துக்குப் பொருத்தமானதல்ல என்று குறிப்பிடுகின்றார். அதற்கான இப்னு உமரின் எதிர்வினை மிகக் கடுமையானதாக அமைகிறது.
இங்கு பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதைத் தடை செய்வதற்கு எவ்வித இடம்பாடையும் வழங்காததாக இப்னு உமர்(ரழி) கருத்து அமைந்த போதிலும், அதன் பிறகான இஸ்லாமிய வரலாற்று ஓட்டம் அவரின் மகனின் கருத்துக்கு சாதகமான நிலைபாட்டையே எடுத்துள்ளன.
இப்னு உமரின் கடுமையான எதிர்வினைக்கு எவ்வாறு பொருள் கொள்வது?! இப்னு உமர் (ரழி) தனது மகனுடனான இந்த உரையாடல் காலத்து சமூக யதார்த்தத்தை கருத்தில் கொள்ளவில்லையா அல்லது (நபிகளார் பெண்கள் மஸ்ஜிதுக்கு வருவதை தடுக்க வேண்டாம் என்று கூறியதன் மூலம்) நபிகளார் அப்பொழுது தான் மேலெழுந்து வந்த முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்த விழைந்த மாற்றத்தை சிதைக்கும் நடவடிக்கையை கண்டித்தாரா?. இப்னு உமர்(ரழி), நபிகளார் காலத்து நடைமுறையை தன் கண் முன்னே கண்டு வாழ்ந்தவர். நபிகளார் ஏற்படுத்திய / அனுமதித்த ஒழுங்கொன்றின் மூலம் நபிகளார் எதனை நாடினார்கள் என்பதனை நெருங்கி அறிந்திருக்க அதிக வாய்ப்புள்ளவர். இப்னு உமரின் நடவடிக்கை இரண்டாவது கருத்தையே பலப்படுத்துகிறது. இப்னு உமர் இவ்வாறு கூறியவர் தனது மகன் என்ற போதிலும் கடுமையான வார்த்தையை (அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாகும்) பாவித்தமை, இவ்வாறு தடுப்பதன் பாரதூரத்தையே காட்டுகிறது.
இஸ்லாத்தின் தலைமுறைகளிலேயே உன்னத தலைமுறையான ஸஹாபா சமூகத்தின் பெண்கள் மஸ்ஜிதுக்கு வருகை தரும் நடைமுறையினை பின்னைய தலைமுறைகள் ஏன் கைவிட்டன?! நபிகளார் காலத்து பெண்கள் மஸ்ஜிதுக்கு வரும் நடைமுறையின் (நபிகளார் நாடிய) சமூக விளைவுகளை பின்னைய தலைமுறைகள் உணர்ந்து கொள்ளவில்லையா அல்லது வேறு காரணங்கள் இருந்திருக்குமா. இஸ்லாமிய வரலாற்று ஓட்டத்தினை அவதானிக்கும் போது இவை இரண்டுக்குமான சாத்தியக் கூறுகள் இருந்தே வந்துள்ளன. ஸஹாபா சமூகத்தினைப் போல பின்னைய தலைமுறையினர் நபிகளார் ஏற்படுத்திய நடைமுறையின் சமூக விளைவினை உணரவில்லை என்பது உண்மை. இவை பல தலைமுறைகளைக் கடக்கும் போது முழுமையாக மறைந்து விட்டன என்பதும் உண்மை. இருப்பினும், இப்னு உமரின் மகன் (நபிகளார் இவ்வாறு கூறியுள்ளார் என்று இப்னு உமர் குறிப்பிட்ட போதும்) “எனது குடும்பத்தினரை அனுப்பமாட்டேன்” என்று குறிப்பிடுவதன் பின்னனி என்னவாக இருந்திருக்கும்?! முன்னைய முஸ்லிம் தலைமுறையினரிடத்தில் பரவலாக இருந்த ஒரு நடைமுறை (பெண்கள் மஸ்ஜிதுக்கு வருகை தருவது) பின்னைய தலைமுறையினரினால் முழுமையாகக் கைவிடப்படக் காரணமாய் அமைந்த விடயங்கள் எதுவாக இருந்திருக்கும்?! அதாவது, அந்த வேறு காரணங்கள் எவையாக இருந்திருக்கும்?!
இன்னொரு வகையில் குறிப்பிடுவதென்றால், இப்னு உமரின் மகன் தனது குடும்பத்தினரை அனுமதிக்க மாட்டேன் என்றே குறிப்பிடுகிறார். அதாவது, அவர் காலத்து பரவலான நடைமுறை ஒன்றிற்கு தனது குடும்பத்தை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார். அவர் காலத்திலும் பெண்கள் மஸ்ஜிதுக்கு வருகை தருவது பரவலான நடைமுறையாகவே இருந்திருக்கிறது. பின்னைய தலைமுறையில் ஒவ்வொருவரும் இப்னு உமரின் மகனின் நிலைப்பாட்டை எடுத்தமைக்கான காரணம் என்ன?! அதுவே பின்னைய முஸ்லிம் சமூகத்தின் பொதுப்போக்காக மாற்றமடைந்தமைக்கான காரணங்கள் எவையாக இருந்திருக்கும்?!
