வானுலகில் திருவள்ளுவர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அவருடன் மேடையில் ஆபிரகாம் லிங்கன், தமிழறிஞர் மறைமலையடிகள், ஃப்ரெஞ்சு அறிஞர் வால்டேர், கலீல் ஜிப்ரான், லியோ டால்ஸ்டாய், காந்தியடிகள் ஆகியோரும் அமர்ந்துள்ளனர். அடாவடிச் செயல்கள் மூலம் சட்டமாக்கப்பட்ட EWS இடஒதுக்கீடு என்பது, பிராமணர்கள் மீண்டும் இத்துணைக்கண்டத்தில் தங்களுடைய இனவெறிக்கொள்கையைக் கட்டவிழ்த்துவிட்டு, பிராமண வல்லாதிக்கத்தை முழுமையாய்ச் செயலாக்கி இந்தியாவை மறுபடியும் ஒரு அநாகரிகச் சமுதாயமாக மாற்றுவதற்கு, அவர்கள் கையில் ஒரு தலையாய ஆயுதமாகப் பயன்படும் என்பதைக் கடந்த அமர்வில் ஆய்ந்தறிந்த அவையினர் பிராமணரல்லாத மக்கள் உடனடியாக முன்வந்து இந்திய நாட்டை இந்தச் சீரழிவிழிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய வரலாற்றுத் தேவையைப் பதிவு செய்தனர். இன்றைய அமர்வில் திருவள்ளுவர் சைகை காட்ட, அங்கிருந்த மாபெரும் வண்ணக்காட்சிப்பெட்டி ஒன்றில் நரகத்தில் உள்ள காட்சிகள் விரிகின்றன. அங்கே, சாணக்கியனும் அவரது சீடர் எனத் தன்னை ஆணவத்துடன், 15.02.1976 துக்ளக் இதழில், பிரகடனப்படுத்திக்கொண்ட சோ இராமசாமியும் மிகவும் வருத்தத்துடன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்).

சாணக்கியன்: என்னை மன்னித்துவிடு, சோ! நான் மிகுந்த ஆணவத்தாலும் செருக்காலும் உந்தப்பட்டு கற்பனைக்கெட்டாத அளவில் பல சதிச்செயல்கள் செய்து, எண்ணற்ற கொலைகளும், கொள்ளைகளும் நிகழ்த்தி நல்லரசான நந்தனின் அரசை வீழ்த்தினேன். அது மட்டுமின்றி சாதாரணக் குடிமகன் எப்படியெல்லாம் பயங்கரவாதச் செயல்களில் தீவிரமாக ஈடுபடலாம் என்றும், சதுர்வர்ண அமைப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு அரசன் எப்படியெல்லாம் அரச பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடலாம் என்றும் ஒரு புத்தகமே எழுதிவைத்து விட்டேன். அதனைப் படித்து நீங்களும் கெட்டுப்போய் என்னைப்போலவே அடாத பல சதிச்செயல்கள் செய்து. மக்கள் சமுதாயம் வாடித்துன்பமிக உழலும் வகையில் செயல்பட்டுக் கடைசியில் என்னைப்போல் இங்கு வந்து உழல்கிறீர்கள்.

சோ: என்ன செய்வது? இந்தியாவில் பிறந்து விட்டதால் நமது முன்னோர்கள் ஏற்படுத்திவைத்த சதுர்வர்ண அமைப்பின் வசதியை விட்டுவிட மனமில்லாமல், நமது ஆட்கள் அதிகாரமையங்களில் இருந்துகொண்டு பிற மக்களை ஆட்டுவித்தவிதமானது எனக்கும் ஒரு பெரிய போதையைக்கொடுத்தது. அந்த அதிகார போதையில்தான் வாழ்க்கை முழுதும் மனித நேய உணர்வே இல்லாமல் பிராமணஉயர்வுக் கொள்கைக்காக (Brahmin Supremacist Theory) பல்வேறு இனக்குற்றங்களை (Racial crimes) தங்களைக் குருவாகக் கொண்டு நானும் தொடர்ந்து செய்துகொண்டிருந்துவிட்டேன். இப்போது அதே குற்றங்களை நமது சந்ததியினரையும் தொடர்ந்து செய்யவைத்துவிட்டு வந்துவிடடோமே என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது. உங்கள் அர்த்தசாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் பயங்கரவாதச் செயல்முறைகளும், அரச பயங்கரவாத நுட்பங்களும் காணும்போது உலகில் வேறு எந்த பயங்கரவாதியும் உங்களுக்கு நிகராக மாட்டான் என்று தெரிகிறது. சும்மாவா? உலகிலேயே முதல் அரசியல் பயங்கரவாதி நீங்கள்தானே! உங்களைப் பின்பற்றி நாங்கள் செய்த பாவங்கள் ஒன்றா, இரண்டா?

சாணக்கியன்: என்னுடைய செயல்முறை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியதுதான். அதாவது நம்முடைய இலக்கு எப்படியாவது, எந்தக் கொடுஞ்செயல் செய்தாவது, அரசியலில் அதிகார மையத்தைப் பிடித்துவைத்துக் கொள்வதுதான். நாம் சாதாரணக் குடிமகனாக இருந்தால், அந்த அதிகார மையத்தைப் பிடிப்பதற்காக எந்த விதமான பயங்கரவாதச் செயலையும் செய்யலாம். அதிகார மையத்தைக் கைப்பற்றிவிட்டால், அதனைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சதியுடன் கலந்த அரச பயங்கரவாதச் செயல்களைச் செய்யலாம். இதுதான் எனது உபதேசம். காதம்பரி எழுதிய பாணபட்டர் என் கொடூர முகத்தை அன்றே மக்களுக்குத் தெரியப்படுத்திவிட்டார். அவ்வளவு நுட்பமான கொடுஞ்செயல்களை நான் செய்திருக்கிறேன். ஹிட்லருக்கு அந்த சதிசெய்யும் நுட்பங்கள் தெரியவில்லை. அதனால்தான் தோற்றார். ஸ்பார்ட்டாவை எடுத்துகொள்ளுங்கள். கிரேக்க தீபகற்பப் பகுதிக்கு இவர்ந்த ஸ்பார்ட்டன்கள் (Spartans) அந்தப்பகுதியின் மண்ணின் மைந்தர்களை அடிமைகளாக்கித் தாங்கள் சுகவாழ்வு வாழ்ந்தனர். அவர்களும், இந்தியத் துணைக்கண்டத்தில் பிராமணர்கள் செய்தது போன்ற பல சதிச் செயல்களைச் செய்தனர். ஆனாலும் இறுதியில் ஸ்பார்ட்டன்கள் காலப்போக்கில் அரசியலில் ஒரு வல்லன்மை உள்ள அமைப்பாக இல்லாது போனதற்குக் காரணம், நமக்குத் தெரிந்த அளவுக்கு அவர்களுக்கு சதி செய்யும் முறை தெரியாததுதான். இந்தியாவில் நாம் நடைமுறைப்படுத்திய சதுர்வர்ண அமைப்பை உருவாக்கி பிராமணரல்லாத மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை அவர்கள் தாங்கள் அடிமைப்படுத்தியிருந்த ஹேலாட் மக்களிடம் செயல்படுத்தாததுதான்.

சோ: உண்மைதான். இந்தியாவில் புத்தரால் சின்னாபின்னமாக்கப்பட்டு 250 ஆண்டுகளுக்குச் சிதைக்கப்பட்டிருந்த சதுர்வர்ண அமைப்பை நீங்கள்தானே எண்ணற்ற பயங்கரவாதச் செயல்கள் செய்து மீண்டும் உயிர்ப்பித்தீர்கள்? அதற்கு நன்றி பாராட்டும் விதமாகத்தான் இன்றும் நமது ஆட்கள் நீங்கள் ஒரு கொடிய பயங்கரவாதி என்ற உண்மையை மறைத்து விட்டு, உங்களை ஒரு பெரிய மனிதராகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். கடவுளையே கடவுளல்ல என்றும், கடவுளாக இல்லாத ஒன்றைக் கடவுள் என்றும் ஆக்கும் திறன் மட்டுமல்ல, கடவுளையே கடவுள் என்று நாம் அங்கீகரித்தால்தான் மக்கள் கடவுளைக் கடவுள் என்று வழிபடுவர் என்று மகாபாரதத்தில் பீஷ்மர் வாயால் சொல்வது போல எழுதிவைத்துக்கொண்டேமே. அவ்வளவு திறன் உள்ள நமக்கு கணக்கில்லாத அளவுக்குப் பயங்கரவாதச் செயல்கள் செய்த பெருங்குற்றவாளியான உங்களை நம் சந்ததியினரால் புனிதர் போலத் தொடர்ந்து காட்டிவர முடியாதா என்ன?

