இந்நூலானது தமிழகத்தில் இஸ்லாம் அறிமுகமானது முதல் கொரோனா காலம் வரை தமிழக முஸ்லிம்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் பல அரிய தகவல்களை உள்ளடக்கி ஆதரங்களுடன் இருபது தலைப்புக்களின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது.தமிழக முஸ்லிம்களைப்பற்றித்தெரிந்துகொள்ள இந்நூல் நிச்சயம் உதவலாம்.
இறைவன் ஒருவன்; அவன் உருவமற்றவன். அவனுக்கு இணையுமில்லை; துணையுமில்லை என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்துமுறை இறைவனை வழிபடுதல், ஆண்டுக்கு ஒருதிங்கள் நோன்பிருந்து ஏழை எளியவரின் துயர்அறிதல், தங்கள் வருமானத்தில் நாற்பதில் ஒருபங்கை ஏழை எளியவர், வழிபோக்கர், கடன்பட்டோருக்கு அளித்து, அவர்களின் துயர்களைதல், வசதியுடையோர் வாழ்வில் ஒருமுறையேனும் மக்கா மாநகர் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுதல், சாதி- சமய வேறுபாடின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப்பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய இஸ்லாமியச்சமூகக்கோட்பாடுகளை முஹம்மது நபி மக்களிடையே போதித்தார். இறைத்தூதரின் போதனையை ஏற்று, அவர் போதித்த இஸ்லாமியக்கோட்பாடுகளைத் தனது வாழ்க்கையில் கடைபிடித்து, ஏக இறைவனுக்குத் தன்னைச்சமர்பித்து, தன் வாழ்க்கைமுறைகளை அமைத்துக்கொள்பவரே முஸ்லிம் ஆவார்.
தமிழக முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்:
1400 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய – தமிழ் கூட்டுறவில் பழுத்த ஒரு தனிக்கலாச்சார இனத்தின் வழிவந்த பெருங்குடியினரே முஸ்லிம்கள். முஸ்லிம்கள் இனத்தாலும், மொழியாலும் நடை உடை பாவனைகளால் தமிழர்களாகவும், பின்பற்றுகிற சமயத்தால் இஸ்லாமியர்களாகவும் இருந்துவருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இஸ்லாமியர்கள் 5.82 சதவீதம் பேர் வாழ்ந்துவருகின்றனர். இவர்களை, அரேபியா, எகிப்து, ஈராக், துருக்கி முதலிய நாடுகளிலிருந்து தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தவர்களின் சந்ததியினர்; இஸ்லாம் மதத்தைத்தழுவிய தமிழ் முஸ்லிம்கள்; வட இந்தியா, தக்காண பீடபூமியிலிருந்து தமிழகத்தில் வாழும் உருதுமொழி பேசும் முஸ்லிம்கள் என வகைப்படுத்தலாம். பண்பாட்டு அடிப்படையில் இவர்கள், சன்னி முஸ்லிம்கள்; ஷியா முஸ்லிம்கள்; அஹமதியா முஸ்லிம்கள் எனும் பிரிவுகளாகவும், ஷேக், சையது, தக்னி முஸ்லிம், அன்சார், தூதுகோலா, லெப்பை, இராவுத்தர், மரைக்காயர், மாப்பிள்ளை என்ற ஏழு வகையாகவும் தமிழகத்தில் வாழ்ந்துவருகின்றனர்.
உலகின் முதல் மனிதர், தமிழகத்தின் முதல் முஸ்லிம்;
மனித இனமானது, குமரிக்கண்டத்தில் குறிப்பாக தென்னிந்தியப்பகுதியிலிருந்துதான் தோன்றியிருக்க வேண்டும். குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியாக ‘சரந்திப்’ என்றழைக்கப்பட்ட இலங்கை மலைச்சிகரத்தில்தான் முதல்மனிதராகிய ஆதமின் தோற்றம் நிகழ்ந்தது. மண்ணுலகில், இலங்கையில் இறக்கப்பட்ட ஆதம், பல வருடங்கள் தவமிருந்து இறுதியில் இறைவனின் மன்னிப்பைப்பெற்றார். அதன்பின், அவர் தம்மைப்போலவே இன்றைய அரேபிய நாட்டிலுள்ள ஜித்தாவில் இறக்கப்பட்ட தனது மனைவியாகிய ‘ஹவ்வா’ அவர்களைத் தேடியலைந்து, இறுதியில் மக்காவின் அருகிலுள்ள அரஃபா என்ற பெருவெளியில் தனது மனைவியைக்கண்டு மகிழ்ந்து அவருடன் சேர்ந்தார். பின்பு ஆதம் தனது மனைவி ஹவ்வாவை குமரிக்கண்டம் அழைத்துவந்து இறைவனைப்பணிந்து இல்லறவாழ்வில் ஈடுபட்டு மனித இனத்தைப்பெருக்கினார். அவர்களுக்கு ஆபில், காபில் இரு குழந்தைகள் பிறந்து அவர்களும் தமிழகத்தின் சேது பாம்பன் பகுதியிலேயே வாழ்ந்து மடிந்திருக்கின்றனர்.
