இந்தியாவின் உண்மையான வரலாறு எது?
குறிப்பிடத் தகுந்த இந்திய வரலாற்று ஆய்வாளராகிய இர்பான்அபீப் அவர்களால் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு அரங்குகளில் வாசிக்கப்பட்ட 10 ஆய்வுக்கட்டுரைகளை 488 பக்கங்களைக் கொண்ட நூலாக என்.சி.பி.ஹெச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய சமூகம் குறித்து கற்றுக்கொள்ளவும், விவாதிக்கவும், மறுக்கவும், ஏற்றுக்கொள்ளவுமான பல்வேறு வாய்ப்புகளை வழங்கும் இந்நூல் தமிழ் அரசியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் முக்கியமான நூலாகும்.
1) `மார்க்சிய வரைவியல் குறித்த பிரச்சினைகள்’ என்னும் முதல் கட்டுரையைத் தவிர ஏனைய 9 கட்டுரைகளும் இந்தியாவைக் குறித்த ஆய்வுக் கட்டுரைகளாகும். அவற்றின் தலைப்புகளே அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கக் கூடியது.
2) இந்தியாவைப் பற்றிய மார்க்சின் பார்வை.
3) ஆங்கிலேயர் வருகைக்கு முந்திய இந்தியாவில் நிலவுடமையின் சமூகரீதியான வினியோகம்: ஒரு வரலாற்று ஆய்வு.
4) இந்திய வரலாற்றில் விவசாயிகள்.
5) இந்திய வரலாற்றில் சாதி.
6) முகலாயர்கால இந்தியப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக்கான வாய்ப்புகள்.
7) முகலாய இந்தியாவில் வர்க்கப் போராட்ட வடிவங்கள்,
காலனியத்துக்கு முந்திய மற்றும் காலனிய இந்தியாவில் மூலதனத் திரட்சி.
9) இந்தியப் பொருளாதாரம் காலனிய மயமாதல்.
10) காலனியப் பொருளாதாரம் குறித்த ஒரு ஆய்வு.
இதில்மூன்றாவது கட்டுரையிலிருந்து காலனியப் பொருளாதாரம் குறித்த ஒரு ஆய்வு எனும் பத்தாவது கட்டுரைவரையிலும் உள்ளவை இந்தியாவைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளாகும்.
கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூறாண்டுவரையிலான காலகட்டங்களில் சில பகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மிகவிரிவான ஆய்வைத் தந்திருக்கிறார் இர்பான் ஹபீப்.
இந்த எட்டுக் கட்டுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருள்கள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன:
1) நிலவுடமை
2) விவசாயிகள்
3) சாதிகள்
4) முதலாளித்துவவளர்ச்சி
5) வர்க்கப் போராட்டங்கள்
6) மூலதனத்திரட்சி
7) காலனியமயமாக்கம்
8) காலனியப் பொருளாதாரம்.
இந்தக் கட்டுரைகளிலுள்ள தகவல்கள், இர்பானின் ஆய்வுமுறை, அவர் வந்தடையும் முடிவுகள்; இவைகள் ஒருபுறமிருக்க, இந்திய வரலாற்றை இப்படியான ஒரு கண்ணோட்டத்தைத் தவிர, வேறு எந்தக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும் அவைகள் உண்மையாக இருக்கமுடியாது, மேலும் அதனால் பலனேதும் இருக்கமுடியாது. இந்தியாவைக் குறித்து பலரும் ஆய்வு செய்துள்ளார்கள் எனினும், அவைகள் இர்பான் ஹபீபின் ஆய்வில் இருபது சதவீதத்தைக் கூடப் பூர்த்தி செய்யாது என்பதும் உண்மையே!.
கட்டுரை 1: “சமூக அமைப்புகளும் வர்க்கப்போராட்டமும்” எனும் உட்தலைப்பில் சில முக்கியமான விளக்கங்கள் உள்ளன. குறிப்பாக, விளிம்பு நிலை வர்க்கங்கள் என்று சொல்லப்படுவது தவறானது என்பதை அபீப் விளக்குகிறார். வர்க்கமற்ற குழுக்களையே விளிம்பு நிலைச் சமூகமாக உருவகப்படுத்துவது ஆளும் வர்க்கக் கருத்துடன் உடன்பட்டுப் போவதாக அமையும் என்பதும், இந்த விளிம்பு நிலைச் சிந்தனையாளர்களை, “துயரங்களை விளக்குவதில் மகிழ்ச்சி கொண்டவர்கள்” என மதிப்பிடுவதும் சரியானதே.
