இசா தொழுகைக்குப் பிறகு பள்ளியின் வெளிப் பிரகார திண்டில் ஒவ்வொருவராக வந்து உட்கார்ந்ததும் அடுத்த சுற்று பேச்சும் விவாதமும் இலியாஸ் டீ கடையில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தது. மற்றவர்களைப் பற்றி கழுவி ஊற்றுவது என்றால், அல்வா சாப்பிடுவதைப் போல எல்லோருக்குமே அவ்வளவு சந்தோஷம். இதில் வயதான பெறுசுகளும் விதிவிலக்கல்ல. புறம்பேசுவது மகா பாவம் என்று தெரிந்திருந்தும் பள்ளிவாசலில் உட்கார்ந்து கொண்டே பேசுகிறார்களே! இதை ஒருவர் கூட கண்டிக்காமல், “அப்பிடியா சங்கதி? கொஞ்சம் வெவரமா சொல்லுங்காணும்.” என்று உச்சுக்கொட்டி ஆர்வமுடன் கேட்பார்கள்.
ஆனால் இவர்களைப் பற்றி யாராவது புறம் பேசியது காதுக்கு எட்டிவிட்டால் போச்சு. கோபம் பற்றிக்கொண்டு வந்துவிடும்.
`என்னங்காணும் இது! இவுனுங்க இப்பிடி அக்குரமா பேசிட்டுத் திரியிராணுங்க. நாக்குப் புழுத்துத்தா போகும்கிட்டியா! என்னமோ நேர்ல பாத்த மாரி சொல்லியிரிகிராணுங்களே!’ என்று பார்ப்பவர்களிடமெல்லாம் அது மகா குற்றம் போல சொல்லி சொல்லிப் புலம்புவார்கள். ஆனால் இவர்கள் மட்டும் மற்றவர்களைப் பற்றி நாளும் புறம் பேசலாம்! தனக்கு வந்தால்தான் தலைவலி. இது மனித சுபாவம்.
இப்பவும் அதுதான் நடந்தது. முத்து ராவுத்தர் விட்ட இடத்திலிருந்து அரசியல் பேச்சு தொடரும் என்று பார்த்தால், சம்சுதீன்காக்கா காதில் எதையோ மெல்ல கிசுகிசுத்தார் சுக்கூர் ராவுத்தர்.
“என்னங்காணும் அவரு காக்கா காதைக் கடிக்கிறாரு.! அப்பிடி என்னவாக்குமே ரகசிய சங்கதி நாம நாட்டு நடப்ப பத்தித்தானே பேசிட்டிறிந்தோம். அதிலென்னங்காணும் ரகசியம் இரிக்குது?” என்று முத்து ராவுத்தரிடம் கேட்டார் மம்மது கனி காக்கா.
எல்லோரையும் பார்த்தபடி சுக்கூர் ராவுத்தர் சின்னதாய் மர்மச் சிரிப்பை வெளிப்படுத்த ‘நம்மளப்பத்தித்தா இரிக்குமோ..’ என ஒவ்வொருவருக்குள்ளும் கொஞ்சம் ஜெர்க் ஆனது.
“அது ஒண்ணுமில்லைங்காணும்..” என்று சொல்லி நிறுத்திய சுக்கூர் ராவுத்தர் திரும்பி சுற்றுமுற்றும் நாலாபுறமும் பார்த்து விட்டு, மெல்லிய குரலில், ‘‘ஒருவாரமாவே தலைவரக் காணமே.! அதான் காக்காட்ட கேட்டேன்..” என்றார்.
“அதுக்கு ஏங்காணும் அவுரோட காதக்கடிக்கணும்…? மோடி ஆட்சியின் லச்சனத்தப்பத்தித்தானே பேசிட்டிறிந்தோம் அத விட்டுட்டு ஜமாத் தலைவரப் பத்தி கிசுகிசுக்கிறீங்களே! என்ன விசயம்னு சும்மா சொல்லுங்க…”’ என்று அவரைப் பார்த்து சிரித்தார் மம்மது கனி. .
“வேற சங்கதியும் இரிக்கும் போல! குசுகுசுனு காதக்கடிக்கிம் போதே தெரியவேண்டாமாக்கும் என்னங்காணும் நீங்க.!” என்று கொஞ்சம் பலமாகச் சிரித்தார் முத்து ராவுத்தர்.