தமிழகத்தில் இஸ்லாத்தின் தோற்றம்:
இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதல்ல, மாறாக, முதல் இறைத்தூதர் ஆதம் அவர்களால் தொடங்கப்பட்டு இறுதித்தூதர் முஹம்மது நபியால் நிறைவுசெய்யப்பப்பட்ட மார்க்கமே இஸ்லாமாகும். தமிழகத்தில் வாழ்ந்துவந்த முதல்மனிதராகிய ஆதம், முதல் இறைத்தூதுவராகவும் இருந்தமையால் அல்லாஹ்விடம் இருந்துவரும் தூதுத்துவ நற்செய்தியாகிய வஹி, முதன்முதலில் தமிழகத்தில்தான் இறங்கியிருக்கவேண்டும். தமிழர்களைப்போன்றே உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்துவந்த சமூகங்களுள் நபிகள்நாயகம் பிறந்த அரேபியச்சமூகமும், பழங்காலத்திலிருந்தே தமிழகத்துடன் இடைவிடாமல் கொண்டிருந்த வணிகமும், அதனால் ஏற்பட்டிருந்த நல்லிணக்கமுமே தமிழகத்தில் இஸ்லாம் மீள் அறிமுகம் ஆக வாய்ப்பளித்தது.
தமிழகமும் அரேபியர்களும்:
உலகின் வேறெந்தப்பகுதியிலும் கிடைக்காத முத்துக்களும், மணிகளும் தமிழகத்தில் கிடைத்தன. இதுதவிர மிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலம், சந்தனம் உள்ளிட்டவைகளும் கிடைத்தன. இதுபோல, அரேபிய வணிகர்களும் தமிழகத்தில் மேற்கொண்டிருந்த குதிரை வணிகமும் இவர்களுக்கிடையேயான உறவினை வலுப்படுத்தியது. கி.மு.2600லிருந்தே இவர்களுக்கிடையே வணிக உறவு இருந்திருக்கலாம். தமிழகத்தில் கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் சமணமும், பெளத்தமும் செல்வாக்கு பெற்றிருந்தன. கி.பி. 250 -600 வரை களப்பிரர்கள் ஆட்சி செய்தனர். கி.பி. 600 க்குப்பிறகு காஞ்சியிலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவன் களப்பிரர் ஆட்சிக்கு முடிவு கட்டினார்.
இச்சூழ்நிலையில், அரேபிய நாட்டின் மக்காவில் கி.பி 570 ல் பிறந்து கி.பி. 610 ல் உலக மக்களுக்கான இறுதித்தூதராக ஏக இறைவனால் அங்கீகரிக்கப்பெற்ற முஹம்மது நபி அவர்களின் ஏகக்கொள்கையை மக்காவைத்தொடர்ந்து 13 ஆண்டுகள் இடைவிடாமல் பிரச்சாரம் செய்தார். பிறகு, கி.பி. 622 ல் மதினாவிற்கு இடம்பெயர்ந்து தனது கொள்கைகளை எடுத்துரைத்து, இஸ்லாமியச்சமூகமாக கட்டமைத்தார். முஹம்மது நபிகளின் அறவுரைகளை ஏற்று தமிழகத்திற்கு வருகை தந்தவர்கள் வணிகம் செய்வதையும், இஸ்லாம் சமயத்தினை பரப்புவதையும் இரு நோக்கங்களாகக்கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் இஸ்லாத்தின் மீள் அறிமுகம்:
அரேபியா – தமிழகத்திற்கிடையேயான வணிகத்தொடர்பானது, நபிகளார் காலத்திலேயே அவர்பற்றியும், இஸ்லாம் பற்றியும் தமிழர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்பத்தியிருக்கலாம். கி. பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், செங்கடல், பாராசீக வளைகுடா, அரேபியக்கடலைக்கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலுள்ள கொச்சி, கள்ளிக்கோட்டை போன்ற துறைமுகங்களிலும், கிழக்கு கடற்கரைப்பகுதியிலுள்ள காயல்பட்டினம், கொற்கை, புகார், நாகை போன்ற பகுதிகளில் அரேபிய முஸ்லிம்கள் குடியேறி, இஸ்லாத்தைப்பைப்பரப்பினர். அதுமட்டுமின்றி, முஹம்மது நபிகளோடு உடனிருந்த ஸஹாபாக்களும் -தோழர்களும் (கோவளம் – தமிமுல் அன்சாரி; பரங்கிப்பேட்டை – முஹம்மது உக்காஸா) நபியின் கட்டளையை ஏற்று பரப்புரையை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் அரேபிய வணிகர்களும் இஸ்லாமிய சமயப்பரவலும்;