மேலும், அத்தகைய மக்களின் கடந்த காலக் குறுகிய கண்ணோட்டங்களை நிராகரித்து தொழிலாளர்களின் சித்தாந்தத்தை ஏற்கவைத்து, விடுதலைக்கான பொதுவான போராட்டத்தில் ஒருங்கிணைந்து நிற்பதன் மூலம்தான் தீர்வு உண்டாகும் என அவர் குறிப்பிடுவதும் மிகச்சரியானது. தமிழ்ச் சூழலிலும் கூட இன்னும் விளிம்பு நிலைக் கருத்தாக்கங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள் தங்களது கருத்து தவறானது என்பதை உணர வேண்டும்.
“முதலாளித்துவமும் காலனியாதிக்கமும்” எனும் உட்தலைப்பிலமைந்த பகுதியில் 1840க்கும் 1860க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரிட்டனில் முன்னணியில் இருந்த முதலாளித்துவ அரசியல்வாதிகள் காலனியக் கொள்கையை எதிர்த்ததும் அதைப்பற்றி லெனின் கூறுகையில், அவர்கள் காலனிய விடுதலையையும், பிரிட்டனிலிருந்து அவை முழுமையாக விடுபடுவதும் தவிர்க்க முடியாததும், விரும்பத்தக்கதுமாகும் எனக் கருதினார்கள் எனக் குறிப்பிடுவதை மார்க்ஸ் அக்காலகட்டத்திய இந்த தாராள வர்த்தகர்களின் காலனிய எதிர்ப்பை சந்தேகக்கண் கொண்டு பார்த்ததை லெனின் அறியாததால்தான் லெனின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அபீப் குறிப்பிடுவது ஆய்வுக்குரியது.
காரணம், துவக்க காலத் தாராள வர்த்தகர்கள் இன்னும் முழுமையான தாராள வர்த்தகர்களுக்குரிய வளர்ச்சியை அடையாதபோது, அவர்கள் தேசியப் பார்வையிலிருந்து விடுபடாதபோது அவர்கள் காலனியக் கொள்கையை எதிர்ப்பதற்கான விருப்பம் என்பது சரியானதுதான் என்றும் லெனின் கருத்தும் சரியானதுதான் என்பதையும் நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. இது இன்னும் வளர்ச்சியடையாத ஆரம்பகட்ட தாராளவாத முதலாளிகளின் விருப்பம் என்றே நாம் பார்க்க முடியும்.
கோர்லெ எழுதிய “மருது” எனும் நூலில் அவர், பிரிட்டனை சபிக்கிறார். பிரிட்டன் அரசு கடலில் மூழ்கட்டும் என்கிறார். காலனியச் சுரண்டலின் கொடுமையைக் கண்டு குறிப்பாக, தமிழகத்தின் சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு கம்பெனிப்படை ஏற்படுத்திய கொடுமைகளை எண்ணியே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். எனவே அவர்கள் தாராளமுதலாளிகளாக இன்னும் வளர்ச்சியடையாதபோது தேசியநலனை முன்னிறுத்தி காலனியக் கொள்கையை எதிர்ப்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
அவருடைய அடுத்த தலைப்பான தேசியஇயக்கம் என்ற பகுதியில் குறிப்பிடுவதுபோல இந்தியாவில் தாதாபாய் நவ்ரோஜி உள்ளிட்டவர்கள் காட்டிய தேசப்பற்றை மாயை எனக் கருதக்கூடாது எனும்போது பிரிட்டன் முதலாளிகளின் தேசப்பற்றை லெனின் சந்தேகக்கொண்டு பார்க்கவில்லை எனக் கருதுவது ஏற்புடையதல்ல.
அடுத்துள்ள “தேசிய இயக்கம்” எனும் பகுதியில் முதலாளித்துவ ஜனநாயக மதிப்புகளை வலியுறுத்த வேண்டியது அவசியமானது என்று அவர் கூறுவது பரிசீலனைக்குரியது.