‘தலைவர் ரபீக்பாய் பற்றி என்னமோ ஒரு பெரிய ரகசியம் இரிக்கும் போல’ என்று கண்கள் விரிய மற்றவர்கள் ஆவலானார்கள். தொழுகை முடிந்தவுடனே பள்ளியின் உட்புற விளக்குகளை அணைத்துவிடும் மோதினார் இப்போது வெளிப்புறம் எரிந்து கொண்டிருந்த மூன்று விளக்குகளில் இரண்டை அனைத்துவிட்டு இவர்களை நோக்கி வந்து ‘என்ன கெளம்புலையாக்கும்?’ என்ற பார்வையுடன் லேசாக புன்னகைத்தார்.
மெயின் கேட்டையும் பூட்டிவிட்டால் மோதினாருக்கு வேலை முடிந்தது. சட்டுனு வீட்டுக்குப் போய்விடலாம். தலைவர் ஊரில் இல்லாவிட்டால் இஷா தொழுகை முடிந்தவுடன் மெயின் கேட்டைப் பூட்டிவிட்டு கிளம்பிவிடுவார் மனுஷன்.
‘கொஞ்ச நேரம் உட்கார்ந்து நிம்மதியா பேச உட மாட்டாரே மனுஷன்!’ என்று நினைத்தபடி, மோதினார் சவுக்கத் அலியை உஷ்ணமாகப் பார்த்தார் முத்து ராவுத்தர்.
“மணி ஒம்பதே ஆகலங்க அதுக்குள்ள கேட்டப் பூட்டனுமாக்கும்..?” கொஞ்சம் கோபத்துடன் கேட்டார் சுக்கூர் ராவுத்தர். இ..ஈ என்று பல்லை இளித்தவாறு நகர்ந்து போனார் மோதினார் சவுக்கத் அலி.
“என்னங்காணும் இந்தாளோட பெரிய அதாபா இரிக்குது..! தலைவரு ஊரில் இல்லேன்னாப் போதும். இஷா முடிஞ்சதும் பள்ளியப் பூட்டிறதும் இல்லாம, மெயின் கேட்டயும் பூட்டிட்டு கெளம்பிர்றாரு மனுஷன்..! வேல முடிஞ்சு லேட்டா வர்றவங்க யாரும் தொழ முடியாம இரிக்கே?”
தலைவரைப் பற்றி பேச வந்த ரகசியம் திடுமென திசை மாறியது.
“மொஹல்லாக்குள்ள எல்லாம் திட்டுறாங்காணும். தலைவர் காதுக்கு இத கொண்டு போணும். வயசான மனுசன்னு நாம பேசாமயே இரிக்கிறமா இந்தாளுக்கு பயமே இல்லாமப் போச்சு. பாத்திங்கள்ள நம்மளயே எந்திரிச்சுப் போவச் சொல்லுறாரு..!”
“நாம ஏன் எந்திரிச்சுப் போவணும்..?’
“அதானே நீங்க சொல்லுங்காணும்”
“எவ்வளவு சொன்னாலும் கேக்காம தொழுக முடியிருதுக்குள்ள பேனயெல்லாம் ஆப் பண்ணிருறாரு மனுசன்! கொசு கடியோட பின் சுன்னத் தொழ வேண்டியிரிக்கிது!”
“கரண்டு சார்ஜ பின்ன எப்பிடிங்காணும் மிச்சம் பண்றது?’
“அதுக்குனு தொழுக முடியிருதுக்குள்ள பேனயெல்லாம் ஆப் பண்ணனுமாக்கும்?”
“அத விடுங்காணும். என்னமோ சொல்ல வந்து, வேற என்னமோ பேசிட்டிரிக்கோமே..!” மம்மது கனி ஞாபகப்படுத்தினார்.
“நாம என்ன பேசிட்டிறிந்தோம்னே மறந்து போச்சு..! இந்தாளோட”
“தலைவரப் பத்தி சுக்கூர் என்னமோ சொல்ல வந்தாரு….” மறுபடியும் பாயிண்டை எடுத்துக் கொடுத்தார் மம்மது கனி.
“அடிக்கடி வெளியூர் போயிருறாரே. அதத்தா கக்காகிட்ட சொன்னேன்.” சுக்கூர் ராவுத்தர் பூடகமாக சொன்னார்.
