செல் என்றால் என்ன? அவற்றின் உட்பொருட்கள் என்ன? அவற்றின் வேலை யாது? என்பது பற்றி உயிரியல் பாடம் படிக்கும் அனைவரும் அறிந்திருப்பார்கள். செல் என்பது நமது உடலை கட்டமைத்து வைத்து இருக்கும் கற்களின் குவியல் போன்றதாகும். உலகின் அனைத்து உயிர்களிலும் இந்த செல் கட்டமைப்பு உண்டு.
மனித செல்லில் இருக்கும் 3 பகுதிகளான செல்மெம்பிரன்ஸ், நியூக்ளியஸ் மற்றும் சைட்டோப்ளாஸம் ஆகியவற்றில் நியூக்ளியஸ் எனும் மையப்பகுதியின் உள்ளே காணப்படுவதுதான் குரோமோஸோம். இந்த குரோமோஸோம் ஒரு தொகுதிக்கு 23 இருக்கும்.
குரோமோஸோம்களின் கூட்டமைப்பினை ஜினோம் (Genome) என்றும் குரோமோஸோமை கட்டமைத்து வைத்திருக்கும் தொகுதிப் பொருளுக்கு ஜீன் (Gene) என்றும் அழைக்கின்றனர். அந்த ஜீன்கள் நீண்ட வலைப்பின்னல் ஏணி போல சுழலாக தறிக்கப்பட்டுள்ளதில் ஒரு பகுதி DNA (Deoxyribonucleic). மறுபகுதி RNA (Ribonucleic). இந்த டிஎன்ஏ – ஆர்என்ஏ ஆகியவை நியூக்ளியோடைட்ஸ் எனப்படும் நால்வகை பொருட்களால் கோர்க்கப்பட்டுள்ளது. இதில் டிஎன்ஏவில் adenine, thymine, guanine and cytosine ஆகிய பேஸ்களும், ஆர்என்ஏவில் cytosine பதிலாக uracil என்கிற பேஸ் மட்டும் மாறுபடுகிறது.
செல்’லை நம்மால் வெரும் கண்ணால் காணமுடியாது. அந்த செல்லுக்குள் அத்தனை நுணுக்கமான வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. டிஎன்ஏ எனப்படும் மனித வரலாற்றின் கைப்புத்தகத்தில் தான் எத்தனையெத்தனை பழங்கால குறிப்புகள் பதியப்பட்டுள்ளது.
நாம் நமது அப்பா மாதிரியோ அல்லது தாத்தா மாதிரியோ கூட அல்லாமல், நமது நாலாவது தலைமுறை பாட்டி சாயலில் நாம் மீண்டும் பிரதி எடுத்தது போல பிறக்கின்றோம் என்பது எத்தனை ஆச்சரியம். நமது டிஎன்ஏ ஆவணங்கள் எதுவும் தொலைந்து போவதில்லை மாறாக அது வழிவழியாக கடத்துப்பட்டுக்கொண்டிருக்கிறது. இரண்டு அல்லது மூன்று தொடர் தலைமுறைகளில் தொலைந்துபோன அந்த ரேகை நான்காவது தலைமுறைக்கு எப்படியோ மீண்டு வந்துவிடுகிறது. இது மனித முகச்சாயலுக்கு மாத்திரமல்ல சொந்த விருப்பு வெருப்பு உள்ளிட்ட தனித்துவ குணநலன்களும் அப்படியே.
நமது நிறம், உடல்வாகு, குணங்கள், செய்கைகள் ஆகியவற்றுடன் நம்முடைய நோய்கள், நம் அறிவு (நினைவுகள் உட்பட), நம் புத்திசாலித்தனம் மற்றும் நமது மரணம் சார்ந்த விஷயங்கள் கூட அதில் அப்படியே பதிவாகி வருகிறது.
கிபி.1664ல் ஹூக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செல் வடிவத்திற்கான ஆராய்ச்சிகள் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு டிஎன்ஏ என்பதையே 1954ல் தான் கண்டடைகின்றனர்.
