அன்று முதல் இன்று வரை கம்பராமாயணத்தை சுவைபட மக்கள் மத்தியில் பேச, பாட பலர் உள்ளார்கள். அதில் முக்கியமானவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் பிற்போக்குதனம் நிறைந்த காலத்திலேயே இந்துக்கள் போற்றிய ராமாயணத்தைப் படித்து கம்பரின் கருத்துக்களை உள்வாங்கி அதை ருசித்து தமிழ் மக்களுக்கு தெளிவாக சொற்பொழிவாற்றியவர் தாவூத்ஷா என்றழைக்கப்பட்ட தமிழ் அறிஞர்.
1920ல் `தத்துவ இஸ்லாம்’ என்கிற பெயரில் பத்திரிக்கையைத் தொடங்கினார். அதைப் பின்னர் `தாருல் இஸலாம்’ எனப் பெயர் மாற்றினார். 64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழ், இன்றைய ஆனந்தவிகடன் போல் வெளிவந்தது. அதில் அதிக முக்கியத்துவம் இஸ்லாம் சமூகத்துக்கு என இருந்தது.
இதழில் உள்ள கட்டுரைகள் உட்பட எங்காவது ஒரு இடத்தில் ஒரு எழுத்துப் பிழையைக் கண்டறிந்து சொல்லும் வாசகருக்கு `இரண்டனா அஞ்சல் தலை பரிசு’ என அறிவித்திருந்தார். இதனால் வாசகர்கள் வரிக்கு வரி படித்து எழுத்துப் பிழை உள்ளதா என தேடித்தேடி சலித்துப்போயினர். எழுத்துப் பிழை இல்லாத அளவுக்கு கட்டுரைகளை வாசித்து, திருத்தம் செய்வார். இதற்காகவே தமிழ் புலவர் ஒருவரை பணியில் வைத்திருந்தார்.
இலங்கை, மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் வசித்த தமிழறிந்த இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது தாருல் இஸ்லாம் இதழ். 1932ல் `ரஞ்சித மஞ்சரி’ என்கிற பெயரில் ஜனரஞ்சகமான மாத இதழையும் தொடங்கினார்.
சுதந்திரபோராட்டக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் தாவூத்ஷா. அப்போது பிரச்சாரத்துக்காக 1934ல் `தேச சேவகன்’ என்கிற பெயரில் பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார். இவரது உழைப்பை அங்கீகரித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தரப்பட்டது. அதேப்போல் நகரசபை தலைவர் பதவியும் பெற்றார்.
அரசியல் காலக்காட்டத்தில் போராட்டம், பொதுக்கூட்டம், இலக்கியமேடை என நின்று விடாமல் எழுதிக்கொண்டு இருந்தார். 1934ல் இந்திய அரசியல் பற்றிய தனது பார்வையால் எழுதப்பட்ட வரலாற்று தொகுப்பு என்கிற நூலையும், பின்னர் கான்அப்துல் கபார் கான் என்கிற எல்லைப்புற காந்தி பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார்.
இதழ்களை தொடர்ந்து வெளியிடுவதற்காகவே கார்டியன் என்கிற அச்சகத்தை சொந்தமாக வாங்கி சென்னையில் நடத்தினார்.
சென்னையில் 1941ல் முஸ்லீம் லீக் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு தனது செய்தித்தாளை தந்தார். அதில் ஒரு புதுமையாக, காலை முதல் மதியம் வரையிலான செய்திகளை மாலையிலும், மதியம் முதல் இரவு வரையிலான செய்திகளை மறுநாள் காலை பேப்பர் வழியாக தந்தார். அதாவது ஒரே நாளிதழ் காலையும், மாலையும் வெளிவந்தது.
பேச்சாற்றல் மிக்க தாவூத்ஷா, கம்பராமாயணத்தை வரிக்கு வரி படித்துள்ளார். அதன்பாடல்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். அந்த பாடல்களின் கருத்தை சுவைபட கூட்டங்களில் விளக்குவார். இவரது கம்பராமாயண சொற்பொழிவை கேட்க இலக்கியமறிந்த பெரும் கூட்டமே இருந்தது. இதனால் இவரை கம்பராமாயண சாயுபு என புனைப்பெயர் வைக்கும் அளவுக்கு புகழ்பெற்றுயிருந்தார்.
கட்டுரையாளர்: அஹ்மது அலிகான்