“அதுக்கு ஏங்காணும் அவரோட காதக் கடிக்கணும்?”
“காதக்கடிக்கிறாருனா என்னமோ ரகசியம் இரிக்கிம்போல?” மம்மது கனி சொல்ல, சுக்கூர் ராவுத்தரை தவிர மற்ற எல்லோரும் “கெக்கக்கே…” என்று கொஞ்சம் பலமாகவே சிரித்தார்கள். சுக்கூர் ராவுத்தர் முகத்தில் மட்டும் ஈயாடவில்லை !
‘நாம இங்க இவுங்ககிட்ட கமுக்கமா சொல்றது தலைவர் காதுக்குத் தெரிஞ்சா வேற வினையே வேண்டாம்….! அப்பறம் நாளையும் பின்னயும் தலைவர் நம்மள ஒதுக்கியே வச்சிருவாரு… வீனா கெட்ட பேருதா கெடைக்கும்.! எதுக்கு வம்பு…. வேண்டாம் எதையும் சொல்லாம மறச்சுருவோம் என முடிவு செய்து கொண்ட சுக்கூர் ராவுத்தர், “ஒரு வாரமா தலைவர காணோம்னுதானே அவுரு கிட்ட மெல்ல கேட்டேன். அதுக்குப்போயி என்னமோ ரகசியம் அது இதுனு இப்பிடி கெடந்து மறியிரீங்களே..!” என்று பொசுக்கென்று சொன்னார்.
தலைவரைப் பற்றிய அவருக்குத் தெரிந்திருக்கும் ஏதோ ஒரு ரகசியத்தைப் பற்றி சுக்கூர் ராவுத்தர் சொல்லுவார் என்று எதிர்பார்த்திருந்த எல்லோருக்குமே அவர் இப்படிச் சொன்னதும் சப்பென்று போனது. காற்றுப்போன பலூன் போல அவர்களது முகங்கள் சுருங்கிப் போனது. ஆனாலும் முத்து ராவுத்தருக்குள் எவரும் அறியாதபடிக்கு ஒரு மர்மச்சிரிப்பு ஓடியது! சுக்கூர் எதையோ மறைக்கிறான் மனுஷன் எமகாதகனாச்சே!
தலைவர் அடிக்கடி வெளியூர் போகிற விஷயம் பற்றி அரசல்புரசலாக வேறு விதமாக மொஹல்லாவுக்குள் காற்றுவாக்கில் பரவிக்கொண்டு .இருந்தாலும் கடைசியில் “அவர் ஏவார விசயமாத்தா அடிக்கடி வெளியூர் போயிறாரு..” என்பதாகவே சொல்லி முடித்து விடுவார்கள். பெரிய இடத்துப் பொல்லாப்பு என்றாலே எல்லோருமே பட்டும்படாமலும் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்வது மனித இயல்புதானே!
உண்மையான காரணம் சிலருக்குத் தெரிந்தே இருந்தது! கேரளாவில் இரண்டாம் தாரமாக ஒரு பொண்ணை நிக்கா பண்ணி இருப்பதாகவும் அங்கேயே வீடு பார்த்துக் கொடுத்திருப்பதாகவும் பேசிக் கொள்வார்கள். ஒரு குழந்தை கூட இருப்பதாகவும் அவ்வப்போது பேச்சு ஓடும்! பிறகு அப்படியே அமுந்துவிடும். இந்த விஷயம் இங்கிருக்கும் தலைவர் சம்சாரத்துக்கும் தெரியுமென்றும்…..
“உஹும் அவுங்களுக்கு இந்த சங்கதியெல்லாம் தெரியவே தெரியாது கிட்டியா..!. தெரிஞ்சிருந்தா வீடு இப்பிடி அமைதியா இரிக்குமாக்கும்?” என்பதாகவும் ஒரு பெரிய மர்மாக செய்தி பலவகையாக சுற்றிக்கொண்டே இருக்கிறது! ஆனால் யாருக்கும் எதுவும் தெரியாதது போலவே காட்டிக்கொள்வார்கள்!
தலைவரும் எதற்கும் பிடிகொடுக்காமல் அவருக்கு இங்கு நடக்கும் பேச்சுக்கள் எல்லாம் தெரியாதது போலவே வெளியூர் போகாத சமயங்களில் எப்போதும் போல பள்ளிக்கு தொழுவதற்கு வருவதும் போவதுமாகவே இருக்கிறார்.