ஆனால் 1,400 கோடி வருஷங்களுக்கு முன் உருவாகி முன்பிருந்ததை விட இப்போது மேலும் விரிவடைந்து அதன் எல்லையே தெரியாத அளவுக்கு போய்க்கொண்டிருக்கும் பிரபஞ்சத்தை படைத்த இறைவனை, அற்பமாக 70-80 ஆண்டுகள் மட்டுமே பூமியில் கழிக்கும் மனிதன் கேட்கிறான்…. உன் உருவத்தை காட்டு உன்னை நம்புகிறேன் என்று.
பூமிக்காக படைக்கப்பட்ட ஆளும்வர்க்க உயிர்கள் தான் மனிதர்கள். அவ்வாறு மற்ற கிரகங்களில் இறைவன் எப்படியான படைப்புகளை படைத்து விட்டிருப்பான் என்பதை மனித டிஎன்ஏ மூலம் கண்டறிய முடியும். ஏனெனில் பூமிக்கு மனிதனே ஒரு ஏலியன் தானே? அவன் எங்கோ ஒரு பிரபஞ்ச வெளியில் உலாவிக்கழித்த பிறகு தானே பூமியில் இறக்கிவிடப்பட்டுள்ளான், ஆனால் அதை கண்டுபிடிக்க இன்னுமொரு 100-200 ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குள் மனிதர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறுமதியை வைத்து இறைவன் ஒரு மதத்தைச் சேர்ந்தவனாகவும் ஒரு மொழியைச் சேர்ந்தவனாகவும் மிக குறுகிய அளவில் சித்தரித்து வைத்திருக்கிறோம்.
திருக்குர்ஆனில் மாத்திரமல்ல உலகின் எல்லா வேத நூல்களிலும் பிரபஞ்ச இரகசியம் ஒளிந்துகிடக்கிறது. நாம் தான் தேடுவதில்லை.
வெறுப்பால் சிலரும் தலைக்கணத்தால் சிலரும் இறைவன் தன் வேதங்களில் அருளிய பேரரறிவினை புறக்கணித்துக்கொண்டிருக்கிறோம். நாம் நமது குழந்தைகளிடம் போதிக்க வேண்டியது, “அறிவு எங்கிருந்தாலும் தேடி எடு, அறிவியல் ஆய்வுகள் அனைத்திலும் ஆன்மீகத்தை தொடர்பு படுத்து, உன் அறிவு பிரபஞ்சமளவிற்கு விரிவடைந்து செல்லும் ” என்பதை அவர்களுக்கு இளமையிலேயே உணர்த்த வேண்டும்.
அணுக்களின் நுண்ணளவு பற்றி திருமூலர் கூறியதை இப்போதைய அறிவியல் கூறுகிறது. ஈராயிரம் வருடங்களாக சித்தர்களும், ஆயிரத்து இருநூறு வருடங்களாக இஸ்லாமிய விஞ்ஞானிகளும் கண்டறிந்த ரசவாதம் இப்போது அறிவியலின் பார்வைக்கு வந்துள்ளது.
இப்படி உலகின் மற்ற வேதங்களும் திருக்குறளும் கூட எத்தனையோ பண்டைய அறிவினை சுமந்து நிற்கிறது. அவை நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த மனிதர்கள் பெற்ற அறிவின் வாயிலாக இப்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது.
`Nothing New Under the Sun’ என்ற பழமொழிக்கு ஏற்ப, முன்னர் கொடுக்கப்பட்ட அறிவைப் பயன்படுத்தி தான் புதியவற்றுக்குள் அடியெடுத்து வைக்கிறான் மனிதன். ஆகவே தொழில்நுட்பம் வளர வளர தீர்க்கதரிசனங்களும் வேதவாக்குகளும் உயிர்ப்பெற்று வருவதை காணும் அறிஞர்கள் இவை ஏற்கனவே திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என அறிவிப்பதில் தவறில்லை தானே?!
கட்டுரையாளர்: நஸ்ரத் எஸ் ரோஸி