வாழ்க்கையை சுயவிசாரணை செய்ய வேண்டும். புனித ரமலான் குர்ஆன் அருளப்பட்ட மாதம். குர்ஆன் வெறும் வாசிப்பு இலக்கியமல்ல. வெறும் அறிவியல் நூலுமல்ல. வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான கருத்துகளைக் கொண்டது.
சடங்குகளும் வணக்க வழிபாடுகளும் மட்டுமல்ல மதம், இதற்கெதிரான வரலாற்றுணர்வு ரமலான். கருணையின் மாதம் ரமலான். பிறரின் பசி தனது பசியாக உணர்வது தான் ஆன்மிகம். பசியும் தாகமும் ரமலானின் வெளிப்படையான முத்திரை.
இஃப்தாருகள் (நோன்பு துறப்பு) சடங்குகள் அல்ல. முஸ்லிம் பண்பாட்டு வாழ்க்கையின் பாகம். இஃப்தாருகள் பரஸ்பர உறவுகளின், சாதி மத தேச பாகுபாடுகளுக்கு அப்பால் நலிந்த மக்களை எட்ட வேண்டும். மக்களின் வலிகளையும் தேவைகளையும் நமது கரங்களும் உள்ளங்களும் கண்டடைய வேண்டும். இஃப்தார்கள் ஆடம்பர விளம்பரங்களின் விழாக்கள் ஆகக் கூடாது.
இரவுகள் பக்தியின், பகல்கள் தியாகத்தின் பொழுதுகளாக மாறும் மாதம் ரமலான். ஈருலக வெற்றிக்கான திறவுகோலாக நோன்பு முன்வைக்கப்படுகிறது. இறைவனின் நேர்மார்க்கம் கிடைப்பதற்கான அடிப்படை நிபந்தனையாக தக்வா-இறையச்சத்தை முன்வைக்கிறது. அது ஆன்மிக அனுபவம் மட்டுமல்ல.
வாசிப்பதற்கான குர்ஆனின் முதல் அழைப்புகள் ரமலானில் நபிகளிடம் வந்தபோது, அதில் அதிகார சக்திகளின் ஆதிக்கங்களை அசைப்பதற்கான வலிமை இருந்தது. ”வ ரப்பக்க ஃப கப்பிர்” உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக எனும் வசனத்துடன் அனைத்து போலி அதிகார நிறுவனங்களையும் சவால்விட்டது. நம்பிக்கை, பொறுமை, தவக்குல், தக்வா என்பவற்றை குர்ஆன் அறிவினூடாக வெற்றிக்கான யோக்யதையாக முன்வைக்கிறது.
இதில் தக்வா என்பது ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டது. தக்வாவிற்கு வந்தடைய அடிப்படையாக ”யுஃமினூன பில் கைப்” மறைவானவற்றை நம்பிக்கை கொள்ளச் சொல்கிறது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக மனம் உடல் சொத்து அனைத்தையும் சமர்ப்பணம் செய்யத்தயாராக வேண்டும் என்கிறது. ”யுகீமூனஸ் ஸலாத்த வ மிம்மா ரசக்னாகும் யுன்ஃபிகூன்” (அவர்கள் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அளித்தவற்றில் இருந்து செலவும் செய்வார்கள்) ரமலானின் ஒவ்வொரு நிமிடமும் இதை உணர்த்துகிறது.
உணவு நீர் தூக்கம் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் விலக்குகிறோம். இறை திருப்திக்காக பசியும் தாகமும் தியாகமும் செய்கிறோம். பகலில் உடல் உணர்வுகளை தள்ளிவைக்கிறோம். இறைக்கட்டளைக்காக நேரம் பொருள் என்ன வாழ்க்கையே தியாகம் செய்யத் தயார் என்ற அறிவிப்பு சூரியன் அஸ்தமிப்பது வரை.