இந்தியாவில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயக மதிப்பீடுகளை மேற்கத்திய நாடுகளில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயக மதிப்பீடுகளோடு ஒப்பிட முடியாது. முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமும் சமரசம் செய்துகொண்டிருக்கிற இந்தியா போன்ற நாடுகளில் நிலவும் முதலாளித்துவ ஜனநாயகமானது முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு முகமூடியைப் போன்றது, போலியானது. எனவே கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் போலியான முதலாளித்துவ ஜனநாயக முறையை வற்புறுத்த வேண்டும் என்பது அவசியமற்றது. மாறாக இதைக் கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்பதே சரியானது.
கட்டுரை 2: இனி வரவிருக்கின்ற கட்டுரைகள் அனைத்திற்கும் இந்தக் கட்டுரையே துவக்கப் புள்ளியாக இருக்கிறது. தனக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படியில் மார்க்ஸ் இந்தியா குறித்துக் கூறிய கருத்துக்கள் மறுக்க இயலாதவையாகும். இதுவரை அப்படி யாரும் மறுத்ததுமில்லை. சில அரைவேக்காடுகள் மார்க்சியத்தை மேலைநாட்டின் தத்துவம் என்றும், அது இந்தியாவிற்கு ஜீரணமாகாது என்றும் உளறித் திரிவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர்கள், மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிச் சிந்தித்துள்ளது குறித்த இந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு வேறு எந்த உள்நாட்டுப் பேர்வழியாவது இப்படி ஒரு கண்ணோட்டத்தோடு இந்தியாவை அணுகியிருக்கிறார்களா? என யோசிக்கவேண்டும்.
மார்க்ஸ் இந்தியாவைப் பற்றிக் கூறியிருக்கும் கருத்துக்கள் மிகுந்த அக்கறையுள்ளவை. ஒருபுறம், 1857-ஐ ஒரு தேசியப்புரட்சி என வர்ணித்த அவர், விவசாயிகளிடம் நல்லெண்ணம் காட்டாத, மத மூடத்தனங்களைச் சகித்துக்கொண்ட ஆங்கிலேயர்களை இன்னொருபுறம் மிகக் கடுமையாகச் சாடுகிறார். மார்க்ஸின் இந்தத் தடுமாற்றம் மனிதநேயத்தின் பாற்பட்டதாகும். குறுகிய மனப்பான்மையுடன், நாகரிகமற்ற, தற்பெருமை கொண்ட, மூடநம்பிக்கைக்களை ஆதரித்து நின்ற அனைத்துப் பெருமிதங்களையும் வரலாற்று ரீதியான ஆற்றலையும் மாறுதலுக்கான அனைத்துத் திறன்களையும் இழந்து நின்ற பழைய சமூகம் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என வலியுறுத்துவதும், சாத்தியமில்லை என்று கூறியிருந்தாலும் அவர் 1857 போராளிகள் பக்கமே நின்றார்.
மார்க்ஸ் 1853 -ல் எழுதுகிறார், “பிரிட்டனிலேயே ஆளும் வர்க்கத்தினர் பாட்டாளி வர்க்கத்தினரால் அப்புறப்படுத்தப்படும் வரை அல்லது இந்தியர்களே ஆங்கிலேய விலங்கை முற்றிலும் உடைத்தெறியும் அளவிற்கு வலிமை பெரும் வரை ஆங்கிலேய முதலாளிகளால் பரப்பப்பட்ட சமூகத்தின் புதிய கூறுகளின் பலன்களை இந்தியர்கள் அடையமுடியாது”. எப்பேர்ப்பட்ட உண்மை. அதை இன்னும் இந்தியர்கள் அடைய முடியவில்லை என்பதை 2013 லும் நாம் புரிந்து கொள்ள முடியும். அபீப் சொல்வது போல, நவீன வரலாற்றில் மார்க்ஸ் ஒரு தன்னிகரற்ற மனிதர்.
கட்டுரை 3: நிலவுடமையின் வினியோகம். ஜமீந்தாரி முறை, ஜாங்கீர் முறை இவைகளைப்பற்றியெல்லாம் நடைமுறைகளிலிருந்தே மிகவிரிவாக எடுத்துரைக்கிறார். முகலாய காலத்தில் ஜமீந்தார்கள் பெற்றிருந்த அதிகாரமும், முகலாயர்களின் வீழ்ச்சியின் போது அவர்களின் அதிகாரம் மாற்றமடைவதையும் பார்க்கிறோம். அதுவரை மக்களின் விரோதிகள் எனும் வகைக்குள் அடங்காமலிருந்த ஜமீந்தார்கள் வெள்ளையர்கள் வருகைக்குப்பின் எவ்வளவு கொடூரமானவர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிகிறோம். சொத்துடமையின் கோரமுகம் இந்திய வரலாற்றில்தான் எவ்வளவு குரூரமாக விளையாடியிருக்கிறது!