சாணக்கியன்: தவறு செய்கிறார்கள், நம் சந்ததியினர். பூவுலகில் நாம் வாழ்ந்தது வாழ்க்கையே அல்ல. நாம்தான் கடவுள் (பூசுரர்) என்றும் கடவுளை நமது கட்டுப்பாட்டில் இருப்பவர் என்றும் நமது ஆட்கள் சொல்லிக்கொண்டு மனிதகுலத்திற்கெதிராக நாம் செய்த கொடுமைகளும் குற்றங்களும் கொஞ்சமா நஞ்சமா? அதனால்தான் இன்று இங்கே நாம் தண்டிக்கப்பட்டிருக்கிறோம்.

சோ: உண்மைதான். “The story of Sparta’s decline and fall is an object lesson in the intimate relationship between social organization and military power” என்று ஜான் கிட்சன் (John Kitson) கூறுவார். இது இந்தியாவில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் சதுர்வர்ண அமைப்புக்கும் அதன் மூலமாக நாம் இதுவரை நிலைப்படுத்தியுள்ள பிராமண வல்லாதிக்கத்திற்கும் அப்படியே பொருந்தும். இன்று இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள EWS இட ஒதுக்கீடு இந்தச் சதுர்வர்ண அமைப்பைக் காலங்காலத்திற்கு இறுக்கி நிலைப்படுத்தும். எனவே, இந்தியாவில் தொடர்ந்து மனு நீதிக்காலத்துக் கொடுமைகளும் தங்கள் காலத்துக் கொடுமைகளும் நிறையவே நிகழும் இனி.

சாணக்கியன்: ஆமாம். அவ்வாறு மனு நீதியையும் சாணக்கிய நீதியையும் செயல்படுத்துவதற்கு, பிராமணரல்லாதமக்களை தொடர்ந்து அறியாமையில் ஆழ்த்திவைக்க வேண்டிய தேவை பிராமணர்களுக்கு உள்ளது. அதனால்தான், புதிதாகத் தேசியக் கல்விக் கொள்கை – 2020 என்ற ஒன்றைக் கொண்டுவந்துள்ளனர். சமூகத்தின் மனப்பக்குவம் இதனால் குன்றிப்போகும்.
இதுவரை ‘உயர்’சாதி என்று சொல்லிக்கொள்ளும் சாதிகளைச் சேர்ந்த பலர், இடஒதுக்கீட்டுப் பயனைப் பெறுவதற்காக, தாங்களும் ‘கீழ்’ சாதியினர் என்று சொல்லிக்கொள்ளவும் அதற்கான பொய்ச்சான்றிதழ் பெறவும் முற்பட்டார்கள். அவர்கள் உண்மையில் ‘கீழ்’ சாதியினர் இல்லையெனில், அதனைத் தடுப்பதற்கு அர்சு நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால், இனி EWS இடஒதுக்கீட்டில் வரம்புக்குமேல் வாய்ப்பு கிடைப்பதால், தற்போது ‘கீழ்’ சாதியில் இருப்பவர்கள், தாங்கள் ‘உயர்’சாதி என்று சொல்லிக்கொள்ளவும் அதற்கான பொய்ச்சான்றிதழ் பெறவும் முயல்வார்கள். அப்போது அரசு அவர்கள் ‘உயர்’ சாதியினர் இல்லை என்று தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும். ஒரு சமுதாயத்தில் மக்களெல்லாம் தாங்கள் ‘கீழ்’ சாதியினர் என்று போட்டி போட்டுக்கொண்டு சொல்லும் நிலை நல்லதா அல்லது அவர்கள் தாங்கள் ‘மேல்’ சாதியினர் என்று போட்டி போட்டுக்கொண்டு சொல்லும் நிலை நாகரிகமானதா என்று ஒப்பிட்டு நோக்கினால், இந்த EWS இட ஒதுக்கீடு எப்படி Societal immaturity ஐ உருவாக்குகிறது என்பது நன்கு தெரியும். இனி, “நான் பிறப்பால் உயர்ந்தவன்” என்று ஒருவர் சொல்வதும் அதனைத் தீவிரமாக மறுத்து, “இல்லையில்லை, நீ பிறப்பால் தாழ்ந்தவன்” என்று ‘உயர்ந்தவன்’ சொல்வதும், இதனால் நீதிமன்றங்கள் வரை சென்று சென்ற மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதுதான் தினந்தினம் நடக்கும் வாழ்க்கை முறையாக இனி இருக்கும்.

சோ: உண்மைதான். அன்று ஆந்திராவில் சைலஜா என்ற ஒரு பிராமணப் பெண் தனக்கு 15 வயது ஆகும்பொழுது சிவராமையா என்ற ஆடு மேய்ப்பவர் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அவர் பட்டியல் சாதியைச் சார்ந்தவர் என்று சான்றிதழ் பெற்றார். அந்தச் சான்றிதழின் அடிப்படையில் அவருக்குக் கர்னூல் மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தது அந்த கல்லூரி முதல்வர் அந்தப் பெண்ணுடைய சாதிச் சான்றிதழை பார்த்தபின்பு அவரது சமூக அந்தஸ்து பற்றிய சான்றிதழை உரிய அதிகாரிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து தருமாறு கூறினார். அவ்வாறு அந்த கல்லூரி முதல்வர் கேட்டது தவறு என்றும் எப்பொழுது தான் ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவருக்குத் தத்துக் கொடுக்கப்பட்டேனோ அப்போதே தான் அந்த சாதியைச் சேர்ந்த வராக ஆகி விட்டேன் என்றும் எனவே மறுபடியும் இது தொட ர்பாக விசாரணை செய்யத் தேவை யில்லை என்றும் ஹைதரா பாத் உயர் நீதி மன்றத்தில் சைலஜா வழக்கு தொடு த்தார். அந்த உயர் நீதி மன்ற மானது இவரது கோரிக்கை யைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டது (இந்தியன் எக்ஸ்பிரஸ் – 25.02.1985). ஆனால், இந்த EWS இட ஒதுக்கீடு காரணமாக, இனி சமூகத்தின் போக்கு எதிர்த்திசையில் இருக்கும். மக்கள் தாங்கள் ‘உயர்ந்த’ சாதியைச் சேர்ந்தவர்கள் என்று பொய்ச் சான்றிதழ் வாங்க முயலுவர். அப்போது ‘உயர்’ சாதிக்காரர்கள் அதனைத் தீவிரமாகத் தடுப்பர். வரலாற்றில் இது பலமுறை நடந்த நிகழ்வுதானே. திருமலை நாயக்கர் காலத்தில் (கிபி 1623-1659), தங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக்கொண்டு, தாங்களும் பூணூல் அணிந்துகொண்டு, நம்மை விட வேதங்களைச் சிறப்பாகக் கற்றுத்தேர்ந்திருந்த மதுரை சௌராஷ்டிரப் பட்டுநூல்காரர்களுக்குப் பிராமணர் என்ற அங்கீகாரம் தரக்கூடாது என்றும் பிராமணர்கள் என்ற நிலையில் அவர்கள் கோயில்களில் பூசகர்களாக ஆகக்கூடாது என்றும், பிராமணர்கள் என்ற நிலையைப் பயன்படுத்தி மதம் தொடர்பான வழிபாட்டுக் காரியங்கள் எதிலும் அவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் மன்னரிடம் எப்படியெல்லாம் போராடி வென்றோம்.