நபிகாளார் காலத்து முஸ்லிம் சமூகம் என்பது மிக எளிமையானது. மதீனா என்ற சிறியதொரு நிலப்பரப்பே அதன் பரப்பெல்லை. அந்த சமூகம் தனது அன்றாடப் பிரச்சினைகளை நபிகளார் முன்னிலையிலேயே இலகுவில் தீர்த்தும் கொள்கிறது. நபிகளாரின் இறுதிக் காலத்தில் அது அரபு தீபகற்பத்தின் பெரும்பாலான நிலங்களை உள்ளடக்கியதாக அதன் பரப்பெல்லை விரிவு பெறுகிறது. குலபாவுர் ராஸிதூன்களின் ஆட்சிக் காலத்தின் அதன் பரப்பெல்லை மிகப் பாரியதாக, பரந்து விரிந்ததாக விரிவாக்கம் பெறுகிறது. பல்வேறுபட்ட சமூகங்களும், கலாச்சாரங்களும் இஸ்லாத்தினுள் வருகின்றன. முஸ்லிம் சமூகம் ‘எளிமையான’ வடிவத்திலிருந்து ‘சிக்கலான’ தன்மைக்கு நகர்கின்றன. பரந்து விரிந்த நிலப்பரப்பினை ஆளுவதற்கான முறைமையினை கண்டுகொள்ள எவ்வாறு முஸ்லிம் சமூகத்தினால் முடியாமல் போனதோ, அவ்வாறே ‘சிக்கலான’ பரிமாணத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான ஒழுங்கினை முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளத் தவறுகின்றன. முஸ்லிமின் அன்றாட நடவடிக்கையின் ஓரங்கமாக இருந்த பெண்களின் மஸ்ஜிதுக்கான பிரவேசம் என்ற விடயமும் முதலில் தனிநபர்களினாலும், பின்னர் சமூகத்தினாலும் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. காலப்போக்கில் எவ்வித மீள்பரிசீலனைக்கும் உட்படதாத சமூகத்தின் பொதுப்போக்காக அவை மாற்றமடைகின்றன.
மனித இன வரலாற்றில் மிகவும் உணர்ச்சிகரமாக அணுகப்பட்டு வந்ததாகவே பெண்கள் சார்ந்த விடயங்கள் இருந்தன. ஆண் – பெண் தொடர்பாடலை நிர்வகித்தலில் ஏற்பட்ட குழறுபடிகள் விரைவில் உணர்ச்சித் தளத்தை அடைந்தமையே இப்னு உமரின் மகன் பிலால் இப்னு அப்துல்லாஹ்வின் நடவடிக்கை காட்டுகிறது. இதனை உணர்ச்சித் தளத்தில் அணுகுவதன் மூலம் நபிகளார் அந்நடைமுறையினூடே சமூகத்தில் (குறிப்பாக, பெண்கள் சமூகத்தில்) ஏற்படுத்த விழைந்த மாற்றத்தை இழக்க விரும்பாமையே இப்னு உமரின் கடுமையான எதிர்வினை உணர்த்துகிறது. மனித இயல்பு சார்ந்து ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒழுங்கு இதுவல்ல என்பதனை இப்னு உமர் நன்கு உணர்ந்திருக்கக் கூடும். ஏனெனில், இந்நிகழ்வு நடைபெறும் கால மாற்றங்களை அவர் அவதானிக்க தவறியிருப்பார் எனக் கொள்ள முடியாது. அது அவரின் அப்போதைய சமகாலப் பிரச்சினையும் கூட.
ஆண் – பெண் தொடர்பாடலை நிர்வகித்தலும் எமது உரையாடலில் கூடிய முக்கியத்துவத்தைப் பெற வேண்டிய விடயம். மஸ்ஜிதுக்கு பெண்கள் வரும் விடயத்தில் நபிகளார் கால நடைமுறையினை அறிந்திருந்தும், இன்று வரையில் நூற்றாண்டுகளாக அதனைப் புறக்கணித்து வருவதில் முஸ்லிம் சமூகம் வெற்றி கண்டே வந்துள்ளன என்பது கவனிக்கத்தக்கவை. பெண்களை வீட்டினுள் அடைத்து வைக்க வேண்டுமெனெக் கருதுபவர்களுக்கு ‘நிர்வகித்தல்’ எனும் விடயம் தேவையற்றவை. பெண்களின் சமூக வகிபாகத்தினை வலியுறுத்துபவர்களுக்கே இவ்வுரையாடல் அவசியமானது. ஆண் – பெண் தொடர்பாடலில் ஏற்படும் குழறுபடிகளைப் பித்னாவாகவே முஸ்லிம் சமூகம் நோக்கி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. (எனது முன்னைய கட்டுரை ஒன்றிலும் இவ்விடயங்களை வேறு ஒரு கோணத்தில் எழுதியுள்ளேன்).