தலைவரிடம் அவரின் இந்த சொந்த அந்தரங்க பிரச்சனை குறித்து அரசால் புரசலாக வரும் செய்திகள் நேரிடையாக கேட்பதற்கு யாருக்கு தோன்றும்? அல்லது தைரியம் வரும்?
மொஹல்லாவில் ரஃபீக்பாயின் செல்வாக்கு எல்லோருக்குமே தெரிந்த சங்கதிதான். மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் உரிமையாளர். அது போக வேறு சில தொழில்களும் உண்டு. மொஹல்லாவில் பெரிய பங்களா வீடு. இரண்டு மூன்று கார்கள் என செல்வசெழிப்பு மிக்கவர். மொஹல்லாவில் இடமும் பணமும் கொடுத்து இந்த புதுப்பள்ளி வருவதற்கு காரணமானவர். அதனால் அவரைப் பற்றி வெளிப்படையாக யாரும் குறை கூறமாட்டார்கள். குறை கூற தயங்கத்தான் செய்வார்கள். இது மனித இயல்பு! ஆனாலும் தலைவரைப் பிடிக்காத நாலுபேர் கூடினால் அவரைப்பற்றிய ரகசிய சங்கதிகளையெல்லாம் கமுக்கமாக பேசிப் பகிர்ந்து சிரித்துக்கொள்வார்கள். மனித மனம் விசித்திரமானது..!
மொஹல்லாவின் வெளியே ரஃபீக்பாய் அவருடைய கொளுந்தியாவுக்கு புது வீடு கட்டிக் கொடுத்தபோதே விஷயம் பரவி “சங்கதி அப்படியாகுமே..” என்று பள்ளி முக்கிலும், இலியாஸ் டீ கடையிலும் கிசுகிசுத்து கமுக்கமாக சிரித்துக் களித்தது மொஹல்லா..!
“காசு இரிக்கிறவன் அள்ளி முடியுறான்.. உங்குளுக்கு ஏவே….எரியுது..?” என்று தலைவர் ரஃபீக்பாயின் கைத்தடிக்கள் நாசூக்காக திருப்பிக் கேட்டார்கள்.
“நம்ம ரஃபீக்பாய்க்கு பணம் மரத்துலயாக்குமே காய்க்குது. அப்ப மம்மானியா கெடக்குற பணத்துக்கு ஒரு செலவு வேணுமில்ல….?”
“அப்ப வீடு மட்டுமென்ன, காரும் வாங்கிக் குடுக்கலாம்வே..!” கொள்ளென சிரிப்பு எழுந்து அடங்கியது.
“அப்ப ஏவே வாடகைக்கு இரிக்கிற அவுருக்கிற தம்பிக்கு ஊடு கட்டிக் குடுக்கலே.?” நியாயமான இந்தக் கேள்விக்கு, “ஹெக்..கெக்ஹே….” என்று நக்கலான சிரிப்புதான் பதிலாக வந்தது..
அதிலொரு இளந்தாரிப் பையன், “கொளுந்தியாவும், தம்பியும் ஒன்னாகுமாக்கும்! என்னவாக்குமே பேசுறீங்க..?” என்று கேட்டு பலமாக சிரித்தான்.
“தம்பி எங்க பாயிண்ட புடிக்கிறாம் பாத்தியா..?” சிரிப்பு அடங்க ரொம்ப நேரமானது. . .
சுக்கூர் ராவுத்தர் ரகசியம் எதையும் சொல்லாமல் பின் வாங்கியதும் பெருசுகளுக்கெல்லாம் சப்பென்றானது. “தேவையில்லா இப்பிடி நேரத்தப் போக்கிறீங்காணும்..” என்று சலித்துக்கொண்டு எழுந்து நடக்க ஆரம்பித்தார் முத்து ராவுத்தர். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் பள்ளியை விட்டு வெளியேற, பள்ளிவாசலின் கேட்டைப் பூட்ட ‘காத்திருந்த மோதினார் அப்பாடா..’ என்று வேகமாக எழுந்து முன் விளக்கை அனைத்து விட்டு வந்து கேட்டை பூட்டினார்.