சாணக்கியன்: இவ்வாறு தங்களைப் பிராமணர்கள் என்று கூறிக்கொண்டு பிராமண வர்ணத்திற்குள் வருகிறவர்களை மட்டுமா நாம் எதிர்த்தோம்? தங்களைச் சத்திரியர்கள் என்று கூறிக்கொண்டு சத்திரியர் நிலைக்கு மாற முயன்ற சூத்திரர்களையும் நாம்தானே எதிர்த்தோம். 1938 ஆம் ஆண்டு அவத் (Oudh) மாகாணத்தில், அகிர் மக்களின் பூணூலை அறுத்து அவர்கள் சத்திரியர் என்ற நிலையைக் கோரக்கூடாது என்றும் அவர்கள் சூத்திரர்கள்தாம் என்றும் கூறி அடக்கிவைக்க நடவடிக்கை எடுத்தவர்கள் நமது பிராமணர்கள்தாமே தவிர பிற சத்திரியர்கள் அல்லரே? 1950 ஆண்டுக்கு முன் ஈராயிரம் ஆண்டுகளாக இவ்வாறு இங்கே என்னென்னவெல்லாம் நடந்ததோ, அவை 2023 முதல் மீளவும் நடக்கத் தொடங்கும். மக்கள் சமுதாயம் அநாகரித்தை நோக்கி மீளவும் நடைபோடும். சாதிஅமைப்பு என்பது எவ்வளவு அவமானகரமானது என்பதை பிராமணர்கள் உட்பட அனைத்து ‘உயர்’ சாதி மக்களும் உணர்ந்து தம்மையும் ‘கீழ்’ சாதியினர்தாம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும்போதுதான் உண்மையான முழுமையான சமுதாய மாற்றம் உண்டாகும். இருந்தாலும்கூட, பொருளாதாரக் காரணிகளால் ‘உயர்’ சாதியினர் பொய்யாக இதுகாறும் தம்மைக் ‘கீழ்’ சாதியினராக அடையாளப் படுத்திக்கொள்ள முன்வந்த செயலைக்கூட இந்த EWS இடஒதுக்கீடு தடுத்து நிறுத்திவிடும். அது மட்டுமல்ல. கலப்புத் திருமணங்களை இந்த ஒதுக்கீட்டு முறை காலப்போக்கில் முழுமையாகத் தடுத்துவிடும். சாதிப்பிரஷ்டம் என்பது கட்டைப்பஞ்சாயத்துக்களால் காலப்போக்கில் மறுபடியும் பெரும் தண்டனையாகக் கொடுக்கப்படும்.

சோ: உண்மைதான். அந்தச் சூழலை நமது சந்ததியினர் உருவாக்கிய பின்னர், ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகப் பேச ஆட்களே இருக்கமாட்டார்கள். அந்தந்தச் சாதித் தலைவர்களே அவரவர் சாதியினரை ஒடுக்கி வைத்திருப்பார்கள். ஃபுலே, பெரியார், அம்பேத்கார் போன்ற சிந்தனாவாதிகள் தோன்றவியலாத வகையில் சமூகம் கட்டுப்படுத்தப்படும். டென்மார்க் அரசர் பத்தாம் கிறிஸ்டியன் போன்ற மாந்த நேயம் மிக்க தலைவர்கள் தோன்றமாட்டார்கள். எளியவர்கள் இழிவு படுத்தப்படுவார்கள். அன்று யூதர்களை இனக்கொலை செய்த ஆரியன் ஹிட்லர், அவர்களைத் தனிமைப்படுத்தி க்காட்டவேண்டும் என்பதற்க்காக, யூதர்களில் ஆறு வயது ஆனவர்கள் முதல் அனைவரும் மஞ்சள் பட்டையை அணியவேண்டும் என்று ஜெர்மானியர்கள் பிடித்த நாடுகளிலெல்லாம் ஆணையிட்டபோது, அன்றைய ஜெர்மன் ஆதிக்கத்தில் இருந்த சிற்றரசான டென்மார்க் நாட்டில் மட்டும் அந்த ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அன்றைய டென்மார்க் மன்னன் பத்தாம் கிறிஸ்டியன் (Christian X) மனச்சாட்சியுள்ள, மனிதாபிமானமுள்ள, நாகரிகம் தெரிந்த மனிதனாக இருந்ததுதான். அவர் தனது நிதியமைச்சரிடம் (Vilhelm Buhl) ‘டென்மார்க்கில் உள்ள யூதர்களும் தங்கள் அடையாளப் பட்டையை அணியவேண்டும் என்று ஜெர்மனி ஆணையிட்டால், நாம் எல்லோரும் அதனை அணிய வேண்டும் என்று கூறினார். இவ்வாறாக அன்றைய டென்மார்க் அரசர் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்றார். இதன் விளைவாக அந்நாட்டிலிருந்த யூதர்கள் ஹிட்லரின் கொலைக்களங்களிலிருந்து (Gas Chambers) தப்பினர்.(“With encouragement and support from King Christian and the Danish government, Danish resistance groups and thousands of sympathetic citizens launched a national rescue effort, hiding the Danish Jews for several days, smuggling them onto boats of all sizes, and ferrying them across the narrow straits, known as the Øresund, at the southern end of the Kattegat Sound to safety in neutral Sweden. All the while, King Christian X expressed firm objections to German deportation plans, lending visible moral support and encouragement to his countrymen. Universities closed down to allow students to participate in the rescue efforts. From the pulpits, Danish clergy urged their congregations to help the Jews. By and large, the Danish police refused to cooperate with the German deportation experts.”). இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாக சிந்தனை செல்லும்போதுதான் மனிதன் மனிதனுக்கான குணத்தோடு வாழ்கிறான் என்று பொருள்.

சாணக்கியன்: ஆமாம், ஆமாம். திருவள்ளுவர் கூட அரசாங்கம் என்ற அமைப்பின் நோக்கமே, எளியோரை, தளர்ந்த குடிமக்களை வாழ வைப்பதுதான் என்று கூறியிருக்கிறார். “கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்பது அவர் சொன்னது. இதற்கு மாறாக மாந்த நேயம் இல்லாத ஹிட்லர் மாதிரியான சிந்தனைப் போக்கை, ஆரியர் உயர்ந்தவர் மற்றவர் தாழ்ந்தவர் என்ற மனப்பான்மையை, வளர்க்க வழிசெய்யும் திட்டம்தான் EWS இடஒதுக்கீடு ஆகும். இன்று நமது சந்ததியினர் நம்மைப் போலவே செயல்படுகின்றனர். அரசுப் பணிகளில் முன்னரே அளவுக்கதிகமாக இருந்தும் கூட, மேலதிகமாக EWS இடஒதுக்கீடு மூலம் அதிகார மையங்களைப் பிடித்துக் கொள்கின்றனர். திருந்தமாட்டார்களோ என்றுதான் கவலையாக உள்ளது.

சோ: என்ன செய்வது, இந்த உண்மைகள் நாம் அங்கு வாழும்போது நமக்குத் தெரியாமல் போய்விட்டதே?

சாணக்கியன்: தெரியாமல் போகவில்லை. நீங்கள் முன்னரே சொன்னமாதிரி அதிகாரமையங்களில் நாம் இருந்து அனுபவித்துவந்த வசதிகள் நமக்கு போதையைக் கொடுத்தன. போதை எப்போதுமே அறிவைக்கெடுக்குமாதலால், நாம் உண்மை எது எனத் தெரிந்திருந்தும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தோம். நாம் செய்வது அநியாயம் என்று தெரிந்திருந்தும் நாம் அதைத் தொடர்ந்து செய்தோம், நமது செயல்களை எதிர்ப்பவர்களை நாத்திகர்கள் என்றும், வேத நிந்தகர்கள் என்றும் கூறி மக்களின் சிந்தனையை மடை மாற்றினோம். புத்தரைத் திருடன் என்றே இராமாயணத்தின் மூலமாகச் சொல்லவைத்தோம். நமக்குச் சார்பான எந்த அநியாயச் செயலையும் நியாயப்படுத்துவதற்காக அதுதான் ‘தர்மம்’ என்று கூறிப் பரப்புரை செய்தோம். அதர்மக் கொள்கைகளுக்கெல்லாம் தர்ம சாஸ்திரங்கள் என்று பெயர் வைத்தோம். கொஞ்ச நஞ்சமா இவ்வாறு செய்தோம். இன்றும் இந்தியாவை ஆளும் நாக்பூர் கூட்டம் அதே போல்தான் கண்மூடித்தனமாக, இனவெறிக்கொள்கை தொடர்பான பல செயல்களைத் (Apartheidistic activities) தொடர்ந்து செய்துவருகிறது. இங்கு வந்தபின்தான், பூவுலகில் நல்லதொரு வாழ்வு வாழ இறைவன் நமக்குக் கொடுத்த வாய்ப்பை நாம் எப்படியெல்லாம் பாழ்படுத்திவிட்டு வந்திருக்கிறோம் என்று தெரிகிறது.