அரேபியர்கள் தங்கள் நாட்டிலிருந்து குதிரைகளைக்கொண்டுவந்து தமிழகத்தில் விற்பனை செய்ததின் வழியாக, தமிழகச்சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டன. துறைமுகங்களில் வளம் பெருகியதினால், அரேபியர்கள் தென்னிந்திய அரசுகளுக்கு முறையாக சுங்கவரி செலுத்திவந்தனர். இதனூடாக அரசத்தொடர்பும் ஏற்பட்டது. அரசர்களும் அரேபியர்கள் குடியேறவும், தொழுகை நடத்திட பள்ளிவாசல்கள் அமைத்துக்கொள்ளவும் அனுமதி வழங்கினார். அரேபியர்களால், முதல் பள்ளிவாசல் கி.பி. 642 ல் கொடுங்கலூரில் அமைக்கபட்டது. கி.பி. 8 ஆம் நூற்றாண்டில், அரேபியப்பகுதியிலிருந்து சேர நாட்டின் மேற்குத்துறைமுகத்திற்கு குதிரைகளை இறக்குமதி செய்து, கம்பம் போடி, உத்தம பாளையம் வழியாக மதுரை வரை வரும்போது, அப்பகுதி மக்களிடையே இஸ்லாம் மதம் அறிமுகமாகி பரவியது. அப்பகுதி மன்னர்களும் இஸ்லாம் மதம் தழுவினர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் மத்தியில், சமணர்கள் பலரும் இஸ்லாம் மதம் தழுவினர். இவற்றிற்கெல்லாம் காரணம் அப்போதைய சமூகக்கொடுமைகளும், அரேபிய முஸ்லிம் வணிகர்களின் இஸ்லாமியப்பரப்புரையுமாகும்.
முஸ்லிம்கள் அரேபியாவிலிருந்து கடல் வணிகர்களாக கிழக்குக்கடற்கரைப்பகுதியில் குடியேறி, மரக்கலத்தின் துணைகொண்டு மீன் பிடித்தொழில் செய்து வந்தது மட்டுமின்றி, கடல் வணிகத்திலும் ஈடுபடலாயினர். இவர்களே மரைக்காயர் என்றழைக்கப்பட்டனர். சோழப்பேரரசு மற்றும் பாண்டியப்பேரரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், மன்னர்களின் ஆதரவுடன், முஸ்லிம்கள் பொருளாதார கலாச்சாரத்துறைகளில் மேம்பட்ட நிலையில் வழ்ந்தனர்.
தமிழகத்தில் அரேபிய முஸ்லிம்களின் குடியேற்றம்:
அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு வணிக நிமித்தமாக வந்த அரேபியர்கள் கடற்கரைப்பகுதிகளில் இருந்த யவனசேரியில் தங்கி, தமிழப்பெண்களை மணமுடித்து குடும்பமாக வாழ ஆரம்பித்தனர். அரேபியர்களில் கேரளக்கரைப்பகுதியில் இறங்கியவர்கள் தங்கள்கள்; கொங்கண் கர்நாடகப்பகுதியில் நாவய்த்துகள், கிழக்குக்கடற்கரைப்பகுதியில் இறங்கியவர்கள் ஸ்பைகள் என்றழைக்கப்பட்டனர். அரேபியர்களின் முதல் குடியேற்றம் கி.பி. 714 ல் மலபார், காயல்பட்டினம், கீழக்கரை, அதிராமபட்டினம், பழவேற்காடு பகுதிகளிலும்; இரண்டாவது குடியேற்றம் கி.பி. 847 ல் காயல்பட்டினம், மேலப்பாளையம் பகுதிகளிலும்; மூன்றாவது குடியேற்றம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் காயலிலும் நடைபெற்றது.
தமிழகத்தில் செலாவணியாகிய அரேபிய நாணயங்கள்;
தமிழகத்தில் அரேபிய முஸ்லிம்கள் குடியேற ஆரம்பித்ததும், அந்நாட்டுச்செலாவணியாகிய தீனார், திர்கம் ஆகிய நாணயங்களை கி.பி. 8 முதல் 14 நூற்றாண்டுவரை பயன்படுத்தினர். இந்நாணயங்கள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் புழக்கத்திலிருந்தன.