கட்டுரை 4: விவசாயிகள்: விவசாயிகளிடையே உள்ள பிரிவுகளை எப்படி வகைப்படுத்துவது? தற்போது அரசாங்கமானது, பெரிய விவசாயி, குறு விவசாயி, சிறு விவசாயி என்றே விவசாயிகளிடம் உள்ள நிலங்களின் அளவுகளை வைத்து வகைப்படுத்துகிறது. இப்படிப் பிரிப்பது உண்மையான பிரிவினை ஆகாது. இது நிலப்பிரபுத்துவக் கண்ணோட்டமாகும். விவசாயிகளை பணக்கார விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், ஏழை விவசாயிகள் என்றே வகைப்படுத்த முடியும். அதுவே சரியானது. பணக்கார விவசாயிகள் என்றால், சொந்தமாக நிலங்களை வைத்துக்கொண்டு அவர்கள் உழைக்காமல் பிறரின் உழைப்பினால் விவசாயம் செய்பவர்கள். இவர்கள் விவசாயிகள் அல்லர். நடுத்தர விவசாயிகள் என்றால், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தங்களுடைய குடும்பத்தின் உழைப்பையே பெரிதும் நம்பி விவசாயம் செய்பவர்கள். ஏழைவிவசாயிகள் என்றால் போதுமான நிலமற்றவர்கள் மற்றும் நிலமில்லாமல் கூலிக்கு விவசாயவேலை செய்பவர்கள். இவர்களே உண்மையான விவசாயிகள். இர்பான் அபீப்பும் இப்படித்தான் வகைப்படுத்துகிறார். ஆனால், இன்றைய அரசாங்கமானது பணக்கார விவசாயிகளையே விவசாயிகள் எனக்கணக்கெடுத்து அவர்களுக்கான திட்டங்களையே இன்று வரையிலும் தீட்டிக்கொண்டிருக்கின்றன.
சிந்துச் சமவெளி நாகரீகத்தில் தோன்றி படிப்படியாக ஆனால், நீண்ட காலமாக மாறிவந்த விவசாயிகளின் மாற்றத்தை விவரிக்கிறார் அபீப். தென்னிந்தியாவை இதில் தனியாகப் பரிசீலிக்கவேண்டும் என்று குறிப்பிட்டே தென்னிந்திய விவசாயிகள் பற்றிய ஆய்வைத் தொடங்குகிறார். இதில் குறிப்பிடத்தகுந்தது, மனு(அ)தர்மம் வடநாட்டு விவசாயிகளை வைசியர்களாகவும் தென்னிந்திய விவசாயிகளை சூத்திரர்களாகவும் வகைப்படுத்தியது. விவசாயம், கைவினைஞர்களுடனான உறவு, ஆட்சிமுறைகள் உருவாகுதல், மாற்றமடைதல், போர், இஸ்லாமியர் வருகை, கிராமக்கட்டமைப்பு, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைக் கட்டுரை தருகிறது.
நிலவரிகள் உயர்த்தப்பட்டதன் காரணமாக விவசாயிகள் செய்த உடனடிக் கலகங்கள் விளக்கப்பட்டுள்ளன. 1930-களில் முகம்மது பின் துக்ளக் நிலவரிகளை உயர்த்திய போது விவசாயிகள் மிகப்பெரும் கலகத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை சுல்தான் மிகக் கொடூரமாகத் தண்டித்திருக்கிறான். ஆயினும் விவசாயிகள் போராட்டங்களைக் கைவிடவில்லை. பல்வேறு காரணங்களுக்காக இன்றுவரையிலும் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அப்போது போராட்டத்திற்குத் தடையாக இருந்ததாக இர்பான் அபீப் சொல்லும், பிளவுகள், மூடநம்பிக்கைகள், போன்றவை இன்றும் இருப்பதை நாம் அறிவோம்.
