கருத்துத் தெளிவு, அறிவும் ஆற்றலும் அரசியல் சமூகத்துறைகளில் ஆழமான புரிதல் இவற்றால் அறிவுச் சமூகத்தின் ஆதரவு பெற்றவர் M.N. ராய். அவரது புகழ்பெற்ற Historical Role of Islam ஒரு மறுவாசிப்புக்கு உகந்த நூல். ஒரு மத அமைப்பு, நிறுவனம் என்ற வகையில் இஸ்லாம் பெரிதும் சவால்களை எதிர்கொள்ளும் இன்றையச் சூழலில் இத்தகைய புரிதல்களின் தேவை மிகப் பெரிது.
மத நம்பிக்கைக்கு வெளியே நின்று கொண்டு கல்விப் புல முறைமைகளைப் பயன்படுத்தி இஸ்லாத்தைக் குறித்து அணுகிய எம்.என் ராயின் ஆய்வு முதன்மையானவைகளில் ஒன்றாக உள்ளது. வரலாற்றை நுட்பமாக ஆராய்ந்து வரலாற்றில் இஸ்லாத்துக்குரிய இடத்தை பாரபட்சமின்றி கண்ட்டைந்த அவரது விவரிப்பு இஸ்லாம் குறித்து விமர்சிக்கும் எதிர்நிலைப்பாடு கொண்டவர்களை சிந்திக்கத் தூண்டுகிறது.
இஸ்லாமிய பண்டிதர்கள் கூட கவனத்தில் கொள்ளாத பல சிறப்புகளையும் தனித்துவங்களையும் முன்வைக்கிறார். மதத்தீவிரவாதத்தின் சிக்கிய, பரஸ்பர வெறுப்பின் பிடியில் உழல்பவர்களுக்கு பரஸ்பர புரிதல்களுடனும் நல்லிணகத்துடனுமான அணுகல் முறையை அறிவுப்பூர்வமாக உணரும் சூழலை எம். என். ராய் உருவாக்குகிறார்.
“இஸ்லாம் என்றால் அமைதியை உருவாக்குதல் என்று பொருள். மனிதனுடன் மட்டுமல்ல இறைவனுடனும் அமைதியை உருவாக்குதல் என்பது இஸ்லாத்தின் இலக்கு. முஹம்மது நபியவர்களின் நம்பிக்கை பிரமாணங்கள் அரபுலகில் நிரந்தர அமைதியின் விதைகளை விதைத்தது. சமர்கந்து முதல் ஸ்பெயின் வரை வியாபித்த ஒரு பரந்த உலகம் இஸ்லாமிய கருத்தியல்களிலிருந்து உருப்பெற்று மிக வேகமாக உயர்ந்து வந்தது” என்கிற அவரது கூற்று சிந்தனைக்குரியது.
மேலும் “வியப்பான இந்த மாற்றம் எங்ஙனம் நிகழ்ந்தது எனும் கேள்விக்கு முன்னால் வரலாற்றாய்வாளர்கள் வியந்து நிற்கிறார்கள். அமைதியும் நல்லிணக்கமும் கொண்டவர்களை மத வெறியின் உதவியுடன் ஆக்ரமிப்பு நடத்தியவர்கள் என்று சிலர் கூறுவது அபத்தமானது என்கிறார். இஸ்லாத்தின் இந்த வெற்றிப் பயணம் அதில் உள்ளார்ந்து இருக்கிற புரட்சிகர இயல்பும், கிரேக்க, ரோம, பாரசீக புராதன பண்பாடுகள் மட்டுமல்ல இந்தியா சீனா ஆகிய நாகரிகங்களில் காலத்தால் வந்த பண்பாட்டு சீரழிவுகளின் உரங்களிலிருந்தும் உயர்ந்து வந்தது என்கிறார்.”
மதங்கள் மீதோ ஆன்மிகத்தின் மீதோ அனுகூலமான பார்வை கொண்டவரல்ல ராய். அவரது தேடல்களின் திசையை நிர்ணயம் செய்தது கம்யூனிச அணுகுமுறையும் அதைத் தொடர்ந்து வந்த ராடிக்கல் ஹ்யூமனிசமும் பௌதிகவாதமும்தான்.