இஸ்லாத்தை பரப்பிய இறை நேசர்கள்;
தமிழகத்தில் கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டுகளில் சமண, பெளத்த சமயங்கள் விழ்ச்சியடைந்து சைவம், வைணவம் எழுச்சி பெற்று, தமிழ்ச்சமூகத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. அச்சமயத்தில் இஸ்லாத்தை பரப்பும் நோக்குடன், அரபு, துருக்கி, சிரியா, பாரசீக நாடுகளிலிருந்து ஞானி, பக்கீர், சூஃபிக்கள் வருகைபுரிந்து இஸ்லாமிய இறைக்கொள்கைகளை மக்களிடம் எடுத்துக்கூறினர். இவர்களில், நபிகள் தோழர்கள் தமிமுல் அன்சாரி (கோவளம்) உக்காஸா (பரங்கிப்பேட்டை) மற்றும் தமிழகத்தில் திருச்சி – நத்ஹர்வலி; ஏர்வாடி – சையத் இப்ராஹிம் ஒலியுல்லாஹ்; நாகூர் – சாகுல் ஹமீது போன்ற சூஃபிக்களின் தன்னலமற்ற உழைப்பாலும், மக்கள் சேவையினாலும் இஸ்லாம் பரவியது என்பதுடன், இஸ்லாத்தின் ஓரிறைக்கொள்கை, எளிமை, சகோதரத்துவம், சாதிய ஏற்றத்தாழ்வின்மை ஆகிய கருத்தியல்களை மக்களின் மனங்களில் ஊடுருவச்செய்தனர்.
இஸ்லாத்தைப் பரப்பவந்த இந்தப்பெரியவர்கள் அனைவருமே மனிதச்சமூகத்தை நேசித்தவர்களாவார்கள். இப்பெரியவர்களின் அடக்க ஸ்தலங்களே ’தர்ஹா’ என்றழைக்கப்பட்டன. சூஃபித்துவத்தின் விளைவுப்பொருளாக தர்ஹாவைக் குறிப்பர். சூஃபித்துவம் வளர்ந்த ஈரான், இராக் நாடுகளில் தர்ஹாக்கள் அதிகமாக உள்ளன. இதனையடுத்து தமிழகத்தில்தான் தர்ஹாக்கள் அதிகமிருக்கின்றன. இதனால்தான் தமிழகத்தை இந்தியாவின் பாரசீகம் என்பர். இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கூடங்களாகிய பள்ளிவாசல்களில் இஸ்லாத்தின் ’ஷரிஅத்’ கோட்பாட்டின் அடிப்படையில் ஐந்து வேளை தொழுகை என்னும் ஏகதெய்வ வணக்கமுறை இடம் பெறுவதால் அவை இஸ்லாமிய பண்பாட்டுத்தலங்களாக இடம் பெற்றுவிட்டன.
பல்சமயச்சூழல் நிலவும் இந்தியாவில், குறிப்பாக தர்ஹாக்கள் வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றன. சமய நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் தர்ஹாக்கள், முஸ்லிம்களும், இந்து சமய மக்களும் சந்திக்கும் சமரச மையங்களாக விளங்குகின்றன என்பதற்கு நாகூர் தர்ஹா, ஏர்வாடி தர்ஹா, தூத்துகுடி ஒலியுல்லாஹ் தர்ஹா இப்படியாக கூறிக்கொண்டே போகலாம். தமிழக மன்னர்களும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திட, நிலங்களை தானமாகவும், விழாக்காலங்களில் கொடையும் அளித்து நல்லிணக்கத்தினை பேணியிருக்கின்றனர்.
தமிழக முஸ்லிம்களின் அரசியல் ஆளுமை:
தமிழக மன்னர்கள் முஸ்லிம்களின் நாட்டுப்பற்றினையும் விசுவாசத்தினையும் அறிந்து அவர்களை அதிகாரமிக்கப்பதவிகளில் அமர்த்தினர். மன்னன் இராஜராஜன் அரேபியாவிலிருந்து வந்த சோனகன் சாவூர் பரஞ்சோதி என்பவரை உயர் பொறுப்பில் அமர்த்தினார். பாண்டிய நாட்டிலும் முஸ்லிம்கள் அரசியல் செல்வாக்குப்பெற்று விளங்கியது மட்டுமல்லாது, படைத்தளபதி, தூதுவர், தலைமை அமைச்சர்களாகவும் இருந்து வந்துள்ளனர். கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டின் கிழக்குப்பகுதியில் கி.பி. 1188 -1198 வரை ஆட்சிசெய்த முதல் முஸ்லிம் மன்னர் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஆவார். இரண்டாவது மன்னர் கி.பி.1293 -95 ல் மதுரையில் ஆட்சி செய்த மாலிக்குல் இஸ்லாம் ஜமாலுத்தின் ஆவார்.