சோ: உண்மைதான். மற்ற உயிர்களை நாம் ஆட்டுவிக்க முடிகிறது என்று தெரிந்து கொண்டபின் அவ்வாறு அவர்களை நாம் ஆட்டுவிக்கும்போது நமக்கு ஏற்படுகின்ற அந்த போதை நம்மை மட்டுமல்ல, நமக்குப் பின் இன்று நம் சந்ததியரையும் மிகத் தீவிரமாகவே ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது. மும்பையில் 26.02.1984 அன்று நடைபெற்ற அனைத்திந்திய பிராமணரகள் மாநாட்டு நிகழ்வுகள் பற்றிய ஒரு சுருக்கமான விளம்பரம் ஒன்று 29.03.1984 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்பட்டது. அதில் பிராமணர்கள் தீண்டாமைக்கு எதிரானவர்கள் என்றும் பிராமணர்களும் சூத்திரர்களுமே மிகவும் சுரண்டலுக்கு ஆளானவர்கள் என்றும் பரப்புரை செய்திருந்தார்கள். சூத்திரர்கள் என்று தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டிகாட்டி இவ்வாறு பரப்புரை செய்திருந்தனர். (“Brahmins and Shudras are the two most exploited communities in India….Brahmins are being falsely blamed by politicians and the press for the atrocities on Harijans.”) ஆனால், 2012 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக 51 இடைநிலைச் சாதியினரைக் காட்டி ஒரு அமைப்பை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் நிறுவியபோது பிராமணர் சங்கம் அந்த அமைப்புக்குத் தனது ஆதரவைத் தந்தது (The Hindu 22.12.2022). அந்தக் கூட்டத்தில் பிராமணர் சங்கம் சார்பாக ஒரு பிரதிநிதி பேசுவதற்கு அனுப்பப்பட்டார். இவ்வாறு, பிற்படுத்தப்பட்ட மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் காலச் சூழலுக்கேற்ப ஒவ்வொரு சமயத்தில் ஒருவரை ஆதரித்து அவர்களைக்கொண்டு மற்றவரை அடக்கிவைக்கச் செய்யும் செயலை நமது மக்கள் தங்கள் காலத்திலிருந்து இன்று வரை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு பிராமணரல்லாத மக்களும் ஒருவர் மாற்றி ஒருவர் விழுந்துகொண்டுதானிருக்கிறார்கள்.

சாணக்கியன்: ஒரே இன மக்களை சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று மூன்று பிரிவாகப் பிரித்து, பின்னர் அந்த மூன்றையும் மூவாயிரமாகப் பிரித்து வைத்ததால்தான், அவர்களுக்குத் தாங்கள் யார் என்ற அடையாளம் கூடத்தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் ஐயன்காளியின் நியாயமான போராட்டத்தை இடைநிலைச் சாதியினர் எதிர்த்தனர். சவதர் குளத்திலிருந்து தண்ணீரை அள்ளிக் குடிப்பதற்காக, மகாராஷ்டிராவின் பல பகுதிகளிலிருந்து வந்து திரண்ட 3000 பேர் கொண்ட பேரணி, 19.03.1927 அன்று அந்தக் குளத்தை நோக்கி வரும்போது, இடைநிலைச் சாதியினரைக் கொண்டு எதிர்க்க வைத்து, கடைசியில் அந்தக் குளத்தில் நமது ஆட்கள் வேத மந்திரங்கள் ஓதி 108 குடங்கள் பஞ்சகாவ்யத்தை ஊற்றி அந்தக் குளத்துத் தண்ணீரை சுத்தமாக்கினர். சுத்திகரன் செய்தோம் என்று தீட்டுக் கழித்தனர். இவ்வாறு காலந்தோறும் ஒருவரை ஒருவர் அவர்களுக்குள்ளேயே பிணங்கிக் கொள்ளுமாறு செய்து நமது உயர்நிலையை (Brahmin supremacy) நிலைநிறுத்திக்கொண்டோம். பிராமணரல்லாதார் அனைவரையுமே நாம் தீண்டத்தகாதவர்களாகத்தான் வைத்திருந்தோம். இந்த உண்மை பல இடைநிலைச்சாதியினருக்கும், பிராமணரல்லாதாரில் ‘உயர்’ சாதியினருக்கும் தெரிவதில்லை. (In the book ‘Life and Works of Vazhakunnam Vasudevan Nambudiri’ (1891- 1946) written by his grandson Dr. C. Sreekumaran, we find C. Uthama Kurup, Associate Editor, Mathrubhumi, recording, in his Preface, the fact that “It was customary in those days that the Brahmana should bathe again and let himself cleansed if he was touched by a non- Brahmin”. பிராமணர்கள், பிரமாணரல்லாத அனைவரையுமே தீண்டத்தாகாதவர்களாகத்தான் கருதிச் செயல்பட்டனர். உரோமானியர்கள் செய்த ஒரு தவறை நாம் செய்யவில்லை. அதனால் தொடர்ந்து நம் சந்ததியினர் பிராமணரல்லாத மக்களை அடிமைப்படுத்திவைக்க முடிகிறது. உரோமாபுரியில், உரோமர்களும் அவர்களது அடிமைகளும் ஒரே மாதிரியான உடை உடுத்திக்கொண்டிருந்தனர். உரோமர்களில் சிலர் அரசரிடம் சென்று அடிமைகளுக்கு வேறுவிதமான உடை உடுத்த ஆணையிடவேண்டுமென்று கூறினர். அரசன் அதை ஏற்றுக்க்கொண்டு ஆணையிடத் தயாரான போது, உரோமாபுரி மக்கள் மன்றத்தில் சிலர் அது கூடாது என்றும், அப்படிச் செய்துவிட்டால், உரோமாபுரி அடிமைகளுக்குத் தாங்கள் மிகப்பலராக இருக்கிறோம் என்ற உண்மையும், தம்மை அடிமைப்படுத்திவைத்திருக்கும் உரோமானியர்கள் மிகச்சிலராகவே உள்ளனர் என்ற உண்மையும் எளிதில் விளங்கிவிடும். அது நமக்குப் பெரும் ஆபத்து என்று கூறினர். எனவே அந்தத் திட்டம் அங்கே கைவிடப்பட்டது. (Lucius Annaeus Seneca, records, in his famous letter to the emperor Nero, the fact that “A proposal was once made in the senate to distinguish slaves from free men by their dress; it then became apparent how great would be the impending danger if our slaves should begin to count our number”. (Para 1:24- De Clementia). ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நமது அடிமைகளை பல்வேறு பிரிவினராகப் பிரித்துவிட்டு அவர்களுக்குப் பல்வேறு விதமான பெயர்கள், ஆடைகள், முதலானவற்றைக் கொடுத்து அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் மோதல் உருவாக வழிசெய்து வைத்ததனால்தான் நமது அடிமைகளின் அமைப்பு அன்று முதல் இன்று வரை நமக்கு வசதியாக இருந்து வருகிறது.

