வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்களுக்கு வாழ்த்தும் அன்பும்திவான் அவர்களின் நூல்கள் தமிழ்நாட்டு அரசால் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. ஆரவாரம் ஏதுமில்லை, அதிர்ந்து பேசுவதுமில்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அமைதியான நீரோடையைப் போல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பவர் தோழர். திவான்.
கடையநல்லூரில் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு லட்சம் நூல்கள் அன்பாய் வழங்கியது போக எஞ்சிய இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களோடு திருநெல்வேலியில் வாசித்து, வசித்துவரும் திவானுக்கு சொந்த நிலம் செங்கோட்டை.
வரலாற்றுத்துறையில் எம்.ஃபில் பட்டம்வரை சென்றிருக்கும் திவான் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, புனித ஜான்ஸ் கல்லலூரி, ம.தி.த. இந்துக்கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என்று நெல்லையின் கல்விப்புலங்கள் எல்லாவற்றிலும் ஒரு சுற்று வலம்வந்தவர்.
மன்னராட்சி மரபில் திவான் என்பது ஒரு பதவி. பெரும்பாலும் முகலா யர்கள், கில்ஜிகள் வருகைக்குப் பின்னர் மன்னராட்சியில் இந்தப் பதவி வந்திருக்கக்கூடும். திவான் அடிப்படையில் பார்சி மொழிச் சொல். பொதுவாக மன்னராட்சி முறையில் நிர்வாகத்தை நடத்தும் பொறுப்பு திவான்களின் வசமே இருந்தது.
எந்த பின்னொட்டும் முன்னொட்டும் இல்லாத திவான் என்னும் தனித்த பெயர் தனக்கு வந்தது குறித்து குறிப்பிடும் திவான், ‘அது தன்னுடைய அப்பாவின் அம்மா பெயர். மூத்த மகனுக்கு தந்தையின் பெயரை வைத்த அப்பா தனக்கு அம்மாவின் பெயரை வைக்க விரும்பினார். அவரின் அம்மா பெயர் திவான் பீவி. அதிலுள்ள பீவியை கத்தரித்துவிட்டு திவான் என்று தன்னுடைய பெயர் நிலைப்பட்டது என்கிறார்.
73 வயதுக்காரரான திவானின் எழுத்தில் இதுவரை 140 நூல்கள் வெளிவந்துள்ளன. அச்சில் இருக்கும் 10 நூல்களையும் சேர்த்தால் மொத்தம் 150 நூல்கள். இவற்றுள் பெரும்பாலானவை வரலாற்று நூல்கள். எனவே அவற்றுக்கான உரிய உழைப்பைக் கொடுப்பதற்கு ஒருபோதும் திவான் தயங்குவதில்லை.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் வகிபாகம் மீது தார்பூசும் வேலைகள் துரிதப்படுத்தப்படும் இன்றையச் சூழலில் திவானின் நூல்கள் அவற்றின்மீது ஏதிர்வினை ஆற்றிக்கொண்டே இருகின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள், தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர், வேலூர் புரட்சியில் முஸ்லிம்கள், திப்பு சுல்தான், குஞ்ஞாலிகள், மருதநாயகம் கான்சாகிப் என்று இந்திய விடுதலைப் போர்குறித்த அவரின் நூல்கள் விரியும்.
இந்தியாவை ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களுள் சிலர் குறித்து திவான் எழுதி இருக்கும் நூல்கள் அந்த மன்னர்கள் குறித்து கட்டமைக்கப் பட்டிருக்கும் பொதுப்புரிதல்கள்மீது இடையீடு செயிகிறது. ஒளரங்கசீப், அலாவுதீன் கில்ஜி, மாலிக்காபூர், முஹம்மது பின் துக்ளக் குறித்த நூல்கள் இவ்வகையில் முக்கியமானவை.
வ.உ.சி குறித்து பல நூல்கள் திவான் எழுத்தில் வெளிவந்துள்ளன. நாகூர்ஹனிபா, கவி.க.மு.ஷரீப், கம்பனில் அனுமனும் சிவனும், இராமலிங்க வள்ளாலரும் செய்குத்தம்பிப் பாவலரும், அறிஞர்.அண்ணாவின் அமுத மொழிகள், கி.ராஜநாராயணன் அவர்கள் திவானுக்கு எழுதியக் கடிதங்கள்,சிந்தனைச்சிற்பி. சி.பி.சிற்றரசு, தி.க.சி.என்றொரு மானுடன், வரலாற்றெழுத்தியல் என்று திவான் எழுதிய நூல்களின் பட்டியல் நீளும்.
திராவிட இயக்கக் கருத்தியல்களோடு நெருக்கமான திவான் அவர்கள் வைகோவுக்கு மிக அணுக்கமானவர். சுஹைனா பதிப்பகம் என்னும் தன்னுடைய சொந்த பதிப்பகம் சார்ந்து நூல்களைக் கொண்டுவரும் திவானின் நூல்கள் விகடன், குமுதம் நிறுவனங்களின் வெளியீடாகவும் வந்துள்ளன.
சென்னையில் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக முதல்வர் திவான் அவர்களை சிறப்பு செய்து இருக்கிறார். திவான் அவர்களுக்கு வாழ்த்தும் அன்பும்
கட்டுரையாளர்: தக்கலை அமீன் முஸ்தபா