கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம் என்று தமிழினத்தின் தொன்மை குறித்து தமிழ்ச்சமூகம் பெருமை கொள்வதுண்டு.இதனை ஆராய்ச்சியினூடே உறுதிப்படுத்துகின்றது ‘இசுலாம் தமிழர் சமயம்’ என்ற தலைப்பிலான இந்நூல்.
ஆதி மனிதனான ஆதம், அவரது மனைவியான ஹவ்வா ஆகிய சொற்கள் தமிழ் சொற்களே என்றும் ஆதம் (ஆதாம்) நூஹூ (நோவா) இப்றாஹிம் (ஆப்ரஹாம்) போன்ற இறைத்தூதர்கள் குமரி கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களே; அவர்கள் பேசிய மொழியும் தமிழே என்பதை தமிழின் வேர்ச் சொற்களின் ஆராய்ச்சி மூலம் நிறுவுகிறார் இந்நூலின் ஆசிரியரும் தமிழ் ஆய்வாளருமான ம.சோ. விக்டர்.
இசுலாம் அரேபியாவிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகமான சமயம் என நம்மில் ஏறக்குறைய எல்லோருமே எண்ணிக்கொண்டிருக்கும் நிலையி்ல், இசுலாம் தமிழர் சமயம்; அது தமிழ் மண்ணிலிருந்தே அரேபியாவிற்கு சென்றிருக்கிறது என்பதை இந்நூல் விவரிக்கிறது.
குமரிக்கண்டத்தின் நிலப்பரப்பு அரேபியா வரை நீண்டிருந்தது என்பதும் இந்த நிலப்பரப்பு முன்பாலை நாடு, பின்பாலை நாடு என அழைக்கப்பட்டது என்பதும் இப்போதைய அரேபியப் பிராந்தியங்கள் பின்பாலை நாடாக இருக்க முன்பாலை நாடு அரபிக்கடலில் மூழ்கிப் போய்விட்டது என்பதும் இந்நூல் கூறும் ஆச்சரியமான உண்மைகள்.
மேற்கே (இன்றுள்ள)ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதிகளை மேற்கு எல்லையாகவும் அரேபியா, ஈரான் மற்றும் வட இந்தியப் பகுதிகளை வடக்கு எல்லையாகவும் மலேசியா மற்றும் இந்தோனேசியப் பகுதிகளை கிழக்கு எல்லையாகவும் ஆஸ்திரேலியாவின் வட மேற்குப்பகுதியை தென் கிழக்கு எல்லையாகவும் தென்முனைப்பகுதியை தென் எல்லையாகவும் கொண்டு விரிந்து பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்திருக்கிறது குமரிக்கண்டம்.
இப்பெரு நிலப்பரப்பைக் கொண்டிருந்த குமரிக்கண்டத்தின் அழிவுக்கு முன் இன்றுள்ள உலக வரைபடம் இருக்கவில்லை. குமரிக்கண்டத்தின் அழிவுக்குப் பின் நிலப்பரப்புகள் நீர்ப்பரப்புகளாகவும் நீர்ப்பரப்புகள் நிலப்பரப்புகளாகவும் மாறி இருக்கின்றன.
கடந்த வாரம் கூட ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை திருச்சி் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைந்து 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் மூழ்கிப்போன பூம்புகார் துறைமுக நகரை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடுவது பொருத்தமானது.
உலகின் மிகப் பழமையான நாகரிகமாக சுமேரிய நாகரிகத்தை மேற்கத்திய வரலாற்றாய்வாளர்கள் சொல்லி வரும் நிலையில் அவர்கள் தமிழக வரலாற்றை ஆய்வு செய்யவில்லை என்று கூறும் நூலாசிரியர், சுமேரிய நாகரிகம் தமிழ் நாகரிகம் தான்; சமரியாவே சுமேரியாவாக திரிந்துள்ளது.
சமர் புரிந்து செங்கடல் வழியாக படையெடுத்து சென்ற தமிழர்களே சமரியர்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார்.