அதுவரை விலக்கி வைத்த, தொடாதிருந்தவை அனுமதிக்கப்படுவது, அனுபவிப்பதும் விலக்குவதும் இறை கட்டளையால். அது இயல்பானவை அல்ல என்றாலும் நோன்பும் தொழுகையும் வணக்க வழிபாடாவது இயல்பானது ஆனால் உண்ணுவதும் பருகுவதும் தூங்குவதும் வணக்கமாவது எல்லாம் அவனுக்காக என்பதன் சாட்சியம்.
ரமலானின் சமூகவியல் சமுதாயத்தில் மொத்தமாக தக்வாவின் அனுபவங்களை உருவாக்குகிறது. சூழலை மாற்றுகிறது. இதற்கப்பால் ரமலானின் அனைத்தும் குர்ஆனுடன் தொடர்பாக்கப்படுகிறது.
இப்றாஹிம் நபிக்கு ஏடுகள் அளிக்கப்பட்டது ரமலான் பிறை மூன்றில். மூசா நபிக்கு ரமலான் பிறை ஆறில் தௌராத் கிடைத்தது. ஈசா நபிக்கு இன்ஜீல் கிடைத்தது ரமலான் பிறை பதிமூன்றில். தாவூத் நபிக்கு ஸபூர் கிடைத்தது ரமலான் பிறை 18ல். முஹம்மது நபியவர்களுக்கு குர்ஆன் கிடைத்தது ரமலான் பிறை 24இல் என்கிறார்கள் நபிமொழிக் கலை வல்லுநர்களான அஹ்மத் பைஹகீ தப்ரானி ஆகியோர்.
மகத்தான அருளான திருக்குர்ஆனுக்கு அருகதையுள்ள நன்றி பாராட்டுதல்தான் ஒரு மாத நோன்பு. ஆன்மாவற்ற ஆசாரமாக வெறும் உண்ணா நோன்பாக ரமலானை இஸ்லாம் பார்ப்பதில்லை. நோன்பு இலக்கை அடைவதற்கான மார்க்கமும் ஊடகமும் என அறிஞர் சையது குதுப் கூறுகிறார். மேலும் நோன்பெனும் ஏணியினூடாக ஆன்மிக வானத்தின் ஒளிவிளக்காக நம்பிக்கையாளன் உயர்வான் என்கிறார்.
உணர்வுகளின் கட்டுப்பாடு நோன்பு, வழமைகளிலிருந்து விலகி மனதை வயப்படுத்தும் தவம் நோன்பு. எல்லையற்ற உலகுக்கான புனிதப்பயணம். தன் திருப்திக்காக படைப்புகளுக்கு இறைவன் ஏற்படுத்திய போட்டி ரமலான் என்று ஹசன் இப்னு அலி (ரலி) கூறினார்.
குர்ஆனை அறிந்தவன் அல்லாஹ்வை அறிந்தவன் குர்ஆனை மதித்தவன் அல்லாஹ்வை அடைந்தான் என உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) கூறியது குறிப்பிடத்தக்கது.
நோன்பு உடலை வருத்துவதல்ல. சத்திய- அசத்தியத்துக்கு இடையேயான வெற்றியை நிச்சயித்த பத்ருப்போர் இந்த மாதத்தில்தான் நிகழ்ந்தது. இறைத்தூதரின் வெற்றி விளம்பரமான மக்கா வெற்றி நடந்தது இந்த மாதத்தில்தான். தார்த்தாரிகளுக்கு எதிரான வெற்றி முகம் இந்த மாதத்தில்தான்.
பொறுமையின் மாதம் ரமலான். பொறுமைக்கு சுவனமல்லாது வேறு பிரதிபலன் இல்லை.