பாண்டியப்பேரசின் வீழ்ச்சியும் மதுரை சுல்தான்களின் ஆட்சியும்;
அலாவுதின் கில்ஜி வட நாட்டினை வெற்றி கொண்ட பிறகு, தென்னாடு பக்கம் படைகளைத் திரும்பினார். இம்மன்னருக்கு தென்னகத்தில் இஸ்லாத்தைப் பரப்பவேண்டும் என்ற விருப்பமோ, முயற்சியோ இல்லை. மாலிக்காபூர் மட்டும் இராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் பள்ளிவாசல் கட்டியதாக கூறப்படுகிறது. கி.பி. 1318 ல் டெல்லியில் அலாவுதின் கில்ஜியின் மூன்றாவது மகன் முபாரக்ஷா, தளபதி குஸ்ருகான் தலைமையில் மதுரையை நோக்கி இரண்டாவது படையெடுப்பு நிகழ்ந்தது. கி.பி. 1320ல் டெல்லியில் கியாசுதின் துக்ளக் சுல்தான் பதவியேற்றதும் உலுக்கான் படையெடுத்து வந்தார்.. கி.பி. 1323 முதல் 1378 வரை மட்டும், மதுரையை எட்டு சுல்தான்கள் ஆட்சி செலுத்தியிருக்கின்றனர். இவர்களது ஆட்சிக்காலங்களில் பாரசீக மொழியே ஆட்சிமொழியாக இருந்திருக்கின்றது.
தெலுங்கர் ஆட்சியும் தென்பாண்டிவேந்தர் மாட்சியும்:
கி.பி.1378 – 1529 வரை விஜய நகரப்பேரரசின் ஆட்சி நடைபெற்றது. இக்காலத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மதக்கோட்பாடுகளை கடைபிடிக்கவும், தொழுகை நடத்தவும், பள்ளிவாசல் கட்டிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. உதாரணத்திற்கு, தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் அதிராமப்பட்டினம் ஹஸ்ரத் ஹாஜா அலாவுதின் ஜிஸ்திய்யா வலியுல்லா சாகிபின் அடக்கவிடத்திற்கு அதிராமப்பட்டினம் கிராமம் முழுவதையும் சர்வ மானியமாக கொடுத்திருக்கிறார்.
நிலை குலைந்த முஸ்லிம்களின் கடல் வணிகம்:
கி.பி. 1498ல் மலபார் கரைப்பகுதியில் போர்த்துகீசியரான வாஸ்கோடாகாமா வந்திறங்கினார். அதற்குப்பிறகு, முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க முயற்சி செய்தது மட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையையும் நிகழ்த்தினார். கி.பி.1505வாக்கில் சோழமண்டலக்கடற்கரைக்கு வருகைபுரிந்து, அப்பகுதியில் ஏற்கனவே கடல் வணிகத்தில் சிறப்பாக செயல்பட்டுவந்த இஸ்லாமியர்களின் கடல் வணிக உரிமைகளைப் பறித்தார். இவ்வாறாக, காயல்பட்டினப்பகுதியில் செய்துவந்த முத்துச்சிப்பி, முத்துக்குளித்தல் உரிமையும் பறிபோனது. குதிரைவணிகமும் கையைவிட்டு போனது. இதுதவிர, மிளகு, அரிசி, ஜவுளி உள்ளிட்ட வர்த்தகமும் பாதிப்படைந்த நிலையில், இஸ்லாமியர்கள் வேறு தொழிலை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஐரோப்பிய வருகையும் ஆற்காடு நவாப் ஆட்சியும்:
தமிழக முஸ்லிம்களின் கடல் வணிகத்தை நிலை குலையச்செய்த போர்த்துகீசியர்களின் அட்டூழியம் அதிகரித்துவந்த வேளையில் டச்சுக்காரர்கள் கி.பி. 1602ல் தமிழகம் வந்தனர். அவர்களது கப்பல் பழவேற்காட்டில் தரைதட்டி நின்றபோது அவர்களுக்கு இஸ்லாமியர்களே உதவியிருக்கின்றனர். அவர்களுக்கு செஞ்சி மன்னர் உதவியதினால் வணிகம் செழித்து வளர்ந்தது. கி.பி.1620ல் டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் வணிகத்திற்காக வந்திறங்கினர். கி.பி.1673ல் பிரெஞ்சு வணிகக்குழு புதுச்சேரியில் வந்திறங்கியது. இவர்கள் யாவருமே ஆங்கிலேயர்களுடன் போட்டியிட முடியாமல் ஆங்காங்கே சுருங்கிக்கொண்டனர். ஆங்கிலேயர்கள் இஸ்லாமியர்களின் அரசியல் – பொருளாதார – சமூக நிலைமைகளை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கினர். இருந்தபோதிலும், இக்காலத்தில் தமிழகத்தில் ஆண்டுவந்த குறுநில மன்னர்கள் இஸ்லாமியர்களின் வணிக – மத வழிபாட்டிற்கு உறுதுணையாக இருந்தனர். தமிழக முஸ்லிம்களிலேயே வணிகச்சிறப்பும், வள்ளல் தன்மையும், நிர்வாகத்திறனும், இஸ்லாம் மார்க்கப்பற்றும் கொண்டவராக சீதக்காதி திகழ்ந்தார். இவர் சேது மன்னரின் அமைச்சராகவும் விளங்கினார். கடல் வணிகம் மூலமாகப் பெற்ற வருவாயிலிருந்து ஏழைகளுக்கு உதவினார். தமிழகத்தில், கி.பி 1649 ல் முகலாயர் படையெடுப்பின் காரணமாக நாயக்கர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
