நண்பகல் நேரத்து மயக்கம் நல்லதொரு காட்சி அனுபவம். லிஜோ ஜோஸ் பெரும் நம்பிக்கையளிக்கிறார். இந்திய சினிமாவில் அவ்வப்போது மேலெழுந்து வரும் தனித்துவமான இயக்குநர்கள் நான்கு அல்லது ஐந்து படங்களுக்குப் பிறகு தாங்கள் ‘கத்துக் கொண்ட மொத்த வித்தை’ யையும் இறக்கி வைத்துவிட்டு காணாமல் போய்விடும் நிலையில் லிஜோ தன் ஒவ்வொரு படத்திலும் ஒரிரு அடிகள் முன் நகர்வது வியப்பையும் மகிழ்வையும் தருகிறது.
புனைவுலகில் சமதளக் கதை அல்லது யதார்த்தம் என்கிற ஒன்று கிடையாது. அது எல்லாவித பூடகங்களையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. மரணமும் அதற்குப் பிறகான அறிய முடியாமையும்தான் எல்லாத் தலைமுறை படைப்பாளிகளுக்கும் இருக்கும் சவாலாக இருக்கிறது. உண்மையில் உடல் அழிவதோடு சகலமும் அழிந்து போய்விடுகிறதா என்பதுதான் கடவுளின் இடத்தில் தங்களை வைத்துக் கொள்ள மெனக்கெடும் படைப்பாளிகளின் எப்போதைக்குமான கேள்வியாக இருக்கிறது.
இந்த அறியமுடியாமைதான் கடவுளர்களையும், பூதங்களையும் சிருஷ்டிக்க வைக்கின்றது. லிஜோ சுருளியில் இந்த விளையாட்டை இன்னும் ஆழமாக நிகழ்த்தியிருப்பார். அது பார்வையாளர்களுக்கு அதீதக் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதோ என்கிற யோசனையில் `நண்பகல் நேரத்து மயக்கத்தை’ கொஞ்சம் மிதமான பூடகச் சட்டகங்களோடு இயக்கியிருக்கிறார்.
சுருளி திரைப்படத்தில் வரும் மனிதர்களும் வாகனமும் ஓர் உடைந்த கற்பாலத்தைக் கடந்த உடன் அதுவரை இருந்த அன்பான மற்றும் சாதாரண உலகமும் சாதாரண மனிதர்களும் அசாதாரணத்திற்கு நகர்ந்துவிடுவர். நண்பகலில், யதார்த்தம் மற்றும் மாயத்திற்கான இடைப்பட்ட பாலமாக ஒரு பெரிய நிழல் விரித்த புளியமரம் காண்பிக்கப்படுகிறது. ஜேம்ஸ், அம்மரத்தின் வழியாகத்தான் சுந்தரத்தின் உலகிற்குள் நுழைகிறான். அம்மரத்தின் வழியாகவே ஜேம்ஸாக வெளியேறவும் செய்கிறான்.
கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஒரு பாட்டி பொழுது விடிவதிலிருந்து இருள் சூழ்வது வரை சதா தொலைக்காட்சியில் புனைவுலகின் களிப்பில் திளைத்துக் கிடக்கிறாள். நாடகமே உலகம் என்பதை அவள் சொல்லாமலும் இன்னொரு கதாபாத்திரம் சொல்லவும் செய்கிறது. மரணத்தின் இருப்பு படத்தின் முதலிலிருந்து இறுதிவரை குறளாக, தத்துவப் பாடலாக, சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த வழியாகப் போனார்கள், செத்தும் போனார்கள் என முத்தாய்ப்பு வைக்கிறாள் ஒரு கிழவி. இடையிடையே எம்.ஆர். ராதா வேறு சகலத்தையும் கேலி செய்கிறார்.
படம் நெடுக மாயம்தான். புதிர்தான். மரணமும் மீண்டு வருதலும் சுழலாகச் சுற்றி சுற்றி வருகிறது. மரமாக, காகமாக, செவலை நாயாக, அசைவற்று உறங்கும் வீதிகளாக, பிற்பகலில் கைக் குழந்தையைத் தவிர சகல உயிர்களும் மயங்கிப் போகும் போதையாக திரைப்படம் நம்மை ஆட்கொள்கிறது.