முதல் மாந்தனை ஆதப்பா என்று சுமேரிய இலக்கியமும் ஆதாம் என்று யூத சமயமும் ஆதம் என்று திருக்குர்ஆனும் கூறுகின்றன என்று விவரிக்கும் நூலாசிரியர், “பல கடவுளர் கொள்கை, ஓரிறைக் கொள்கை, கடவுள் மறுப்புக் கொள்கை ஆகிய மூன்று நிலைகளும் தமிழரிடையே காணப்பட்டன. தமிழனின் சிந்தனை விரிவுபட்டதையே இந்நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த மூன்று கொள்கைகளும் தமிழகத்திலிருந்தன என்பதை தமிழிலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. தமிழர்கள் சிந்தித்து நடைமுறைப் படுத்திய இம்மூன்று கொள்கைகளின் அடிப்படையில்தான் இன்றைய உலக சமயங்கள் காட்சியளிக்கின்றன.
தமிழன் சிந்தித்த ஓரிறைக் கொள்கை ஆபிரஹாம் காலத்தில் நடைமுறைக்கு வந்ததை சமய நூல்கள் விளக்குகின்றன. தொடர்ந்து மோசே அறிவித்த சமயச் சட்டங்களில் ஓரிறைக் கொள்கை வலியுறுத்தப்பட்டது. அண்ணல் நபியும் அதே கொள்கையைப் பற்றி நின்றார்” என்று வரலாற்றுப்பூர்வமாக நிரூபிப்பதன் மூலம் ஓரிறைக் கொள்கை தமிழனுடைய கொள்கை என்பதை் நிறுவுகிறார்.
மேலும், “மூசா நபிக்கு முன்னர் வாழ்ந்திருந்த இப்ராகீம், இஸ்மயேல் (இஸ்மாயில்), இசுகாக் (இஸ்ஹாக்), ஆக்பூப் (யாக்கூப்) இறையடியார்களாய் இருந்தனரேயன்றி முறையான சமய ஒழுங்கினை அவர்கள் தோற்றுவிக்கவில்லை.அவர்கள் கொண்டிருந்த இறைவழிபாட்டு முறைகளும் சரியான பெயர்களும் அறியப்படவில்லை. அவர்கள் கைக்கொண்டிருந்தவை ஓரிறைவனைக் குறித்த வழிபாட்டு்முறைகளேயன்றி சமயம் என்று கூற இயலவில்லை. சமயத்திற்குரிய மெய்யியல் கோட்பாடுகளும் கொள்கை விளக்கங்களும் அவர்கள் காலத்தில் அறியப்படவில்லை. திருக்குர்ஆன் கூறும் சமயக் கொள்கைகளும் மெய்யியல் கோட்பாடுகளும் மூசா நபியின் காலத்திற்கு பிறகு அருளப்பட்டு, அவை ஈசா நபி காலத்தில் மெருகேற்றப்பட்டு முகம்மது நபியின் காலத்தில் முற்று பெற்றன எனலாம்” என்றும் தன் ஆய்வில் சொல்கிறார் நூலாசிரியர்.
இன்னும், தமிழ் மொழியிலிருந்தே சமஸ்கிருத மொழி் பிறந்ததென்றும் சமஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கித் தந்தவர்கள் தமிழர்களே என்ற வரலாற்று உண்மையை மறைத்து சமஸ்கிருதத்திலிருந்து உருவானதே தமிழ்மொழி என்று வரலாற்றுத் திரிபை செய்த ஆரிய பிராமணர்கள் இந்து சமயம் என்ற போர்வையில் தமிழர் சமயத்தை ஆரிய சமயமாக்கிக் கொண்டனர் என்று கூறும் நூலாசிரியர், இந்நூலின் 81ஆம் பக்கத்தில், மண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதன் மீண்டும் மண்ணுக்கே உரிமையாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட தமிழினம் இறந்தவர்களை புதைத்தனரே அன்றி் எக்காலத்திலும் எரிக்கவில்லை. ஆனால், உடலை விட்டு சென்ற உயிர் மீண்டும் அவ்வுடலில் இணைய விரும்பும். உடலை எரித்துவிட்டால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும் என்பது ஆரியக் கொள்கையாகும். இந்த மறுபிறப்புக் கொள்கை பிற்காலத்தில் தமிழன் மீது திணிக்கப்பட்டது என்கிறார். அதோடு. உலக வரலற்றில் நாடோடி இனமாக சுற்றித் திரிந்த ஆரிய இனம் நாளொரு புல்வெளியும், பொழுதொரு நீர்நிலையுமாக அலைந்துக்கொண்டிருந்த்ததால் இறந்தவர்களின் உடலைப் புதைக்கவோ புதைக்கப்பட்ட இடத்தை தேடிச்சென்று பார்க்கவோ அவர்களது நாடோடி வாழ்க்கை இடம் தரவில்லை. எனவே இறந்தவரை எரித்துவிட்டு அடுத்த புல்வெளியை நோக்கிச் செல்வதே அவர்களின் வழக்கமாக இருந்தது. பிற்காலத்தில், உடல்களை எரிப்பதையே ஒரு சடங்காக்கி, அதில் மறுபிறவி கொள்கையைத் திணிந்து, அச்சடங்கின் வழியே பணம் பார்த்தவர்கள் ஆரியர்கள் என தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட பார்ப்பனிய கோட்பாடுகளை தோலுரிக்கிறார் நூலாசிரியர்.
அதேநேரத்தில், ஆதி தமிழன் கொண்டிருந்த இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இசுலாமிய, யூத, கிறித்தவ சமயங்களில் எதிரொலிப்பதைக் காணலாம் என்பதையும் கவனமாகப் பதிவு செய்கிறார் தமிழ்-எபிரேயம் ஆகிய மொழிகளுக்கிடையே உள்ள தொடர்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள மொழியியல் ஆய்வாளரான ம.சோ.விக்டர்.
க அபா என்ற தலைப்பின் கீழ், உலகில் எந்த மஸ்ஜிதிலும் இல்லாத-காபா ஆலயத்தில் மட்டுமே நடைமுறையிலுள்ள ஆலயத்தை முஸ்லிம்கள் வலம் வரும் நிகழ்வு தமிழர் வழிபாட்டின் நீட்சியே என்பதையும், வலம் வரும்போது இடையில் ஒரு ஆடையும் போர்த்திக் கொள்ள ஒரு ஆடையும் அணிவது முஸ்லிம்களின் வழக்கமகும். இந்த ஆடை அணிந்தே இப்றாஹீம் நபி அங்கு வழிபாடு மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாயின் அந்த ஆடையானது தமிழர்களின் வேட்டியும் துண்டுமே எனக் கொள்ள இடமுண்டு என்பதையும் விரிவான விளக்கத்துடன் சொல்லும் நூலாசிரியர்,
அல்லாஹ் என்கிற சொல் அரபு மொழிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை மெய்பிக்கும் சொல்லே என்பதும் அல்லாஹ் என்பது தமிழ் சொல்லே; அது, ‘எல்’ என்ற தமிழ் சொல்லின் நீட்சியே; ‘எல்’ என்ற கடவுள் தமிழர்களின் கடவுளே; இந்த ‘எல்’ என்ற கடவுளே நூஹ் நபியின் மரபு மக்களால் வழிபடப்பட்டான் என்பதும் ஆதம் நபியின் இரண்டாவது மகனுக்கு ஆப்- எல் (Ab- El) என்று பெயரிடப்பட்டிருந்ததை நோக்கும போது, ஆதம் நபியும் தனது கடவுளை் ‘எல்’ என்றே அழைத்த செய்தி அறியக்கிடக்கின்றது என்பதையும் விளக்கி, ஆதித்தமிழர்களின் கடவுள் அல்லாஹ் தான் என்பதன் மூலம் இசுலாம் தமிழர் சமயம் என்பதை நிறுவுகிறார்.
இந்நூல் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியதும் அரபு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டியதுமான நூலாகும்.
கட்டுரையாளர்: அபூஃபைஸல்