17 -18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழக முஸ்லிம்களின் நிலை, வணிகமும் தொழிலும்:
தமிழகத்தில் ஆற்காடு நவாப்புகளின் ஆட்சியின் போது இஸ்லாமிய சமயப்பரவல் மிகக்குறைவாகவே நடந்தது. தமிழகப்பகுதிகளில் நெசவு, தோல் பதனிடும் தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டது மட்டுமல்லாது போர் வீரர்களாகவும் முஸ்லிம்கள் இருந்துவந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து கீழை நாடுகளுக்கு துணி வகைகளை ஏற்றுமதி செய்துவந்தனர். கி.பி. 1776 களில் நாகூரிலிருந்த 70 கப்பல் வணிகர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியராக இருந்திருக்கின்றனர். ஆற்காடு நவாப்புகளின் அணுசரணையுடன் தமிழகத்தில் ஆங்கிலேயர் கிழக்கிந்தியக்கம்பெனி ஆதிக்கம் பெற்றது. ஆங்கிலேயர்கள் தனது சூழ்ச்சியின் மூலம் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுக்க ஏகபோக ஆட்சியாளராக மாறிவிட்டனர்.
விடுதலை வேட்கையில் விளைந்த தியாகத்தழும்புகள்:
18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் முகலாயப்பேரரசின் ஒளரங்கசீப் பிரதிநிதியான ஆற்காடு நவாப் ஆளுகையின் கீழ் தமிழகம் இருந்தது. அப்போது தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கையில் குறுநில மன்னர்கள் ஆட்சியிலிருந்து வந்தனர். இக்காலகட்டத்தில் ஆங்கிலேயர் – பிரெஞ்சுக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவந்தனர். குறுநில மன்னர்கள் – ஆங்கிலேயர்களுக்கிடையே மோதல்போக்கு உருவாகியது. ஏற்கனவே போர்த்துகீசியர்- டச்சுக்காரர்களை எதிர்ப்பதில் இஸ்லாமியர்கள் முன்னோடியாக இருந்துவந்ததுபோன்று, தற்போதும் குறுநில மன்னர்களுக்கும் இஸ்லாமியர்கள் துணைநின்று ஆங்கிலேய – பிரெஞ்சுக்காரர்களை எதிர்த்துப்போராடி உயிர் நீத்திருக்கின்றனர். (பூலித்தேவனின் தளபதி – முகமது நயினார்; வேலு நாச்சியார் – ஹைதரலியின் மைத்துனர் சையத் அலி; சேதுபதி மன்னர் – முன்சிலாய் சாஹிபு; கட்டபொம்மன் – மம்மது தம்பி ; மருது சகோதரர்கள் – சேக் உசேன்; தீரன் சின்னமலை – முகமது உசேன்) இது தவிர 1806ல் நடந்த வேலூர் புரட்சியில் பக்கீர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதுபோல், 1857 ல் நடந்த சிப்பாய் கலகத்திலும் இஸ்லாமியர்கள் முன்னோடிகளாய் இருந்திருக்கின்றனர்.
இங்கிலாந்து இராணியின் நேரடி ஆட்சியின் போது, முஸ்லிம்கள் தங்களது சமூகப்பிரச்சினைகளை அரசிடம் கொண்டு சென்று தீர்வுகாண பல இஸ்லாமிய அமைப்புக்களை உருவாக்கி அதனூடாக, முஸ்லிம்களுக்கு தனித்தொகுதி, இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயில பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தித்தரவேண்டி கோரிக்கை எழுப்பியிருக்கின்றனர். 1885 ல் காங்கிரஸ் இயக்கம் தோற்றம் பெற்றது. 1906 ல் முஸ்லிம் லீக் அமைப்பு தோன்றியது. ஆரம்பகாலத்தில் இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சேர்ந்தே செயல்பட்டு வந்தன.
உருது முஸ்லிம்களும் தமிழ் குடியேற்றமும்:
தமிழகத்தின் மீது தில்லி சுல்தான், தக்காண சுல்தான், முகலாயர், கர்நாடக நவாப்புகளின் ஆட்சிக்காலத்தில் உருதுமொழி தமிழகத்தில் பரவியது. தில்லி அரசின் பல்வேறு அரசுப்பணிகளிலும், துருக்கியர், ஆப்கானியர், அரபி மொழியினர், பலமொழி பேசுவோர் இருந்தனர். வட இந்திய ஹிந்தி, சமஸ்கிருதம், அரபு, பாரசீகம், துருக்கி, ஆகிய மொழிகள் கலந்து உண்டான கலப்பு மொழியாக உருது பிறந்தது.
