அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருவதானது, சரிந்துவரும் அமெரிக்காவின் பொருளாதார நிலைமையை நமக்கு உணர்த்துகின்றன. இதன்விளைவாக, உலகப் பொருளாதாரம் ஒரு பெருமந்தத்தில் வீழ்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. .
2008-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய சப்ரைப் நெருக்கடி, அமெரிக்காவின் ஒற்றைத்துருவ மேலாதிக்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் இருந்தது. இன்று மீண்டும் அதைப்போன்றதொரு அல்லது அதைவிட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி அமெரிக்கா நகர்ந்துவருகிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டின் இறுதியிலிருந்தே அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகும் போக்கு தொடங்கிவிட்டது. 2020 அக்டோபரில், அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் உள்ள அல்மேனா வங்கி, புளோரிடா மாகாணத்தின் ஃப்ர்ஸ்ட் சிட்டி வங்கி ஆகிய இரண்டு சிறிய வங்கிகள் திவால் நிலைக்கு வந்தன. அதை அமெரிக்க அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இந்த இரண்டு வங்கிகளின் மொத்த வைப்புத்தொகை சுமார் 200 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து, அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளும் திவாலகத் தொடங்கிவிட்டன. மார்ச் 8-இல் அமெரிக்காவின் சில்வர் கேபிடல் கார்ப்பரேஷன் வங்கி முதலில் திவாலானது. அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியும் பல ஸ்டார்ட் அப் நிறுவங்களின் முதலீடுகளைக் கொண்டிருந்த வங்கியுமான சிலிக்கான் வேலி, சிக்னேச்சர் வங்கி, 166 ஆண்டுகள் பழமையான கிரெடிட் சூயிஸ் குருப் வங்கி ஆகியவை திவாலாகின. இவற்றின் வரிசையில் தற்போது, ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகும் நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், கடலில் மூழ்கும் கப்பல்களைக் காப்பாற்றத் துடிப்பதுபோல் திவாலாகும் வங்கிகளைக் காப்பாற்ற அமெரிக்க அரசும், அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளி வர்க்கமும் போராடி வருகிறது. திவாலாகும் நிலையில் உள்ள ஃப்ர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கிக்கு 11 பெரும் வங்கிகள் இணைந்து 30 பில்லியன் டாலர் நிதி உதவி செய்தும் அவ்வங்கியைக் காப்பாற்ற முடியாத சூழலே நிலவுகிறது. சிலிக்கான் வேலி வங்கி தனது சொத்துக்களை 1.8 பில்லியன் டாலருக்கு விற்று மூலதனத்தைத் திரட்டியும் திவாலாவதைத் தடுக்க முடியவில்லை.
வங்கிகள் திவாலாவதால், இதுவரை சேமிப்பிற்காக வங்கிகளை நம்பியிருந்த அமெரிக்க மக்கள், வங்கிகளிலிருந்து தாங்கள் வைத்திருந்த வைப்புத் தொகைகளை எடுக்கத் தொடங்கினர். இதனால் மேலும் வங்கிகள் முடங்குவதும் திவலாவதும் தொடர்கதையாகியிருக்கிறது. சர்வதேச மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் அமெரிக்க வங்கிகளுக்கு எதிர்மறைப் புள்ளிகள் வழங்கியிருக்கிறது. வங்கிகள் திவாலாவதைத் தடுக்க முடியாத அமெரிக்க அரசு, சமூக ஊடகங்களில் இச்செய்திகள் காட்டுத்தீயாய் பரவுவதைத் தடுக்க என்ன செய்வதென விழிபிதுங்கி நிற்கிறது.
அமெரிக்க வங்கிகள் தொடர்ச்சியாக திவலானதற்கு அமெரிக்காவின் பெடரல் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்துவதுதான் காரணமாகச் சொல்லப்படுகிறது. கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு முன்பு வரை வட்டி விகிதம் பூஜ்ய சதவிகிதமாகத் தான் இருந்தது. இந்த ஆண்டின் மார்ச் மாதத் தொடக்கத்தில் 4.75 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 5 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. மார்ச் 2022லிருந்து டிசம்பர் 2022 வரையிலிலான 9 மாதங்களில் 5 முறை வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டது. இது கடந்த 16 ஆண்டுகளில் இருந்ததைவிட அதிகமாகும். தொடர்ந்து பணவீக்கம் கட்டுப்பாடின்றி உயர்ந்து வரும் நிலையில், பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மார்ச் 22, 2023 -இல் 25 புள்ளிகள் அளவு வட்டிவிகதத்தை பெடரல் வங்கி உயர்த்தியிருக்கிறது. இந்த வட்டி விகித உயர்வானது இன்னும் அதிகரித்து 5.5 சதவிகிதமாக உயரும் என்கின்றனர் அமெரிக்க பொருளாதாரவாதிகள்.
