சில நாட்களுக்கு முன்பு தென் துருக்கியிலும், வடசிரியாவிலும் 7.8 ரிக்டர் அளவுக்கு மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த பயங்கரமான நிலநடுக்கத்திற்குப் பிறகு, கட்டிட கலை வல்லுனர்கள் இனி வரும் காலங்களில் இது போன்ற நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் எப்படியான அஸ்திவாரங்களைக் கொண்ட கட்டிடங்களை எழுப்ப வேண்டும் என்று ஆய்வுகளைத் துவக்கியுள்ளார்கள். இந்த நேரத்தில், உஸ்மானிய்யா பேரரசின் மிகப்பெரிய “கட்டிடக் கலை வல்லுநர் மிஃமார் ஸினான் பாஷா”வும் அவரது கட்டிடக் கலையும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அப்படி என்ன செய்தார் மிஃமார் சினான் பாஷா?
துருக்கி நாட்டிற்கு நில நடுக்கம் புதியதல்ல. வரலாறு நெடுகிலும் துருக்கியில் பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். குறிப்பாக தலைநகர் இஸ்தான்புல்லில் பல நிலநடுக்கங்கள் நிகழந்திருக்கின்றன.
பதினாராம் நூற்றாண்டில் உஸ்மானிய்யா பேரரசின் சுல்தானாகிய சுல்தான் சுலைமான் அல் கானூனி, அப்போதைய புகழ்பெற்ற கட்டிட கலை வல்லுநரான மிஃமார் ஸினானை அழைத்து “இஸ்தான்புலில் பிரம்மாண்டமான மஸ்ஜித் (பள்ளிவாசல்) கட்ட வேண்டும். அது அல்லாஹ்வின் கிருபையால் உலக அழிவுநாள் வரை நிலைத்து நிற்க வேண்டும்” என்று கூறினார். சுல்தானின் ஆணைகள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இஸ்தான்புல் போன்ற நிலநடுக்க நகரத்தில் உலக அழிவு நாள் வரை சிதையாமல் நிற்கும் மஸ்ஜிதைக் கட்டுவது சாதாரணமான விஷயமல்ல.
என்றாலும் மிஃமார் ஸினான் இது சாத்தியமில்லை என்று நினைக்கவில்லை. நிலத்தின் தரம் மற்றும் அடித்தளத்தை ஆய்வு செய்து, சவால் மிகுந்த இந்தப் பணியைச் செய்வதற்கு உறுதி எடுத்தார். அதன்படி வேலைகளைத் தொடங்கிய சினான், கட்டிடக் கலை நுட்பங்களை பயன்படுத்தி ஏழு ஆண்டுகளில் மாபெரும் பணியை நிறைவு செய்தார்.
அதிநவீன கட்டிடக்கலை தொழில்நுட்பங்கள் கொண்ட இக்காலத்தில் கூட கட்டிடங்களின் ஆயுட்கால உத்திராவாதம் 100 முதல் 150 ஆண்டுகளே அளிக்க முடியும்.
ஆனால் ஐந்து நூற்றாண்டுகள் கடந்த பிறகும், ஒரே நேரத்தில் 5000 மக்கள் தொழும் அளவிற்கு பரப்பளவை கொண்ட சுலைமானிய்யா மஸ்ஜித் இன்றும் கம்பீரத்தோடு காட்சி தருகிறது.
கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் இஸ்தான்புலில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 89. அதில் 15 நிலநடுக்கங்கள் 5.5 ரிக்டர் அளவைத் தாண்டியவை.எனினும், இதுவரை இந்த மஸ்ஜித் எந்தவொரு சேதாரத்தையும் சந்தித்ததில்லை.
கட்டிடக்கலையின் நிபுணரான மிஃமார் சினானின் கைவண்ணத்தில் மேலும் சில இறையில்லங்கள் இதேபோன்று கட்டப்பட்டு எவ்வித சேதாரமும் அடையாமல் வீற்றிருக்கின்றன.
மஸ்ஜித் ஸலிமிய்யா, மஸ்ஜித் சேசாதே போன்ற ஆயிரக்கணக்கான நபர்கள் நின்று தொழக் கூடிய பிரம்மாண்டமான மஸ்ஜிதுகள் மிஃமாரின் சாதனையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
தவிர, மிஃமாரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட துருக்கியின் பிரம்மாண்டமான பாலங்கள், கட்டிடங்கள் யாவும் இதுவரை எந்தவொரு சேதாரத்தையும் சந்தித்ததில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்.
மிஃமார் சினானின் நுட்பங்கள்:
1. குராஸான் கலவை: செல்ஜுக் மற்றும் உஸ்மானிய்ய கட்டிடக்கலையில், கட்டிடங்களில் கற்களுக்கு இடையே இந்த கலவையையே பயன்படுத்துவார்கள்.இது எகிப்திய பிரமிடுகளின் காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கலவையாகும்.நிலநடுக்கம் ஏற்படும் போது இது அடித்தளத்திற்கு ஒரு நெகிழ்வுத் தன்மையை கொடுக்கிறது.
2. ஈய வளையங்கள்: நிலநடுக்கங்களால் ஏற்படும் அதிர்வுகளால் கற்கள் விழாமல் இருப்பதற்காக, மினாராக்களின் கற்களில் துளையிட்டு, ஈய வளையங்கள் மூலம் அவற்றை ஒன்றோடு ஒன்றை இணைத்திருக்கிறார் சினான். இன்று ஜப்பானில் பயன்படுத்தப்படும் Flexible Joint Technology யின் முன்னோடி இன்ஜினியர் சினான்.
நிலநடுக்கம், நில அதிர்வு ஏற்படும் போது கட்டிடத்தின் அடித்தளத்தில் நெகிழ்வுத் தன்மை உருவாகி அதிருமே தவிர, மேலே உள்ள கட்டிடம் இடிபடாமல் தாங்கி நிற்கும். (https://youtu.be/o2DV8l37v3Q)
3. நிலநடுக்கங்களை கண்டறியும் கருவிகள்: 1585 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட முராதியா மஸ்ஜித், (இது மிஃமார் சினானின் உன்னத திறமையின் வெளிப்பாடு). இந்த மஸ்ஜிதின் மிஹ்ராபின் (தொழுகை நடத்துபர் நிற்கும் இடம்) இரு முனைகளிலும் சுழலும் உருளைக் கற்கள் அமைந்துள்ளது. அதனை நம்மால் சுழற்ற முடிந்தால், கட்டிடம் நன்றாக உள்ளது என்று பொருள். நில அதிர்வால் கட்டிம் தனது வலுவை இழக்கப் போகிறது என்றால் அதனைச் சுழற்ற முடியாது. 438 வருடங்களில் ஒரு முறை கூட இதனது சுழற்சி நிற்கவில்லை என்பது அதிசயமான உண்மை. (https://youtu.be/91sCmw584_Y)
– TRT (துருக்கியின் அரபி செய்தி தளம்)
கட்டுரையாளர்: நியாசுதீன் புகாரி நத்வி