பெண்களின் மஸ்ஜித் பிரவேசம் விடயத்தில் நபிகளார் கால நடைமுறைக்கு மீளலே இஸ்லாத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள உதவ முடியும். இப்னு உமரின் செயற்பாட்டிலான கடுமையான தொனியும் இதனையே வெளிப்படுத்துகின்றன. பெண்கள் விவகாரத்தினை நிர்வகிக்க முடியாமை என்பது முஸ்லிம் சமூகத்தின் தேக்க நிலையின் அடையாளமே தவிர முன்நகர்தலின் வெளிப்பாடல்ல.
.இஸ்லாம் ஒன்றைத் தடுத்திருந்தால் அதற்கு எவ்வாறு காரணங்கள் இருக்குமோ, அதே போன்று இஸ்லாம் ஒன்றை ஆகுமாக்கி இருந்தாலும் அதற்கு காரணங்கள் இருக்கவே செய்யும். ஆகுமாக்கப்பட்ட ஒன்றை அதற்கான வரையறைகளை பூதாகரப்படுத்தி தடுக்கப்பட்டதாக மாற்றுவது தகுமானதல்ல. அது அல்லாஹ்வும், அவனது தூதரும் நாடிய இலக்கினை அடைய எவ்வகையிலும் துணை செய்யப் போவதில்லை. காய்ச்சலுக்குப் பயந்து குளிக்காமல் இருப்பதைப் போன்றது இவை.
அடிப்படையான ஒரு நலனை மனித இயல்பு சார்ந்து எழக்கூடிய ஒரு பிரச்சினையைக் காரணம் காட்டி தடுப்பதன் பாரதூரத்தையே இப்னு உமரின் கடும் கோபத்துடன் கூடிய எதிர்வினை காட்டுகிறது. மனித இயல்பு சார்ந்த ஒரு பிரச்சினை தீர்க்கக் கூடியவை அல்ல; அதனை ஒழுங்குபடுத்தவே முடியும் என்ற புரிதல் எமக்கு மிக அவசியமானது. அல்லாஹ்வே அவனது படைப்பு விடயத்தில் ஏற்படுத்தியுள்ள விதி அவை. எல்லாவற்றையும் ‘ஹராம் – ஹலால்’ என்ற இருமைப் பார்வைக்குள் புகுத்திப் பார்க்கின்ற எமது மனநிலை தான் எமது தேக்க நிலையின் தூலமான அடையாளம். அதாவது, எமது நோக்கு ‘சட்டவியல்’ பார்வைக்குள் மாத்திரம் கண்டுண்டு கிடப்பதிலிருந்து வெளி வர வேண்டும்; ‘சமூகவியல்’ நோக்கிலும் அல்குர்’ஆன், ஸுன்னாவை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதன் சார்ந்த பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை, அதன் முழுப்பரிமாணாத்தையும் அல்குர்’ஆனும், ஸுன்னாவும் கவனத்தில் கொள்ளாமல் அது மனித வாழ்வுக்கான வழிகாட்டல் என்று தன்னை சொல்லியிருக்க முடியாது. பிரச்சினை எமது பார்வைக் கோணத்திலேயே உள்ளன.
“பெண்களும் மஸ்ஜிதும்” நூல் நபிகளார் கால நடைமுறையினை நம்கண் முன்னே அவ்வாறே கொண்டு வந்து நிறுத்துகிறது. கலாநிதி ஜாசிர் அவ்தா நபிகளார் காலத்து பள்ளிவயலுக்குள் எம்மை அழைத்துச் செல்கிறார். அவர் சொல்லவரும் கருத்தும் இப்னு உமரின் கோபத்தைப் பிரதிபலிக்கிறது. ரிஷாட் நஜிமுதீன் அக்கோபத்தினை எமது தமிழ்பேசும் சூழலுக்குள் நகர்த்துகிறார்.
“ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: முஃமினான பெண்களில் அனைவரும் போல முந்தானைகளால் சுற்றிய நிலையில் பஜ்ர் தொழுகையில் நபியவர்களுடன் கலந்துகொள்வார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றிவிட்டால் தம்முடைய வீடுகளுக்கு திரும்பிச் சென்று விடுவர்.” (புகாரி, முஸ்லிம்).
(கவனிக்கவும்: “முஃமினான பெண்களில் அனைவரும் போல” அதுவும் “பஜ்ர் தொழுகைக்கு”).
மீண்டும் இப்னு உமருக்கே திரும்புவோம்… இப்னு உமர் பெண்கள் மஸ்ஜிதுக்கு வரும் நபிகளார் காலத்து வழமையை தடுக்கும் செயலினை கடுமையாக ஆட்சேபித்ததன் மூலம் பின்னைய தலைமுறையினர்களுக்கு எதனை சொல்ல வந்திருப்பார்?!
கட்டுரையாளர்: மனாஸிர் ஸரூக்