கிமுக பொதுச் செயலாளர் மழப்பாடி ராமசாமி தனது வழக்கமான இளிச்சவாய் சிரிப்பு ஒன்றை உதிர்த்தார், தனது அல்லக்கைகளிடம் திரும்பினார். “என்னை பொதுச்செயலாளரா தேர்ந்தெடுத்தது செல்லும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்னு நீதிமன்றம் தீர்ப்பளிச்சிருச்சே… இன்னும் ஏன் ஓ.நாச்சிமுத்து அரசியலை விட்டு ஓடாம இருக்கான்?”
“ரெண்டு தடவை முதலமைச்சரா இருத்துட்டான். இன்னொரு வாய்ப்பு கிடைக்குமான்னு நப்பாசை அவனுக்கு?”
“இன்னொரு அதர்மயுத்தம் நடத்த சொல்லுங்க அவனை…” மழப்பாடி.
“நாம கிஜேபியோட வலதுகாலை நக்குரோம்னா அவன் கிஜேபியோட இடதுகாலை நக்குரான்… ரெண்டு பேருமே தொடர்ந்து நக்கட்டுமேன்னு கிஜேபி நினைக்குது”
“நம்மகிட்ட ஒன்றரைகோடி கட்சி தொண்டர்கள் இருப்பதாக பெருமை அடிச்சிருக்குவோமே… அது பொய்!”
“அய்யய்யோ… என்ன ஒரு குண்டை தூக்கி போடுறீங்க!”
“இருந்தா இருபது லட்சம் தொண்டர்கள் இருப்பாங்க. இனி நாம ஆட்சியை பிடிக்கிறோமோ இல்லையோ… எதிர்கட்சிதலைவர் போஸ்ட்டையாவது இறுக பிடிச்சிக்கனும்…”
அல்லக்கைகள் இருண்டனர். ‘என்னது இவனே இவ்வளவு பெஸிமிஸ்ட்டிக்கா பேசுரான்.. பேசாமா கிமுகவில் போய் சேர்ந்திரலாமா?’
“கட்சித் தொண்டர்கள்கிட்ட நம்ம இழந்த மரியாதையை மீட்கனும்!”
“சென்னை டூ கன்னியாகுமரி நடைபயணம் போகலாமா?”
“நானென்ன மீக்கோவா மாங்குமாங்குனு நடக்க? போக 750 வர 750 மொத்தம் 1500 கிமீ நடந்தா என் டங்குவார் அந்து போய்டும்!”
“தமிழ்நாடு முழுக்க சூறாவளி பொதுக்கூட்டங்கள் போடுவோமா?”
“போடுங்க கம்பராமாயணத்தை எழுதினது சேக்கிழார்னு சொன்னது பத்தாது- திருக்குறளை எழுதினது சாலமன் பாப்பையானு சொல்லி தொலைக்கப் போறேன்…”
“டமாஷ் படுடமாஷ் தலைவரே!”
“என்னய்யா… என்னை நக்கல் பண்றீங்களா?”
“சரிசரி விடுங்க… பேசாம கட்சியை கலைச்சிட்டு கிஜேபில சேந்திரலாம் உங்களுக்கு ஒரு கவர்னர் போஸ்ட் கேரன்டி…”
“ஒரு பண்ணையருக்கு ஊருக்கு வெளியே ஒரு தொடுப்பு இருக்கும். தொடுப்பு செமத்தியா குஷிபடுத்துதேன்னு பண்ணையார் பொண்டாட்டி பிள்ளைகளை தலை முழுகிட்டு தொடுப்பு வீட்ல நிரந்தரமா செட்டில் ஆவானா? எலி வளைன்னாலும் தனி வளை நம்ம கட்சி ராஜா..”
“என்னதான் சொல்லவரீங்க.. அதை தெளிவா வெளிப்படையா சொல்லுங்க..”
“தினம் ஒரு கெட்டப்!”
“என்னது மொட்டப்பா?”
“கெட்டப் கெட்டப் நம்ம கிராவிட தலைவர்களை பட்டியல் எடுத்தா அதில பர்ஸ்ட் அஞ்சு இடங்களை கீழ்க்கண்டவங்கதான் பெறுவாங்க. அழகிய பெரியவர், ராஜதுரை, பூரணசந்திரன், தெய்வநாயகி மற்றும் தங்கசெழியன் தவிர நூறு தலைவர்கள் மிஞ்சுவாங்க. தினம் ஒரு கிராவிட தலைவர் கெட்டப்பில் கட்சி தலைமையகம் போய் தொண்டர்களை சந்திக்கப் போகிறேன்!”