சோ: இந்திய அரசு 2011 சென்சஸ் விவரங்களை 2010 முதல் 2014 வரை நான்கு ஆண்டுகள் சேகரித்தது. அதிலும் சாதிகள்பற்றிய கணக்கெடுப்பை நீதிமன்றத்தின் ஆணைப்படி சேகரித்தது. அதனால்தான் அதுவரை SE Census (Social Economic Census) என்று இருந்த கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டில் SEC Census (Socio Economic Caste Census) என்று பெயர் மாற்றம் கூடப் பெற்றது. இருந்தும் கூட இந்த விவரங்களைத் திரட்டிய பிறகும் இன்றுவரை இந்திய அரசு அவற்றை வெளியிடாமல் இருந்து வருகிறது. இந்த அறிக்கை (Census Report) அரசாங்கத்தின் ஒரு நிரந்தர துறை மூலமாக வழக்கமாகத் திரட்டி எடுத்த புள்ளிவிவரம் ஆகும். அரசாங்கம் அமைக்கும் விசாரணைக் கமிஷன் கொடுத்த அறிக்கை அல்ல. எனவே, இந்த விவரங்களை மக்களிடமிருந்து மறைக்க அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. இருந்தும் கூட சாதிவாரியாகத் திரட்டிய விவரங்களை மறைக்கமுடிகிறது என்றால், அதற்குக் காரணம் என்ன? அரசு இதை வெளியிடாததற்குக் காரணம் அரசுப்பணிகளில் மேல்சாதியினரின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பதை இப்புள்ளிவிவரங்கள் உறுதி செய்தது தான் என்ற செய்தி கசிவதாகக் நாளேடுகளுக்குத் தெரிந்துவிட்டது. (”Well, the government circles are abuzz with a conspiracy theory of a different kind. Unlike the pundits who believe that the government has conspired to deny the backward masses a little more of their due, some top bureaucrats believe that the attempt is not to hide the OBC figures but to suppress the more dangerous upper caste numbers….The upper castes have been running governments at the Centre and the states for so long that they don’t want the caste census to finally proclaim that the Indian democracy is not really representative.” – Economic Times 12.07.2015 ). இந்த விவரங்களை வெளியிட்டால் சமூகக் கொந்தளிப்பு (Social upheaval) உண்டாகும் என்று ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டதாக ‘Daily O’ நாளிதழ் தெரிவிக்கிறது (04.07.2015). இந்தியாவில் இன்று அதிகாரத்திலிருப்பது மேல்சாதிக்காரர்களுக்கான சதுர்வர்ணக்கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் அரசு. எனவே, இந்த விவரங்கள் அரசால் வெளியிடப்படவில்லை. ஆளுங்கட்சி மட்டும் இவ்விவரங்களைப் பார்த்துவிட்டது; எதிர்க்கட்சிகளுக்கும் மக்களுக்கும் உண்மை தெரிந்து விடாமல் தடுக்கிறது. EWS வழக்கில் இந்த விவரங்களை உச்சநீதி மன்றத்திற்குக் காட்டாமல் சின்ஹோ கமிட்டி அறிக்கையைக் காட்டி, இதுதான் புள்ளிவிவரம் என்று கூறி EWS இடஒதுக்கீட்டை நியாயப்படுத்தி பிராமணர்களுக்குச் சார்பாக தீர்ப்பையும் வாங்கி வைத்துக் கொண்டது இன்றைய நம்மவர்களின் அரசு.

சாணக்கியன்: அளவில்லாமல் சமூகக் குற்றங்களைச் செய்துகொண்டே போகிறார்கள் நமது சந்ததியினர். இப்போது கூட பீகார் மாநிலத்தில் அனைத்துச் சாதியினரின் பொருளாதார விவரங்களையும் கணிக்க நிதிஷ் குமார் அரசு நடவடிக்கை எடுப்பதைக் கண்டு நடுங்குவது பி.ஜே.பி. காரர்கள்தாம். இது தவறு. இந்த சாதிவாரிக் கணிப்பு மிக அவசியம். அப்போதுதான் பல உண்மைகள் தெளிவாகும். இந்திய நாட்டு அரசியல் நேரிய வழியில் செல்லும். இதன் மூலமாக விகிதாச்சாரப் பங்கீடு நடைமுறைப்படுத்துவதற்கு வழி ஏற்படும்.

இந்த 2019 அரசியற்சட்டத் திருத்தத்தின் மூலம், OBC மக்களாக இருந்தாலும், FC பிரிவினராக இருந்தாலும், ஆண்டு வருமானம், எட்டு லட்சரூபாய்க்குக் கீழே வருமானம் இருந்தால் இட ஒதுக்கீடு உண்டு என்று சட்டம் செய்துகொண்டுவிட்டார்கள். இனி, பட்டியல் பிரிவு மக்களுக்கும் creamy layer கொண்டுவந்து விட்டால், உண்மையான இட ஒதுக்கீடு முறை ஒழிக்கப்பட்டுவிடுவதுடன், எந்தச் சாதியினராக இருந்தாலும், பொருளாதார அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு என்று ஆகிவிடும். மேலும், FC மக்கள், குறிப்பாகப் பிராமணர்கள், தங்களது வர்ணம் மற்றும் சாதியைப் பொதுவெளியில் மிகத்தீவிரமாகப் பறைசாற்றிக் கொள்வதோடு, அவ்வாறான செயல்பாட்டின் மூலமாகப் பன்னெடுங்காலமாக பிற சாதியினரை இகழ்ந்து கொண்டிருந்த நிகழ்வுகள் இனி மிகச் சர்வசாதாரணமாக இந்தியாவில் நடக்கத் தொடங்க வழிவகுப்பார்கள்.
இந்த EWS இடஒதுக்கீட்டின் உண்மையான நோக்கமும், அதன் எதிர்கால விளைவுகளும் மக்களுக்கு விரையில் தெரிந்து விடும். அப்போது, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அனைத்து மக்களும் கொதித்தெழுவர். EWS இட ஒதுக்கீடு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிடும். அரசியற்சட்டத்திற்கு எந்த வித மரியாதையும் கொடுக்காத ஒரு சதிக்கூட்டம் கொண்டுவந்த சட்டம்தான் இந்த EWS இட ஒதுக்கீடும். இந்த உண்மைகளெல்லாம், பிராமணரல்லாத மக்களுக்குத் தெரிந்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

சோ: என்ன ஆகும்?

சாணக்கியர்: EWS இட ஒதுக்கீடு சுவடு இல்லாமல் மறைந்து போகும். அன்றைய அரசியற்சட்டப்பிரிவு அனுமதிக்காத EWS இடஒதுக்கீட்டை, இன்றைய (09.01.2019க்குப் பிறகான) அரசியற்சட்டப்பிரிவு அனுமதிக்கும்போது, நாளைய அரசியற்சட்டத்தில் வேறு ஒரு பிரிவை உண்டாக்கி அதன் மூலம் EWS இட ஒதுக்கீட்டைக் குழிதோணடிப் புதைப்பது மட்டுமல்லாமல், அனைத்து அதிகார மையங்களிலும் விகிதாச்சாரப் பங்கீட்டைப் (Proportionate Representation) பிராமணரல்லாத மக்கள் நிச்சயமாகப் பெறமுடியும்; பெற்றுவிடுவர். அன்றுமுதல் பிராமணீயம், அதாவது பிராமண உயர்வுக் கொள்கை (Brahmin Supremacist Theory) வீழ்ச்சியடையத் தொடங்கும்.

சோ: உண்மைதான். அன்று முதல் இந்தியாவில் உள்ள மனித சமுதாயம், மனித சமுதாயத்திற்கே எதிரானதும் பிராமணர்களால் உருவாக்கிச் செயல்படுத்தப் பட்டதுமான, மிகக் கொடிய சதுர்வர்ணக் கொள்கையிலிருந்து மீண்டு, “அனைவருக்கும் அனைத்தும்”, “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, என்ற பண்பட்ட கொள்கைகளை நோக்கி நடைபோடத் தொடங்கும். தங்கள் காலத்தில் உருவாக்கப்பட்டு என் காலத்தில் மட்டுமின்றி இன்று மோகன் பகவத் காலத்திலும் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் சதுர்வர்ண பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிடுவதுடன், நமது இந்தச் செயல்பாடுகள் இந்திய வரலாற்றில் ஒரு அசிங்கமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டு எதிர்காலச் சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கையாக அமையும்.