எனக்குத் திரும்புதலில் பெரும் நம்பிக்கையுண்டு. உடல் மட்டும்தான் அழிகின்றது என்பதிலும் நம்பிக்கையுண்டு. லிஜோவும் என்னைப் போன்ற ஒருவனாகத்தான் இருக்க முடியும். சுருளியும், இ.மா.யு வும், நண்பகல் நேரத்து மயக்கமும் அதைத்தான் சொல்கின்றன. அவனைத் தழுவிக் கொள்கிறேன்.
“நான் இந்த ஊருக்காரன் இல்லன்னா, வேற எவண்டா இந்த ஊருக்காரன்…? நான் இந்த ஊருக்காரன்தான்..
“டேய் மணி… உன் அப்பன் சொல்லுவானா நான் இந்த ஊருக்காரன் இல்லன்னு… உன் ஆத்தா சொல்லுமா நான் இந்த ஊருக்காரன் இல்லன்னு?
“ஊரு விட்டு ஊரு வந்து யாரு மேலடா கை வைக்கறீங்க? என்னடா சேட்டா.. என்ன முறைக்கறே..? வாங்கடா.. மூஞ்சி கீஞ்சியெல்லாம் பேத்துடுவேன் நானு..!
“தாயா பிள்ளையா பழகுனவங்க, மலையாளத்தான் கூட சேர்ந்துக்கிட்டு, என்னை ஊரை விட்டு போக சொல்றீங்க..? நான் இந்த ஊருக்காரன் இல்லையா?
“வரதண்ணே.. நீங்க வீட்ல இல்லாதப்போ நான்தானண்ணே ஒத்தாசையா இருந்தேன்…! உங்க பொண்ணுக்கு இடுப்பு வலி வந்தப்போ நான்தானண்ணே மருத்துவச்சிய கூட்டிட்டு வந்தேன்… நான் உங்க ஊரு இல்லையா…?
“லட்சுமணா.. உன் காட்டுல தண்ணி இல்லாதப்ப, என் வரப்ப ஒட்டிதானடே தண்ணி பாய்ச்சுனேன்.. உன் நெஞ்ச தொட்டு சொல்லுடா.. நான் இந்த ஊருக்காரன் இல்லையா…?
“நான் இந்த ஊருக்காரன்தான்…!
“சொல்லுங்கப்பா.. நான் உங்க மகன் இல்லையா.. நான் இந்த ஊருக்காரன் இல்லையா? சொல்லுங்கப்பா..
“நான் இந்த ஊருக்காரன்தான்…
“நான் பொறந்து வளர்ந்த ஊரு இது…
“என் பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த மண் இது…
“என் கட்டை இங்கதாண்டா வேகும்…
“இது என் மண்ணுடா…”
என மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் பேசும் ஒரு காட்சியை பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
சடாரென ஒரு surreal அனுபவத்துக்குள் வீழ்வீர்கள். எனக்கு அப்படிதான் இருந்தது. தேஜாவூ என்பார்களே, மூளை நியூரான்களின் படபடப்புடன் கூடிய ஒரு உன்மத்த நிலை!
காரணம் நம்மூரில் பொதுவாக இத்தகைய வடக்கு, மலையாளி, வடுக வந்தேறி போன்ற அரசியல் நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் ஊறித் திளைத்த நம் அகத்துக்கு ‘சொட்டேர்’ என அடி விட்டால் எப்படி இருக்கும்?
லிஜோ ஜோஸ் பெலிசேரி மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குநர். அவருடைய படங்களை ‘அங்கமாலி டைரிஸ்’-க்கு முன், பின் என இரு வகைகளாக பிரிக்கலாம். அங்கமாலி டைரிஸ் படத்துக்கு பிறகு அவர் எடுத்த இ.மே.யோ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்கள் யாவும் obscure வகையை சேர்ந்த படைப்புகளாக கொள்ளலாம். இருண்மை படைப்புகள் என்று கூட சொல்லலாம்.
