அத்தாவிற்கு ஒரு அறுவை சிகிச்சைக்காக கடந்த ஐந்து நாள்களாக நாமக்கல்லில் சுற்றிக் கொண்டிருக்கின்றேன். வெயில் பின்னியெடுக்கிறது. உச்சி வெயிலில் ஒரு தேநீர் கடையோரம் ஒதுங்கினேன். வெளியே வெயில் சுள்ளென அடிக்க “உள்ள வந்துருங்க சார்” என்றார் தேநீர் தயிரிப்பிலிருந்த அக்கா.

உள்ளே என்பது 8*8 அளவிளான ஒரு அறை. அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்தேன். என்னைப்போல இன்னொருவரும் தேநீரின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த நபர் உள்ளே வந்தார். சட்டையை இன் செய்து இளரோஜா Baby pink print shirt & silver grey phant என ஸ்டைலாய் இருந்தார். ரசனையை வெளிப்படுத்துகிற அலட்டலான முகத்தில் ஸ்டைலாய் ஒரு கூலர்ஸ். அவரின் அலட்டலை ஆமோதித்ததன் அடையாளமாக (செமைய்யா இருக்காப்டி) எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன்.

தேநீர் வந்தது. கையில் எடுத்தால் பிடிக்க முடியாத படி சூடு. “அக்கா….”

“சாரிங்க சார் ரெம்ப சுடுதுங்களா கொண்டாங்க” என்றபடி அக்கா அந்த தேநீர் டம்ளரை எடுத்து கொண்டு போய் ஆத்தி கொண்டு வந்தார். ஒரு உறிஞ்சு உறிஞ்சவும் மூக்கு கரகரத்தது. சிகரெட் நெடி. திரும்பி பார்த்தேன். எனக்கு இடது புறம் அந்த ஸ்டைல் மேன் புகை பரப்பியபடி நின்றிருந்தார்‌. நான் அமர்ந்திருந்த ஸ்டூல் சற்று குட்டையாக இருந்த படியால் சிகரெட்டைப் பற்றியிருந்த அவரது வலது கையும், எனது மூக்கும் நேர் கோட்டில் இருந்தன. இரண்டுக்கும் மிக குறுகலான இடைவெளி. மீறிப்போனால் ஒரே அடிதான் இருக்கும். சிகரெட் புகைத்து வெளியேற்றுகிற புகையை விடவும் கடும் நெடியாயிருந்தது சிகரெட்டின் நுனி கங்கிலிருந்து கசிகின்ற புகை. அவர் தன் விரலிடுக்கில் சிகரெட்டை பிடித்திருந்த கோணம் புகையை நேராக எனது மூக்கிற்கே செலுத்திக் கொண்டிருந்தது. Nebuliser வைக்காத குறைதான்.

எனக்கோ தாங்க முடியவில்லை. ஒரு அரூப கம்பியைப் போல மூக்கு துவாரத்தில் நுழைந்த புகை கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. கீழிருந்து மேலாய் நேராக உச்சி மண்டையை குடைந்தது. போதாக்குறைக்கு இரு கண்ணிலும் உஷ்ணம் பரவி எரிய, நெற்றிப் பொட்டின் இரு பக்கவாட்டு நரம்புகளும் கனத்துப்போய் திடும் திடும்மென துடிக்க, இரு விரல்களால் இருபுற நெற்றிப் பொட்டுகளை அழுத்திய படி அமர்ந்திருந்தேன். இதனிடையே மூக்கினுள் ஏறிய புகையின் காரம் மூக்கினுள் அலையோ அலையென்றலைய மூக்கைப் பிய்த்தெறிந்து விடலாம் போல ஆங்காரமாக வந்தது. கண்ணெரிச்சல் தாங்காமல் உள்ளங்கையால் இரு கண்களையும் மாறி மாறி தேய்த்ததில் பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கண்ட விஜயகாந்தின் கண்களைப் போல செக்கச் செவேர் என்றானது. கூடுதலாக நசநசவென கண்ணீர் வேறு. ஸ்டைல்மேனோ இதைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ‘எனது அறம் புகைத்தல்’ என்ற அலட்சியத்தோடு திடீர் ‘வாரன் ஆண்டர்சனாக’ மாறி குறைந்த பட்ச நியாயம், தர்மம், வெங்காயம் என எதுவுமற்று அந்த 8×8 அறையை நடப்பு ‘யூனியன் கார்பைடாக’ மாற்றிக் கொண்டிருந்தார்.

வழக்கமாக இதுபோன்ற வெவ்வேறு அசௌகர்ய சூழல்களில் ஆடித்தீர்த்து விடுவேன். தீர்த்துமிருக்கிறேன். “யோவ் போயா வெளீல..” எனுமளவிற்கு ஆங்காரமாய் கூவியுமிருக்கிறேன். ஒருமுறை விழுப்புரத்தில் அடிவாங்க இருந்தேன். ‘தொட்ரா பார்க்லாம்’ என தளபதி ரஜினியைப்போல எகிறி சுற்றியிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இன்றென்னவோ மனம் மறத்துப் போயிருந்தது. விவாதிக்கவோ, அறிவுறைக்கவோ மனமற்று தேநீர் குடுவையை எடுத்தபடி எழுந்தேன். ஒருமுறை ஸ்டைல்மேனை ஏற இறங்கப் பார்த்து விட்டு வெளியே வந்து வெயிலில் நின்று கொண்டேன். ஒரு மாதிரி புரிந்து கொண்ட தேநீர் தயாரிக்கும் அக்காவும் உள்ளே ஒரு முறை பார்வையை செலுத்தி பின் முணுமுணுத்தபடி வேலையை கவனிக்கத் துவங்கினார்.