சாணக்கியர்: உண்மைதான். பூவுலகில் வாழ்வதற்கு நமக்குக் கிடைத்த வாய்ப்பை நாம் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தினோம் என்பதை நினைக்க நினைக்க மிகவும் வெட்கமாக இருக்கிறது. அதற்காக இன்றுவரை நரகத்தில் எவ்வளவு துயரப்படுகிறோம் என்பதைக் காணக்காண மிகவும் துயரமாக இருக்கிறது. இனியேனும் நமது சந்ததியினர் நாம் காட்டிய பாதையிலிருந்து விலகி நல்வழியில் செல்லட்டும். இங்கு வரும் நம்மவர்களின் கூட்டமாவது குறையும். நம் முன்னோர் எழுதி வைத்த “சண்டியோக உபநிஷத”த்தில் பூவுலகில் வாழும்போது நன்னடத்தை இல்லாது இருந்தவர்கள் அடுத்த பிறவியில் நற்பிறப்பை அடைய முடியாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு நாமே எடுத்துக்காட்டாக இருந்து விட்டோம். (Chandogya Upanishad 5/8/7 says, “Those whose conduct here on earth has been good will quickly attain some good birth—birth as a brahmin, birth as a kshatriya, or birth as a vaisya. But those whose conduct here has been evil will quickly attain some evil birth—birth as a dog, birth as a hog, or birth as a chandala.”) பூவுலகில் இருந்தவரை நமது அதிகார வெறி நம் கண்களையும் அறிவையும் கட்டிப்போட்டு விட்டது. இன்று இங்குவந்து நாம் வருந்துகிறோம். நமது சந்ததியினர் இனியாவது மோகன் பகவத், அஜித் தோவல், சங்கராச்சாரியார்கள், சுப்பிரமணியசாமிகள் ஆகியோரது பக்குவமற்ற (Immature) செயல்பாடுகளையும் பேச்சையும் கேளாது, நல்லோர் சொல் கேட்டு நடப்பதே நல்லது. இவ்வாறு அவர்களை நடக்க வைப்பதற்கு, பிராமணரல்லாத மக்கள் முன்னெடுக்கும் “அனைத்து அதிகார மையங்களிலும் விகிதாச்சாரப் பங்கீடு” (Proportionate Representation in all Power-centres) என்ற கோட்பாடானது ஒரு வெளிப்புறக் காரணியாக (External factor) அமைந்து பிராமணர்களை நல்வழியில் செயல்படவைக்கும்.

(இத்துடன் வானுலகில், திருவள்ளுவர், காந்தியடிகள் முதலாக அவையினர் அனைவரும் பெருந்திரையில் கண்டுகொண்டிருந்த நேரலைக் காட்சிகள் முடிகின்றன. அவையினர் அமைதியோடு சில நொடிகள் அமர்ந்துள்ளனர். அப்போது திருவள்ளுவர் பேசுகிறார்.)
திருவள்ளுவர்: இந்தியாவின் சமூக அமைப்பின் அவல நிலை பற்றி இந்த அவையில் இத்தனை நாட்களாக விவாதிக்கப்பட்ட அனைத்தையும் இங்குள்ள அனைவரும் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தோம். இந்தியாவில் ஒரு நேர்மையான சமூக அமைப்பினை மீண்டும் உருவாக்குவதில் அங்கு பிறந்துள்ள மக்களுக்குப் பெரும் கடமை உள்ளது. இதுவரை பூவுலகம் கண்ட பல அநியாயமான சமூக அமைப்புக்களில், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சதுர்வர்ண அமைப்புதான் மிகமிகக் கொடூரமானது. அடிமைகளுக்குத் தாங்கள் அடிமைகள் என்ற உண்ர்வு வராதபடி பார்த்துக்கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் வேறொருவனைக் கீழானவனாக அமைத்து அவர்களுக்குள் பிணக்குகளை உருவாக்கி இரத்தம் சிந்தவைத்துக்கொண்டே இருக்கும் முறைதான் இது. இந்த அமைப்பில் பிராமணரல்லாதார் எந்தக் காலத்திலும் நிம்மதியாக வாழ்ந்தது கிடையாது என்று வரலாறு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இதனைச் சரிசெய்வதுதான் அங்கு பிறக்க வைக்கப்பட்டுள்ளோரின் தலையாயவேலை.

மனிதர்கள் பூவுலகில் பிறக்கும்போது, அவர்கள் அனைவருக்கும் தெளிந்த உள்ளமும் திறந்த மனதும்தான் இருக்கும். அவர்கள் யார் வீட்டில் பிறந்தாலும் அந்த வீட்டார் பெற்றோர்கள் என்ற நிலையைப் பயன்படுத்தி அவர்களுக்குக் கற்பிக்கும் தவறான கருத்துக்களிலிருந்து மீண்டு வெளிவரும் ஆற்றலும்கூட ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.. அதனால் மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவரும் தத்தம் வீட்டாரின் சாதிப்பிடியிலிருந்து மீண்டு செயலாற்றும்போது நாட்டு மக்கள் அனைவரையும் மனித நேயம் உள்ளவர்களாக ஆக்க முடியும்.
மனிதர்களாகப் பிறந்தபின் அவர்களுடைய் கடமை என்ன என்று அவர்கள் தெரிந்துகொண்டு தம்மை வழிநடத்திக்கொள்வதற்காக பல அறிஞர்களின் நூற்கள் அவர்களுக்கு உதவி செய்கின்றன. உதவிசெய்யும். அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமே நான் திருக்குறளில் எழுதியிருந்தாலும், வீடுபேறு பற்றி பல அறிஞர்கள் பல சிறந்த நூற்களை எழுதி வைத்து வந்துள்ளனர். மேரி கரல்லி (Marie Corelli) எழுதியுள்ள Sorrows of Satan என்ற நூல், மற்றும் சைரஸ் ஹெச். மர்ச்சண்ட் (Cyrus H. Merchant) எழுதியுள்ள Heartfelt, Forever the Faith முதலான பல நூற்கள் மாந்தநேயம் மிளிரும் மிகச் சிறந்த நூற்களாக இருக்கின்றன, அவை பூவுலகில் அனைவருக்கும் படிக்கக் கிடைக்கின்றன. அந்த நூற்கள் மக்கள் அனைவரையும் ஆற்றுப்படுத்தும்.

பூவுலகில் இறந்து பட்ட உயிர்கள் இங்குவந்த பின் தாங்கள் நழுவவிட்ட வாய்ப்பினை உணர்ந்து துடிப்பதையும் மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுக்கப்பட்டால் தாங்கள் பூவுலகில் தங்கள் கடமையை சரிவரச்செய்து வருவோம் என்று கதறுவதையும் சைரஸ் மர்ச்சண்ட் தனது நூலில் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

உண்மை எது என்று அறியாத மக்கள் பலரும் பூவுலகில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டு இங்கு வந்து வருந்துபவர்கள்தாம். அது மட்டுமின்றி ஒரு செயல் தவறா இல்லையா என்று மகக்ள் உணர்ந்துகொள்வதற்காகவும் அவர்களுக்கு நல்வழி காட்டுவதற்காகவும் ஒவொருவருக்கும் அவர்களுடைய மனச்சாட்சி வழிகாட்டும். மனச்சாட்சிப்படி ஆரியர்கள் இந்தியாவில் செயல்பட்டிருந்தால், இந்தியாவில் சதுர்வர்ண அமைப்பு என்ற அவலம் உருவாகியே இருந்திருக்காது. இந்தச் சதுர்வர்ண அமைப்பினால் காலங்காலமாகச் சாணக்கியன் சொல்லிக்கொடுத்த சதிச்செயல்களால் சிந்தப்பட்ட இரத்தம் ஆறாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. இவற்றுக்குக் காரணம் இந்தியாவில் பிறந்து, தங்கள் கடமையைச் செய்வதற்காக, அங்கு சென்றபின் மானுடர்கள் அறம் மறந்து கடமைமறந்து பூவுலகத்தில் எப்படியாவது வசதியாக வாழ்ந்துவிட்டால் போதும் என்று நினைப்பதுதான்.

