ஒரு பங்கின் விலை நியாயமானதா? அதிகமானதா? என கண்டுபிடிப்பது பெரிய கம்ப சூத்திரம் இல்லை. மிக மிக எளிது. பங்கு மதிப்பை ஆராய்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட அளவுகோல்கள் இருந்தாலும் P/E விகிதம் ஒன்றுதான் முக்கியமானது. Price/ Earning ratio. ஒரு பங்கின் மார்க்கெட் விலைக்கும் ஒரு பங்கின் வருடாந்திர சம்பாத்தியத்திற்கும் உள்ள விகிதம்.
வங்கி வைப்புத் தொகை ரசீதை எடுத்துக் கொள்வோம்.8% வருடாந்திர வட்டி. 8 ரூபாய் சம்பாதிக்க 100 ரூபாய் முதலீடு. 1 ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறது? 100/8= சுமார் 13 ரூபாய். ஒரு ரூபாய் சம்பாதிக்க எவ்வளவு முதலீடு தேவைப்படுகிறதோ அதுதான் P/E Ratio. வங்கி வைப்புத் தொகையின் P/E விகிதம் 13 என்று கொள்ளலாம்.
பொதுவாக ஒரு பங்கின் P/E விகிதம் 13 க்கு மேல் தான் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர் வங்கி டெபாசிட்டை விட கூடுதல் ரிட்டன் எதிர்பார்க்கக் கூடியவர். கொஞ்சம் ரிஸ்க் எடுக்கக் கூடியவர். ஆக P/E 26 இருந்தால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ப்ளூ சிப் நிறுவனங்களுக்கு P/E 30, 35 கூட இருக்கலாம். அதிகம் தான், ஆனாலும் ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு மேல் ரெட் சிக்னல்
ரிலையன்ஸ் P/E = 25. TCS P/E = 31. L&T P/E 32. இந்துஸ்தான் யூனி லீவர் P/E= 62 (அதிகம்). மாருதி சுசுகி P/E 36. ஸ்டேட் வங்கி P/E =12 (வங்கிகளின் விகிதம் குறைவாகத்தான் இருக்கும், வாராக்கடன் பிரச்சினை). ஏசியன் பெயிண்ட்ஸ் P/E 70 (அதிகம், ஆகவேதான் விலை இறங்கிக் கொண்டிருக்கிறது.
ஒரு சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மணி கண்ட்ரோல் வெப்சைட்டில் நீங்களே தேடி அறிந்து கொள்ளலாம். சரி, நாம் இப்போது கதாநாயகன் அதானி பங்குகளுக்கு வருவோம்.
அதானி எண்டர்பிரைஸ் P/E = 258. அதானி கேஸ் P/E= 635. அதானி கிரீன் எனர்ஜி P/E =442. அதானி ட்ரான்ஸ்மிஷன் P/E= 252. அதானி வில்மர் P/E= 97 (மிகச் சிறிய கம்பெனி).
அதானி துறைமுகம் P/E= 25 (இது தேறும்) ஏசிசி, அம்புஜா சிமெண்ட் சமீபத்தில் கைப்பற்றப்பட்டவை. ஒரு பைசா அதானி காசு இதில் கிடையாது.
100% கடன் அதானி குழுமங்களின் சராசரி P/E விகிதம் சுமார் 300 என்று எடுத்துக் கொள்ளலாம். நியாயமான P/E 30 என்று வைத்துக் கொண்டால் பத்து மடங்கு விலை ஊதிப் பெருக்கப்பட்டதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ஹின்ட்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன் அதானி குழுமங்களின் மதிப்பு 17 லட்சம் கோடி. ஆக உண்மையான மதிப்பு சுமார் 1.5 லட்சம் கோடி என்ற ஹின்ட்டன்பர்க் மதிப்பீடு சரியே.
– ஆறுக்குட்டி பெரியசாமி