இறைவன், இறைவெளிப்பாடு, ஆன்மிகம் ஆகிய நம்பிக்கைகளுக்கு அவர் ஆட்படவில்லை. இவற்றிற்கு அவரது சிந்தனை உலகில் இடமில்லை. அறிவியல் பகுத்தறிவுக்குள் வருபவற்றையே அங்கீகரித்தார். இத்தகைய அடிப்படைகளுடன் கலகம் செய்துவிட்டு, தான் அவர் இஸ்லாத்தை அணுகுகிறார். பிற மதங்களிலிருந்து வேறுபட்டு இஸ்லாம் முன்வைக்கிற தரிசனங்களின் புரட்சிகரமான தன்மையை அவரால் உதாசீனப்படுத்த முடியவில்லை. மாறாக அது அவருடைய சிந்தனையைத் தூண்டுகிறது.
இஸ்லாத்தின் ஆன்மிகத்துக்கு மாற்றாக அதன் சமூகவிடுதலை சிந்தனைகளை அவர் அலசுகிறார். அதன் புரட்சிகரமான அம்சமாக அவர் கருதுவது சமரசமில்லாத அதன் ஏக இறைக் கொள்கையும் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்தப் பார்வையும்தான்.
அவர் கூறுகிறார். ”ஏக இறைக் கொள்கை வரலாற்றில் ஒரு திருப்புமுனை, அதன் செயல்பாட்டை ஆழமான ஒரு நதியுடன் உவமிக்கவலாம். அறிவியல் எழுப்பிய அதிதீவிரமான வெள்ளத்துக்கு அந்த நீரோட்டத்தை எதுவும் செய்ய முடியவில்லை, ஏக இறை நம்பிக்கையில் யூத, கிருத்தவ, இஸ்லாமிய மதங்களில் மிக மகத்தானது இஸ்லாம்தான் என்பதை வரலாற்றுப் பாடங்கள் சாட்சியப்படுத்துகிறது” என்கிறார்.
`சீசருக்குரியது சீசருக்கு` எனும் தத்துவம் ஒரு சமரசம் என்கிறார். அன்றைய சமூகத்தின் எரியும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான தேவையான ஒரு புதிய சமூக அமைப்புக்கு தடை செய்யும் விதமாக அந்த தத்துவம் இருந்தது எனவும் அத்தகைய கனவுகளை சுமந்தவர்களை ஏமாற்றியது எனவும் எம்.என்.ராய் குறிப்பிடுகிறார்.
சீசருக்கும் கடவுளுக்கும் இடையே வாழ்க்கையை பங்கு வைப்பதற்கான மறுப்பும், ஏக இறை நம்பிக்கையிலுள்ள உறுதியும் முஸ்லிம்களை சகிப்பற்றவர்கள் என வாதிடுபவர்களுக்கு ராயின் கருத்துகள் பதிலாக உள்ளது. இஸ்லாமிய அரசுகளுக்கு கீழே தத்துவவியலும், பிற அறிவுத்துறைகளும் வளர்ச்சி பெற்றதற்கு தூண்டுதலாக இருந்தது. இஸ்லாமிய தரிசனங்களின் சிறப்புகளில் தரிசிக்கிறார் எம். என் ராய்.
இந்தியாவில் இஸ்லாத்தின் வருகை தவறான அபத்தமான கருத்துகளால் முன்வைக்கப்படுகிறது. முஹம்மது கஜினியின் வாள் ஒரு பயங்கரவாதத்தின் உருவமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இஸ்லாத்தின் பரவலுக்கு காரணம், தேட வேண்டியது ஆட்சியாளர்களின் ஆயுதக் கிடங்குகளில் அல்ல. சாதியமும், சமூக சமத்துவமின்மையும் ஊடுருவிய இந்திய சமூகச் கூழல்தான் என்பதை எம்.என் ராய் நிறுவுகிறார்.
முஸ்லிம்களின் மதத்துடனும் அவர்களின் பண்பாட்டுடனும் ஒரு எதிர்மறையான கண்ணோட்டம் வகுப்புவாத சக்திகள் கொண்டிருக்கும் வரலாற்றுப் பார்வை சுத்தமான அபத்தம் எனவும், இது இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தை பெரிதும் ஆபத்தானதாக உருமாற்றம் என்ற ராயின் கருத்து தூரத்துப் பார்வையுடன் இருந்ததை இன்றைய சூழல் உணர்த்துகிறது.
இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடத்தும் திட்டமிட்ட வெறுப்பு பரப்புரைச் சூழலில் எம்.என் ராயின் நூல் மறுவாசிப்புக்கு உகந்ததாக உள்ளது.
கருத்துறதி, அறிவுப் பூர்வமான மேன்மை, அரசியல் சமூகத்துறைகளில் ஆழமான புரிதல் இவற்றால் மாற்றுக் கருத்துடையவர்களையும் ஈர்க்கும் தன்மை எம்.என் ராயின் எழுத்துகளுக்கு உண்டு. இஸ்லாமியப் பண்டிதர்கள் கூட பாக்காத பக்கங்களை அவர் காண்கிறார்.