இருள் போர்த்திக்கிடந்த தெருவில் மெல்ல வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த முத்து ராவுத்தர், சுக்கூர் ராவுத்தரும் மற்றவர்களும் அடுத்த சந்தில் திரும்பியவுடன், தன்னுடன் வந்து கொண்டிருந்த மம்மதுகனியிடம், “அவுனுக்கு எல்லாம் தெரியும்ங்கானும்….வேணும்னுகிட்டே சொல்ல மாட்டேங்கிறான்…!” என்றார் சன்னமான குரலில்.
“யாராச்சும் தலைவருகிட்ட சொல்லிட்டானு அவுனுக்கு பயம்!” பதில் சொல்லிவிட்டு மம்மதுகனி சிரித்துக்கொண்டார்.
“இரிக்கிற நம்ம நாலு பேத்து மேலயே அவுனுக்கு நம்பிக்கையில்ல..!” கொஞ்சம் எரிச்சலுடன் சொன்னார் முத்து ராவுத்தர். பிறகு அவர்கள் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. அவரவர் வீட்டை நோக்கிச் சென்றார்கள்.
*************************
எந்த வித முகாந்திரமும் இன்றி சில முக்கிய அமைப்புகள் தடை செய்யப்பட்ட பிறகு அதன் முக்கியஸ்தர்களும் விசாரணை என்று அலைக்கழிக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். பொத்தாம் பொதுவாக பயங்கரவாத இயக்கங்களுக்கு உதவினார்கள் என காரணம் சொல்லப்பட்டது. இதன் காரணமாக சிலரின் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூகவெளி ஊடகங்களும் தடை செய்யப்பட்டன.
அன்றைய இந்திரா காந்தி ஆட்சியில் நாடறிய கொண்டு வந்த மிசா சட்டத்தை விட எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தேசிய புலனாய்வு நிறுவனங்கள், ஐ.டி., அமலாக்கத்துறை போன்றவைகளை தங்களின் கைப்பாவைகளாக வைத்துக்கொண்டு மிகக் கொடுமையான நடவடிக்கைகளை இன்றைய அரசு செய்துவருகிறது!
சிறுபான்மை முஸ்லிம் அமைப்புகளையும், எதிர்க்கட்சிகளையும் சோதனை என்ற பெயரில் மிரட்டி கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரத்தை தட்டிக் கேட்க துணிவில்லாத துப்பில்லாத ஒரு மோசமான நிலையில் நாடு இருக்கும் நிலை கண்டு இடதுசாரி கட்சிகளும், முற்போக்காளர்களும், முஸ்லிம் அமைப்புகளும்தான் அதிக அளவில் கவலையும் அக்கறையும் கொண்டிருக்கிறார்கள்.
பொதுஜனங்களுக்கு இது பற்றியெல்லாம் எந்த கவலையும் அக்கறையும் இருப்பதாகவே தெரியவில்லை! மாதந்தோறும் சமையல் கேஸ் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. பெட்ரோல் டீசல் விலையும் நாளும் ஏறிக்கொண்டுதானே இருக்கிறது.. இந்த மக்கள் விரோத ஆட்சியின் மீது தங்களுடைய கோபத்தை எந்த வழியிலாவது பொதுஜனம் காட்டியிருக்கிறதா?
அப்படி காட்டியிருந்தால் இதுவரை நடந்த- நடக்கும் இடைத் தேர்தல்களில் எல்லாம் இந்த பாசிச கட்சி தோல்வி அடைந்திருக்க வேண்டும். ஆனால் திரும்பத் திரும்ப அந்தக் கட்சிக்கே வாக்களித்து வெற்றி பெற வைக்கிறதே நாட்டின் பெரும்பான்மை சமூகம்! என்ன காரணம்..? .
இரண்டு நாட்களாகவே நிஜாமுக்கு இதே சிந்தனையும் கவலையும்தான் வாட்டிக்கொண்டிருந்தது. நாட்டின் எதிர்காலம் மிக கடுமையாகவும் ஆபத்தானதாகவுமே இருக்கும் என்கிற பயம் முன்னைவிட இன்றைய சூழல் அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது. நண்பர்களுடனும் இது குறித்து நிறைய உரையாடியிருக்கிறான். தனி மனிதர்கள் இதில் என்ன செய்ய இருக்கிறது..? ஆயாசமாக உணர்ந்தான் நிஜாம். (கதை தொடரும்)
கட்டுரையாளர்: ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்