நேரடியாக ஒரு கதையை எளிமையாக புரிவது போல் எடுக்காமல் ஒரு கதையைக் கொண்டு பல படிமங்களை கோத்து பல தத்துவ விசாரங்களை ஆராயும் தன்மை கொண்டவற்றையே இருண்மை படைப்புகள் என்கிறோம். குறிப்பாக லிஜோ ஜோஸ் பெலிசேரியின் சமீபத்திய படைப்புகள் மனிதப் பரிணாமத்தில் ஆன்மத் தேடலை கொள்ளும் படைப்புகளாக இருக்கின்றன. ஓர் எளிய சினிமா ரசிகனுக்கு பெரும்பாலும் அவரின் படங்கள் மலைப்பையும் திகைப்பையும் சோர்வையும் தரவல்லவை.
அவரது இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சமீபத்திய படம்தான் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’!
பறிகொடுப்பவர்களின் அச்சத்தை வெளிப்படுத்துவதுதான் மேற்குறிப்பிட்ட காட்சி. பறிகொடுப்பவரின் இடத்தில் நின்று பேசுபவருக்கு பறித்தவரின் தோற்றத்தை கொடுத்ததுதான் லிஜோவின் சமயோசிதம்.
The scene works you out in multiple levels!
ஜெர்மனியிலிருந்து ஹிட்லர் விரட்டிய யூதர்கள் பாலஸ்தீனத்தில் சேர்ந்து பாலஸ்தீனர்களை விரட்டி விட்ட அபத்தத்தின் நேர்ப்படுத்துதலாக இக்காட்சியைப் புரிந்து கொண்டேன்.
ஒரு மலையாளப் படம் இத்தனை நேர்த்தியாக தமிழ் கிராமத்துச்சூழலை வடித்திருப்பது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் காட்சி கோணங்கள் யாவும் கண்களில் ஒத்திக் கொள்ளும் ரகம். மம்மூட்டியின் நடிப்பு சொல்லவே வேண்டாம். விமர்சனங்களை மிஞ்சும் நடிப்பு.
‘If the tables are turned’ என்கிற ஒற்றை வரியை ஒரு சமூக அரசியலுக்குள் பொருத்தி பார்ப்பது எல்லாம் என்ன மாதிரியான படைப்பாற்றல்!
அதிலும் வள்ளுவரில் தொடங்கி, ஜேம்ஸுக்குள்ளிருந்து வெளிப்படும் சுந்தரத்தை கொண்டு, மலையாள மொழியின் நனவிலியில் தமிழ் இருப்பதாக உள்ளுணர்த்தி தமிழ்மொழியின் அங்கமே மலையாளம் என்கிற மறைபொருளையும் கொடுத்து படத்தை முடிக்கிறார் லிஜோ ஜோஸ்.
இப்படத்தை வேறு எவரையும் கொண்டு கற்பனை செய்ய முடியவில்லை. மம்முட்டி இயல்பாகவே சர்வதேசியம் பேசுபவர். மலையாளிகள் மீது விமர்சனம் கொண்டவர். நகைச்சுவையின் அருமை புரிந்தவர். இக்கதையை புரிந்து தயாரிக்க முன் வந்தமைக்கே அவருக்கு விருதுகளை அள்ளிக் கொடுக்கலாம்.
வெறும் உடற்கூடுகளை கொண்டுதான் மனித மனம் மொழி, பண்பாடு முதலிய விஷயங்களை தேடுவதாக லிஜோ மேலோட்டமாக சொல்லி இருந்தாலும் சாமானிய மனிதன் அடிப்படையில் இத்தகைய பிரிவினைகளை தாண்டும் மகத்துவம் கொள்ளக் கூடியவன்தான்.
தேவை, அதிகாரம் நிரம்பிய அரசியல் மனிதர்களுக்கான ஒரு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’
கட்டுரையாளர்கள்: அய்யனார் விஸ்வநாத், ராஜசங்கீதன்.