இவ்வாறு தொடர்ச்சியாக வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டு வருவதால், ஒருபுறம் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்பு நிதிக்கான வட்டி குறையும், வங்கிகளிலிருந்து கடன் பெறுவது பாதிக்கப்படும், வங்கிகள் முதலீடு செய்துள்ள அமெரிக்கப் பாதுகாப்புப் பத்திரங்களின் மதிப்பு வட்டி விகித உயர்விற்கு ஏற்ப எதிர் விகிதத்தில் குறையும். இதனால் வங்கிகளின் சொத்து மதிப்பு குறைவதோடு, வங்கிகளில் வைத்துள்ள வைப்புநிதி திரும்பக் கிடைப்பதற்கான உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது. இதனை முன்னுணர்ந்த அமெரிக்கா மக்கள் தங்களது வைப்புநிதிகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். நிலச்சரிவைப் போல ஒன்றை ஒன்று வேகமாக பாதாளத்திற்கு இழுத்துச் செல்கின்றன. இதன் வெளிப்பாடுகள்தான் வங்கிகள் தொடர்ச்சியாக திவாலாகி வருவதாகும்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படாததால் மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பதால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூலை 2022-இல் அமெரிக்காவில் 9.7 சதவிகிதம் பணவீக்கம் இருந்தது. இது 1970 மற்றும் 80-களில் அமெரிக்காவில் இருந்ததைப் போன்ற அதிகபட்ச பணவீக்கமாகும்.
2022-ஆம் ஆண்டின் அமெரிக்க வணிகத்துறை புள்ளிவிவரத்தின்படி, அமெரிக்க மக்களின் கூலியும், சம்பளமும் 6.2 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனினும் பொருட்களின் விலையோ 8 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. வாங்கும் சம்பளத்தைவிட பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் வீடுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை பெருமளவில் விற்காமல் தேங்கிக் கிடக்கின்றன. எரிவாயு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருப்பதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.
கடந்த 2021 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2022 டிசம்பரில், தானியங்கள் மற்றும் பேக்கரி உணவு பொருட்கள் 16.1 சதவிகிதமும், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் 15.3 சதவிகிதமும், ஆல்கஹால் கலக்காத உணவு பொருட்கள் 12.6 சதவிகிதமும், பழங்கள் மற்றும் காய்கறிகள் 8.4 சதவிகிதமும், கறி, மீன் மற்றும் முட்டைகள் 7.7 சதவிகிதமும், எரிபொருள் 41.5 சதவிகிதமும், இயற்கை எரிவாயு 19.3 சதவிகிதமும், மின்சாரம் 14.3 சதவிகிதமும் விலை உயர்ந்திருக்கிறது. இந்த விலைவாசி உயர்வானது அமெரிக்க மக்களை மென்மேலும் கிரெடிட் கார்டுகள் மூலம் கடன் வாங்கி வாழும் நிலைமைக்குத் தள்ளியிருக்கிறது.
இத்தகைய சூழலில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதமானது விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது மேலும் சுமையைக் கூட்டியிருக்கிறது. வட்டி விகிதம் உயர்ந்திருப்பதால் வங்கிகளில் வாங்கிய வீடு, வாகனக் கடன்கள், கிரெடிட் கார்டுகளுக்கான வட்டிவிகிதம் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் வாங்கிய கடன்களுக்கு கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருப்பதால், மக்களின் வாழ்க்கைத்தரம் மேலும் குறைவதோடு மக்களின் வாங்கும் சக்தி மேலும் குறையும்.
இந்த வாங்கும் சக்தி குறைவானது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும், மென்மேலும் அதிகரிக்கும் பணவீக்கத்தால் வட்டி விகிதம் உயரும். வட்டி விகித உயர்வால் வங்கிகள் முதலீடு செய்துள்ள அமெரிக்க பாதுகாப்பு பத்திரங்களின் மதிப்புகள் மென்மேலும் குறையும், வங்கிகள் திவாலாவது கணக்கின்றி தொடரும். இவ்வாறு திரும்பத் திரும்ப ஏற்படும் நச்சுச் சுழலில் அமெரிக்க பொருளாதாரம் சிக்கிக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே உள்நாட்டு உற்பத்தியில் 96 சதவிகிதத்தைக் கடனாகக் (32 ட்ரில்லியன்) கொண்டுள்ள அமெரிக்க பொருளாதாரத்தால் இந்த நச்சு சூழலிலிருந்து மீள்வது பெரும் சிரமத்துக்குரியதே. ஒருபுறம் பணவீக்கமும், வட்டி விகித உயர்வும், வங்கி திவாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தை புதைகுழியில் தள்ளியிருக்கும் சூழலில், மற்றொருபுறம் அமெரிக்காவில் தொடர்ந்து வரும் வேலையிழப்புகளும், புதிய வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டும் வருகின்றன. இது மேலும் மக்களின் வாங்கும் சக்தியை குறைக்கும். இதுவும் அமெரிக்காவை மீளாத நெருக்கடியில் தள்ளவே வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்காவின் சர்வதேச மூதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனமானது, “இந்த வங்கி நெருக்கடியானது அமெரிக்கப் பொருளாதார வளார்ச்சியைப் பாதிக்கும்” என்கிறது. அமெரிக்க வங்கி திவால் குறித்து, அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜே.பி மார்கன் வங்கியின் பொருளாதார அறிஞர்கள், “அமெரிக்காவின் நீண்ட நெடிய பொருளாதார வளர்ச்சிக் கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது (Minsky moment)” என்று அறிவித்துவிட்டனர்.