எனவே, இப்போது இந்தியாவில் பிறப்பெடுத்துள்ள மனிதர்களாவது, இந்த முறையாவது, அந்நாட்டில் ஒரு நல்ல மக்களாட்சி அமைப்பு அமைய, சாதி, மத வேறுபாடுகளால் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் அமையப் போராடவேண்டும். நேர்மைக்காகவும் அநீதிக்கெதிராகவும் போராடுவதுதான் வாழ்க்கை. வானுலகில் உயிர்களாக மட்டும் இருக்கும்போது நியாய அநியாயங்களை உணரும் இவர்கள் பூவுலகில் உடலோடு சேர்ந்து இருக்கும்போது, அநியாயத்தை எதிர்த்துப் போராட அந்த உடலைப் பயன்படுத்தாமல் கேளிக்கைகளுக்காகவும் வாழ்வேந்துகளுக்காகவும் மட்டுமே அதனைப் பயன்படுத்துவது வருந்தத்தக்கது. பூவுலகில் தனது உடலைப் பயனபடுத்தி அநீதிக்கெதிராகப் போராடாத எந்த உயிரும் இறைவழிபாட்டில் தனது நேரத்தைச் செலவழிப்பது இறைவனுக்குப் பிடிக்காத ஒன்று. பூவுலகிற்குச் சென்ற உயிர்கள் இறைவழிபாட்டைச் செய்து இறைவனைப் புகழ்ந்து கொண்டிருக்கவேண்டும் என்று இறைவன் எதிர்பார்க்கவில்லை. அதற்காக இவ்வுயிர்களை இறைவன் பூவுலகிற்கு அனுப்பவில்லை. இறைவழிபாடே செய்யாவிடிலும், அநீதிக்கு எதிராகப் போராடுபவனைத்தான் இறை பாராட்டும். அதுதான் ஒவ்வொரு மனிதனின் அடிப்படைக் கடமையுமாகும். அவ்வாறு போராட முன்வராத கோழைகளின் இறைவழிபாடு தேவையற்றது. போலியானது. நகைப்புக்குரியது. அவர்களுடைய வழிபாடு அவர்களை எந்தவிதத்திலும் கரைசேர்க்காது. இவ்வுண்மைகளை, கிறிஸ்தவ, இஸ்லாமிய, சைவ சமய நூற்களிலிருந்து நன்கு அறியலாம். நேர்மையற்றவனின் இறைப்பற்று என்பது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் Self-hypnosis செயலாகும். இப்படிப்பட்டவர்கள் தமது நேரத்தை வீணடித்துக் கொண்டு தாம் பூவுலகில் நேர்மையாகச் செயலாற்றுவதற்காகப் பெற்ற வாய்ப்பையும் தவறவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இறைவன் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை. உங்கள் சிறிய கைப்பிடியில் ஒரு மலையை நீங்கள் பிடித்துக்கொள்ள முடியும், உங்கள் செயலில் அன்பு இருந்தால். அன்பு சார்ந்த ஒரு சமூக அமைப்பு சதுர்வர்ணக்கொள்கையை உடைத்தெறிந்துவிடும். மனித வெறுப்புக் கொள்கையான (Hate theory) சதுர்வர்ணக்கொள்கையை உடைத்தெறிய அறவுணர்வும், துணிவும் உள்ளோர் தேவை. அதற்காகத்தான் இறைவன் மக்களை இந்தியாவில் பிறப்பெடுக்க அனுப்பியுள்ளார். எனவே, இந்த உண்மைகள் அறிந்து இந்தியாவில் பிறந்துள்ளோர் செயல்படவேண்டும். பட்டினத்தார் இவர்களுக்காகத்தானே சொல்லிவைத்திருக்கிறார்:
“நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதிநெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்த்ர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசனைகள் சர்ப்பனையே” (சர்ப்பனை = வஞ்சனை)
எனவே, இறை உணர்வு உள்ளவர்கள் என்று தம்மைப்பற்றி எண்ணிக் கொள்வோர், தமது நாட்டுச் சமுதாய அமைப்பிலும், அரசியல் அமைப்பிலும் உள்ள குறைகளைக் களையப் போராடவேண்டும். அதுவே பிறவியின் பயனாகும். “The work of everyone is the work of none” என்றில்லாமல், ஒவ்வொரு சமூக அவலத்தையும் தங்களுடைய தலையாய கடமையாக நினைத்து அவற்றை எதிர்த்துப் போராடவேண்டும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரம் சொல்லியிருப்பதை அறியாதவர்களாக இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராட வேண்டிய கடமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ளது. இதற்கான ஆற்றலும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையில் கொடுக்கப்பெற்றுள்ளது.

இந்தியாவில் இன்றும் இந்த வர்ண அமைப்பும் சாதி அமைப்பும் இன்று நடைமுறையில் இருப்பதால், மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு சாதியில்தான் பிறக்க வேண்டியிருக்கும். ஆனால், அவர்கள் அனைவரின் செயல்பாடுகளும் சாதிகளற்ற சமுதாயம் உருவாக்குவது என்ற ஒரே குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்வதாக இருக்கவேண்டும்.

மக்களில் யார் பாதிக்கப்பட்ட சாதிகளில் பிறக்கிறார்களோ அவர்களுக்கு இன்றைய சமூக நிலையில் உள்ள அவலங்களை நன்கு புரிந்துகொண்டு மிகத் தெளிவாகச் செயல்படும் வாய்ப்பு உள்ளது. அவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி சாதிகளற்ற சமுதாயத்தை உருவாக்க அவர்கள் பாடுபடவேண்டும். அவ்வாறன்றி, கோழைத்தனமாகவோ, அல்லது ஆதிக்கச் சாதியினருக்கு அடிபணிந்து நிற்பதன்மூலம் தங்கள் சொந்த வாழ்க்கையில் சில வசதிகள் கிடைக்குமென்று கருதியோ போராடாமல் காலத்தைக் கழித்துவிட்டு வந்தார்களானால் மீண்டும் அவர்களுக்கு இங்கே நரகம்தான் காத்திருக்கும். அதுபோலவே, பூவுலகுக்குச் சென்றபின். அவர்களுக்குக் கீழே சிலர் இருப்பதைப் பெருமையாகக் கருதிக்கொண்டு அதனால் அவ்ர்களுக்கு மேலே சிலர் இருக்கும் அவமானத்தப் பற்றிக் கவலைப்படாமல் காலந்தள்ள முயன்றார்களானால், அவர்களும் சதுர்வர்ணக்கொள்கையை நடைமுறைப்படுத்துக் கொடுங்குற்றத்தைச் செய்பவர்களாவார்கள்; தங்கள் கடமையிலிருந்து வழுவியர்களாவார்கள். அவர்களுக்கும் இங்கே தண்டனைதான் காத்திருக்கும்.

இந்தியாவில் யார் பிராமணரின் இல்லங்களில் பிறக்கிறார்களோ, அவர்களின் கடமை மிக அதிகமானது. கடவுளின் பேரால் மற்றவர்களை இழிவுபடுத்தி அடக்கியாள நினைப்பதும், கடவுள்தாம் வர்ணபேதத்தை உருவாக்கினார் என்று ரிக்வேதம், பகவத்கீதை ஆகியவற்றில் எழுதிவைத்துக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றுவதும் பிராமணர்கள் செய்யும் பாவகரமான செயல்கள் ஆகும். இவற்றை எதிர்த்து பாரதியார் தனது இறுதிக்காலத்தில் செயல்பட்டது போலச் சாதிகளற்ற சமுதாயம் உருவாகச் செயல்படவேண்டியது இன்றைய பிராமணர்கள் கடமையாகும். அதைவிடுத்து, இன்றைய சதுர்வர்ணச் சமூக அமைப்பு அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்று நினைத்து சாணக்கியன், சந்திரசேகரேந்திர சரஸ்வதி, சோ, சுப்பிரமணியன் சாமி, குருமூர்த்தி போன்று செயல்பட்டார்களானால், இங்கே அவர்களுக்குக் காத்திருப்பது நரகமாகத்தான் இருக்கும். எனவே, அவர்களுடைய குறிக்கோளும், மனித சமுதாயத்திற்கெதிரான, இந்த சதுர்வர்ண அமைப்பை அழிப்பதாகவே அமைய வேண்டும். எப்படி வெள்ளையராகப் பிறந்தாலும், அநீதியின் பக்கம் நில்லாமல், கறுப்பர் விடுதலைக்காக, ஆபிரகாம் லிங்கன, வில்லியம் வில்பர்ஃபோர்ஸ், ஹென்றி டேவிட் தாரோ, மாரிஸ் டீஸ் முதலானோர் போராடினார்களோ அதுபோல பிராமணர்களாகப் பிறப்பிக்கப்பட்டவர்களிலிருந்து அறவுணர்வுள்ள பல சிந்தனையாளர்கள் வரவேண்டும். அதற்காகத்தான் அவர்கள் அங்கே அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மனித குலத்தின் பொது நன்மைக்காக அவர்கள் வேலை செய்ய அவர்களுக்குத் தரப்பட்ட வாய்ப்பு இது. எனவே, அவர்கள் அறத்தின் பக்கம் நின்று சாதிகளற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறார்களா அல்லது சபலத்திற்கு ஆட்பட்டு சதுர்வர்ண அமைப்பை மீண்டும் கட்டமைக்கப் போகிறார்களா என்பதை வானுலகம் கவனித்துக்கொண்டிருக்கும்.