ஆங்கிலேய ஆட்சியில் தமிழக முஸ்லிம்கள்:
தமிழக முஸ்லிம் சமூகம் மொழி அடிப்படையில் தமிழ் பேசுவோர், உருதுமொழி பேசுவோர் எனப்பிரிந்து இருந்தாலும் இவர்கள் இனம் – மொழி – பண்பாடு முதலியவற்றில் வேறுபட்டு இருந்தனர். பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் தவிர, தமிழகத்தில் சூஃபி முறையைப்பின்பற்றி ’தைக்கா’ எனும் தியானக்கூடங்களும் இருந்தன.
இஸ்லாமியச் சமயப்பரவல்;
தமிழகத்தில் சாதியின் அடிப்படையில் தீண்டாமைக்கொடுமை நிலவியது. இக்கொடுமையினால் பாதிக்கப்படுபவர்கள் சகோதரத்துவம், சமத்துவம் பேணும் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். மதமாற்றம் என்பது தனிமனிதனின் விருப்பம், உரிமையாக இருந்த போதிலும், சகிப்புத்தன்மையற்ற இந்து அமைப்புக்கள் மத உணர்வைத்தூண்டி, கலவரங்களுக்கு வித்திட்டன. இதனால் முஸ்லிம்களின் வர்த்தகத்தொழிலும், வணிகமும் பாதிப்படைந்தன. முஸ்லிம்களில் சிறுபகுதியினரே வியாபாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் இருந்து வந்தனர். பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் ஏழை, நடுத்தரத்திற்கும் கீழ்நிலையிலேயே இருந்து வந்தனர். முஸ்லிம்களிடையே இப்படி நிலவும் இடைவெளியினை குறைப்பதற்கு முஸ்லிம் தொழிலதிபர்களும், வியாபாரிகளும் பெரிதும் உதவினர்.
தமிழக முஸ்லிம் அரசியல்;
தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் முதல் இருபது ஆண்டுகளில் முஸ்லிம்கள் காங்கிரஸ், நீதிக்கட்சி, முஸ்லிம் லீக் போன்ற இயக்கங்களில் இருந்துவந்தனர். தமிழ் முஸ்லிம்கள் வணிகத்திற்கு முக்கியத்துவம் தந்தமையால், அரசியலில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை. 1920களுக்குப்பிறகு முஸ்லிம்கள் தங்களது முன்னேற்றத்திற்காக காங்கிரஸையோ, நீதிக்கட்சியையோ சார்ந்திராமல், மொழி, இனம், இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட இயக்க அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்தனர். முஸ்லிம்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீட்டின்கீழ் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீட்டினைப்பெற்றனர். அப்போதைய சென்னை மாகாணத்தில் 1932-34ல் அமைச்சராகவும் முஸ்லிம்கள் இடம் பெற்றனர். 1937 களில் நடந்த இந்தி எதிர்ப்புப்போராட்டத்திலும் திரளாக கலந்துகொண்டனர்.
தமிழக முஸ்லிம்களின் கல்வி வரலாறு;
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவானாக இருந்த கலிபுல்லாஹ்வின் உத்தரவின் பெயரில் பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத்திட்டம் அறிவிக்கப்பட்டது. மதரஸா வழியான கல்வியை தருவதற்கு ஆங்கிலேயர் காலத்தில் இந்திய முஸ்லிம்கள் மத்தியில் இரண்டு இயக்கங்கள் எழுந்தன. 1. உலமாக்கள் உருவாக்கிய மதரஸா இயக்கம். 2. மேனாட்டு ஆங்கிலக்கல்வியின் வாயிலாக முஸ்லிம்களை முன்னேற்றும் அலிகார் இயக்கமுமாகும். தமிழகத்தில் உருது பேசும் முஸ்லிம்கள் மதச்சார்பற்ற பொதுக்கல்வியைப்புறக்கணித்து, அரபு மதரஸாப்பள்ளிகளை நிறுவினர். 1857 ல், இந்தியா பிரிட்டிஷ் ராணியின் நேரடி ஆட்சிக்கு வந்ததற்குப்பிறகு, அரசு வேலைவாய்ப்பு, இராணுவத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு குறைவாகவே இருந்தது. 1871 ல் ஹண்டர் கமிஷனும் இதையே உறுதி செய்தது. தமிழகத்து முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற மதச்சார்பற்ற பொதுக்கல்வியே தேவை என உணர்ந்து முஸ்லிம் தலைவர்கள் பள்ளிகள்- கல்லூரிகள் என தமிழகம் முழுதும் நிறுவினர்.
இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள்:
வ.உ.சி சுதேசி கப்பல் வாங்க ஹாஜி பக்கீர் முகமது இராவுத்தர் எனும் செல்வந்தர் உதவினார். தென் ஆப்ரிக்காவிலிருந்த முஸ்லிமால் நடத்தப்பட்ட ஒரு கப்பல் கம்பெனியின் கணக்குவழக்குகளை கவனிப்பதற்காக காந்தியடிகளை போர்பந்தரிலிருந்து அழைத்து வந்திருக்கின்றனர். பஞ்சாபில் ’ரெளலட்’ சட்டத்திற்கு எதிராக ஜாலியன்வாலாபாக்கில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு ஜெனரல் டயரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் பலர் இஸ்லாமியர்களாக இருந்திருக்கின்றனர். இதேபோல், கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், உப்புச்சத்தியாகிரகம் ஆகிய போராட்டங்களில் இஸ்லாமியர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுதந்திர உணர்வை வெளிப்படுத்தியிருக்கின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய இராணுவப்படையிலும் முஸ்லிம்கள் சேர்ந்து போராடியது மட்டுமல்லாமல், அப்போது நடந்த யுத்தத்திற்குப்பிறகு மலேசியா- பர்மாவில் தொழில் நடத்திவந்த இஸ்லாமியச்செல்வந்தவர்கள் பலரும் தங்களது சொத்துக்களை இழந்து ஏதுமற்று தமிழகம் வந்த வரலாறுமுண்டு.
விடுதலை இந்தியாவில் தமிழ் முஸ்லிம்கள்;
தமிழக முஸ்லிம்கள் இந்தியா எங்கள் தாய்நாடு ; இஸ்லாம் எங்கள் வழி , இன்பத்தமிழ் எங்கள் மொழி எனும் கோட்பாட்டிற்கு ஏற்ப வாழ்ந்துவந்தனர். இதற்கு உறுதுணையாக நின்றவர் காயிதே மில்லத் என அழைக்கப்படும் எம்.முஹம்மது இஸ்மாயில் சாகிபு ஆவார். இவர் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். தமிழை தேசிய மொழியாக்க கோரிக்கை எழுப்பியவரும், இஸ்லாமியர்களின் கல்விக்கு உதவியருமாவார். இவர் தவிர பி.எஸ்.அப்துர் ரஹ்மான் எனும் தொழிலதிபரும் கல்வியாளருமாக இருந்து இஸ்லாம் சமூகத்திற்கு எண்ணற்ற பணிகளை தொடர்ந்திருக்கின்றனர்.
தமிழக முஸ்லிம்கள் பேரிடர் மீட்பு, வெள்ளத்தடுப்பு, இரத்ததானம், கொரோனா, மக்கள்சேவை, துயர் துடைப்பு, கன்னியாகுமரி மீட்பு, இந்திமொழி திணிப்பு, மாஞ்சோலை தேயிலை தோட்டப்போராட்டம், முல்லைப்பெரியாறு அணை, ஜல்லிக்கட்டுப்போராட்டம் உள்ளிட்ட எண்ணற்ற போராட்டங்களில் பங்குகொண்டு தமிழக மக்களின் நலனுக்காக இஸ்லாமியர்கள் அரும்பணியாற்றி இருக்கின்றனர்.
சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டிருந்த தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் போர்த்துகீசியர் வருகை காயல்பட்டினம், கீழக்கரைப்பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பெரும் துயரத்திற்குள்ளாகினர். போர்த்துகீசியரைத்தொடர்ந்து ஐரோப்பியர் வருகையும் ஆதிக்கமும் தமிழக முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் சமூக வாழ்க்கையையும் புரட்டிபோட்டன.
19 நூற்றாண்டின் தொடக்கம் முதல் இன்றுவரையுள்ள 225 ஆண்டுகாலம் தமிழக முஸ்லிம்கள் கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய அனைத்துத்துறைகளிலும் பிந்தங்கியுள்ளனர் என்பதை 1871 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் முதல் 2005 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சச்சார் கமிஷன் ஆய்வுவரை தெளிவுபடுத்தியுள்ளன.
“எந்தச்சமுதாயம் தனது நிலையைத்தானே மாற்றிக்கொள்ள விரும்பவில்லையோ அந்தச்சமுதாயத்தின் நிலையை இறைவனும் மாற்றுவதில்லை” – திருக்குர்ஆன்.
ஆசிரியர்: பேராசிரியர். முனைவர் அ. பசீர் அகமது.
வெளியீடு: வளர்பிறை பதிப்பகம், 2/686 – 7 வது தெரு, விரிவாக்கம் -1, ஜி.ஆர். நகர், கே.புதூர் அஞ்சல், மதுரை 625007
முதற்பதிப்பு: நவம்பர் 2022
பக்கம்: 546 + 38
விலை: ருபாய் 450/-
ஆக்கம்: நிகழ் அய்க்கண்