சர்வதேச பிறை விஷயத்தில் பல நூற்றாண்டுகளாகவே அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.ஃபிக்ஹு கலாசாலை நிபுணர்களான மத்ஹப்களின் இமாம்களும் பிறை விஷயத்தில் தங்களது கருத்து வேறுபாடுகளை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்கள் ஒன்றாக இருந்தபோதும், ஒவ்வொருவரின் இஜ்திஹாதிய பார்வையும் வேறுபடுகிறது.
‘‘எனவே இனி உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.” (அல்குர்ஆன் : 2:185)
இப்னு உமர் (ரலி) அறிவிப்பில் வருகின்ற “பிறையைக் கண்டால் நோன்பு வையுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விட்டுவிடுங்கள் மேகமூட்டமாக இருந்தால் (முப்பதாக) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” – ஸஹீஹ் அல் புகாரீ – 1906, 1907. ஸஹீஹ் முஸ்லிம் – 1080. சுனன் அபூதாவூத் – 2320. சுனன் அந் நஸாஈ – 2120, 2121, 2122. சுனன் இப்னு மாஜா – 1654.
மேல் காணும் ஆதாரங்களை முன்வைத்து இரண்டு கருத்துக்கள் உள்ளன. ஒன்று: ‘‘ஒரு ஊரில், அல்லது நாட்டில் பார்க்கப்பட்ட பிறையை வைத்து அனைவரும் நோன்பை நோற்பதும் விடுவதும் ஆகும்” என்றும் இமாம்களும் உள்ளனர். மற்றொன்று: ‘‘அருகில் இருக்கும் ஊர்களை தவிர்த்து ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனியாக பிறை பார்க்கப்பட வேண்டும்” என்று கூறும் அறிஞர்களும் உள்ளனர்.
“ஒரு இடத்தில் பிறை பார்த்து பல இடங்களில் அமல் செய்வதென்பது முடியாத ஒன்று, எங்கு பிறை தென்படுவதற்கு வாய்ப்பு இருக்குமோ அந்த நாடுகள் ஓரிடத்தில் பார்த்தால் மற்ற இடங்களில் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் எங்கு பிறை உதிப்பு மாறுபடுமா அங்கு ஒன்றாக அமல் செய்ய முடியாது உதாரணமாக குராசான் (ஈரான்) நாட்டிற்கும் அந்தலுஸுக்கும் (ஸ்பெயின்) உள்ள வேறுபாட்டை போல” என்கிறார் இமாம் இப்னு தைமியா. (மஜ்மூஃ அல்ஃபதாவா)
‘‘முஸ்லிம்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்து இஸ்லாமிய நாடுகள் ஒன்று திரண்டால் சிறந்தது. ஆனால் அதுவரை எனது கருத்து, ஒவ்வொரு நாட்டு மக்களும் தன்னுடைய நாட்டோடு நோன்பை மேற்கொள்வதும், நோன்பை விடுவதும் உகந்தது. காரணம், சிலர் வேறு நாட்டு பிறையை பின்பற்றி தனது நாட்டை புறக்கணிப்பது முஸ்லிம்களின் ஒற்றுமையை குலைத்து விடும் என்று தமாமுல் மின்னா புத்தகத்தில் குறிப்பிடுகிறார் ஷேக் நாஸிருத்தீன் அல்பானி.
சவூதி அரேபியாவின் மூத்த உலமா சபை தனது மார்க்க தீர்ப்பில், ‘‘இந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக மிக மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை, கடந்த 1400 வருடங்களாக ஒரு பிறையை பார்த்து முழு உலகமும் நோன்பு நோற்றதாக நாம் காண முடியவில்லை, எனவே கடந்த காலங்களில் நமது உம்மத் எந்த நிலையில் இருந்ததோ அவ்வாறே விட்டு விடுவது சிறந்தது, இதில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த தேவையில்லை, ஒவ்வொரு நாடும் தனது அறிஞர்களின் ஊடாக, தனது தலைமையின் ஊடாக தனித்தனியாக பிறை பார்த்துக் கொள்ளட்டும், அவர் அவருக்கு அவருடைய ஆதாரங்கள் தெளிவாக இருக்கிறது” – ஃபத்வா எண் 3686: 103/10.: http://iswy.co/e5etd
சூரிய மற்றும் நட்சத்திர கணக்கை கையாண்டும், கிரிகோரியன் காலண்டரை கணக்கில் எடுத்தும் உலக முஸ்லிம்களை ஒருங்கிணைக்கும் அணுகுமுறைகள் விசுவாசிகளுக்கு அழகல்ல.
சமூக ஒற்றுமை அத்தியாவசியமான ஒன்று. ஒவ்வொரு வருடமும் இந்த பிறை சர்ச்சையால் சமூகம், பல குழுக்களாக பல்வேறு நாட்களில் நோன்பு நோற்பதும், ஈது தொழுகையையும் மேறகொள்கிறார்கள்.
தொழுகை நேரம் ஒவ்வொரு பகுதிகளிலும், நாடுகளிலும் மாறுபடுவதை ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்கள் பிறையின் மாறுபட்ட உதிப்பையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஸஹீஹ் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பில் உள்ள குரைப் பின் அபூமுஸ்லிம்(ரலி) சம்பவத்தில்: மதீனாவிலிருந்து ஷாம் தேசத்திற்கு ஒரு பணி நிமித்தமாக முஆவியா (ரலி) அவர்களை சந்திக்க செல்கிறார். அங்கு ஜும்ஆ இரவில் ரமலான் பிறை பார்க்கப்பட்டு நோன்பு நோற்று விட்டு, அந்த ரமலானின் இறுதியில் மதீனா வருகின்றார். அங்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை சந்தித்து, ஷாம் தேசத்தில் நோன்பு நோற்ற தினமாக ஜும்ஆ இரவை அவர்கள் குறிப்பிட, அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நீங்கள் பிறையை ஜும்ஆ இரவு கண்டீர்களா? எனக் கேட்க, ஆம் அங்கு மக்கள் அனைவரும் பிறை கண்டனர், முஆவியா(ரலி) உட்பட எல்லோரும் நோன்பு பிடித்தனர் என்று கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), நாங்கள் சனி இரவுதான் பிறை கண்டோம். ஆகவே முப்பதை பூர்த்தி செய்வோம் அல்லது பிறையைப் பார்த்து விடுவோம் என்றார்கள். அதற்கு குரைப் (ரலி), ஏன் முஆவியா (ரலி) பிறை கண்டு நோன்பு பிடித்தது போதாதா? என்று கேட்க, இப்னு அப்பாஸ்(ரலி) இல்லை, இவ்வாறு நமக்கு (கண்ணால் காண) இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். – ஸஹீஹ் முஸ்லிம்: 1087, 1088. சுனன் அபூதாவூத்: 2327, 2332. சுனன் திர்மிதீ: 688.
இந்த ஹதீஸிலிருந்து தெளிவாகும் சில வழிகாட்டல்:
இந்த ஹதீஸை அறிவித்த இமாம் திர்மிதி, ‘‘ஒவ்வொரு நாட்டிலும் பிறை பார்க்கப்பட வேண்டும்.எந்த ஊரில் அதிகப்படியான மக்கள் பிறை விஷயத்தில் ஒரு முடிவை எடுக்கிறார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
எனவே தூரமாக இருந்த ஷாம் தேச பிறையை (சர்வதேசமயமாக்கல் பிறையை) ஹிஜாஸ் பகுதியில் உள்ள இறைதூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இந்த சர்வதேச பிறைவாதிகள் சிந்திப்பதில்லை.
முஸ்லிம் கிரந்தத்தில் அபுல் பக்தரி என்ற சயீது பின் அல் புரோஸ் மூலம் அறிவிக்கபடுள்ள ஒரு சம்பவம் உள்ளது:
“நாங்கள் உம்ரா செய்வதற்காக சென்றோம் ‘நக்லா’ என்ற இடத்தை அடைந்தோம். அங்கு பிறை காண சிரமப்பட்டபொழுது சிலர் மூன்றாம் நாள் பிறை என்றனர். சிலர், இரண்டாம் நாள் பிறை என்றனர். அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) யிடம் கேட்டோம் அதற்கு, எந்த இரவில் பிறை கண்டீர்கள் என்று திருப்பிக் கேட்டார்கள் இப்னு அப்பாஸ் (ரலி). இந்த இந்த இரவென்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள், இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்: “உங்கள் பார்வைக்காக அல்லாஹ் அதை நீட்டி கொடுத்தான், எந்த இரவில் நீங்கள் கண்டீர்களோ அது தான் பிறை” என்று கூறினார். – ஸஹீஹ் முஸ்லிம்: பாகம் 3, பக்கம் 127, 8 (29).
இன்றுபோல் ஒரே வீட்டில் இரண்டு பெருநாட்களை அவர்கள் கொண்டாடவில்லை. ஒற்றுமையையும் குலைக்கவில்லை.
ஷரீஆவின் அடிப்படையிலும் சமூக நலனை முன்வைத்தும் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பேணி, கருத்து வேறுபாடுகளைக் களைந்து எவ்வாறு நாம் கடந்த காலங்களில் பெருநாளை ஒன்றாக அனுசரித்தோமோ அவ்வாறே நமது நிலையை ஒன்றாக்குவோம்.
கட்டுரையாளர்: SM இஸ்மாயீல் நத்வி