எகிப்தின் முதல் பல்கலைக்கழக பேராசிரியையும் எகிப்தின் முதல் அணுக்கதிர்வீச்சு (Atomic Radiation) துறையில் முதன்முதலாக பிஎச்டி பெற்றவரும், எகிப்தின் முதல் அணுக்கரு இயற்பியலாளருமான சமீரா மூஸா அலி இந்நேரம் உலகம் வியக்கும் சாதனைப்பெண்ணாக இருந்திருக்க வேண்டியவர். அவரது 35வது வயதில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார், அவருடன் அவர் தயாரித்து வைத்திருந்த அணுக்கதிர்வீச்சு ஃபார்முலா மற்றும் வரலாற்றுச்சிறப்பு மிக்க சமன்பாடு ஒன்றும் காணாமற் போனது கசப்பிற்குறிய உண்மையாகும்.
எகிப்தின் எல்’கர்பியா நகரில் கிபி.1917 இல் மார்ச் 3 அன்று மூஸா அலி என்பவருக்கு மகளாக பிறந்தார் சமீரா. அவரது தாய் புற்றுநோய் காரணமாக சமீராவின் சிறுவயதிலேயே இறப்பெய்த, தந்தை-மகள் இருவரும் கெய்ரோ நகருக்கு குடிபுகுந்தனர்.
எகிப்தின் எல்’ஹுசைன் பகுதியில் சிறிய உணவகம் ஒன்றைத் தொடங்கிய மூஸா அலி, பிறகு பனாத் அல்’அஷ்ரஃப் பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவரானார்.
பள்ளிப்படிப்பில் மிகவும் கெட்டிக்காரியாகத் திகழ்ந்த சமீரா, இளங்கலையில் பொறியாளர் பட்டப்படிப்பு பெற்றிருந்தார். மீண்டும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பிஎஸ் ரேடியாலஜி படிப்பினை தேர்ந்தெடுந்த அவருக்கு எக்ஸ்-ரே எனும் ஊடுகதிர் ரேடியாலஜி பிரிவில் முதல்தர கவுரவப்பட்டம் கிடைத்தது.
சமீராவுக்கு வழிகாட்டியாக இருந்தவர் அவரது பேராசிரியரும் எகிப்து பல்கலையின் முதல் கல்வித்தலைவரும் ஆன டாக்டர் முஸ்தஃபா முஷரஃபா ஆவார். தனக்கு மாணவியாக இருந்து பிறகு தனக்கு உதவிப்பேராசிரியையாக மாறி, பின்னாளில் அணுக்கதிர்வீச்சு துறையில் முதல் பிச்டி பெற்ற பெண்ணாக தரம் உயர்ந்தார் சமீரா. சமீராவைக் கொண்டு எகிப்தின் அணுக்கரு ஆராய்ச்சி மேலும் வளர்ந்து கொண்டிருந்தது.
அணுக்கரு மற்றும் கதிர்வீச்சு இரண்டையும் வைத்து மருத்துவ உலகில் பல சாதனைகளைப் படைக்க முடியும் எனக் கூறிவந்த சமீரா, புற்றுநோயாளிகளுக்கு எளிய சிகிச்சை ஒன்றையும் கண்டுபிடித்தார்.
உலக அமைதிக்காக அணுவைப் பயன்படுத்துவோம் (Atom for Peace) என்ற அறிவிப்புடன் உலக அமைதிக்கான ஒரு மாநாட்டையும் எகிப்தில் நடத்தினார் . அதில் ஆஸ்பிரின் மாத்திரைகளைப் போல மிக எளிதாக கிடைக்க கூடிய வகையில் அணுக்கரு கதிர்வீச்சு சிகிச்சை மலிவாக மக்களுக்குப் போய்ச்சேர தம்மால் உழைக்க முடியும் என்பதை ஆணித்தரமாக அறிவித்திருந்தார். அதற்கான சமன்பாடு ஒன்றையும் உருவாக்கியிருந்தார்.
இந்த மாநாடு வாயிலாக அணுக்கரு மற்றும் அணுக்கதிர்வீச்சு ஆகியவற்றின் விளைவுகளை எடுத்துக்கூறி ஆயுதங்கள் தயாரிக்கும் நாடுகளுக்கு அவர் அமைதிப்பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிட்டிருந்தார். இதன் மூலமாக அவருக்கு அமெரிக்காவின் கலாச்சாரப் பரிமாற்ற அடிப்படையிலான ஸ்காலர்ஷிப் ஒன்று கொடுக்கப்பட்டு அவர் கலிபோர்னிய பல்கலைக்கழகத்திற்கு அழைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் ரகசிய அணுக்கரு ஆராய்ச்சி மையத்தினுள் அனுமதிக்கப்பட்ட முதல் அந்நிய நாட்டு மற்றும் வெள்ளையினம் சாராத விஞ்ஞானி என்ற பெருமையை அடைந்த சமீரா, அமெரிக்க அணுவிஞ்ஞானிகள் பலருக்கு தனது அணுக்கரு கதிர்வீச்சு தொடர்பான பாடங்களை கற்பித்தார். இதனால் அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. எகிப்து தான் எனது தாய்நாடு எனது சேவை அதன் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருக்கும் எனக்கூறி அதனை கனிவுடன் மறுத்தளித்தார்.
மிசௌரி மாகாணத்தில் ரேடியாலஜி துறை கல்வி நிலையமான மலிக்கிராந்த் பள்ளியிலும் பணியாற்றிக்கொண்டிருந்த சமீரா, 1952 ஆகஸ்ட் 15 அன்று வோமிங் நகரில் ஷேரிடன் எனுமிடத்தில் கோரமான வாகன விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்துக்கொண்டிருந்த ஆர்லிங் ஆர்வின் க்ரிஸ்லர் என்ற அமெரிக்க விமானப்படை அதிகாரி ஒருவரும் இறந்து போனார்.
சமீரா மூஸா அலி என்ற தலைசிறந்த விஞ்ஞானியின் கொடூர மரணத்திற்கு பிண்ணனியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் இருப்பதாகவும், அமெரிக்க ராணுவத்தின் கை இருப்பதாகவும் பலவாறாக சர்ச்சைகள் எழுப்பப்பட்டது.
இந்நிலையில் சமீராவுடைய இந்த மாபெரும் கண்டுபிடிப்பு மனிதப் பயன்பாட்டுக்கு வராமலும் எகிப்தின் அறிவியல் முன்னேற்றத்திற்கு கைகூடாமல் போனதும் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
எகிப்தின் பெண்கள் தினம், சமீராவின் நினைவால் கொண்டாடப் படுகிறது.
கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ். ரோஸி