வெறுப்பின் வித்வேசத்தின் விஷ வாயு சுவாசிப்பவர்களுக்கு பகையிலிருந்து தப்பிக்க பரஸ்பர கண்ணியத்துடன் பிற மதங்களை பார்ப்பதற்கான பார்வையை இந்நூல் முன்வைக்கிறது.
1939இல் எழுதப்பட்ட கட்டுரையின் கருத்துகள் இன்றும் பெரிதும் பொருத்தமாக உள்ளது. பிற மதத்தினரிடையே வரலாற்றில் இஸ்லாத்தின் பங்கு குறித்து ஆய்வுகள் உரிய அளவில் நடக்கவில்லை என்கிற எம்.என் ராயின் கருத்துகள் உண்மையே. இஸ்லாமியம் என்று கருதப்படுகிற எந்த நாட்டை விடமும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் வாழும் இடம் இந்தியா என்பதை பலரும் நினைப்பதில்லை. மக்கள் தொகையில் கணிசமான அளவு கொண்ட முஸ்லிம்களை ஒரு அன்னிய சமூகம் என்ற நிலையில் பார்க்கும் தன்மை குறித்து இந்த நூலில் ராய் அலசுகிறார்.
இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒரே நிலையில் அடிமைகளாக்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளுக்குப் பிறகும் வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்களை முதல் எதிரிகளாகப் பார்க்கும் நிலைமைகளை எம். என். ராய் குறிப்பிடுகிறார். `இந்து மத சாதி அடுக்குகளில் கீழ் நிலையிலுள்ள சூத்திரர்களிடம் காட்டும் அநீதிக்கு நிகரான பார்வையில்தான் வகுப்புவாத உளவியலில் முஸ்லிம்களின் இடம்’ என்கிற எம்.என்.ராயின் கருத்து கவனிக்கத்தக்கது.
இந்தியச் சூழலில் பெரிதும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபிகள். நபிகளார் குறித்த புரிதல் ஒரு சராசரி இந்துவுக்கு குறைவாகவே உள்ளது என்கிறார் அவர். `உலக நாடுகளின் மீது பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியதும் நினைவுகளில் நீங்காது நிற்கும் ஒரு புரட்சிதான் இஸ்லாத்தின் வளர்ச்சி (One of the most memorable revolutions which has impressed a new and lasting character on the nations of the globe) என்ற கிப்பனின் கருத்தை எம்.என் ராய் எடுத்துக் காட்டுகிறார்.
முஹம்மது நபிகள் இறைவனின் தூதர் என்ற பொறுப்பை ஏற்று 50 ஆண்டுகளுக்குள் அவரது தோழர்கள் இஸ்லாத்தின் பேனரை இந்திய மகா சமுத்திரத்தின் கரை முதல் அட்லாண்டிக்கின் கரை வரை எட்ட வைத்தனர் என்பது சாதாரணமான விஷயமல்ல. தமாஸ்கசின் முதல் கலீஃபாக்கள் நிறுவிய ஆட்சி அதிகாரத்தின் எல்லைகளைத் தாண்ட ஒட்டகத்தில் பயணம் செய்யும் ஒரு வணிகக் குழுவிற்கு 5 மாதம் தேவை. ஹிஜ்ரி ஆண்டின் முதல் நூற்றாடு முடியும் தருவாயில் நம்பிக்கையாளர்களின் கமாண்டர்கள் என்று அழைக்கப்பட்ட இஸ்லாமிய ஆட்சியாளர்தான் அன்ற உலகின் மிக வலிமையான ஆட்சியாளர்களாக திகழ்ந்தனர என்பதை ராய் நினைவூட்டுகிறார்.
வெறும் நூராண்டுகளில் இஸ்லாமிய கருத்தியல் அடிப்படையில் நிறுவப்பட்ட சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியையும் அகலத்தையும் அடைவதற்கு ரோமாபுரி சாம்ராஜ்யத்துக்கு 700 ஆண்டுகள் தேவைப்பட்டது என்கிறார். அலெக்சாண்டரின் சாம்ராஜ்யம் கூட கலீஃபாக்களின் சாம்ராஜ்யத்தைவிட குறைவாகவே இருந்தது. History of Europeஇல் H.A.L. Fisher இன் கருத்துகளை துணைக்கு அழைக்கிறார் ராய்.
இஸ்லாம் ஒரு மதம் என்பதற்கு அப்பால் ஒரு அரசியல் இயக்கமாக உருருவெடுத்தது என்கிறார் அவர். கோத்திர சமூகங்களுக்கும் இனக் குழுக்களுக்கும் இடையே வலுவாக இருந்த வெறுப்பை அன்பாக மாற்றியது இஸ்லாம் என்கிறார். நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, உயர்நிலையிலான குணமேம்பாடு, ஆன்மிகப் பார்வையின் கச்சிதம் இவை இஸ்லாத்தின் அடிப்படை குணங்களாக அவர் கருதுகிறார்.
நீதியை நிலைநாட்டுங்கள், அநீதியை அகற்றுங்கள், வீரர்களாக இருங்கள்,அடிபணியாதீர்கள், கருணை உடையவர்களாக இருங்கள், வயதானவர்கள் பெண்கள் குழந்தைகள் இயற்கை ஆகியவை போர்களில் கூட காயம் படக் கூடாது, எதிரிகளிடம் கூட வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என முதல் கலீஃபாவான அபூபக்கரின் வார்த்தைகள் நிறைவேற்றப்பட்டன.
`இஸ்லாம்’ எனும் சொல்லின் பொருளான அமைதி உருவாக்கம் என்பது இஸ்லாமிய இறையியலின் அடிப்படை என்கிற முறையில் அதை வரலாற்றுடன் உரசிப்பார்த்து அலசுகிறார் ராய். அது அமைதிக்கான போரல்ல, முடிந்த அளவில் போரைத் தவிர்த்தல் வன்முறையை விலக்கல் என்பதாக உள்ளது. சமர்கந்து முதல் ஸ்பெயின் வரை பரவியது வன்முறையால் அல்ல அமைதியால்தான் என்கிறார். ஏதாவது ஒரு நாடு அரபுகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தால் அங்கு மிக விரைவில் வளர்ச்சி உருவாகுவதின் மர்மம் குறித்து அவர் விலக்குகிறார்.
சில தனிப்பட்ட சூழலில் வணிகம் என்பது ஒரு ஆன்மிகப் புரட்சியின் கருவியாக இருக்கிறது. அரபு வணிகர்கள், முஹம்மது நபிகளின் `ஏக இறைநம்பிக்கை’யை சென்ற இடமெல்லாம் பரப்புரை செய்தார்கள். அவர்களின் பொருட்களைவிட இந்த ஆதர்சம் செலவானது என்கிறார்.
பரிச்சயமில்லாத பொருட்களும் மனிதர்களும் இடங்களும் அவர்களுக்கு பரிச்சயமானதாகவும் இணக்கமானதாகவும் முன்முடிவுகளிலிருந்து சுதந்திரமான சிந்தனையை வளர்க்கவும் வணிக சமூகத்திற்கு எளிதில் முடிந்தது.
கடல்வழியும் கரைவழியும் இந்தியா பாரசீகம் அல்சீரியா சிரியா பாலஸ்தீன் எகிப்து அபிசீனியா ஆகிய நாடுகளில் அரபுகள் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். குறைஷிகள் தான் வணிகத்தை முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை மார்க்கமாக ஏற்றுக்கொண்ட அராபிய இனக்குழு.
வாளால் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த மக்களின் மனதை வெல்ல முடியாது எனவே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பது பொய்யே என்கிறார். ஆசிய, ஆப்பிரிக்க சாதாரண மக்களுடன் இஸ்லாம் இணக்கமாக இணைந்ததின் வரலாறு இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்கிறார்.
மூடப்பழக்கங்களோடும் புதிர்களான தன்மைகளோடும் பிணைந்து கிடக்கும் மாற்று மதங்களைவிட அதிகமாக மனிதனின் சாதாரண தர்க்க மனநிலையோடு அணுக்கமாக இருந்தது இஸ்லாம் (The Decline and fall of the Roaman Empire) என்கிறார் எம்.என்.ராய்.
இஸ்லாத்தின் இந்திய வருகை, வரலாற்றில் அதன் முற்போக்கான கடமைகள் நிறைவேற்றிய பிறகுதான் என்று நிறைவான கட்டுரையில் ‘இஸ்லாமும் இந்தியாவும்’ என்கிற தலைப்பில் சிறப்பாக முடிக்கிறார். புரட்சியும் அமைதியும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கு காரணம் என்று ஒரு கம்யூனிஸ்டு கூறியதை நாம் திரும்பிச் சொல்ல வேண்டிய சூழல் கனிந்துள்ளது.
கட்டுரையாளர்: முனைவர் மு. அப்துல் ரசாக்