“அய்யய்யோ நினைச்சு பாக்கவே சகிக்கல… மீடியாக்காரன்க உங்களை காரித்துப்பி மணல்சட்டில போட்டு வறுத்தெடுத்திருவாங்க… கட்சி தலைமையகத்ல மாறுவேடப் போட்டியா நடத்துறது?”
இன்னொரு அல்லக்கை மழப்பாடிக்கு ஆதரவாக பேசியது. “கிஜேபி ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசியல் ஒன்றரையணா விவகாரம் ஆகி போச்சு. ஊரோடு ஒத்து வாழ். பாம்புக்கறி திங்கிற ஊர்ல நடுக்கறி நமக்கு!’‘
இன்னொரு அல்லக்கை யுரேகா யுரேகா என கூவியது. “இதில் தலைவரின் ராஜதந்திரத்தை கண்டேன். 105 கிராவிட தலைவர்களின் கெட்டப்பை போட்டு கட்சித் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் மீடியாக்களுக்கும் ஒரு வலிமையான மெஸேஜை தரார். ‘எல்லா கிராவிட தலைவர்களும் எனக்குள்ளே. அனைவரின் ஆன்மாக்களும் எனக்குள்ளே கூடு விட்டு கூடு பாயந்து விட்டன. அகிமுகவின் தன்னிகரற்ற தலைவன் நான்தான்’ என கொக்கரிக்கிறார் தலைவர்”
“தலைவரே! இந்த யோசனைய ஆடிட்டர் ருத்ரமூர்த்தி சொன்னாரா?”
மழப்பாடி நாணி “நானே சொந்தமா யோசிச்சது!”
“என்னைலயிருந்து தினம் ஒரு கெட்டப்?”
“நாளைலயிருந்து யாராவது 105தலைவர்களின் பட்டியலை தயார் பண்ணுங்க நான் ஹாலிவுட் மேக்கப்மேன் டொனால்டு ரிச்சர்ட்சன்னை நேத்தே புக் பண்ணிட்டேன்!”
“பெண்தலைவர் கெட்டப்ல உங்களை நினைத்து பார்த்தால் சும்மா மனசு டங்ஸ்டனாகுது”
“போஸ்ட் கம்பத்துக்கு புடவையை சுற்றினாலே போஸ்ட் கம்பத்தை நானூறு தடவை சுத்தி வர்ற ஆள் நீ!’‘
“ரொம்ப பாராட்டாதிங்க தலைவரே.. வெக்கவெக்கமா வருது!”
“நான் கழுவி ஊத்றது தெரியாம பாராட்டுன்னு நினைச்சிக்ற பாரு. அதனாலதான் நீ என் அல்லக்கையா இருக்க!”
“ஒரு நாள் மேக்கப் செலவு எவ்வளவு?”
“அஞ்சு லட்சம். நூத்தியைஞ்சு நாளைக்கி மொத்தமா அஞ்சுகோடி..”
“மேக்கப் கலைஞர் வந்து விட்டாரா?”
“ட்ரைடன்ட்ல தங்க வச்சிருக்கேன்!”
“தினம் எத்னி மணி நேரம் மேக்கப் நடக்கும்?”
“குறைஞ்சது மூணுமணிநேரம்.. நான் 105 கெட்டப்களை போட்டு முடிச்ச பிறகு கமல்ஹாசனின் பத்து தசாவதார கெட்டப்கள் எல்லாம் வெறும் நமத்து போன பிஸ்கோத் ஆகிவிடும்!”
“இந்த கெட்டப் விஷயத்ல உங்களுக்கு யார் தலைவரே அழகிய முன்மாதிரி?”
“டிமோதான். அசராம இந்த ஒன்பது வருஷத்ல அய்நூறு கெட்டப் போட்டிருக்கான் மனுஷன்!”
“உங்களுக்கான ரோல் மாடல் கூட கிஜேபிலயிருந்துதான் கிடைக்குது..”
“விடுய்யா… விடுய்யா லூஸா விடுய்யா..”
“தினம் ஒரு கெட்டப்புக்கு மீசை எல்லாம் எடுப்பீங்கல்ல…”
“தேவைப்பட்டால் வாந்தியே எடுப்பேன் டேக் இட் ஈஸிய்யா..”
“இந்த நூத்தியைஞ்சு கெட்டப்புகளுக்கு பிறகு உங்களுக்கு கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் என்ன கிடைக்கும்?”
“நம் முன்னாள் தலைவர்கள் 5000 கோடி ஊழல் பணத்தை நம்மகிட்ட விட்டுட்டுப் போயிருக்காங்க. அதை நாம என்ஜாய் பண்றதை கட்சிக்குள்ள எவனும் கேக்கக் கூடாது. மழப்பாடி லேசுபட்டவன் இல்லை. எதிர்கட்சிதலைவனுக்குரிய எல்லா தகுதிகளும் அவனிடம் உள்ளன’ என கட்சிக்கு வெளியே உள்ளே உள்ளோர் என்னை பாராட்ட வேண்டும்!”
“இந்த வென்சர் பேக்பயராக 90சதவீத வாய்ப்பிருக்கு!”
“டோண்ட் கேர்!“
“பூரணசந்திரன் கெட்டப் போடப் போறீங்க. எங்க அவர் சினிமால காட்ன மேனரிஸம் ஒண்ணை நீங்க காட்டுங்க!”
மூக்கில் விரலை வைத்து சுண்டி ‘ம்ஹா’ என்றார்.
“தெய்வநாயகி மாதிரி இரண்டொரு வார்த்தை பேசி காட்டுங்க!‘’
“செய்வீர்களா? செய்வீர்களா?”
“இன்னொரு வாக்கியம்?”
“லேடியா கேடியா?”
“நாளைக்கு முதல் கெட்டப் எதை போடப் போகிறீர்கள்?”
“சஸ்பென்ஸ்!’‘
“பெரிய டாஸ்க் பண்ணப்போரோம் பார்ட்டி கீர்ட்டி கிடையாதா?”
“குடிக்கிறதிலேயே இரு.. நம்பர் டென் டௌன்ஸ்ட்ரீட் பார்ல போய் குடிங்க. பில்லை நான் கட்டிர்றேன்!”
“நன்றி தலைவா!”
“குடிச்சு மட்டையாய்டாம அவனவன் பத்ரமா வீட்டுக்கு போங்க. நாளை காலை பத்துமணிக்கு கட்சி தலைமையகத்துக்கு தொண்டர்களோடு வந்து கூடிருங்க… குட் ஈவினிங்…“
எல்லாரும் போன பின் வெறும் சுவற்றை பார்த்து இளிச்சவாய் சிரிப்பு ஒன்றை சிரித்து “நீ ஒரு சரித்திர தலைவன்டா…”
பூரணசந்திரனின் கெட்டப்பை போட்டு முடித்தார் மழப்பாடி. மேக்கப்மேன் கட்டை விரல் உயர்த்தி சிரித்தார்.
கட்சி தலைமையகத்துக்குள் மழப்பாடியின் கார் புகுந்தது. பூரண சந்திரனின் ஸ்டைலில் கும்பிட்டபடி இறங்கினார் மழப்பாடி. பூரணசந்திரன் உபயோகிக்கும் அதே சென்ட் போட்டிருந்தார். மழப்பாடி தலையில் பஞ்சு தொப்பி கண்களில் குளிர் கண்ணாடி. ஒரு கட்சி தொண்டன் ரௌத்ரமானான். கத்தினான். “யோவ் மழப்பாடி! கட்சி நடத்றியா ட்ராமா கொட்டகை நடத்றியா? டாஸ்மாக்கை மூட, மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை தடுக்க, கவர்னரின் அராஜக நடவடிக்கைகளை கண்டிக்க, இருபது வருடங்களாக சிறையில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களை விடுவிக்க இதுவரைக்கும் சிறு துரும்பையாவது நவுத்திருக்கியா? நீயும் சரி ஓ, நாச்சிமுத்துவும் சரி தமிழக அரசியலின் இரு திருஷ்டி பொட்டுகள். இதெல்லாம் ஒரு பொழைப்பு தூத்தேறி!”
மழப்பாடிக்கு வாய் ஒருபக்கம் இழுத்துக் கொண்டது. நாஞ்சில் சம்பத் ஒரு படத்தில் ‘காரி துப்பினா?’ என ஒருவர் கேட்க ‘மூஞ்சிய துடைச்சுக்குவேன்!’ என்பார்.
முகத்தை கர்ச்சிப்பால் ஒற்றயவாறே ஒரு மானங்கெட்ட சிரிப்பை உதிர்த்த வாறே கட்சி தலைமையகத்துக்குள் பிரவேசித்தார் மழப்பாடி.
ஆதரவு கூச்சல் வான் பிளந்தது!
கட்டுரையாளர்: ஆர்னிகா நாசர்