விவசாயிகளுக்கு ஒரு நீதியான சமூகத்தை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு மிகவும் பாராட்டுதலுக்குரியது.
கட்டுரை 5: சாதிகள்: சாதியவாதிகளும்,
மார்க்சியவாதிகள் தவிர்த்த சாதி ஒழிப்பு வாதிகளும் சாதி குறித்து ஒருமுழுமையான ஆய்வை மேற்கொண்டவர்களில்லை. டாக்டர் அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வுகளும் மற்றும் பெரியாரின் சாதி குறித்த கண்ணோட்டங்களும் பார்ப்பனீயத்தின் வேலையை அம்பலப்படுத்துவதுதானே தவிர வர்க்கரீதியான ஆய்வுகளில்லை. ஆனால், சாதீ எனும் கொடூரத்தை விளங்கிக் கொள்ள அவைகள் நமக்கு உதவுகின்றன. சாதீயத்தின் தோற்றம் அது பிராமணர் வருகைக்குப் பின்னர் அடந்த மாற்றம் ஆகிவைகளை அபீப் சரியாகவே கூறுகிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி ஒரு தடை என்றார் பேராசான் கார்ல்மார்க்ஸ். அந்தத் தடையை ஒழித்து அதை வரலாற்றின் குப்பைத்தொட்டியில் போடவேண்டும் அது இருக்கவேண்டிய இடமும் அதுதான் எனும் அபீப்பின் கூற்று மிகச்சரியானது.
கட்டுரை 6: முதலாளித்துவ வளர்ச்சியை அதன் ஆரம்பக் கூறுகளிலிருந்தே கட்டுரை விளக்குகிறது. தங்களுடைய ஆயுதபலத்தின் மூலமாகவே நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்திய பல்வேறு சந்தர்ப்பங்கள் இதில் எடுத்துக்காட்டப்படுகின்றன். ஆனால் பாட்டாளி வர்க்கம் அதேபோல கையில் எடுத்தால் அதைத் தீவிரவாதம், பயங்கரவாதம் என யோக்கியனைப்போல் பேசுகிறது. இந்தியாவில் பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சியைக் கொண்டுவர விரும்புகிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மை இது. முதலாளித்துவ வளர்ச்சி இந்தியாவில் தேக்கமடைந்துள்ளது என்பதே இர்பானின் ஆய்வு முடிவாகும் . அதற்கான காரணங்களில் ரசியப்புரட்சியும் ஒன்று.
கட்டுரை 7: முகலாய இந்தியாவில் வர்க்கப்போராட்டங்கள்: நிலப்பிரபுத்துவம் கோலோச்சிய காலங்களில் விவசாயிகள் நடத்திய வர்க்கப் போராட்டங்கள் விரிவாக விளக்கப்படுகின்றன. கைவினைஞர்கள், தாக்குப்பிடிக்க முடியாத தனிநபர்கள் ஆகிய எல்லா அம்சங்களையும் கணக்கிலெடுத்து ஒரு முழுநீளச் சித்திரத்தை நமக்குத் தருகிறார் இர்பான்.
கட்டுரை 8: மற்றும் கட்டுரை 9: 1994-ல் காட்டங்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு மாறிப்போன இந்தியாவின் தலையெழுத்திற்கு முன்பிருந்த காலம் வரை விரிவாக விளக்கப்படுகிறது. இன்றைய இந்தியப்பொருளாதாரம் ஒரு மறுகாலனியப்பொருளாதாரமாக மாறியிருக்கிறது. இதைத் தகர்த்தெறியவேண்டிய கட்டாயமுள்ள இடதுசாரிகளுக்கு இதற்கு முந்தைய நிலமைகளைப் புரிந்துகொள்ள இந்தக்கட்டுரை பேருதவி செய்யும்.
ஆக, இந்தியாவை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்ள இர்பான் அபீப்-ன் இந்தநூல் உதவிகரமானது. கட்டுரைகள் எல்லோமே ஒரு குறிப்பான பார்வையை வாசகர்களுக்கு தரக்கூடியவை.
இந்திய வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் முக்கியமானவை. அதைச் சிறப்பான முறையில் தமிழாக்கம் செய்திருக்கும் இரா. சிசுபாலனின் பணி தமிழுக்கான கூடுதல் சிறப்பு.
ஆக்கம்: குருசாமி மயில்வாகனன்