2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடி உலகின் 59 நாடுகளை சூறாவளியாகத் தாக்கியது. பல நாடுகள் இப்பொருளாதார நெருக்கடியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தன. தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள வங்கி நெருக்கடி, அமெரிக்காவுடன் பொருளாதாரச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள நாடுகளைக் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய வங்கி நெருக்கடி மீண்டும் உலகப் பொருளாதாரத்தையே மந்தத்தை நோக்கித் தள்ளும் என்கிறது உலக வங்கி. நிகழ்வுகளும் உலகவங்கியின் கூற்றை மெய்பிப்பதாய் இருக்கின்றன.
அமெரிக்க வங்கி நெருக்கடியால் ஐரோப்பிய நாடுகளும், ஜப்பானும் பீதியில் உறைந்திருக்கின்றன. இங்கிலாந்து வங்கியும் ஒன்பதாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் பெடரல் வங்கி 25 புள்ளிகள் வட்டிவிகிதத்தை உயர்த்தியவுடன், ஐரோப்பிய வங்கியும் வட்டிவிகிதத்தை உயர்த்தும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் ஐரோப்பிய மற்றும் ஜப்பான் நாடுகளின் அரசுப் பத்திரங்கள், ஓய்வூதிய நிதி மற்றும் இறையாண்மை நிதி ஆகியவற்றின் மதிப்புகள் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்கிய பொருளாதார பிணைப்புக் கொண்டுள்ள அந்நாடுகளின் வாகன உற்பத்தி நிறுவனங்களான மிட்சுபிஷி, நிசான், மஸ்டா மற்றும் கட்டுமான நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் ஆகியவை சரிவை சந்தித்து வருகின்றன. தங்கம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
அமெரிக்க பெடரல் வங்கியின் தாளத்திற்கு ஏற்ப இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மே மாதத்திலிருந்து தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதுவரை 250 புள்ளிகள் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவில் உயர்த்தப்பட்ட 25 புள்ளிகளுக்கு ஏற்ப இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டிவிகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
அந்நிய மூலதனத்தையே நம்பியிருக்கும் இந்திய தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஐ.டி துறை நிறுவனங்கள் பாதிக்கப்படும். அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச அளவில் கச்சாப் பொருட்கள் விலை குறையும் போதுகூட பெட்ரோல் விலையைக் குறைக்காத மோடி அரசு, இதையே காரணமாக காட்டி பெட்ரோல்-டீசல் விலையை மேலும் அதிகரிக்கும்.
ஏற்கெனவே, விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்திய உழைக்கும் மக்களுக்கு இது பேரிடியாகவே இருக்கும். இது இந்தியாவில் மேலும் பணவீக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கெனவே தேக்கம் நிலவுவதால், இந்திய தொழிற்துறை உற்பத்தி, குறிப்பாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன.
ரஷ்ய-உக்ரைன் போரால் மீளமுடியாத பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளை அமெரிக்க வங்கி நெருக்கடி மேலும் நெருக்கடிக்குள் தள்ளும். இதனால் அமெரிக்க, ஐரோப்பிய ஏற்றுமதியைச் சந்தையைச் சார்ந்திருக்கும் இந்திய தொழிற்துறை நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்படலாம்.
அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் உயரும்போது அமெரிக்க முதலீட்டாளார்கள், அமெரிக்கக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர். இதனால் இந்திய பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவது நடக்கிறது. இந்தாண்டின் தொடக்கத்திலேயே இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ரூ.27,000 கோடி அந்நிய மூதலீடு இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் செயல்படுத்தப்படும் பெரும்பாலான உள்கட்டமைப்பு திட்டங்கள் அந்நிய முதலீட்டை சார்ந்திருப்பதால் அவை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
இந்தியாவிலிருந்து அந்நிய முதலீடு வெளியேறினால், அந்நிய செல்வாணி கையிருப்புக் குறையும், இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியும். இதனால் இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்திக்கும்.
அமெரிக்க ஏகாதிபத்திய சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள இதர உலக நாடுகளை இந்த நெருக்கடி கொரோனா தொற்றைவிட ஆயிரம் மடங்கு பாதிப்படையச் செய்யும். இலங்கை, பாகிஸ்தான், மேற்கு ஐரோப்பிய நாடுகள் என தொடரும் நெருக்கடியை இந்த வங்கி நெருக்கடி தீவிரப்படுத்துவதோடு உலகைப் பெருமந்தத்தை உருவாக்குவது தவிர்க்கமுடியாதது.
1890-களில் ஏகாதிபத்தியமாக முதலாளித்துவம் பரிணமிக்கத் தொடங்கியதிலிருந்து, ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நெருக்கடியை சந்தித்து வருகிறது. இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பில் நெருக்கடி தவிர்க்க முடியாததாகிறது.
கட்டுரையாளர்: அப்பு