ராஜஸ்தான் மாநிலத்தில், பார்மர் மாவட்டத்தில் உள்ள பகாசர் எனும் ஊரில், 2022 டிசம்பர் 25ம் தேதியன்று, மனுஸ்மிருதியின் நகலை எரிக்க வந்தனர். இது ஒன்றும் புதிதல்ல. 95 ஆண்டுகளாக இங்கு நடப்பது தான்.
1927ம் ஆண்டு டிசம்பர் 25ல் இதே இடத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் மனுஸ்மிருதியை எரித்தார். “இது மதத்தின் அடையாளம் அல்ல, மாறாக சமத்துவமின்மை, கொடுமை மற்றும் அநீதியின் அடையாளம். தலைமுறை தலைமுறையாக துன்பங்களுக்குக் காரணமான மனுஸ்மிருதியை பகிரங்கமாக எரிக்க வேண்டும்” என்று அப்போது தீர்மானம் கொண்டு வந்தவர் பிராமணரான சஹஸ்த்ரபுத்தே ஆவார்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த “மனுஸ்மிருதி தஹன் திவஸ்” எனும் பெயரில் அதே இடத்தில் மனுஸ்மிருதி எரிக்கப்பட்டு வருகிறது. விடுதலைக்கு முன்பும், பின்பும் சென்ற ஆண்டு வரையில் இதை யாரும் தடுத்ததில்லை.
ஆனால் சென்ற டிசம்பர் 25ஆம் தேதி எரிக்கக் கூடாது என பார்மர் மாவட்ட காவல்துறை தடுத்தது. அந்த மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்துத்துவ அமைப்புகளின் அழுத்தத்திற்கு பணிந்து, ‘மத நம்பிக்கைகளை இழிவு படுத்துதல், வழிபாட்டு தளத்தில் கலகம் செய்தல், வழிபாட்டுக்காகத் திரண்டு இருந்தவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்’ உள்ளிட்ட குற்றங்களின் கீழ் அஜ்மல், அம்ருத் ராம், ரவ்தா ராம் மற்றும் ஷங்கர்லால் மேக்வால் என்ற நான்கு இளைஞர்களைக் கைது செய்தது.
இந்திய அரசியல் சாசனம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுகிற மனுஸ்மிருதி, அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானதாகும். அதனை எரிக்க முயன்றதைக் குற்றமாகக் கருதி, காவல்துறை கைது செய்வது இந்தியாவிலேயே இது முதல் முறையாகும்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 1927 அதை எரிக்கும் போது `பல நூற்றாண்டுகளாக இந்துக்களை வர்ணங்களாகப் பிரித்து, சூத்திரர்களை அடிமட்டத்தில் வைக்கும் `சட்ட விதியாக’ ஆதிக்க சாதியினர் கருதுகின்றனர். எனவே இதை எரிக்கிறோம்’ என்று பேசினார். இப்போதும் அந்த ஆதிக்கம் உயிரோடு இருக்கிறது. ஆர்எஸ்எஸ்-பிஜேபி ஆட்சியில் அது இன்னும் கூடுதல் அதிகாரம் பெறுகிறது.
வழக்கம்போல இயல்பாகவே இந்த நிகழ்வு தொடங்கியது. ஆனால் திடீரென சங்க பரிவார அமைப்புகள் இந்துக்களின் புனித நூல்கள் எரிக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்ட முறையில் சரமாரியாக வதந்திகளைப் பரப்பினார்கள். பூரா சிங் என்ற பிஜேபி தலைவர், ஏராளமானவர்களை அழைத்து வந்து அங்கு பதட்ட நிலையை உருவாக்கினார்.
எரிப்பதற்காக கொண்டுவரப்பட்டது மனுஸ்மிருதியின் நகல் என்று நன்கு தெரிந்திருந்தும் கூட, பகவத் கீதை எரிக்கப்பட்டதாகத் திரித்து, போலீஸ் தனது சட்டவிரோதச் செயலை நியாயப்படுத்த முயல்கிறது. எந்தச் சான்றும் இல்லாத நிலையில் இந்துத்துவ அமைப்புகளின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கிறது காவல்துறை.
கர்நாடகாவில், 2023 ஜனவரி 2ம் தேதியன்று, மாநில பிஜேபி தலைவர் நளின் கத்தீல், தனது கட்சி வாக்குச்சாவடி ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக நடந்த கூட்டத்தில் பேசும்போது, `நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்- சாலை, குடிநீர், சாக்கடை போன்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் பேசாதீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் ‘லவ் ஜிஹாதை’ நிறுத்த விரும்பினால், அதற்கு பாஜகவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் பரப்புரை செய்யவேண்டும்’ என, சாவடி அளவிலான பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இந்துப் பெண்களை, முஸ்லிம் இளைஞர்கள் வலிந்து காதலித்து தமது மதத்துக்கு கடத்திச் செல்கின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ‘லவ் ஜிஹாத்’ என்று திட்டமிட்டு இருப்பது போல மிரட்டி, பாதுகாப்பற்றவர்களாக இந்து மக்களை போலியாக உணரவைத்து, என்னை விட்டால் உனக்கு வேறு வழியே இல்லை என அச்சுறுத்தும் உத்தி மட்டுமே!
அதே ஜனவரி 2ல், சட்டீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூரில், மதமாற்றம் செய்வதாக வதந்தி பரப்பி, கிறித்தவ தேவாலயத்துக்குள் பிஜேபி கும்பல் நுழைந்து அடித்து நொறுக்கியது. தடுக்க முயன்ற, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் சதானந்தா குமாரை பின்பக்கமிருந்து தாக்கி மண்டையை உடைத்துள்ளது.
தேசம், வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம் என்று பேசுவதெல்லாம் ஆளை ஏய்க்கும் தந்திரம். வெறுப்பை விதித்து, மக்களைப் பிரிப்பதே வெற்றி பெறுவதற்கு அவர்கள் கையாளும் மந்திரம்! வினை விதைத்தவன் திணை அறுக்க முடியாது.
கட்டுரையாளர்: நடராஜன்