இன்றைய மத்திய அரசு மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்க நினைக்கும் அரசாக இருக்கிறது. சதுர்வர்ணச் சிந்தனை உள்ளவர்கள் நேர்மையாகவோ, பொது நலன் கருதியோ சிந்திக்கமாட்டார்கள்; செயல்படமாட்டார்கள். இன்று இந்திய அரசாங்கத்தில் உள்ளவர்கள் மக்களைக் கண்காணிக்கப் பெகசுஸ் (Pegasus) உட்படப் பல வகையான கணினி மென்பொருள்களைப் பயன்படுத்திகின்றார்கள். மக்களை உளவு பார்க்கிறார்கள். நீதிபதிகளை வேவு பார்க்கிறார்கள். ஆனால், அவர்களிடம் உள்ளதைவிட மிகப்பெரிய மென்பொருள் இங்கே வானுலகில் இருக்கிறது. அது இன்றைய ஆட்சியாளர்களையும், அவர்களுடைய கொடுஞ்செயல்களுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகளையும், அதனை எதிர்த்துப் போராடாத கோழைகளையும் கண்காணிக்கிறது. இதற்காக இங்கு உள்ள ஆதார் எண்ணில் பதிவுகள் தொடர்ந்து செய்யப்பட்டுக்கொண்டே உள்ளன.

இறைவன் படைத்த மக்களை பல்வகைச் சாதியினராகப் பிரித்து உயர்வு தாழ்வு கற்பித்தவர்கள் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். இங்கே அவர்கள் மீளவும் வரும்போது அவர்களுடைய பூவுலக அந்தஸ்து எதுவும் அவர்களுக்குப் பயன்படாது. அவர்கள் நேர்மையானவர்களாக வாழ்ந்தார்களா, அநியாயத்திற்கெதிராகப் போராடினார்களா அல்லது தன்னலத்திற்காகப் பொதுநலனைப் பலியிட்டார்களா என்பவை மட்டுமேதாம் இங்கே ஆராயப்பெறும்.
சாமுவேல் மட்டீர் தனது Native Life in Travancore என்ற 1833ல் பதிப்பித்த நூலில், இந்தியாவில் பிராமண வல்லாதிக்கமும் அதனால் மக்கள் சமுதாயம் அனுபவிக்கும் கொடுமைகளையும் பற்றிக் குறிப்பிடும்போது, இந்தக் கொடுமைகள் இவ்வளவு காலம் தொடர்வதற்குக் காரணம் பிராமணரல்லாத மக்களில் படித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள் ஆகியோரின் பலவீனமான இயல்பும் (Weakness of character) , செயல்தூய்மை இல்லாததும் (Want of conscientiousness), ஒழுக்கமான நல்வாழ்வுக்காக எதிரிகளை எதிர்த்து நிற்கும் அஞ்சாமை உணர்வு இல்லாததும் (Moral courage) , தங்கள் போராட்டத்தில் தங்களுக்குத் தாங்களே உதவி (Self Help) செய்துகொள்ளும் பண்பு இல்லாததுந்தாம் என்று கூறுகின்றார். இவ்வாறாக இவர்கள் பயந்தாங்கொள்ளிகளாக இருப்பதால், தங்களுக்குக் கொடுமைகள் இழைக்கும் சமூகநியதிகள் குறித்துக்கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் துயரில் உழல்கின்றனர் என்று கூறுகிறார்.

“இந்த பிராமணரல்லாதாரில் படித்தவர்களாக இருப்பவர்கள் பிராமணப் பூசகர்களைப்பற்றியும் அவர்களின் அதிகாரத்தையும், மூட நம்பிக்கைகளையும், கேடுவிளைக்கும் நடைமுறைகளையும் பற்றியும் இழிவாகப் பேசுவார்கள். அத்துடன் இவை தொடர்பாகச் செய்யவேண்டிய சீர்திருத்தங்களைப் பற்றியும், உண்மையான புனிதத்தன்மை என்றால் என்பது பற்றியும், நாட்டுப் பற்றையும் பற்றியும் பேசுவர். ஆனால், இது தொடர்பான சுமையைச் சுமந்து, தனது மக்களுக்காகவே வாழ்வதும் தனது மக்களுக்காகத் தன் உயிரையே கொடுப்பதுமாக தன்னையே ஈந்து போராடும் உண்மையான சீர்திருத்தவாதியிடம் உள்ள தன்னல மறுப்போ நெஞ்சுரமோ அவர்களுக்கு இல்லை. இந்த (பிராமணரல்லாத) மக்கள் தாங்கள் வாழும் இந்தச் சமுதாயத்தில் உள்ள இந்தக் குறைகளைக் களைந்து சமூகத்தைப் சீர்திருத்தி வளமாக்குவதற்கு யாராவது வெளியார் முன்வந்து போராடிக் காப்பாற்றுவார்களா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று சாமுவேல் மட்டீர் கூறுகிறார். (“Educated Hindus will talk contemptuously of the Brahman priests and their authority, of superstition and injurious customs, of reform and true nobility, and of patriotism, while they have not the self-sacrifice or courage to put forth a finger to bear the burden of the true reformer, who is prepared to suffer for the good of others, and to live or to die for his country or his fellow men. They indulge in vague looking out of themselves for the forces that are to regenerate the society in which they move” – Page 410 & 411)
பூவுலகில் இந்தியத் துணைக்கண்டத்திற்கென்று தேர்வு செய்யப்பட்டு இங்கிருந்து மக்கள் அனுப்பப்பட்டுள்ளதன் காரணம் அவர்கள் அங்கே கும்மாளம் போட்டுக்கொண்டு இருப்பதற்காக அல்ல. அறத்தாற்றில் வாழத்தான் அவர்கள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர். பூவுலகில் நியாயத்திற்காகப் போராடுவதுதான் அறவாழ்வு. அன்புமிகு உலகாக இந்தியத் துணைக்கண்டம் விளங்க வேண்டுமாயின், வெறுப்பு மற்றும் ஆணவத்தை அடித்தளமாக வைத்து பிராமணர்களால் கட்டப்பட்டுள்ள சதுர்வர்ண அமைப்பை, அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சதுர்வர்ண பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடியாகவேண்டும். அதற்காகத்தான் அவர்க்ள் அங்கே அனுப்பப்பட்டுள்ளனர்.

எளியோரைத் தாழ்த்தி எல்லாக் காலத்தும் தொடரும்எண்ணற்ற சதிச்செயல்களால் பிராமணர்களுக்கு மாற்றாரை அடிமையாக்கி வைத்திருக்கும் அநாகரிகமானதொரு அமைப்புதான் இந்தச் சதுர்வர்ண அமைப்பு. இது உதறி எறியப்படவேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டுலகம். இன்றைய இந்தியாவில் பண்புடையார் ஒவ்வொருவரும், பிராமணர்களின் சதுர்வர்ண அமைப்பை எதிர்த்துப் போராடவேண்டும். கோயில் கருவறை முதல் கல்லறை வரை அனைவரும் சமம் என்ற நிலையை மீண்டும் உருவாக்கப் போராடுவோரே பண்புடையர் ஆவர். இங்கிருந்து இந்தியாவில் பிறப்பெடுக்குமாறு, அனுப்பப்பட்டவர்களின் வாழ்க்கை என்பது உண்மையில் அவர்களுக்கான வாழ்க்கைத் தேர்வு ஆகும். இந்த வாழ்க்கைத் தேர்வில் எத்தனை பேர் வெற்றி பெறுகிறார்கள் என்பதை வானுலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. இன்றைய சூழலில் EWS இடஒதுக்கீட்டின் தீமைகளிலிருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க, அனைவருக்கும் விகிதாரப் பங்கீடு (Proportionate Representation) கோரி அந்தக் கோரிக்கையில் வெல்வதுதான், பிராமணரல்லாத அனைத்துப் பிரிவு மக்களின் கோரிக்கையாக அமையவேண்டும். இது காலத்தின் கட்டாயம். எனவே, செயல்தூய்மையோடு, தன்னலமற்று இம்மக்கள் போராடுவர் என்று நம்புவோமாக!
(திருவள்ளுவர் ஆழ்ந்த கவலையோடு தனது உரையை நிறைவு செய்து எழுகிறார். அவையின் அன்றைய அமர்வு நிறைவுக்கு வருகிறது)
(தொடரும்)

கட்டுரையாளர்: வேயுறுதோளிபங்கன்

By Editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *