உங்களில் பொறுப்பு கொடுக்கப்பட்ட தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள்” என்பது திருக்குர்ஆனின் தெளிவான வசனம். இஸ்லாம் என்பது அனைத்து மட்டத்திலும் அமைதியை ஏற்படுத்த விளையும் மார்க்கம். அது ஒரு அரசியல் மார்க்கம். சடங்குகள், மூடப்பழக்கங்கள் கொண்ட மதமாக அல்ல.
இஸ்லாமிய கட்டமைப்பு குறித்து சில அடிப்படை விஷயங்களை இங்கு புரிந்து கொள்வோம்:
அதாவது, இஸ்லாமிய மூல ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் நபி வழிமுறைகளை அறிந்து கொண்டு விட்டதாலே ஒருவர் தீர்ப்பு கூறும் அதிகாரம் பெற்றவர் ஆகிவிட முடியாது.
இஸ்லாமிய மத்திய அரசு மற்றும் இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா) அறிவிக்கும் தீர்ப்பே இறுதியானது.
கலீஃபா ஒரு விஷயத்தில் முடிவுக்கு வர, துறைசார் நிபுணர்களை அதுபற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணை இடுவார். நிலைமையை அலசி ஆராயும் நிபுணர்கள், உண்மை எது என மற்றவர்களை விட துள்ளியமாக அறிவர். இருந்தபோதும், தான் அறிந்த உண்மையை அவர் மக்களுக்கு அறிவிப்பு செய்து விடலாமா? என்றால் அதற்கு துளியும் அவருக்கு அதிகாரம் இல்லை.
நிபுணர்களின் பணி என்பது தலைமையின் ஆணையை ஏற்று, ஆராய்ந்து அறிக்கை தயாரித்து சீலிடப்பட்ட கவரில் ஒப்படைத்து விடுவது மட்டும்தான்.
மக்களுக்கு முறைப்படி அறிவிப்பு செய்ய அதிகாரம் உள்ளவர் தலைமைப் பொறுப்பு வகிப்பவரே!
சமூக, அரசியல், சட்ட முகாந்திரங்களை கருத்தில் கொண்டு பொறுப்பாளர் தீர்ப்பு அளிப்பார். அது குழப்பமற்ற சூழலை ஏற்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதாக இருக்கும். அது நிபுணர்கள் அளித்த அறிக்கைக்கு ஒத்திருக்கலாம், சற்று விலகியும் இருக்கலாம். எதுவாயினும் தலைமையிடம் இருந்து ஒரு அறிக்கை தீர்ப்பாக வந்து விட்ட பிறகு அது சரியா அல்லது தவறா என்ற ஆய்வு தேவையில்லை. அதற்கு கட்டுப்பட்டு செயல்படுத்துவதே (குடிமக்கள்) இறைநம்பிக்கையாளர்கள் பணி!
பிறை விஷயத்திலும் தலைமைக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். எனக்கு எது சரி என்று படுகிறதோ அதைத் தான் செய்வேன். அதற்கென நியமிக்கப்பட்ட பொறுப்பாளருக்கு கட்டுப்பட முடியாது என்ற கூறுவோர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தலைமை வகிப்பவர் தவறு செய்தால் அது அவருக்கும் அல்லாஹ்வுக்குமானது. அவரது தீர்ப்பு விஷயத்தில் எல்லோரும் குற்றவாளிகள் அல்லர். இதுபற்றி குடிமக்களுக்கு இஸ்லாம் நிறையவே அறிவுரைகள் வழங்கி இருக்கிறது.
அரசு, நிர்வாகம், செயலாக்கம் எனும் ரீதியில் இம்மாதிரி விஷயங்களை அணுகிப்பார்க்கும் போது இன்னும் தெளிவாகும்.
இஸ்லாமிய மத்திய தலைமை வீழ்த்தப்பட்டு 99 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனவே மத்திய தலைமையையும் அதன் தலைவரையும் விட்டுவிடுவோம்.
தற்போது வெறுமெனே முஸ்லிம்களை தலைவர்களாகக் கொண்ட நாடுகளில் கூட (சவூதி அரேபியா முதல் இந்தோனேசியா, மலேசியா வரை) அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிவிப்புதான் செயல்பாட்டுக்கு வருகிறதே தவிர, இங்கு இருப்பதுபோல மற்ற நாடுகளில் யாரும் கம்பு சுற்ற முடியாது.
இதுபோன்ற விஷயத்தில் தனி நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மூலம் குழப்பம் ஏற்பட அரசு அனுமதிக்காது.
பிறை விஷயத்தில் முஸ்லிம்கள் கருத்து வேற்றுமை கொண்டு தனித்தனி தீவுகளாக பிரிந்து கொண்டே இருப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. அவர்களே ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு வரவேண்டும்.