நாவின் நோன்பு முக்கியமானது. கன்னியாஸ்திரீ மடத்த்தை துறந்த பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர் காரன் ஆம்ஸ்ட்ராங் தனது The Spiral Staircase எனும் சுயசரிதையில் மடம் எங்ஙனம் சன்னியாசினிகளின் மௌனத்தை பயிற்றுவிக்கிறது என விளக்குகிறார். ஆனால் இஸ்லாம் பேசாமலிருத்தலே வெற்றிக்கு வழி என்கிறது. நல்லவை பேசுதல் அல்லது பேசாதிருத்தல். அவ்வகையில் நாவின் கடிவாளம் நோன்பு.
மோசமான சொல்லும் செயலும் தவிர்க்காதவன் உணவும் நீரும் தவிர்ப்பது அல்லாஹ்வுக்கு விருப்பமில்லை என இறைத்தூதர் கற்றுத்தந்தார். இங்கு முதலில் சொல்லையும் பிறகு செயலையும் கூறுகிறார். பேச்சு நோன்பின் முதன்மை செயல்தளம்.
பேச்சு நம் மனதின் பிரதிபலிப்பு. உள்ளே இல்லாததையும் ஒருவருக்கு பேசமுடியும். அது நயவஞ்சகத்தின் பிரதிபலிப்பு. நேர்மையான சொல்லையே நீங்கள் சொல்லுங்கள் (33:70) என்கிறது திருக்குர்ஆன். இதயம் நாவை மட்டுமல்ல, நாவு இதயத்தையும் பாதிக்கிறது என்பதால் நல் பேச்சை இபாதத்தின் ஒரு பகுதியாக அல்லாஹ் நிச்சயித்தான்.
நவீன உளவியலும் இதை ஒப்புக் கொள்கிறது ஒவ்வொரு பேச்சும் மூளைக்கும் இதயத்துக்கும் செய்திகள் அளிக்கிறது.
மனிதன் பேசிப்பேசி உருவாக்கப்பட்ட சமூகம். சொற்கள் எனும் கற்களால் கட்டப்பட்ட சமூகம். கெட்ட சொற்களால் கெட்ட சமூகமும் நல்ல சொற்களால் நல்ல சமூகமும் உருவாகிறது. நல்ல சொல் ஒரு மரம் என இறைவன் கூறுகிறான். தீய சொற்கள் தீமைகளின் உருவாக்கத்திற்கு உதவியாகும் நல்ல சொற்கள் நேர்மறைத் தாக்கங்களை (Positive Energy) உருவாக்குகிறது.
சாக்ரடீசிடம் ஒருவர் இன்னொருவரைக் குறித்து பேச வந்தார். அப்போது சாக்ரடீஸ் இதனால் எனக்கு நன்மை உண்டா? என்றார். உடனே இல்லை என்றபோது உனக்கு நன்மை உண்டா? இல்லை என்றார் வந்தவர். யாரைக்குறித்து சொல்ல வருகிறாயோ அவருக்காவது லாபம் உண்டா என்றார். இல்லை என்றபோது பிறகு அதுபற்றி பேசவேண்டாம் என்றாராம்.
பழைய ஷரீஅத்களில் மௌனம் விரதமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. முஹம்மது நபி (ஸல்) அதை விலக்கினார். ஒரு பெண்மணி மௌன விரதமிருக்கிறார் என்பதை அறிந்த அபூபக்ரு (ரலி), நீ பேசு என்று சொன்னார்.
இஸ்லாமிய அறவியலில் மௌனத்தின் தருணங்கள் உண்டு. நோன்பில் அதற்கும் இடமுண்டு. ஆனால் அது துறவுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. விரதத்தில் மௌனமுண்டு. ஆனால் மௌனமே விரதமாகாது. மனிதன் பேசி உருவாக்குவது மனித வாழ்க்கை. அதை நிசப்தமாக்க இஸ்லாம் விரும்பவில்லை. புண்ணியங்களின் விழாக்காலமான வசந்தத்தை வரவேற்போம்.
கட்டுரையாளர்: முனைவர் மு. அப்துல் ரசாக்