ப்பா.. வெளியில் வந்தவுடன் பெரு நிம்மதியாக இருந்தது. அடித்த வெயிலே உறைக்காத அளவிற்கு பெரும் ஆசுவாசத்தை உணர்ந்தேன்.

“சார் அந்த டீய இப்படி குடுங்க. வேற டீ இஞ்சி போட்டு, போட்டு தர்றேன். தலைவலிக்கு சுருக்குனு தேவலாம் போல இருக்கும்.” என்றார் அக்கா ஒரு Anatomy ஆய்வாலரைப்போல. குடுத்துவிட்டு காத்திருந்தேன்.

“சார் இந்தாங்க. இந்த டீய குடிச்சு பாருங்க.”

அட்டகாசமாய் இருந்தது அந்த டீ. இஞ்சியோடு அன்பு, கரிசனத்தையெல்லாம் கலந்து ஊற்றாய் உற்சாகத்தை மீட்டது. ஒரு நல்ல தேநீரீன் சுவை என்பது கசப்புதான். குடித்த பின் நாவின் சுவை மொட்டுகளிலும், தொண்டையினுள்ளும் இலேசாய் ஒரு கசப்பு சுவையாய் பரவ வேண்டும். அப்படியானதொரு தேநீர் தரும் உற்சாகம் அலாதியானது. அவ்வப்போதுதான் அத்தகைய அபூர்வங்கள் நிகழும். இன்று நிகழ்ந்தது. சரியான அளவில் கலந்து கொதிக்க வைக்கப்பட்ட தேயிலைத்தூளும், சரியான விகிதத்தில் தட்டிப்போடப்பட்டு கொதித்த இஞ்சியும் வடிகட்டி தேநீராய் மாறியபின் அற்புதம் காட்டியது. முதல் மிடறு குடிக்கும் போதே தரத்தை சுவையாய் உணர முடிந்தது. உணவுக்குழல் செல்லும் வரையிலும் தேநீரை பின் தொடார்ந்த அந்த கசப்பு சுவை கபாலத்தினுள் ஒரு ரசாயன மாற்றத்தை நிகழ்த்தியது. ராஜாவாக இருந்தால் யாரங்கே? என யாரையேனும் அழைத்து ராஜ்ஜியத்தில் பாதியை எழுதச் சொல்லலாம். நானோ நாடோடி.

“அக்கோவ்….”

“என்னாங்க சார்?”

“சும்மா தம்பின்னே கூப்பிடுங்க, செம்ம டீ. உண்மையிலேயே இது ஒரு அபூர்வம்.”

“அப்படியா….” அதற்குமேல் அக்காவிற்கு பதிலளிக்கத் வரவில்லை. நாணமாய் முகம் நெளித்தார்.

பாதி தேநீர் காலியாகியிருந்த போது திடீரென மனம் குறுகுறுத்தது. நம்ம ஸ்டைல்மேன் என்ன செய்கிறார் என பார்ப்போம், ஒருவேளை திடீரென நான் எழுந்து வந்ததால் ஏற்பட்ட குற்றவுணர்ச்சியில் சிகரெட்டை நெரித்து பூட்சின் அடியில் தேய்த்திருக்கக்கூடும். அல்லது வெட்கத்தால் மௌனமாக அமர்ந்திருக்கவும் கூடும் என நினைத்து ஆர்வமாய் பார்வையை ஓரு அம்பைப்போல் உள்ளே எய்தேன்.

நான் எழுந்துவிட்டு வந்த ஸ்டூலில் அமர்ந்திருந்த நம்ம ஸ்டைல்மேன் செல்போனில் பேசியபடி முன்பை விட ஸ்டைலாக புகை பரப்பிக் கொண்டிருந்தார்.

இதுதான் அவர். இதுதான் நான். இதுதான் நாம். இதுதான் இச்சமூகம். நமக்கான வார்டு கவுன்சிலர்களிலிருந்து பிரதமர் வரையிலும் இச்சமூகத்திலிருந்தே வருகிறார்கள். குறைந்தபட்ச அறமோ, அறிவோ, நீதியோ அற்ற சமூகத்தின் சரிபாதி, பிறர் சுகதுக்கங்களை கிஞ்சித்தும் பொருட்படுத்தாத பெருமக்களுக்கு, வாக்களிக்க பேரம் பேசும் குடிமக்களுக்கு அவர்கள் நலனில் அக்கரை செலுத்தக்கூடிய தலைவர்கள் மட்டும் வானத்திலிருந்தா வரப்போகின்றார்கள்? சிறு தீமைகளை ஆள்கின்றன பெருந்தீமைகள்.

தேநீர் முடிந்தவுடன் ஐம்பது ரூபாய் நீட்டினேன். சில்லறை கொடுத்தார். பார்த்தேன்.

“அக்கா?”

“என்னாங்க சார்?”

“ஒரு டீக்குதான் காசு எடுத்திருக்கீங்கபோல.”

“ஆமாங்க அந்த டீயத்தான் ஒங்கனால குடிக்கவே முடியலேல. குடிக்காத டீக்கு எதுக்கு காசு?”

உய்யென மனம் விசிலடித்தது. இதோ மற்றுமொரு மாற்று நம்பிக்கை. சின்னதாய் ஒரு ஒளிக்கீற்று. இதுவும் நான், நாம், இச்சமூகம்தான்.

“அக்கோவ்”

“என்னா தம்பி.?”

“செம்ம டீ. நன்றிங்க்கா.”

“எப்ப வந்தாலும் வாங்க.”

யோசித்தோமெனில் அன்பின் அனாடமி பயின்ற எளிய மனிதர்களே உண்மையில்

நமது அன்றாடங்களை அழகாக்குகின்றனர்.

கட்டுரையாளர்: ஃபாரூக் மீரான்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *